ஒன்பது குழி நிலம்

1

நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் பெரிய தனவந்தரின் புதல்வியாகிய அவருடைய வாழ்க்கைத் துணைவி அருங்குணங்களுக்கெல்லாம் உறைவிடமாய் விளங்கினாள். செல்வப் பேற்றில் சிறந்த இந்தத் தம்பதிகளுக்கு ஆண்டவன் மக்கட் பேற்றையும் அருளியிருந்தான். மூத்த புதல்வன் சுப்பிரமணியன் சென்னையில் ஒரு கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றிச் சீனிவாசம் பிள்ளை கொண்டிருந்த பெருமைக்கு அளவே கிடையாது. பி.எல். பரீட்சையில் தேறியதும் மைலாப்பூரில் பங்களாவும், 'போர்டு' மோட்டார் வண்டியும் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவருடைய புகழோ, எங்கும் பரவியிருந்தது. சுற்றிலும் மூன்று தாலுக்காக்களில் கமலாபுரம் பெரிய பண்ணைப் பிள்ளையின் பெயரைக் கேள்விப்படாதவர் எவருமில்லை.

இவ்வளவு பாக்கியங்களுக்கும் நிலைக்களனாயிருந்த சீனிவாசம் பிள்ளையை மூன்று வருஷகாலமாக ஒரு பெருங்கவலை வாட்டிவந்தது. அவருக்கும் ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கும் நடந்து வந்த விவகாரமே இக்கவலைக்குக் காரணம். சீனிவாசம் பிள்ளையும், சோமசுந்தரம் பிள்ளையும் நெருங்கிய உறவினர்களேயாயினும், வழக்கு ஆரம்பமானதிலிருந்து ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவது நின்று போயிற்று. மனஸ்தாபம் முற்றிக் கடும் பகையாக மாறிவிட்டது.

விவகாரம் ஓர் அற்ப விஷயங் காரணமாக எழுந்தது. கல்யாணபுரத்தில் சீனிவாசம்பிள்ளையின் வயலுக்கும் சோமசுந்தரம் பிள்ளையின் வயலுக்கும் நடுவே ஒன்பது குழி விஸ்தீரணமுள்ள திடல் ஒன்று இருந்தது. அத்திடலில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. நிலம் நீண்ட காலமாகச் சீனிவாசம் பிள்ளையின் அனுபோகத்தில் இருந்து வந்தது. ஒருநாள் களத்தில் உட்கார்ந்து அறுவடையைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் பிள்ளை தாகம் மிகுந்தவராய் உறவினருடைய மரம் என்னும் உரிமையின் பேரில் தமது பண்ணையாளை ஏவி, அத்தென்னை மரங்களிலிருந்து இளநீர் கொண்டுவரச் சொன்னார். சின்னப்பயல் (அறுபத்தைந்து வயதானவன்) அவ்வாறே சென்று மரத்தில் ஏறி இளநீர் குலையைத் தள்ளினான். தள்ளியதோடு இறங்கினானா, பானையில் வடிந்திருந்த கள்ளையும் ஒரு கை பார்த்துவிட்டான்? இதை தூரத்திலிருந்து கவனித்த சீனிவாசம் பிள்ளை பண்ணையின் தலையாரி ஓட்டமாக ஓடி வந்தான். பாவம்! அவன் கட்டியது திருட்டுக்கள். அதை மற்றொருவன் அடித்துக் கொண்டு போவதானால்? சின்னப்பயல் இறங்கியதும் ஒருவரோடொருவர் கட்டிப் புரண்டார்கள். அவர்கள் அச்சமயத்தில் பிரயோகித்துக் கொண்ட வசைச் சொற்களை இங்கு வரைதல் அனுசிதமாகும்; சின்னப்பயல், இளநீர் இன்றியே சென்று எஜமானனிடம் ஒன்றுக்குப் பத்தாகக் கூறினான். "உங்கப்பன் வீட்டு மரமா என்று அந்தப் பயல் கேட்டான். நாம் சும்மா விடுவதா?" என்று கர்ஜித்தான். கமலாபுரம் பண்ணையின் கண்ணி வழியாகத் தண்ணீர் விட மறுத்தது, பொதுக் களத்தில் போட்டிருந்த பூசணிக்காயை அறுத்துச் சென்றது, பயிரில் மாட்டை விட்டு மேய்த்தது, போரை ஓரடி தள்ளி போட்டது, முதலியவைகளைப் பற்றிச் சரமாரியாகப் பொழிந்தான். சோமசுந்தரம் பிள்ளைக்கு ஒரு பக்கம் தாகம்; மற்றொரு பக்கம் கோபம். காரியஸ்தரை யோசனை கேட்டுக் கொண்டு மேலே காரியம் செய்ய வேண்டுமென்று வீட்டுக்குத் திரும்பினார்.

