எஸ் எஸ் மேனகா

அலைகடலின் நடுவில், 'எஸ். எஸ். மேனகா' என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்தது கிடையாது. இந்தத் தடவை அதில் ஏற்றியிருந்த பாரம் முக்கியமாகப் பிரயாணிகளின் பாரமேயாகும். கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல் தளம் வரையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பிரயாணிகள், தேனடைகளை மொய்க்கும் தேனீக்களைப் போல் நெருங்கியிருந்தார்கள். அவர்கள் பல தேசத்தினர்; பல சாதியினர்.

முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வெள்ளைக்காரர்கள் மட்டும் காணப்பட்டார்கள். அவர்களில் ஸ்திரீகளும் குழந்தைகளும் அதிகமாயிருந்தனர். மற்ற பகுதிகளில் கறுப்பு மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், வங்காளிகள், மலையாளிகள், பஞ்சாபியர், யாழ்ப்பாணத்தார் முதலியோர் கலந்து காணப்பட்டார்கள். ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள், கிழவர்கள் ஆகிய எல்லா வயதினரும் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கப்பலில் படுப்பதற்கு இடமோ, ஸ்நான வசதியோ ஒன்றும் கிடையாது.

அந்த ஜனங்கள் குளித்து நாட்கணக்கில் ஆகியிருக்க வேண்டும். அத்தகைய அழுக்குப் பிடித்த ஜனக்கூட்டத்தை வேறெங்கும் காண்பது துர்லபம். அவரவர்களுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியோ, மூட்டையோ வைத்துக் கொண்டு 'சிவ சிவ' என்று உட்கார்ந்திருந்தார்கள். தண்ணீரைக் கண்டு பல தினங்களான அவர்களுடைய முகங்களில் குடிகொண்டிருந்த சோர்வையும், துயரத்தையும் பயங்கரத்தையும் விவரிக்க முடியாது. சிலர் பேயடித்தவர்களைப்போல் இருந்தார்கள். வேறு சிலர் இராத்திரியெல்லாம் கண் விழித்து மயான காண்டம் பார்த்துவிட்டு வந்தவர்களைப்போல் காணப்பட்டார்கள்; இன்னும் சிலரின் முகத்தில் பிரம்மஹத்தி கூத்தாடிற்று; பசி கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தோன்றினர். சாதாரணமாக இவ்வளவு நெருங்கிய கூட்டத்தில் இரைச்சல் அசாத்தியமாய் இருக்குமல்லவா? இங்கேயோ, ஜனங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளக் கூட இல்லை. யாராவது பேசினால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் ஈனஸ்வரத்தில் பேசினார்கள். அவ்வப்போது கிளம்பிய குழந்தைகளின் மெலிந்த, அழுகுரல் இருதயத்தை வேதனை செய்வதாயிருந்தது.

கப்பலில் எந்தப் பக்கம் பார்த்தாலும், கண்வலி வரும்படியாக ஆபாசமும் அழுக்கும் நிறைந்திருந்தன. ஒழுங்கு, சுத்தம் என்பதையே அங்கே காணமுடியாது. துர்க்கந்தமோ கேட்க வேண்டியதில்லை. கப்பலின் புதியபெயிண்டின் நாற்றம், மூலையில் அழுகிக் கிடந்த வெங்காயத்தின் நாற்றம், பழைய ரொட்டித் துண்டுகளின் நாற்றம், மனிதர்களின் வியர்வை நாற்றம், சுருட்டு நாற்றம், குழந்தைகள் ஆபாசம் செய்த நாற்றம் அம்மம்மா! எத்தனை விதமான நாற்றங்கள்? - நரகம் என்பது இதுதானோ?

எஸ். எஸ். மேனகா இந்தக் கதியை அடைந்திருந்ததன் காரணம் என்னவென விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய கப்பல் என்று சொன்னாலே போதும். சிங்கப்பூரை ஜப்பானியர் தாக்குவதற்குச் சில நாளைக்கு முன்புதான் அது கிளம்பிற்று. கிளம்பி இப்போது ஆறு நாளாகி விட்டது. ஆனால், கப்பல் தற்சமயம் கடலில் எந்த இடத்துக்கு வந்திருக்கிறதென்று பிரயாணிகளில் யாருக்கும் தெரியாது. அது எங்கே போகிறதென்றுகூட ஒருவருக்கும் நிச்சயமில்லை. அநேகமாகக் கொழும்புக்குப் போகலாமென்று கருதப்பட்டது. ஆனால், எப்போது போய்ச் சேருமோ கடவுளே அறிவார்.

