பின்னக் கணக்கில் தகராறு - pinna kaNakkil tagaraaru
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: K Parthasarathy
- Hits: 2177
எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும் நாசூக்காகவும் இருக்காதோ என்று தயக்கமாகவும் இருந்தது. மனசு குழம்பியது. இரண்டு மூன்று ஆபரேஷனுக்குப் பின் இப்போது எனக்குக் கண் பார்வை மங்கி விட்டது.
அந்த இடமோ புதுடில்லியின் ராஷ்டிரபதி பவன் அசோகா ஹால். இன்னும் சிறிது நேரத்தில் தேசம் முழுவதுமிருந்து வந்திருக்கும் பத்துத் தலைசிறந்த சம்ஸ்கிருத பண்டிதர்களைக் கௌரவித்து அவார்டு வழங்கும் விழா நடக்கப் போகிறது. விருது வாங்க வந்திருக்கும் கல்வி மந்திரியும் விசேஷமாக அழைக்கப்பட்ட பிரமுகர்களுமாக அசோகா ஹால் நிரம்பியிருக்கிறது. ராஷ்டிரபதியின் வரவை எதிர்பார்த்துத் தேசிய கீதமும் அவர்களும் காத்திருக்கிறார்கள்.
முதல் வரிசையில் விருது வாங்க வந்திருப்பவர்களின் அணியில் இடமிருந்து வலமாக மூன்றாவதாக அமர்ந்திருக்கும் அந்த மனிதரைப் பற்றித்தான் என் சந்தேகம். விருதுக்குரியவர்களின் பட்டியல் பத்திரிகையில் வந்திருந்தது. அந்தப் பட்டியலில் 'ராம் மனோகர் ராவ்' என்ற பெயரும் இருக்கத்தான் செய்தது.
இவர் அதே ராம் மனோகர் ராவ்தானா, வேறொருவரா என்பது தெரியவில்லை. முகமும் தோற்றமும் முதுமையால் மாற்றமடைந்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே இவர் வேறு ஒரு ராம் மனோகர் ராவாகவும் இருக்கலாம்.
யாராயிருந்தாலும் எனக்கு என் பழைய நண்பன் ராம் மனோகரின் நினைவு வராமலில்லை. நானும் அவனும் தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நாளிலிருந்தே சிநேகிதர்கள். பள்ளியில் இருந்து கல்லூரி வரை இருவருமே சம்ஸ்கிருத மாணவர்கள். சரஸ்வதி மகாலைச் சேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர் ஒருவரின் மகனாதலால் வீட்டிலேயே கற்பித்துக் கற்பித்து இள வயதிலேயே அவனைச் சம்ஸ்கிருத மேதையாக்கியிருந்தார் அவனுடைய தந்தை.
பள்ளி நாளிலும் சரி, பிற்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் இருவரும் சேர்ந்து படித்த நாளிலும் சரி, ராம் மனோகருக்குக் கணக்கு வராது, கணக்கைப் பிடிக்கவும் பிடிக்காது.
ஒன்று, இரண்டு என்பது போல் முழு எண்களைக் கூட்டுவதிலும், கழிப்பதிலுமே தகராறு. கூட்டல் வரும், - முழு எண்ணைப் பொறுத்தவரை கழித்துப் பார்க்கத் தெரியாது அவனுக்கு. பின்னக் கணக்கு என்றாலோ எதுவுமே வராது. பின்னப்படுத்திப் பார்ப்பதே அவனுக்குப் பிடிக்காது.
பள்ளிக்கூடத்தில் வாங்கித் தின்பதற்கு அல்லது வேறு எதற்காவது முழு ரூபாயோ முழு அணாவோ எதைக் கொண்டு வந்தாலும் அதை அவன் மாற்றவே மாட்டான். அதை அப்படியே வைத்துக் கொண்டு என்னிடமாவதோ வேறு யாரிடமாவதோ கடன் கேட்பான். முழுசை மாற்ற அவனுக்குத் தெரியாது. பிடிக்காது. காரணம் பின்னக் கணக்கில் அவனுக்கு எப்போதுமே குழப்பம்.