தலையாரி சுப்பன் கள்ளையிழந்த துக்கமும், அடிபட்ட கோபமும் பிடரியைப் பிடித்துத் தள்ள, ஓடோ டியும் சென்று சீனிவாசம் பிள்ளையிடம் பலமாக 'வத்தி' வைத்துவிட்டான். அன்று மாலையே சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்துபேர் சென்று மேற்படி திடலைச் சுற்றிப் பலமாக வேலியடைத்து விட்டு வந்தார்கள். இச்செய்தி அன்று இரவு சோமசுந்தரம் பிள்ளையின் காதுக்கெட்டியது. அவர் உடனே காரியஸ்தரிடம் "நான் சொன்னேனே, பார்த்தீரா? நமக்கு அந்தத் திடலில் பாத்தியம் இருக்கிறது. இல்லாவிடில் ஏன் இவ்வளவு அவசரமாக வேலி எடுக்க வேண்டும்? தஸ்தாவேஜிகளை நன்றாகப் புரட்டிப் பாரும்" என்று கூறினார். காரியஸ்தர் "தஸ்தாவேஜி இருக்கவே இருக்கிறது. சாவகாசமாகப் புரட்டிப் பார்ப்போம். ஆனால் அந்த வேலையை விட்டு வைக்கக்கூடாது" என்றார். "அதுவும் நல்ல யோசனைதான்" என்று பிள்ளை தலையை ஆட்டினார். இரவுக்கிரவே வேலி மறைந்து போய்விட்டது.

மறுநாள் சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்து பேருக்குக் கள்ளு குடிப்பதற்காகக் குறுணி நெல் வீதம் கொடுக்கப்பட்டது. அவர்கள் குடித்துவிட்டுச் சென்று கல்யாணபுரம் பண்ணையையும், பண்ணையாட்களையும், பண்ணையைச் சேர்ந்தவர்களையும் 'பாடத்' தொடங்கினார்கள். சோமசுந்தரம் பிள்ளையின் ஆட்களும் பதிலுக்குப் பாட ஆரம்பித்தார்கள். பாட்டு ஆட்டமாக மாறி, ஆட்டம் அடிதடியில் முடிந்தது. மறுநாள் இரண்டு பண்ணைக் காரியஸ்தர்களும் தத்தம் ஆட்களை அழைத்துக் கொண்டு, எட்டு மைல் தூரத்திலுள்ள சப்மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குச் சென்றார்கள். இதற்கிடையில் போலீஸ் எட்கான்ஸ்டேபிள் பண்ணைகளின் வீடுகளுக்கு வந்து ஒவ்வொரு வண்டி நெல் பெற்றுக் கொண்டு சென்றார். நாலைந்து முறைபோய் அலைந்த பிறகு, இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்களில் ஐவருக்கு ஒரு மாதம் கடுங்காவலும் மற்றவர்களுக்குத் தலைக்கு ஐம்பது ரூபா அபராதமும் கிடைத்தன. அபராதத் தொகைகள் பண்ணைகளிலிருந்தே கொடுக்கப்பட்டன.