போய்ச் சேரும் என்பதுதான் என்ன நிச்சயம்? பிரயாணிகள், கப்பலின் வசதிக் குறைவுகளால் அடைந்த கஷ்டங்களைக் காட்டிலும், மனோபீதியினால்தான் அதிகக் கலக்கம் அடைந்திருந்தார்கள். அவர்களில் பலர், மலாய் நாட்டில் ஜப்பானுடைய வெடிகுண்டுகளினால் நேர்ந்த விபரீதங்களை நேரில் பார்த்தவர்கள். அந்த பயங்கரங்களை இந்த ஜன்மத்தில் அவர்களால் மறக்கவே முடியாது. தரையிலேயே ஜப்பானுடைய வெடி குண்டுகளினால் அப்படிப்பட்ட பயங்கரங்கள் நேரிடக் கூடுமென்றால், நடுக் கடலில் கப்பலின்மேல் குண்டு விழுந்தால் கதி என்ன? அதோ கதிதான்!

ஆகவே, பிரயாணிகளிற் பலர், அடிக்கடி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர்.

ஆனால், ஆகாயத்திலிருந்து மட்டுந்தானா அபாயம் வரக்கூடும்? அபாயம், கடலில் மிதந்தும் வரலாம்! கடலுக்கடியிலிருந்து திடீரென்று வந்தும் தாக்கலாம் ஜப்பானுடைய யுத்தக் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்துமகா சமுத்திரத்திலும் வங்காளக் குடாக் கடலிலும் சஞ்சரிப்பதாகச் சில நாளாகவே வதந்தி இருந்தது. ஆகவே, உயிருடன் ஊருக்குத் திரும்பிப் போவோம் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில், யாருடைய முகந்தான் களையாக இருக்கமுடியும்.

என்றாலும் அந்த ஆயிரம் பிரயாணிகளுக்குள்ளே ஒரு ஸ்திரீயின் முகம் மட்டும் அப்போது கூட களையாகத் தான் இருந்தது. களை எப்போதாவது குறைந்தால் அந்த ஸ்திரீ தனக்கருகில் வைத்திருந்த பெட்டிக்குள்ளிருந்து களையை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டாள்! அவள் கண்ணிலே இலேசாக மை தீட்டியிருந்தது. நெற்றியிலே பொட்டு இருந்தது. கூந்தல் பின்னி விடப்பட்டிருந்தது. பிரதி தினமும் மூன்று, நாலு தடவை, அவள் எப்படியோ நல்ல ஜலம் சம்பாதித்து முகத்தை அலம்பிப் பவுடர் பூசிக் கொண்டதுடன், மற்ற அலங்காரங்களையும் செய்து கொண்டாள். தலையில் வைத்துக் கொள்ளப் புதிய பூ இல்லாத ஒரு குறைதான். அதற்குப் பதிலாக, வர்ணநெட்டிப் பூ தலையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்குமிங்கும் உலாவும் போது, மெல்லிய மல்லிகை ஸெந்தின் வாசனை மற்ற நாற்றங்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்தது.

இந்த ஸ்திரீயின் விஷயத்தில் மற்றப் பிரயாணிகளெல்லாம் எவ்வளவு அருவெருப்புக் கொண்டிருப்பார்களென்று சொல்ல வேண்டியதில்லை. அவளைப் பார்க்கும் போதே, பலருடைய முகம் சுணுக்கமடைந்தது. அவளைச் சுட்டிக்காட்டி, அநேகர் காதோடு காதாய் இரகசியம் பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலர், அவள் காதில் விழும்படியாக "சனியன்!" "மூதேவி!" "தரித்திரம் இங்கே என்னத்திற்கு வந்தது?" "பிராணன் போகிற போது கூடப் பவுடர் பூசிக் கொள்ளுவாளோ? யமனையே மயக்கி விடலாமென்ற எண்ணம் போலிருக்கு!" என்று இவ்விதமெல்லாம் பேசினார்கள்.

மற்றும், அந்தப் பிரயாணிகள் பேசிக் கொண்டதிலிருந்து, மேற்படி ஸ்திரீயின் பெயர் ரஜனி என்றும், சிங்கப்பூரில் அவள் துன்மார்க்க வாழ்க்கையில் 'பெயர் எடுத்தவள்' என்றும் தெரியவந்தது. அவள் அருகில் இருந்த பெட்டியின் மேல் 'மிஸ் ரஜனி' என்று அச்சிட்டிருந்தது. அவளுடைய வயது என்ன இருக்கும் என்று ஊகிப்பது மிகவும் கடினம். ஒரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயது ரொம்ப ஆகியிருக்க வேண்டும்; பவுடரை அப்பிக் கொண்டு பால்யம் மாதிரி நடிக்கிறாள்" என்று தோன்றும். இன்னொரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயசு கொஞ்சம்; துர்நடத்தை காரணமாக வயது அதிகம் காட்டுகிறது" என்று தோன்றும்.

இப்படிப்பட்ட ஸ்திரீயைப் பார்த்து யார் தான் அருவருப்புக் கொள்ளாமலிருக்க முடியும்? அதுவும், அடுத்த நிமிஷத்தில் உயிரோடிருப்போமோ என்பது நிச்சயமில்லாத அந்த சமயத்தில்?