ஹாலில் அசாதாரணமான நிசப்தம் நிலவியது. ராஷ்டிரபதி வந்து விட்டார். தேசிய கீதம் முழங்கியது. எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
மீண்டும் என் ஆவல் அதிகமாகியது. இன்று பரிசு வாங்கும் ராம் மனோகர் ராவ் என்னோடு கூடப் பள்ளி மாணவனாக இருந்த அதே ராம் மனோகரன் தானா வேறு யாராவதா?
எலி வால் பின்னலும் நடு நெற்றியில் ஒரு கறுப்புச் சாந்துப் பொட்டும் கூடவே பொன்னிறத்தில் ஒரு சந்தனப் பொட்டுமாக மந்த நடை நடந்து மூன்று கெஜ தூரத்தை நான்கு நிமிஷங்களில் கடக்கும் சிறுவன் ராம் மனோகரின் ஞாபகம் என் மனக் கண்ணில் படியத் தொடங்கியது. அந்தப் பள்ளிப் பையனின் தோற்றத்தையும் இன்றைய இந்த எழுபது வயதுத் தோற்றத்தையும் ஒப்பிட்டு அடையாளம் கூடக் காண முடியாமல் இருந்தது. பிய்த்தெடுத்துப் பக்கத்துக்கு ஒன்றாக பொருத்தின மாதிரி இந்த மீசை பழைய முக அடையாளத்துடன் புரிய விடாமல் குழப்புவதற்கே பெரிதும் உதவியது.
'ஒரு ரூபாயிலிருந்து கால் ரூபாயை மாற்றி விட்டால் மீதம் என்ன?' என்று அந்த நாளில் ராம் மனோகரனைக் கேட்டால் மீதத்தைச் சொல்வதற்குப் பதில், "ஒரு முழு ரூபாயை ஏன் மாற்ற வேண்டும்? அது அப்படியே ஒரு முழு ரூபாயாகவே இருந்து தொலைத்து விட்டுப் போகட்டுமே" என்று தான் பதில் சொல்வான். முழுமையைப் பின்னப் படுத்துவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது.
கும்பகோணம் கல்லூரியில் படிக்கிற காலத்தில் காவேரியைக் கடந்து அக்கரைக்குப் போக என்று காலேஜில் சேர்ந்த முதல் நாள் ஒரு முழு வெள்ளி ரூபாய் கொண்டு வந்தான் அவன். எனக்குத் தெரிந்தவரை அந்த முழு வெள்ளி ரூபாயைக் காலேஜ் படிப்பு முடிந்து வெளியேறி டி.ஸி. வாங்கிக் கொண்டு போகிற வரை ராம் மனோகரன் மாற்றவே இல்லை. நானோ வேறு சிநேகிதர்களோதான் 'போட்'டுக்கு அவனுக்காகச் சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தோம்.
"ஒரு முழு வெள்ளி ரூபாயை மாத்தறதுக்கு மனம் வரலேடா... நீயோ சுப்புணியோ, ராமசேஷனோ இன்னிக்குக் கொடுத்துடுங்கோ." ஒவ்வொரு நாளும் இதே வாக்கியத்தைத்தான் கிளிப்பிள்ளை போலச் சொல்லுவான் ராம் மனோகரன். கும்பகோணம் காலேஜில் இண்டர் மீடியட்டோடு நிறுத்தித் திருச்சி போய்விட்டான் அவன். காரணம் அவன் தந்தை சரஸ்வதி மஹாலை விட்டு விட்டுத் திருச்சியில் ஒரு கல்லூரியில் சம்ஸ்கிருத விரிவுரையாளராகப் போனதுதான்.
அவன் திருச்சியில் இருந்தபோது ஒரு சமயம் நான் ஸ்ரீவைகுண்ட ஏகாதசிக்காகப் போயிருந்தேன். அவன் செயிண்ட் ஜோஸப்பில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான். நான் போயிருந்த சமயம் லீவு நாளாகையினால் என்னோடு கூடச் சுற்றினான். நான் அங்கே அவனுடைய விருந்தாளி என்று பேர். ஆனால் டவுன் பஸ் ஏறும்போது, ஹோட்டலில் டிபனுக்குப் பில் கொடுக்கும் போது எல்லாச் சமயங்களிலும், "டேய் எங்கிட்ட முழு அஞ்சு ரூபா நோட்டா இருக்குடா... சில்லறையா இல்லே... நீயே கொடுத்திடு" என்று வழக்கம் போல் ராம் மனோகர் செலவையெல்லாம் என் தலையில் கட்டிவிட்டான். அவனுடைய முழு நோட்டை மாற்றவேயில்லை.