2

கல்யாணபுரம் பண்ணை காரியஸ்தர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு பழைய தஸ்தாவேஜிகளைப் புரட்டிப் பார்த்து ஒன்பது குழித்திடல் கல்யாணபுரம் பண்ணைக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்கத் தக்க தஸ்தாவேஜியைக் கண்டு பிடித்தார். முனிசீப் கோர்ட்டில் மறுநாளே வழக்குத் தொடுக்கப்பட்டது. ஊரில் பெரிய வக்கீலாகிய செவிட்டு ஐயங்காரைச் சோமசுந்தரம் பிள்ளை அமர்த்திக் கொண்டபடியால் சீனிவாசம் பிள்ளைக்குத் தகுந்த வக்கீல் அகப்படவில்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு, முனிசீபின் மைத்துனருக்கு அம்மான் என்ற உறவு கூறிக் கொண்ட இளைஞர் ஒருவரிடம் வக்காலத்துக் கொடுக்கப்பட்டது. முனிசீபின் உறவினராயிருந்தாலென்ன? யாராயிருந்தாலென்ன? செவிட்டு ஐயங்காரிடம் சாயுமா? ஒன்பது மாதம் வழக்கு நடந்த பிறகு சோமசுந்தரம் பிள்ளை வெற்றி பெற்றார்.

சீனிவாசம் பிள்ளை சாதாரணமாகவே பிறருக்குச் சளைக்கிற மனிதரல்லர். அதிலும் பல்லாண்டுகளாக அனுபவித்து வந்த நிலத்தைப் பறிகொடுக்க யாருக்குத்தான் மனம் வரும்? அவருடைய அண்டை அயலார்கள் அவரிடம் வந்து இந்தச் சமயத்தில் மாற்றானுக்கு விட்டுக் கொடுத்து விடலாகாது என்று போதிக்கலானார்கள். தஞ்சாவூர் மேல் கோர்ட்டில் சீனிவாசம் பிள்ளை அப்பீல் வழக்குத் தொடுத்தார். தஞ்சாவூரிலுள்ளவர்களில் பெயர் பெற்ற வக்கீல் அமர்த்திக் கொண்டதோடு சென்ற தேர்தலில் வாக்கு பெறும் நிமித்தம் தமது வீட்டிற்கு வந்து சென்ற சென்னை ஸ்ரீமான் இராமபத்திர ஐயரை அமர்த்திக் கொண்டு வரும்படி தமது காரியஸ்தரை அனுப்பினார். தம்மைக் கண்டதும் ஐயர் பரிந்து வரவேற்பார் என்று எண்ணிச் சென்ற காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை, பாவம் ஏமாந்தார். ஸ்ரீமான் இராமபத்திரஐயர் தாம் வாக்குத் தேடிச் சென்றவர்களை மறந்து எத்தனையோ நாட்களாயின. கமலாபுரம் பண்ணையிலிருந்து தாம் வந்திருப்பதாக அறிவித்த பின்னரும் வக்கீல் பாரமுகமாக இருந்ததைக் கண்டு காரியஸ்தர் பெருவியப்படைந்தார். கடைசியாக செலவெல்லாம் போக நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய் தருவதாகப் பேசி முடித்து விட்டுச் சொக்கலிங்கம் பிள்ளை ஊருக்குப் புறப்பட்டார்.

இதற்கு இடையில் இரண்டு பண்ணைகளுக்கும் சில்லரைச் சண்டைகள் நடந்த வண்ணமாயிருந்தன. வாய்க்காலிலும், கண்ணியிலும், வரப்பிலும், மடையிலும், களத்திலும், திடலிலும் இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்கள் சந்தித்த போதெல்லாம் வாய்ச் சண்டை, கைச்சண்டை, குத்துச் சண்டை, அரிவாள் சண்டை, வெட்டுச் சண்டை, இவைகளுக்குக் குறைவில்லை. வெகு நாட்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராயிருந்த கமலாபுரத்தில் வந்து குடியேறி இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென்று பிரசித்திப் பெற்று விளங்கிய ஸ்ரீமான் இராமனுஜலு நாயுடுவுக்கு ஓய்வென்பதே கிடையாது. பகலிலும், இரவிலும், வைகறையிலும், நடுச்சாமத்திலும் அவருக்கு அழைப்புகள் வந்த வண்ணமாயிருந்தன. அவ்வூர் 'அவுட் போஸ்ட்' அதிகாரியாகிய எட்கான்ஸ்டேபிள் நாராயணசாமி நாயுடு தமது மனைவிக்கு வைர நகைகளாகச் செய்து போட ஆரம்பித்தார்.