எனினும் அவளிடம் அருவருப்புக் காட்டாத ஒரே ஒரு ஆத்மா அந்தக் கப்பலில் இருக்கத்தான் இருந்தது. அவன் அவளிடம் அருவருப்புக் காட்டாததோடு இல்லை, அவசியத்துக்கு அதிகமான அபிமானம் காட்டுவதாகவும் தோன்றியது. பிரயாணிகளில் ஒருவர் அவ்விதம் நடந்து கொண்டாலே அது ஆச்சரியத்தைத் தரும். அவனோ, கப்பல் உத்தியோகஸ்தரில் ஒருவன், உதவி என்ஜினீயர். பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன் மாதிரி இருந்தான்.

அவன் பெயர் ஜான் என்று மற்ற உத்தியோகஸ்தர்கள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் சுத்தமான தமிழ் பேசினான்.

ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது கப்பல் மேல் தளத்துக்கு உதவி என்ஜினீயர் ஜான் வருவான். ரஜனியும் உடனே அவனை நோக்கிப் போவாள். இரண்டு பேரும் கப்பல் தளத்தில் கிராதியில் சாய்ந்து கொண்டு நிற்பார்கள். அவர்கள் அதிகமாகப் பேசுவது கிடையாது. மேலே ஆகாசத்தைப் பார்ப்பார்கள். சில சமயம், ஜான் ஒரு ரொட்டித் துண்டை மறைத்து எடுத்துக் கொண்டு வருவான். (கப்பலில் உணவுப் பண்டம் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்) ரஜனி வேண்டாம் என்று மறுப்பாள். பிறகு வாங்கிக் கொள்வாள்.

இதெல்லாம் மற்ற பிரயாணிகளுக்குப் பிடிக்கவேயில்லை. "கப்பலில் வந்து கூட யாரோ ஒருவனை வலையில் போட்டுக் கொண்டுவிட்டாள், பார்!" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். கப்பல் காப்டனிடம் இதைப் பற்றிப் புகார் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டார்கள்.

அன்று சாயங்காலம் ரஜனி ஜானைச் சந்தித்த போது, "நாம் இரண்டு பேரும் பேசுவது மற்றப் பிரயாணிகளுக்குப் பிடிக்கவில்லை" என்றாள்.

"நாம் இரண்டு பேரும் பேசுகிறோமா, என்ன? நாம் பேசுகிறது இதுவரையில் என் காதிலேயே விழவில்லையே" என்றான். ரஜனி, கலீரென்று சிரித்தாள். சொல்ல முடியாத சோகமும் ஆழ்ந்த பீதியும் குடிகொண்டிருந்த அந்தக் கப்பலில் அவளுடைய சிரிப்பின் ஒலி, அபஸ்வரமாய்த் தோன்றியது.

அதை அவளே அறிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு "நாம் வெறுமனே சற்று நேரம் நிற்பது கூட அவர்களுக்கு பொறுக்கவில்லை. காப்டனிடம் புகார் செய்யப் போகிறார்களாம்!" என்றான்.

"உன்மேல் அவர்களுக்கு என்ன கோபம்?" என்று ஜான் கேட்டான்.

"அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவர்களுடைய சொத்து சுதந்திரத்தையெல்லாம் நானா பறித்துக் கொண்டேன்? ஜப்பான்காரன் மேல் காட்ட வேண்டிய கோபத்தை என் பேரில் காட்டி என்ன பிரயோசனம்? அசட்டு ஜனங்கள்! நான் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிறோம். இருக்கிற வரையில் சந்தோஷமாக இருந்து விட்டுப் போனாலென்ன? மூதேவி பிடித்தது போல் முகத்தைக்கூட அலம்பாமல் உட்கார்ந்திருப்பதில் என்ன லாபம்?"

"சாவைப் பற்றி ஏன் அடிக்கடி பேசுகிறாய்? செத்துப் போக ஆசையாயிருக்கிறதா?" என்று ஜான் கேட்டான்.

"ஆமாம்" என்று ஒரே வார்த்தையில் ரஜனி பதில் சொன்னாள்.

"ஏன் அப்படி?"

"சாகாமல் இருந்து என்ன ஆகவேண்டும்?"

"இந்தியாவில் பந்துக்கள், தெரிந்தவர்கள், யாரும் இல்லையா?"

"இல்லை"

"உயிரை விடுவதாயிருந்தால், இன்றைக்கு ராத்திரியைப் போல் தக்க தருணம் கிடையாது. ஒன்பது மணிக்குச் சந்திரன் உதயமாகி விடும். அப்புறம் சமுத்திரம் பாற்கடலாயிருக்கும்."

"நான் தயார்" என்றாள் ரஜனி.

