புகழ்த்துறவு - Pugazhthuravu
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: K Parthasarathy
- Hits: 1835
அம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புக்களையும் முடித்துக் கொண்டு சுவாமி பரிசுத்தானந்தர் ஆசிரமத்துக்குத் திரும்பும்போது இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. நல்ல நிலவொளி பகல் போலிருந்தது.
அப்போது ஆசிரமத்துக்கு எதிர் வரிசையில் இருந்த அந்த லாட்ஜிலிருந்து ஒரே கூச்சலும் சத்தமுமாக ரகளையாயிருந்தது, அவர் கவனத்தைக் கவர்ந்தது.
வழக்கமாக அமைதியாயிருக்கும் அங்கே என்றாவது ஒரு நாள் இப்படிக் கலவரமும் ரகளையும் நடப்பது உண்டுதான். ஆனால் வெளியிலிருந்து பிறர் தலையிடும் படியான ரகளையாக அது இராது. கேட்டைத் திறந்து சைக்கிளை உள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு மீண்டும் தெருவுக்கு வந்து நின்று கொண்டு காது கொடுத்துக் கேட்டார் சுவாமி. ஆளரவமற்ற நடுத் தெருவில் இரு புறத்து மரங்களின் பசுமைக்கிடையே அந்த நிலவொளியில் காவி உடையோடு எரியும் ஜ்வாலையாக நின்றார் அவர். "ஐயோ கொல்றாங்களே! கேட்பாரில்லையா? ஈவு இரக்கம் இல்லாத கொலைகாரப் பாவிங்களா!" என்று ஈனமான ஒரு பெண் குரல் காற்றில் வந்தது.
கேட்ட குரலின் பரிதாப நிலையில் மனம் உருகிக் கால்கள் அந்த திசையை நோக்கி விரையத் துடித்தன. ஆனால் அறிவு தயங்க வைத்தது.
பரிசுத்தானந்தர் அந்த லாட்ஜைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த செய்திகளே தயக்கத்துக்குக் காரணமாயிருந்தன.
ஊரின் ஒதுக்குப் புறமான அந்தப் பகுதியில் தோன்றிய முதல் கட்டிடமே அவருடைய ஆசிரமந்தான். ஆசிரமம் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பின்னே 'லாட்ஜ்' கட்டிடம் தோன்றியது. 'போர்டிங்' வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தும், ஊரிலிருந்து விலகி ஒதுக்குப் புறமாயிருந்தும் அந்த லாட்ஜில் கூட்டம் பொங்கி வழிந்தது. லாட்ஜ் நடத்துகிறவரும் நிறைய லாபம் சம்பாதித்தார். நாளாக நாளாக அங்கே என்ன நடக்கிறது என்பது புரிந்தது. சட்டத்தின் காவலர்களும் அதற்குத் துணை என்றும் அவர்களுக்கு அதற்காக மாமூல் உண்டு என்றும் சொன்னார்கள்.
சுவாமி பரிசுத்தானந்தரின் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த லாட்ஜ் வழியில் அங்கே இயங்குவதைத் தடுக்க முடியவில்லை.
ஒரு ரிக்ஷா காலியாக அந்த லாட்ஜ் பக்கமிருந்து வந்தது.
சுவாமி அந்த ரிக்ஷாக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டார். ரிக்ஷா அவரருகே வந்து யாரோ யாருடைய குரல்வளையையோ நெரிக்கிற மாதிரி கிறீச்சிட்டு நின்றது.
"என்னப்பா, அங்கே கூப்பாடு?..."
"ஒண்ணும் இல்லீங்க சாமி, லாட்ஜ்காரன் கிராதகனுங்க. ஒரு சின்னப் பொண்ணுக்கு அம்மை போட்டிருக்குதுங்க... ஈவு இரக்கம் இல்லாமே அதெப் போயி தொந்தரவு பண்றானுவ. கேள்வி கேப்பார் இல்லே."
சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இப்போது சுவாமியின் கால்களும் தயங்கவில்லை; அறிவும் தயங்கவில்லை. அம்பு பாய்வது போல் நேர் எதிர்ப்பக்கம் லாட்ஜுக்குள் போய் நுழைந்தார். வாசலில் உயரமும் பருமனுமாக இருந்த நாளைந்து அடியாட்கள் கூட அவரைத் தடுக்க முடியவில்லை. கூப்பாடு வந்த திசையை அடையாளம் வைத்து நடந்ததில் ஓர் அறைக்குக் கொண்டு போய் விட்டது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, முரட்டு ஆள் ஒருவன், கொடி போல் அழுக்குப் பாயில் துவண்டு கிடந்த இளம் பெண் ஒருத்தியைக் கையில் இருந்த பிரம்பால் விளாசிக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் அம்மை முத்துக்கள் தெரிந்தன.
தேஜஸ் நிறைந்த கம்பீரமான தோற்றமும் காவி உடையுமாக ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவன் திகைத்துத் திரும்பினான்.
அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. எரித்து விடுவது போல் பார்த்தார். அடுத்த கணமே யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் ஒரு குழந்தையை வாரி எடுப்பது போல் பாயில் கிடந்த அந்தப் பெண்ணை எடுத்துக் கொண்டு வெளியேறினார் சுவாமி. யார் என்ன செய்கிறார் என்று சுதாரித்துக் கொண்டு அவர்கள் தடுப்பதற்குள் விடுவிடுவென்று சுவாமி தெருவுக்கு வந்து தமது ஆசிரமத்துக்குள்ளே நுழைந்து விட்டார்.
ஆசிரமத்துத் தோட்டத்திலிருந்து ஒரு தலைவாழை இலையை அறுத்து எண்ணெயைத் தடவி அதில் அந்தப் பெண்ணைக் கிடத்தினார். நல்ல செவ்விளநீராகப் பறிக்கச் செய்து வெட்டிப் பருகச் செய்தார். அம்மை தணிவதற்குரிய சிகிச்சைகளைச் செய்தார். ஆசிரமப் பணியாளர்களிடம் ஒப்படைத்துக் கவனிக்கச் செய்தார்.
அம்மை போட்டுச் சுயநினைவில்லாமல் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணையே நிர்பந்தப்படுத்தும் அளவுக்குப் பணத்தாசை மனிதனை மிருகமாக்கியிருப்பதை வெறுத்தார். மனிதனை மிருகமாக்கும் இச்சைகளை வளர்த்து அதையும் வியாபாரமாக்கி நடத்துபவர்களை எண்ணிக் குமுறியது அவர் உள்ளம். அவருடைய ஆசிரம நிர்வாகி முன் ஜாக்கிரதையாக இருக்கட்டும் என்பதற்காக எந்த நிலையில், எங்கிருந்து, எதற்காக ஒரு பெண்ணைச் சுவாமி பரிசுத்தானந்தர் மீட்க நேர்ந்தது என்பதை விளக்கிப் போலீஸுக்குப் ஃபோன் செய்தார்.
ஆனால் எதிர்த்தரப்பில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கேட்ட ஹெட் கான்ஸ்டபிள், "ஒரு பெண்ணை உங்க சாமியார் மீட்டுக் கொண்டாந்து சிகிச்சை செய்யறாருங்கறதை நியூஸ்பேப்பர் ஆபீஸுக்கு வேணும்னாச் சொல்லுங்க. அது எங்க சம்பந்தப்பட்ட விஷயம் இல்லே. ரிட்டன் கம்ப்ளெயிண்ட் இருந்தாக் குடுங்க" என்றாரே ஒழியச் சுவாரசியம் காட்டவில்லை. லாட்ஜுக்காரர்மேல் அவருக்கு என்ன கருணையோ?
ஆசிரம நிர்வாகியும் இதற்கு மேல் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை; சுவாமி பரிசுத்தானந்தரின் செல்வாக்கு அவரைக் காக்கும் என்று நம்பினார்.