தஞ்சாவூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஓராண்டு நீடித்திருந்தது. இவ்வளவு நாட்களுக்குப் பின், சுமார் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தப் பிறகு, தமது பக்கம் தீர்ப்புச் சொல்லப்பட்டதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மகிழ்ச்சியை நேயர்களே ஊகித்தறிந்து கொள்ள வேண்டும். இதனால் அவருடைய மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளை சென்னை ஐகோர்ட்டில் மறுநாள் அப்பீல் கொடுத்து விட்டார் என்ற செய்தி இரண்டொரு நாட்களில் அவர் காதுக்கெட்டியது. சென்னையில் சட்டக் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த அவர் அருமைப் புதல்வன் சுப்பிரமணியன், ஒன்பது குழி நிலத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தது போதுமென்றும், வழக்கில் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் நஷ்டமே தவிர வேறில்லையென்றும் பலகாரணங்களை எடுத்துக்காட்டி நீண்ட கடிதம் எழுதினான். ஆனால் சீனிவாசம் பிள்ளையோ, என்ன வந்தாலும், தமது ஆஸ்தியே அழிந்து போவதானாலும் கல்யாணபுரம் பண்ணைக்குச் சளைப்பதில்லையென்றும், ஒரு கை பார்த்தே விடுகிறதென்றும் முடிவு செய்து விட்டார். ஆதலின் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கி வழக்கை நடத்தி வரும்படி தமது காரியஸ்தருக்கு உத்தரவிட்டார்.

3

பின்னும் ஓராண்டு கழிந்த பின்னர் ஐக்கோர்ட்டில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை 'ஜெயம்' என்று அவசரத் தந்தி கொடுத்து விட்டு அன்று மாலை போட்மெயிலிலேயே ஊருக்குப் புறப்பட்டார். சூரியன் உதயமாகுந் தருணத்தில் சீனிவாசம் பிள்ளைக்குத் தந்தி கிடைத்தது. தந்தியைப் படித்ததும் அவர் ஆனந்தக் கடலில் மூழ்கியவராய், தமது பந்து மித்திரர்களையும் ஆட்படைகளையும் அழைத்து வர ஏவினார். கற்கண்டு, சர்க்கரை, வாழைப்பழம், சந்தனம் முதலியவை ஏராளமாக வாங்கிக் கொண்டுவரச் சொன்னார். கடையைத் திறக்கச் செய்து, ஒரு மணங்கு அதிர்வெடி மருந்து வாங்கி வரும்படி ஓர் ஆளை அனுப்பினார்.

காலை எட்டு மணிக்குக் காரியஸ்தரும் வந்து சேர்ந்தார். அவரைச் சீனிவாசம்பிள்ளை பரிந்து வரவேற்று, "வாருங்கள், வாருங்கள். ஏன் நேற்றே தந்தி வந்து சேரவில்லை?" என்று வினவினார். "நேற்று மாலை ஐந்து மணிக்குத்தான் தீர்ப்புச் சொல்லப்பட்டது. உடனே சென்று தந்தி அடித்துவிட்டு, ஜாகைக்குப்போய் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். பட்டணத்துத் தம்பியிடம் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரோ மகாத்மா காந்தியாமே! கடற்கரையில் அவருடைய பிரசங்கமாம். தம்பி அங்கே போயிருந்தான். ஆதலால் அவனிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்தேன்" என்று சொக்கலிங்கம் பிள்ளை கூறினார்.