அன்று சாயங்காலம் அஸ்தமன சமயத்தில், ரஜனி அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து விட்டுப் பிரயாணிகள் அளவில்லாத வியப்பும் அருவருப்பும் கொண்டார்கள்; அருவருப்பை வெளிப்படையாகவும் காட்டிக் கொண்டார்கள்.

ரஜனி, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தனக்குள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாய்த் தோன்றினாள். நேரமாக ஆக அவளுடைய பரபரப்பு அதிகமாயிற்று.

ரஜனி, மனோநிலையைப் பிரதிபலிப்பது போல் கப்பல் வழக்கத்தைவிட மிகவும் துரிதமாகச் சென்றது.

அதைப் பற்றி பிரயாணிகள் கவலையுடன் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்.

இரவு சுமார் எட்டு மணிக்கு ஜான் கப்பலின் மேல் தளத்துக்கு வந்ததும், ரஜனி விரைந்து எழுந்து வந்து அவன் பக்கத்தை அடைந்தாள்.

"தயார்தானே? மனதில் சந்தேகம் ஒன்று மில்லையே?"

"கொஞ்சங்கூட இல்லை."

"அப்படியானால் என்னோடு வா!" என்று சொல்லிவிட்டு ஜான் முன்னால் நடந்தான். யுத்தகாலமாதலால், கப்பலில் இராத்திரியில் விளக்குப் போடுவது கிடையாது. ஒரே இருட்டாயிருந்தது.

ஜானுடைய வெள்ளை உடுப்பின் அடையாளத்தைக் கொண்டு ரஜினி நடந்தாள்.

ஓரிடத்தில் அவளுக்குக் கால் தடுமாறிற்று.

ஜான் திரும்பி அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான்.

ரஜனிக்கு மயிர் கூச்செறிந்தது.

இரண்டு பேரும் மௌனமாய்க் கொஞ்ச தூரம் நடந்தார்கள்.

"இங்கே படிக்கட்டு, ஜாக்கிரதையாய் இறங்கி வா!" என்றான் ஜான்.

இறங்கிப் போனார்கள்.

இவ்விதம் கால்மணி நேரம் இருட்டில் நடந்த பிறகு, ஜான் ஓரிடத்தில் நின்றான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

வெளியிலிருந்து குளிர்ந்த காற்று 'விர்'ரென்று ரஜனியின் முகத்தில் அடித்தது. அலைத்துளிகளும் தெறித்தன.

"கடைசித் தடவை கேட்கிறேன். கொஞ்சம் கூட உன் மனதில் சந்தேகம் இல்லையே?" என்றான் ஜான்.

"இல்லவே இல்லை."

"இந்தக் கதவுக்கு வெளியில் ஏணி தொங்குகிறது. அதன் வழியாகக் கீழேயுள்ள படகில் நாம் இறங்க வேண்டும். படகு பலமாய் ஆடும். அதற்காகப் பயப்பட வேண்டாம். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்."

"செத்துப் போவதற்கு இவ்வளவு ஜாக்கிரதையும் தடபுடலுமா?" என்றாள் ரஜனி. ஆனாலும், ஜானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

வெளியில் தொங்கிய ஏணி வழியாக இருவரும் படகில் இறங்கினார்கள்.

கப்பலின் ஓரத்தில் பயங்கரமாகக் கொந்தளித்த ஜலத்தில் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஜான் ஒரு கையால் ரஜனியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் படகைக் கப்பலுடன் பிணைத்திருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டான்.

கப்பலிலிருந்து விடுபட்டதும் படகு அப்படியும் இப்படியும் வெகு பலமாக ஆடிற்று. ஆனாலும், அது உயிர் காக்கும் படகாதலால் கவிழவில்லை.

சில நிமிஷத்துக்குள் கப்பலுக்கும் படகுக்கும் நடுவில் வெகுதூரம் ஏற்பட்டுவிட்டதென்று மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் தெரிந்தது.

"ஐயோ! மறுபடி கப்பலை எப்படிப் பிடிப்பீர்கள்!" என்றாள் ரஜனி.

"பார்த்தாயா, முன்னாமேதான் சொன்னேனே?"

"எனக்காகக் கேட்கவில்லை. நீங்கள் திரும்பிப் போகவேண்டாமா?"

"எதற்காகப் போகவேண்டும்?"

"எனக்குத்தான் உயிர் வாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு விட்டது."

"எனக்கும் அப்படித்தான்."

"ஆனால், கப்பலில் உங்களுக்கு வேலை இருக்கிறதே அதை யார் செய்வார்கள்?"

"இன்று இரவு எனக்கு வேலையில்லை, நாளைக்கு யாருமே செய்யவேண்டிய அவசியமிராது."

"என்ன சொல்லுகிறீர்கள்?"

"அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் தெரியும்." சற்றுநேரம் மௌனமாயிருந்த பிறகு ரஜினி, "நீங்களும் உயிரை விடுவதற்காகத்தான் வந்தீர்களா?" என்று கேட்டாள்.