இரவு பதினொன்றரை மணிக்கு ஆசிரம வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்ற போதுதான் அப்படியில்லை என்பது நிரூபணமாயிற்று. ஜீப்பிலிருந்து சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கீழே இறங்கினர். ஆசிரம நிர்வாகியைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர்.
எதிர்ப்பக்கத்து லாட்ஜிலிருந்து ஒரு பெண்ணை அந்த லாட்ஜுக்குள் 'டிரஸ்பாஸ்' செய்து கடத்தி வந்ததாகச் சுவாமி பரிசுத்தானந்தர் மீது வாரண்ட்டுடன் கைது செய்ய வந்திருந்தார்கள். நிர்வாகி எல்லா விவரங்களையும் ஆதியோடந்தமாகக் கூறி விளக்கியும் பயன் இல்லை.
லாட்ஜ் உரிமையாளர்களிடமிருந்தும் பெண்ணின் சகோதரனிடமிருந்தும் முறையான புகார்கள் எழுத்து மூலம் வந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் செயல்பட வேண்டியிருப்பதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.
ஆசிரம நிர்வாகி சுவாமியை எழுப்பினார். சுவாமி இன்ஸ்பெக்டரிடம் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு, அந்த இளம் பெண் அம்மைக் கொப்புளங்களோடு வாழை இலையில் கிடத்தப்பட்டிருந்த அறைக்கே அழைத்துப் போய்க் காட்டினார். இன்ஸ்பெக்டர் திருப்தி அடையவில்லை.
"மன்னிக்க வேண்டும்! உங்கள் செல்வாக்கை நான் அறிவேன். ஆனாலும் சட்டம் செல்வாக்குக்கு முன்னால் கூடத் தயங்க முடியாது."
"தயங்க வேண்டும் என்று நானும் கோரவில்லை. ஆனால் தவறு செய்தவர்களை அல்லவா உங்கள் சட்டம் தயங்காமல் தண்டிக்க வேண்டும்? அப்பாவிப் பெண் ஒருத்தியைக் காப்பாற்றப் போனதைத் தவிர நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லையே?"
"அது ருசுப்பிக்கப்படுகிற வரை நீங்கள் எங்கள் பொறுப்பில் இருந்து தானாக வேண்டும்."
சுவாமி புன்முறுவல் பூத்தார். நிர்மலமாக ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தது.
"அம்மையோடு துடித்துக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தையைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்" என்றார் சுவாமி.
"இவளைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு போலீஸாரோடு புறப்பட்டார்.
மறுநாள் காலைத் தினசரிகளில் எல்லாம், "லாட்ஜிலிருந்து இளம் பெண்ணைக் கடத்தியதாகச் சுவாமி பரிசுத்தானந்தர் கைது" என்று தலைப்புச் செய்து வந்து விட்டது. யாராலும் அதை நம்ப முடியவில்லை. ஊரே குமுறியது. சுவாமியின் தொண்டுகளால் பயனடைந்த ஏழை எளியவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் கூடிவிட்டார்கள்.
மிக மிகச் சிலர் மட்டும் புரளி பேசினார்கள். "இந்தக் காலத்திலே குடும்பஸ்தரை விடச் சாமியாருங்க தான் அதிகமாத் தப்பு பண்றாங்க."
சட்டம் தீமையைத் தடுக்கவும் நல்லதைப் பாதுகாக்கவுமே இருந்தாலும் பல வேளைகளில் அது தீமைக்குச் சேவை செய்கிறது. நன்மையைக் கொடுமைப்படுத்துகிறது. சுவாமி பரிசுத்தானந்தர் விஷயத்தில் கூட அப்படித்தான் ஆகிவிட்டது.