சீனிவாசம் பிள்ளை, அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் சந்தனம், கற்கண்டு, வெற்றிலைப்பாக்குக் கொடுக்கச் சொன்னார். அதிர்வேட்டு போடும்படி உத்தரவிட்டார். 'திடும்' 'திடும்' என்று வெடிச்சத்தம் கிளம்பி ஆகாயத்தை அளாவிற்று. அப்பொழுது சீனிவாசம் பிள்ளை அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார்:- "நமக்குப் பின்னால் நமது குழந்தைகள் சொத்துக்களை வைத்து நிர்வகிக்கப் போகிறதேது? பாருங்கள்; ஒன்பதினாயிரம் ரூபாய் செலவழித்தாலும் கடைசியில் பிதுராஜித சொத்து ஒன்பது குழி நிலத்தை மீட்டுக் கொண்டேன். நமது குழந்தைகளோ, 'ஒன்பது குழி நிலம் பிரமாதமாக்கும்' என்று சொல்லி விட்டு விடுவார்கள். தம்பி சுப்பிரமணியம் இங்கிலீஸ் படிப்பதன் அழகு, எனக்குப் புத்தி சொல்லி 'ஒன்பது குழி போனால் போகிறது' என்று கடிதம் எழுத ஆரம்பித்து விட்டான். அவன் எவ்வாறு இந்தச் சொத்துக்களை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்பது பெரும் கவலையாக இருக்கிறது..." என்று இவ்வாறு பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று 'நில்' 'நிறுத்து' என்று கூவினார். நிமிஷ நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. அப்போது ஆற்றில் அக்கரையில் 'திடும்' 'திடும்' என்று வேட்டுச் சத்தம் கிளம்புவது நன்றாகக் கேட்டது. அங்கே கூடியிருந்தவரனைவரும் திகைத்துப் போய்விட்டனர். சீனிவாசம் பிள்ளை பிரமித்துக் காரியஸ்தர் முகத்தைப் பார்த்தார். காரியஸ்தரோ கல்யாணபுரம் பக்கமாக நோக்கினார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த திசையிலிருந்து ஒருவன் வந்தான். அவனைப் பார்த்து, "கல்யாணபுரத்தில் வேட்டுச் சத்தம் கேட்கிறதே, என்ன விசேஷம்?" என்று காரியஸ்தர் கேட்டார். "நடுப்பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கு வழக்கில் ஜெயம் கிடைத்ததாம். ஏக ஆர்ப்பாட்டம்; வருவோர் போவோருக்கெல்லாம் கற்கண்டும், சர்க்கரையும் வாரி வாரிக் கொடுக்கிறார். வேட்டுச் சத்தம் வானத்தைப் பிளக்கிறது" என்று அவன் பதில் சொன்னான். சீனிவாசம் பிள்ளை அசைவற்று மரம் போலாகி விட்டார். காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளைக்கு ஏழு நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. அவர் கைப்பெட்டியைத் திறந்து தீர்ப்பு நகலை எடுத்துக் கொண்டு அவ்வூரில் இங்கிலீஷ் தெரிந்தவரான போஸ்டு மாஸ்டர் வீட்டுக்குப் புறப்பட்டார். சீனிவாசம் பிள்ளையும் ஆர்வம் தாங்காமல் அவருடன் சென்றார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராய் நழுவ ஆரம்பித்தார்கள். ஜோசியர் ராமுவையர் இதுதான் தருணமென்று தட்டில் மீதியிருந்த கற்கண்டு முதலியவைகளைத் தலைகீழாகக் கவிழ்த்து மேல் வேஷ்டியில் முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்.