"இல்லை; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வந்தேன். சிலமணி நேரத்துக்கு..."

"ஒன்றும் புரியவில்லை."

"அவசியம் புரியத்தான் வேண்டுமானால் சொல்கிறேன். 'மேனகா'வை ஜப்பானி ஸப்மரின் பார்த்துவிட்டது. துரத்திக் கொண்டு வருகிறது. கப்பலில் உள்ளவர்களுக்கெல்லாம் இன்னும் அரைமணி நேரந்தான் உயிர் வாழ்க்கை."

"ஐயோ!"

"அவர்களைக் காட்டிலும் இன்னும் சில மணிநேரம் அதிகமாக நாம் உயிரோடிருக்கலாம்."

"எதற்காக இருக்க வேண்டும்."

"எதற்காக சாக வேண்டும்! பகவான் கொடுத்த உயிரை முடிந்தவரையில் காப்பாற்றிக் கொள்ளலாமே?"

இச்சமயம் பின்புறத்தில் ஏதோ பளிச்சென்று பிரகாசம் தோன்றவே ரஜனி, திரும்பிப் பார்த்தாள்.

இருண்ட கடலின் நடுவில் திடீரென்று தோன்றிய தீயின் ஒளி வெகு பயங்கரமாயிருந்தது.

அதே சமயத்தில் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் இடித்தமாதிரி ஒரு கடூர சத்தம் கேட்டது.

மலாய் நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தை ரஜனி கேட்டிருந்தாள். இப்போது கேட்ட சத்தத்துக்கு முன்னால் அந்த வெடிகுண்டுச் சத்தம் ஒன்றுமே இல்லையென்று சொல்லும்படி இருந்தது.

அப்போது ரஜனி தன்னுடைய தலை பதினாயிரம் சுக்கல்களாக உடைந்துவிட்டதென்று கருதினாள்.

ஜான் அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு "ஒன்றுமில்லை; பயப்படாதே!" என்றான். ரஜனியின் அதிர்ச்சி நீங்கி மறுபடியும் கண்ணைத் திறந்து பார்த்தபோது, முன்னர் தீயின் வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து இப்போது கரும் புகைத்திரள் அடர்த்தியாகக் கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

"கப்பல் மூழ்கிவிட்டது" என்றான் ஜான்.

"ஐயோ! அவ்வளவு பேருடனுமா? என்ன கொடூரம்? எத்தனை பச்சைக் குழந்தைகள்? ஜப்பானியர் மனிதர்களா, ராட்சஸர்களா?"

கப்பல் முழுகிய இடத்திலிருந்து கிளம்பிய பிரம்மாண்டமான அலைகள் வந்து படகை மோதத் தொடங்கின. அத்தனைத் தாக்குதலுக்கும் படகு முழுகாமலிருந்தது ரஜனிக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் கரும் புகைப்படலம் நாலாபுறமும் வியாபித்து வானையும் கடலையும் மூடி ஒரே இருள் மயமாகச் செய்து விட்டது. அம்மாதிரியான பயங்கர இருட்டை ரஜனி அதற்கு முன் பார்த்ததே கிடையாது.

பயத்தினால் நடுங்கிய கரங்களினால் அவள் ஜானின் தோள்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் புகைத்திரள் விலகத் தொடங்கியது. வானில் நட்சத்திரங்கள் மறுபடியும் கண் சிமிட்டின.

"ஐயோ! என்னத்திற்காக என்னை இப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? எல்லாரோடு நானும் இதற்குள்..."

"அதோ பார்!" என்றான் ஜான். கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது.

"அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?"

"இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது."

பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது.

"ஆகா! என்ன அற்புதம்?"

"அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்."

"சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?"

"எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?"

"பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?"

"என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?"

"அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்."

"நீங்கள் ஆரம்பியுங்கள்."

"இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்."

"என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்."

"துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்."

"சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்."

"கதை மாதிரி சொல்லப் பாரேன்."

சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள்.

"இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று 'டு லெட்' போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம், "நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் 'சரி' என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார். கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது.

"அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?"

"இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது."

பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது.

"ஆகா! என்ன அற்புதம்?"

"அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்."

"சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?"

"எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?"

"பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?"

"என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?"

"அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்."

"நீங்கள் ஆரம்பியுங்கள்."

"இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்."

"என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்."

"துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்."

"சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்."

"கதை மாதிரி சொல்லப் பாரேன்."

சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள்.

"இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று 'டு லெட்' போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம், "நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் 'சரி' என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார்.