முழுசை மாற்றக் கூடாது என்னும் அவனுடைய வாழ்க்கைத் தத்துவம் திருச்சிக்குப் போன பின்னும் கூட மாறியதாகத் தெரியவில்லை. பல முறைகள், "என்னிடமும் முழுப் பத்து ரூபாய் நோட்டாகத்தாண்டா இருக்கு. பத்தை மாத்தறதை விட அஞ்சை மாத்தறதே தேவலை. நீயே உன்னோடதை மாத்து" - என்று அவனிடம் சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமலே போய்விட்டது எனக்கு.
அவனையும் அவன் குடும்பத்தையும் பார்த்து சாஸ்திர ஞானமும் கஞ்சத்தனமும் உடன் பிறந்தவையோ என்று கூட எனக்குச் சந்தேகமாகப் போய்விட்டது. ராஜா சரபோஜி காலத்தில் மகாராஷ்டிரப் பிரதேசத்தைக் கலாசாரத் தலைநகரமாகிய புனாவிலிருந்து தஞ்சைக்குக் குடியேற்றிய புகழ் பெற்ற சித்பவன் மரபினரான முன்னோர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராம் மனோகர் தன் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.
ராம் மனோகரின் முன்னோர்கள் தஞ்சையில் குடியேறியதுமே முழுசைக் குறைப்பதில்லை - முழுசைக் குறைத்தால் புரியாது என்று பின்னக் கணக்கை ஆசாரக் குறைவாகவே கருதி விட்டார்களோ என்று கூட மேலும் எனக்குச் சந்தேகமாக இருந்தது.
அவார்டு விழா தொடங்கப்பட்டு ராஷ்டிரபதி சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பழமை பற்றியும் அதன் கலாச்சார பின்னணி பற்றியும் உயர்வைப் பற்றியும் - தேசத்தில் சம்ஸ்கிருத ஞானம் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் அறிவுபூர்வமான நஷ்டம் பற்றியும் தமது உரையைப் படித்துக் கொண்டிருந்தார்.
விருதுகளுக்கான ஸைட்டேஷனையும் அவார்டுகள் அடங்கிய பேழையையும் அதிகார் ஒருவர் படிப்பதற்கும் கொடுப்பதற்கும் ஏற்ற முறையில் வரிசைப்படுத்தி அடுக்கிக் கொண்டிருந்தார். ஹாலில் இருந்தவர்கள் ராஷ்டிரபதியின் உரை வாசிப்பை அமைதியாகச் செவி மடுத்துக் கொண்டிருந்தார்கள். என் நினைவு மறுபடியும் பின்னோக்கி ஓடியது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சந்தர்ப்பத்துக்குப் பின் பல வருஷங்கள் நான் என் சிநேகிதன் ராம் மனோகரனைப் பார்க்க முடியவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கல்யாணமாகி நான் டெல்லியில் பெரிய உத்தியோகத்துக்கு மாற்றலாகிக் குடும்பஸ்தனான பின் ஏதோ பிரார்த்தனைக்காகத் திருப்பதி போயிருந்தேன்.