போஸ்டுமாஸ்டர் தீர்ப்பைப் படித்துக் கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளைக்கே ஜெயம் கிடைத்திருக்கிறதென்று கூறியதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தையும், துக்கத்தையும் யாரால் கூற முடியும்? சொக்கலிங்கம் பிள்ளையோ திட்டத் தொடங்கினார்:- "அந்த வக்கீல் குமாஸ்தா சாமிநாதையன் என்னை ஏமாற்றி விட்டான். அயோக்கியப் பார்ப்பான்..." அதற்குமேல் அவர் கூறிய மொழிகள் இங்கு எழுதத் தகுதியற்றவை. பிறகு சீனிவாசம் பிள்ளை என்னவென்று கேட்டதற்கு காரியஸ்தர் கூறியதாவது:- "அந்தப் பாவிகள் கோண எழுத்துப் பாஷையில் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் வக்கீல் குமாஸ்தா சாமிநாதையனைக் கேட்டேன். தீர்ப்பு நமக்கனுகூலம் என்று கூறி அவன் என்னிடம் பத்து ரூபாய் பறித்துக் கொண்டான். போதாதற்குக் காபி கிளப்புக்கு மூன்று ரூபாய் அழுததுடன், பவுண்டன் பேனா ஒன்றும் ஆறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தேன். ஏமாந்து போனேன். அவசரத்தினால் தம்பி சுப்பிரமணியத்திடம் கூடத் தீர்ப்பைக் காட்டாமல் வந்துவிட்டேன். அந்தப் படுபாவி" என்று மீண்டும் வக்கீல் குமாஸ்தாவைத் திட்ட ஆரம்பித்தார். சீனிவாசம் பிள்ளை அன்று முழுதும் எரிந்து விழுந்த வண்ணமாயிருந்தார். அன்று அவருடைய ஆட்கள் பட்டபாடு ஐயனுக்குத்தான் தெரியும். அவர் எதிரில் வந்தவர்க்கெல்லாம் திட்டும் அடியும் கிடைத்தன. அன்று மட்டும் சோமசுந்தரம் பிள்ளை எதிர்ப்பட்டிருந்தால் பீமனுடைய சிலையைத் திருதராஷ்டிரன் கட்டித் தழுவி நொறுக்கியது போல் பொடிப் பொடியாக செய்திருப்பார்.