அந்தப் பேதைப் பெண், தன்னை உத்தேசித்துத் தான் அந்த வாலிபர் அவ்விதம் வீட்டில் சாப்பிட ஒப்புக் கொண்டதாக எண்ணினாள். அவள் ஒரு வருஷத்துக்கு முன்பு வரையில் 'கான்வெண்டு' ஸ்கூலில் படித்து வந்தவள். அதற்குப் பிறகு அகப்பட்ட நாவல்களையெல்லாம் படித்து, 'காதல்' 'பிரேமை' என்னும் உலகத்திலே வசித்து வந்தாள். 'கண்டதும் காதல்' என்பது தங்களுக்குள் நேர்ந்து விட்டது என்று அவள் நம்பினாள். அந்தப் பேதைப் பெண்ணின் நம்பிக்கையை அந்த மனுஷரும் ஊர்ஜிதப்படுத்தினார். அவளைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அவர் தேடினார். "உன்னைக் கண்ட பிறகு நான் புது மனுஷனாகிவிட்டேன் என்றும், இவ்வளவு சந்தோஷத்துடன் இதற்கு முன் நான் இருந்ததே இல்லை" என்றும் அடிக்கடி சொன்னார். அந்தப் பெண்ணோ, தான் சுவர்க்க வாழ்க்கையையே அடைந்து விட்டதாக எண்ணினாள். ஆனாலும் சங்கோசத்தினால் வாயைத் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவர் சொல்லியதையெல்லாம் மட்டும் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தாள்.

"ஒருநாள் அவர் நான் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். நீ வாயை திறக்க மாட்டேன் என்கிறாயே?" என்றார். அதற்கும் அவள் மௌனமாயிருக்கவே இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு, "நான் இந்த வீட்டில் இருக்கட்டுமா, போகட்டுமா?" என்று கேட்டார்.

"இருங்கள்" என்று அந்தப் பெண் சொன்னாள். உடனே, அவர் வெகு துணிச்சலுடன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு 'ரொம்ப வந்தனம்' என்றார். அப்போது அவர் பார்த்த பார்வையானது, 'உனக்காக என் பிராணனை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன்' என்று சொல்லுவது போலிருந்தது.

ரஜனி சற்று நேரம் மௌனமாயிருந்தாள்.

"அப்புறம்?" என்றான் ஜான்.

"அப்படிப்பட்டவர் இருபது ரூபாயைத் தியாகம் செய்வதற்கு மனமில்லாமல் போய்விட்டார்."

"அந்தப் பெண் இருபது ரூபாய் கேட்டு, அவன் கொடுக்க மறுத்துவிட்டானா?"

"இல்லை, இல்லை. அவரிடம் போய் இருபது ரூபாய் கேட்பதைக் காட்டிலும் அந்தப் பெண் பிராணனையே விட்டிருப்பாள்" என்றாள் ரஜனி.

"இப்படி அவர்கள் இருவரும் ஆனந்த மனோராஜ்ய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் அந்தப் பெண்ணின் அப்பா அவளிடன், 'உன்னுடைய டிரங்குப் பெட்டியின் சாவியைக் கொஞ்சம் கொடு, அம்மா! என்னுடைய மேஜைச் சாவி கெட்டுப் போய் விட்டது. உன் பெட்டிச்சாவி சரியாயிருக்கிறதா, பார்க்கிறேன்' என்றார். அந்தப் பெண் அவ்விதமே சாவியைக் கொடுத்தாள்."

"மறுநாள், மாடி அறைக்காரர் வந்து, 'வீட்டு வேலைக்காரி எப்படி திருட்டு புரட்டு உண்டோ ?' என்று கேட்டார். மாடி அறையில் இருந்த தம்முடைய பெட்டியிலிருந்து பத்து ரூபாய் பணத்தைக் காணோம் என்று சொன்னார். 'பெட்டியைப் பூட்டியிருக்கிறீர்களா?' என்று அந்தப் பெண் கேட்டதற்கு, 'பூட்டியிருந்தாலென்ன? டிரங்குப் பெட்டியை மறுசாவி போட்டுத் திறப்பதுதானா கஷ்டம்?' என்றார். உடனே அந்தப் பெண்ணுக்கு, அவருடைய அப்பா டிரங்குப் பெட்டிச்சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதோடு நேற்றுக் குதிரைப் பந்தய தினம் என்பதும் நினைவுவரவே, அவளுடைய மனது குழப்பமடைந்தது. அந்த மனக்குழப்பம் அவள் முகத்திலும் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவர் அதைக் கவனித்தாரோ, மனதில் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. ஒன்றும் சொல்லாமலே போய் விட்டார்."

"அன்று மத்தியானம் அப்பாவிடம் அந்தப் பெண் 'பெட்டிச்சாவி எங்கே?' என்று கேட்டாள் 'எங்கேயோ தொலைந்து போய்விட்டது அம்மா! இன்னொரு சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா?' என்றார். இதனால் அந்தப் பெண்ணின் சந்தேகம் அதிகமாயிற்று. அடுத்து ஐந்தாறு நாள் அவள் தன் மனத்திற்குள் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதை வெளியில் காட்டாமலிருப்பதற்கு முயன்றாள். அந்த வாலிபரும் அவளுடைய மனோ நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பணம் திருட்டுப் போனதைப் பற்றி மறுபடியும் பிரஸ்தாபிக்கவும் இல்லை.