அங்கே தற்செயலாக ராம் மனோகர் ராவை அவருடைய மனைவி சகிதம் சந்தித்தேன். மந்த்ராலயத்துக்குப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் திருப்பதி தரிசனத்துக்கு வந்ததாகவும் சாயங்காலம் ரேணிகுண்டாவிலிருந்து, ஒன்றாகவே சேர்ந்து சென்னைக்குப் போகலாம் என்றும் ராவ் கூறினார். திருச்சியிலேயே தன் தகப்பனார் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதே கல்லூரியில் தான் சம்ஸ்கிருதம் கற்பிப்பதாக ராவே கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
நான் திருப்பதி தரிசனம் முடிந்ததும் சென்னைக்குத் திரும்பி அங்கிருந்து குடும்பத்தோடு டில்லி போக இருந்தேன். ராவும் மனைவியோடு சென்னை திரும்பி அங்கு சில உறவினர்களைப் பார்த்துவிட்டு அப்புறம் திருச்சி செல்லப் போவதாகத் தெரிவித்தார். மாலையில் சென்னை ரயிலுக்காக இருவரும் அவரவர் குடும்பத்தோடு ரேணிகுண்டா ஸ்டேஷனுக்கு வந்தபோது, "என்னிடம் முழு நூறு ரூபாய் நோட்டா இருக்கு! அதைப் போயி மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். நீயே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்திடு" என்றார்.
எக்காரணம் கொண்டும் முழுசை மாத்தக் கூடாது என்னும் கொள்கை புரொபஸராகி சம்பாதிக்கும் இன்றும் ராம் மனோகர் ராவை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது.
அது ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எதுவானாலும் அதை மாற்றிப் பின்னமாக்கிச் செலவழித்து விடக் கூடாது என்பதில் ராவ் அப்படியேதான் இருந்தார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மைதாஸும் ஷைலாக்கும் மறைந்திருக்கிறார்கள். சிலரிடம் அந்தக் குணச்சித்திரங்கள் எப்போதுமே வெளிப்படுகின்றன. சிலரிடம் சில சமயங்களில் மட்டுமே வெளிப்படுகின்றன என்று தோன்றியது.
இதன் பின் மீண்டும் பல வருஷங்கள் எங்களுக்குள் சந்திப்பே நிகழவில்லை.
அதிகாரி ஒருவர் விருதுக்கானவரைப் பற்றிய ஸைட்டேஷனைப் படிக்க - அது முடிந்ததும் ஏ.டி.ஸி. எடுத்து நீட்டிய பேழையையும் ரூபாய் பத்தாயிரத்துக்கான 'செக்' அடங்கிய கவரையும் ராஷ்டிரபதி உரியவருக்கு வழங்கினார். எல்லாருமே குடுகுடு கிழங்கள். பார்வை மங்கிய சோடா புட்டி கண்ணாடிகள். ஒரு பக்கம் நூலால் கட்டிய பிரேம் போன கண்ணாடிகள். சிலர் பதற்றத்தால் ராஷ்டிரபதி நின்ற மேடையில் ஏறியதுமே தள்ளாடினர். சிலர் தடுக்கி விழுந்தனர். சிலர் விருது வாங்கியதும் ராஷ்டிரபதியை வணங்குகிற மறதியில் கையில் இருந்த பேழையையோ கவரையோ நடுக்கத்தில் கீழே நழுவவிட்டனர்.
இதெல்லாம் சகஜம் தான். சில 'காட்டரேட்' ஆப்பரேஷன்களுக்குப் பின் எனக்கே கண் பார்வை மங்கிச் சற்றுத் தள்ளி இருப்பவர்களை அடையாளம் புரியாதபோது மற்றவர்களுக்கு இப்படி நேர்வதைப் பற்றி அதிசயம் ஒன்றும் இல்லை. விருதுகளுக்குச் சிபாரிசு செய்யும் கமிட்டியில் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அழைப்பு அனுப்பியே நான் இன்று இங்கு வர நேர்ந்திருக்கிறது. அவர்களைக் கேட்டால் கூட இது அந்த ராம் மனோகர் ராவ் தானா என்பது புரிந்து விடும்.
விழா முடியட்டுமே அப்புறம் கேட்கலாம் அல்லது ஸைட்டேஷனிலிருந்தாவது புரிகிறதா என்று பார்க்கலாமே! ஸைட்டேஷன் மிகவும் சுருக்கமாக இருந்தது. 'முப்பது வருஷமாக சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார். இவ்வளவு நூல்கள் எழுதியிருக்கிறார்' என்பது போல் இருந்த அக்குறிப்புக்களள வைத்து அது என் பால்ய நண்பன் தானா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை.