4

துன்பங்கள் எப்பொழுதும் தனித்து வருவது வழக்கமில்லையே? எதிர்பாராத சமயத்தில் தலைமேல் இடிவிழுந்தது போல மற்றொரு துயரச் சம்பவம் சீனிவாசம் பிள்ளைக்கு நேரிட்டது. சட்டக் கலாசாலையிலே படித்துக் கொண்டிருந்த அவரது புதல்வன் சுப்பிரமணியன் காந்திமகான் பிரசங்கம் கேட்டுவிட்டுச் சட்டக் கலாசாலையை பகிஷ்கரித்து வீடு வந்து சேர்ந்தான். வழக்கை இழந்த சீனிவாசம் பிள்ளை தமது புதல்வன் உயர்ந்து நிலைமையிலிருக்கிறானென்னும் ஒரு பெருமையாவது அடையலாமென்று நம்பியிருந்தார். தம்மிடம் வக்கீல்கள் பறித்துக்கொண்ட பணத்தைப்போல் எத்தனையோ மடங்கு பணம் தமது புதல்வன் மற்றவர்களிடமிருந்து பறிப்பானல்லவா என்று நினைத்து அவர் சில சமயங்களில் திருப்தியடைவதுண்டு. ஆனால், அந்த எண்ணத்திலெல்லாம் மண்ணைப் போட்டு, வெண்ணெய் வரும் சமயத்தில் தாழியுடைவதைப் போல் தமது புதல்வன் பரீட்சைக்குப் போகும் சமயத்தில் கலாசாலையை விட்டு வந்ததும் அவருக்குண்டான மனத்துயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஆயினும், கண்ணிலும் அருமையாக வளர்த்த ஒரே புதல்வனாதலால், சுப்பிரமணியத்தை அவர் கடிந்து கூறவில்லை. சுப்பிரமணியனும், சமயம் பார்த்து அவருக்குப் பல வழிகளிலும் தனது செய்கையின் நியாயத்தை எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்ப முயன்றான். "நீ என்னதான் கூறினாலும் என் மனம் ஆறுதல் அடையாது. இந்தப் பக்கத்தில் நமது சாதியாரிலே உன்னைப் போல் இவ்வளவு சிறு வயதில் எம்.ஏ. பரீட்சையில் தேறி பி.எல். படித்தவர்கள் வெகு அருமை. நீ மட்டும் தொடர்ந்து படித்திருந்தால், நம்முடைய சாதியார்களெல்லாம் தங்கள் வழக்குகளுக்கு உன்னையே நாடி வருவார்களல்லவா? அது எவ்வளவு பெருமையாயிருக்கும்" என்று சீனிவாசம் பிள்ளை கூறினார். "அப்பா! தாங்கள் சொல்கிறபடி நமது சாதியார் அனைவரும் என்னை நாடி வருவார்களென்று நான் நம்பவில்லை. அசூயை காரணமாக வேறு வக்கீல்களைத் தேடிப் போதலும் கூடும். தங்கள் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், நான் நமது மரபினருக்கு நன்மை செய்பவனாவேனா. கோர்ட் விவகாரத்தினால் ஏற்படும் தீங்குக்கு நமது குடும்பமே சிறந்த உதாரணமாக விளங்கவில்லையா? மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பற்றி எனக்கு சிறிதளவிருந்த ஐயமும் இவ்வழக்கினால் நீங்கிவிட்டது. ஒன்பது ரூபாய் பெறக்கூடிய ஒன்பது குழி நிலத்திற்காக நாம் பதினாறாயிரம் ரூபாய் தொலைத்தோம். அவர்களும் அவ்வளவு தொகை செலவழித்திருப்பார்கள். பார்க்கப் போனால் நாமும் அவர்களும் உறவினர்களே. இந்த ஒன்பது குழி நிலத்தை யார் வைத்துக் கொண்டால் தான் என்ன மோசம். பண நஷ்டத்தோடன்றி இந்த வழக்கு நமக்கும் அவர்களுக்கும் தீராப் பகையையும் உண்டாக்கி விட்டது. கோர்ட்டுகளும் வக்கீல்களும் அதிகமாவதற்குத் தகுந்தாற்போல் தேசத்தில் வழக்குகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பெருந் தீங்குகளுக்குக் காரணமாயிருக்கும் இத்தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்திலோ, பெரும் பாகம் மோட்டாருக்கும், பெட்ரோல் எண்ணைக்கும், பீங்கான் சாமான்களுக்கும், மருந்துகளுக்குமாக அன்னிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது. அன்னிய அரசாங்கம் இந்நாட்டில் நிலைத்து பலம் பெறுவதற்குக் கோர்ட்டுகளும் வக்கீல்களும் காரணமாயிருக்கின்றனர். இத்தகைய தொழிலை செய்வதை விட எனக்குத் தெரிந்த சட்ட ஞானத்தைக் கொண்டு இப்பக்கத்தில் ஏற்படும் வழக்குகளை கோர்ட்டுக்குப் போகவிடாமல் தடுத்து தீர்த்து வைப்பது சிறந்த வேலையென்று தங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று சுப்பிரமணியன் பலவாறாக எடுத்துக் கூறி தந்தையை சமாதானம் செய்ய முயன்றான்.

5

நாட்டாற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது. இரு கரையிலும் மரங்களடர்ந்ததனால், நீரின் மேல் இருண்ட நிழல் படிந்திருந்தது. ஆங்காங்கு ஒவ்வோர் ஒளிக்கிரணம், இலைகளினூடே நுழைந்து தண்ணீரை எட்டிப் பார்த்தது. சீனிவாசம் பிள்ளை ஒரு கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்னால் எதிர்க்கரை ஓரத்தில் நீரில் ஓரு சேலையின் தலைப்பு மிதப்பதைக் கண்டார் - ஒரு பெண்ணுருவம்! சீனிவாசம் பிள்ளை நன்றாக உற்றுப் பார்த்தார். நீலவானத்தில் மெல்லிய மேகத் திரையால் மறைக்கப்பட்ட களங்கமற்ற முழுமதியை போன்று அந்நீல நீர்ப்பெருக்கில் அலைகளால் சிறிதளவே மறைந்து திகழ்ந்த அவ்வழகிய வதனம் யாருடையது? நுனியில் சிறிது வளைந்துள்ள அந்த மூக்கு, அவ்வழகிய செவ்விதழ்கள், திருத்தமாக அமைந்த அந்த முகவாய்க்கட்டை, நீண்டு வளர்ந்து அலையில் புரளும் கரிய கூந்தல் - ஆ! அவருடைய உறவினர் - இல்லை - பகைவர் சோமசுந்தரம் பிள்ளையின் அருமை புதல்வி நீலாம்பிகையே அவள். ஒரு வினாடிக்குள் சீனிவாசம் பிள்ளையின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றன. உயிரினும் அருமையாக வைத்துப் போற்றி வளர்த்து வரும் ஒரே பெண் இறந்தொழிந்தால் சோமசுந்தரம் பிள்ளையின் கர்வம் அடங்கி விடுமல்லவா? தாம் பேசாமல் போய் விட்டாலென்ன? ஆனால், அடுத்த கணத்தில், அவர் சோமசுந்தரம் பிள்ளையையும், அவரிடம் தமக்குள்ள பகையையும், ஒன்பது குழி நிலத்தையும், ஒன்பதாயிரம் ரூபாய் நஷ்டத்தையும் முற்றிலும் மறந்தார். குழந்தை நீலாம்பிகை ஆற்றில் போகிறாளென்னும் ஒரு நினைவே அவர் உள்ளத்தில் எஞ்சி நின்றது. அவரையும் அக்குழந்தையையும் பிணைத்த இரத்த பாசத்தினால் இழுக்கப்பட்டவராய், அவர் திடீரெனத் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று நீலாம்பிகையைக் கொண்டு வந்து கரை சேர்த்தார்.