"அடுத்த குதிரைப்பந்தய நாளான சனிக்கிழமை வந்தது. அன்று காலையிலிருந்து அப்பாவின் போக்குவரவுகளை அந்தப் பெண் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தாள். வழக்கம் போல் மாடிக்காரர் காலை எட்டு மணிக்கே ஹார்பருக்குப் போய்விட்டார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அப்பா மாடிப்படி ஏறிப்போவதைப் பெண் பார்த்தாள். அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து போய், என்ன செய்கிறார் என்று கவனித்தாள். செய்கிறது என்ன? அவள் பயந்தபடியேதான் நடந்தது. மாடி அறையில் இருந்த டிரங்குப் பெட்டியைத் திறந்து அதற்குள்ளேயிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். அந்தப் பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்பா தன்னைப் பார்க்காதபடி கீழே ஓடி வந்தாள். வெகு நேரம் யோசனை செய்தாள். அந்தச் சமயத்தில் அப்பாவிடம் அதைப்பற்றிக் கேட்டால் நிச்சயம் கொலை நடந்துவிடும் என்று அவளுக்குத் தெரியும்.

குதிரைப்பந்தயப் பிசாசு அவ்வளவு பொல்லாதது அல்லவா? தகப்பனார் சாப்பிட்டுவிட்டுப் போகும் வரையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தில் படித்த காலத்திலிருந்து அப்பாவுக்குத் தெரியாமல் சேகரித்து வைத்திருந்த பணம் முப்பது ரூபாய் இருந்தது. அதில் இருபது ரூபாய் எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த டிரங்குப்பெட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் மாடிமேல் ஏறினாள். கைநடுக்கத்துடன் பெட்டியைத் திறந்து இருபது ரூபாய் நோட்டை அதில் வைக்கப் போனாள். அச்சமயத்தில் பின்னால் ஏதோ சத்தம் கேட்டுச் சட்டென்று திரும்பினாள். மச்சுப்படிகளுக்கு மேலே யாரோ ஒருவரின் தலைக் கிராப்புத் தெரிந்தது. தடதடவென்று அவர் கீழே இறங்கிப் போகும் சத்தமும் கேட்டது. அந்தப் பெண் கை கால் வெலவெலத்துப் போய் ஐந்து நிமிஷம் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் கீழே இறங்கிப் போய் பார்த்த போது, அவரைக் காணோம். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை! இரண்டு நாளைக்கெல்லம் அவரிடமிருந்து ஒரு கடிதம் மட்டும் வந்தது. அவசர காரியமாக லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுப் போவதாகவும், திரும்பி வருவது நிச்சயமில்லையென்றும், வாடகைக்கும் சாப்பாட்டுச் செலவுக்கும் பெட்டியிலுள்ள பணத்தையும் சாமான்களையும் எடுத்துக் கொள்ளும்படியும் அந்தக் கடித்தத்தில் எழுதியிருந்தது."

"அந்த சந்தேகக்காரன் அப்படிச் சொல்லாமல் போய்விட்டதைப் பற்றி அவனைக் காதலித்த பெண் ரொம்பவும் துக்கப்பட்டாளா?" என்று ஜான் கேட்டான்.

"ஆமாம்; அவன் போய்விட்டதைப் பற்றி அவள் துக்கப்பட்டாள்; கண்ணீர் விட்டாள்! பைத்தியம் பிடித்தவள் போலானாள். அவளுடைய துக்கத்தை ரொம்ப அதிகமாக்கியது என்னவென்றால், தன்னைக் கேவலம் திருடி என்பதாக நினைத்துக் கொண்டு அவர் போய்விட்டாரே என்பதுதான்" என்றாள் ரஜனி.

"பிறகு அந்தப் பெண் என்ன செய்தாள்?" என்று ஜான் தழுதழுத்த குரலில் கேட்டான்.

"அப்புறம் அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரே துன்பமும் பயங்கரமும் தான். அதைப்பற்றி சொல்வதற்கு இஷ்டமில்லை. தயவு செய்து கேட்கவேண்டாம்."

"அப்படியானால் கேட்கவில்லை" என்றான் ஜான்.

"நீங்கள் கதை சொல்லப் போகிறீர்களா? இல்லையா?" என்று ரஜனி கேட்டாள்.

"நீ சொன்ன கதையைப் பூர்த்தி செய்யட்டுமா?"

"ஆகா!"

"சரி, கேள்."