முப்பது வருஷமாகப் புத்தகம் எழுதுவதும் வேலை பார்ப்பதும் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய பொது விவரங்கள் தான். அவற்றில் என் பள்ளித் தோழனை அடையாளம் காட்ட எதுவுமே இல்லை. நான் விழா முடிகிறவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
விழா முடிந்து மறுபடி தேசிய கீதம் ஒலித்து நிறைந்தது. ராஷ்டிரபதி பரிவாரம் புடைசூழ உள்ளே போனார். வந்திருந்தவர்களுக்கு ஊழியர்கள் டீயும் பிஸ்கட்டுகளும் வழங்க ஆரம்பித்தார்கள்.
நான் விருது வாங்கியவர்களிடையே இவர் தான் ராம் மனோகர் ராவோ என என் மனத்தில் சம்சயப்பட்ட நபரைக் குறி வைத்து நடந்தேன். அருகில் நெருங்கியும் விட்டேன். அவர் பக்கத்திலிருந்த மற்றொரு விருது வாங்கிய சம்ஸ்கிருத பண்டிதரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இல்லை விசாரித்துக் கொண்டிருந்தார் - ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
"சாஸ்திரிகளே! நான் கரோல் பாக் போயாகணும். எங்கிட்ட நூறு ரூபாய் நோட்டாக இருக்கு. அதை மாத்த வேண்டாம்னு பார்க்கறேன்... சில்லறையாக ஒரு ரெண்டு ரூபா இருந்தாக் கொடுங்க... மெட்ராஸ் போறப்போ ரயில்லே திரும்பத் தந்துடறேன்."
நான் விசாரிக்க வேண்டிய அவசியமே நேரவில்லை. அது சத்தியமாக என் பால்ய சிநேகிதன் ராம் மனோகர் ராவ்தான். நிச்சயமாக வேறு யாரும் இல்லை. வேறு யாராகவும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதான பின்பும் இன்றும் பின்னக் கணக்கில் அவருக்குத் தகராறு இருந்தது. முழுசை மாற்றினால் குழப்பம் என்ற அவருடைய நிரந்தர வாழ்க்கைத் தத்துவமும் அப்படியேதான் இருந்தது.
நல்லவேளை யார் செய்த புண்ணியமோ! தேசிய கீதம் முடிந்ததும் ராஷ்டிரபதியையே ஒரு நிமிஷம் நிறுத்தி வைத்துக் கொண்டு, "சார்! எங்கிட்ட நூறு ரூபாயா இருக்கு. நீங்களும் 'செக்'காகவே குடுத்துட்டேள், மாத்த முடியாது. தயவு பண்ணி ஆட்டோரிக்ஷாக் காரனுக்கு அல்லது பட்பட்காரனுக்குக் கொடுக்க ஒரு ரெண்டு ரூபாய் சில்லறையாக குடுத்துட்டுப் போங்கோ. நான் கரோல்பாக் போகணும்" என்று மன்றாடாமல் விட்டாரே என்பதில் எனக்குத் திருப்தியாக இருந்தது. இதற்கு மேலும் நானே போய் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விவரம் சொல்லலாமா என்று தயங்கினேன்.
என் மணிபர்ஸில் அப்போது முழுசாக ஒரு பத்து ரூபாய் நோட்டும் என் ஒருவனுக்கு மட்டும் வீடு போவதற்குப் பட்பட் சார்ஜும் மட்டுமே இருந்தன.
நான் ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரையும் என்னோடு அழைத்துச் செல்வதாக இருந்தால் முழுசாக இருக்கும் பத்து ரூபாயைக் கண்டிப்பாக மாற்ற வேண்டி நேரிடலாம். அது மட்டுமில்லை. அவரைக் கூட அழைத்துக் கொண்டு என் வீட்டுக்குப் போன பின் நான் மேலும் பல முழு பத்து ரூபாய்களை மாற்றும்படி ஆனாலும் ஆகி விடக் கூடும்.
அதற்கு நான் தயாராக இல்லை. முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற்பட்டு விட்டது. அந்தத் தத்துவத்தின் குருநாதருக்கு முன்னிலையிலேயே அந்த வாசனா ஞானம் என்னுள் பிறந்ததுதான் ஆச்சர்யம்.