ஆனால், அதன் பின்னர் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை. உணர்ச்சியற்றுக் கிடந்த உடலில் உயிர் தளிர்க்கச் செய்வதெப்படி? அப்படியே தூக்கிக் கொண்டு தமது வீடு சேர்ந்தார். அவர் புதல்வன் சுப்பிரமணியன், உள்ள நிலைமையை ஒரு கணத்தில் குறிப்பாக உணர்ந்தான். சாரணர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவனாதலால், இவ்வித அபாய காலங்களில் செய்ய வேண்டிய ஆரம்ப சிகிட்சைகளைச் செவ்வையாகக் கற்றிருந்தான். நீலாம்பிகை மீண்டும் உணர்வு பெற்றபோது தான் வேறொருவர் வீட்டில் கட்டிலின் மீது விரிக்கப்பட்ட மெத்தையின் மேல் கிடத்தப் பட்டிருப்பதைக் கண்டாள். அவளுடைய கண்கள், குனிந்த வண்ணம் அவளுக்கு எப்பொழுது உணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியனுடைய கண்களைச் சந்தித்தன.

நீலாம்பிகையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் ஓட்டமாக ஓடி, சோமசுந்தரம் பிள்ளை வீட்டுக்குச் சென்று அவர்கள் வீட்டுப் பெண் சுழலில் அகப்பட்டு ஆற்றோடு போய் விட்டதாக தெரிவித்தார்கள். சோமசுந்தரம்பிள்ளையும் அவர் மனைவியும் மற்றுமுள்ளவர்களும் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் சிறிது தூரம் வருவதற்குள் சீனிவாசம் பிள்ளை அனுப்பிய ஆள் அவர்களைச் சந்தித்து, நீலாம்பிகை சீனிவாசம் பிள்ளையினால் காப்பாற்றப்பட்டு அவருடைய வீட்டில் சுகமாக இருப்பதாகத் தெரிவித்தான். அதன்மேல் சோமசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் சிறிது மன ஆறுதல் பெற்றுச் சீனிவாசம் பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். குழந்தை நீலாம்பிகையை பார்த்துச் சிறிது துக்கம் தணிந்த பின்னர், சீனிவாசம் பிள்ளையும் சோமசுந்தரம் பிள்ளையும் முகமன் கூறிக் கொண்டார்கள். எல்லோரும் அன்று சீனிவாசம் பிள்ளை வீட்டிலேயே உணவருந்தினார்கள்.

பழைய உறவினரும் இடையில் பகைவர்களாயிருந்து பின்னர் சேர்ந்தவர்களுமான அவ்விரு குடும்பத்தாருக்கும் விரைவிலேயே புதிய நெருங்கிய உறவு என்ன ஏற்பட்டதென்று வாசகர்களுக்கு நாம் சொல்லவும் வேண்டுமோ?