ஆனால் பொதுமக்கள் எல்லாருக்கும் அந்த லாட்ஜுக்காரனைப் பற்றி நன்றாகத் தெரியும். பெண்களையும் சாராயத்தையும் பக்கத்து மாநிலங்களிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்தி வந்து விற்கும் முரடனுடைய புகாரை நம்பிச் சுவாமி பரிசுத்தானந்தரைக் கைது செய்தது அநியாயம் என்றே பலரும் கருதினார்கள். அம்பேத்கார் நகரிலிருந்தும், சுவாமி வைத்தியப் பணி, கல்விப்பணி புரிந்த குப்பங்கள், சேரிகளிலிருந்தும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.
சுவாமியை விடுவிக்காவிட்டால் ஸ்டேஷனையே தகர்த்து விடுவார்கள் போலிருந்தது. தகவல் போலீஸ் மந்திரிவரை போய் மந்திரியோடு ஐ.ஜி.யே நேரில் வந்து இன்ஸ்பெக்டரைப் பற்றி விசாரித்தறிந்து, லாட்ஜுக்காரனுக்கு உடந்தையாயிருந்து சுவாமி பேரில் தவறான குற்றம் சுமத்தியதற்காக அவரைச் சஸ்பெண்டு செய்து விட்டுச் சுவாமியை விடுதலை செய்தார்.
விடுதலையான சுவாமி பரிசுத்தானந்தர் முதலில் மிக மிக ஆவலோடு அந்தப் பெண்ணின் உடல் நிலையைப் பற்றித் தான் விசாரித்தார். மந்திரி அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
"எங்களைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடணும் சாமீ! தப்பு நடந்து போச்சு. பிரதிபலனை எதிர்பாராமே பொதுக் காரியங்களைப் பண்ணிக்கிட்டிருக்கிற உங்களைப் பத்திப் பேப்பருங்கள்ளே தாறுமாறா நியூஸ் வர்ராப்பல ஆயிடுச்சு."
"பரவாயில்லை! கருங்கல் கோடை மழையில் கரைந்து விடாது. ஒரு சத்தியவாதியை வெறும் பழி மட்டுமே சீரழித்து விட முடியாது."
"உங்க புகழுக்கு எங்களால் இப்படி ஒரு களங்கம் நேர்ந்ததுக்கு இலாகாவின் சார்பில் நானே மன்னிப்புக் கேட்டுக்கறேன் சுவாமீ. பேப்பருங்களிலேயும் இலாகாவின் தவறுகளால் தான் இப்படி நேர்ந்திடிச்சுன்னு நானே ஓர் அறிக்கை விட்டுடறேன்" என்றார் ஐ.ஜி.
சுவாமி மறுபடியும் குழந்தையைப் போலச் சிரித்தார். முகத்தில் எந்த விதச் சலனமும் இன்றி ஐ.ஜி.க்குப் பதில் சொன்னார்.
"இதில் கவலை எங்கிருந்து வந்தது? உண்மையில் இன்று தான் என் சந்நியாசத்தில் இன்னும் பெரிய பரீட்சையில் ஜயிக்க முடிந்திருக்கிறது. எல்லா ஆசைகளையும் துறக்க முடிந்த எனக்குப் புகழ், செல்வாக்கு, பிராபல்யம், இவற்றின் மேலிருந்த ஆசைகளை இதுவரை விடமுடியாமல் இருந்தது. 'பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும், இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடி சேவையில் ஒன்றிவிடுவது தான்' என்பதாக என் குரு அடிக்கடி கூறுவார். அந்தப் பக்குவ நிலைமையை நான் இன்றுதான் அடைந்தேன். புகழையும் துறக்கத் துணிகிற மனப்பக்குவத்தை நான் அடைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்ததற்காக நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்."
மந்திரியும், ஐ.ஜி.யும் இதைக் கேட்டு அப்படியே பிரமித்துப் போய் நின்றார்கள். 'கோடை மழையில் கருங்கல் கரைந்து விடாது' என்ற வாக்கியந்தான் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நினைவு வந்தது. சுவாமியோ அம்மை போட்டிருந்த பெண்ணுக்கு இளநீர் பறித்துக் கொடுப்பதற்காகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு விரைந்தார்.