"மாடி அறையில் அந்தப் பெண் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் பணத்துடன் இருந்ததைப் பார்த்ததும், அந்த வாலிபனுக்கு மண்டை வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. தன்னுடைய இருதயத்தைக் கொள்ளை கொண்ட மோகினி, அத்துடன் திருப்தியடையாமல், தன் பணத்தையும், திருடுகிறாள் என்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. யாருக்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவியெல்லாவற்றையும் தத்தம் செய்ய எண்ணியிருந்தானோ, அவள் கேவலம் இருபது ரூபாய்க்கு ஆசைப்பட்டுத் தன் பெட்டியை மறுசாவி போட்டுத் திறக்கிறாள்! அவளுடைய காதல் கடைக்கண் பார்வையெல்லாம் வெறும் பாசாங்கு! பொய் வேஷம்! மோசம்! இந்த எண்ணத்தினால் வெறி பிடித்தவன் போலாகி அந்த வாலிபன் விரைந்து ஓடினான். அந்த வீட்டின் முகாலோபனமும் இனிமேல் செய்வதில்லை என்று தீர்மானித்தான். பெண் குலத்தையே சபித்தான். தான் அவ்விதம் ஏமாந்து போனதைப் பற்றித் தன்னையே சபித்துக் கொண்டான். ஆனால் நாள் போகப் போக அவனுடைய மனது மாறியது. ஆத்திரம் தணிந்தது. நிதானமாக யோசனை செய்யத் தொடங்கினான். அந்தப் பெண் செய்தது அவ்வளவு கொடிய காரியமா என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று."

"தரித்திரத்தின் கொடுமையினால்தானே அப்படி அவள் செய்திருக்க வேண்டும்? அவளுடைய தாயார் தகப்பனாரைக் காப்பாற்றுவதற்காகத்தானே செய்திருக்க வேண்டும்? இந்த எண்ணம் வலுப்பட்டதும், அவள்மேல் அவனுக்கிருந்த அன்பு இரு மடங்காயிற்று. கொஞ்ச நாள் கழித்து அந்த வீட்டை மறுபடியும் தேடிக்கொண்டு வந்தான். வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். ஏற்கனவே குடியிருந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் அந்த வாலிபனுக்கு உலக வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு உண்டாகிவிட்டது. துக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தான். ஜானகி ராமன் என்ற பெயரை ஜான் என்று மாற்றிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனச்சாந்தி உண்டாகவில்லை. ஒரே இடத்தில் இருக்க அவனுக்கு பிடிக்காதபடியால் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஹார்பர் வேலையிலிருந்து கப்பல் வேலைக்குப் போனான். ஆகா! அப்படி அவன் கப்பல் வேலைக்குப் போனது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? இல்லாவிட்டால், இருபது வருஷத்துக்குப் பிறகு அவனுடைய காதலி ராஜத்தை அவன் நடுக்கடலில் சந்தித்திருக்க முடியுமா?"

"நடுக்கடலில் சந்தித்தவள் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த ராஜம்மாள்தான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்" என்று ரஜனி கேட்டாள்.

"எப்படித் தெரிந்து கொண்டேனா? என் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் இவள் தான் ராஜம் என்று எனக்குச் சொல்லிற்று. மேலும் அவள் அதிகமாக உருமாறவும் இல்லையே! இருபது வருஷத்துக்கு முன்னால் நான் பார்த்தபடியே தான் இருக்கிறாள். ஆனால் ராஜம் என்னை எப்படித் தெரிந்து கொண்டாள் என்பது தான் அதிசயமாயிருக்கிறது. நான் அடியோடு உருமாறிப் போயிருக்கிறேனே?"

"உருமாறியிருந்தால் என்ன? கண்களை வேணுமானால் ஏமாற்றலாம்; மனதை ஏமாற்ற முடியுமா? நான் சாவதற்குள்ளே அவரை ஒரு தடவை கண்டிப்பாய் பார்க்க வேண்டும். பார்த்து நான் திருடியில்லையென்பதைத் தெரியப்படுத்த வேண்டுமென்னும் தாபம் என் மனதில் இடைவிடாமல் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருந்தது. இந்தக் கப்பல் பிரயானந்தான் என்னுடைய கடைசிப் பிரயாணம் என்பதாகவும் எனக்குள் ஏதோ சொல்லிற்று. அப்படியானால், இந்தக் கப்பலில் தானே அவரை நான் சந்தித்தாக வேண்டும்? ஜான் என்ற பெயர் காதில் விழுந்ததும், என்னை இருபது வருஷத்துக்கு முன்னால் கைவிட்டுப்போன ஜானகிராமன் தான் என்று என் மனது சொல்லிவிட்டது." வான வட்டத்தில் கால் பங்கு தூரம் சந்திரன் பிரயாணம் செய்து மேலே வந்திருந்தான். அலை அடங்கி அமைதியான கடலில், அவனுடைய வெள்ளி உருவம் ஸ்வச்சமாகப் பிரதிபலித்து, கடலுக்குள்ளே ஒரு சந்திரன் உண்டோ என்ற பிரமையை உண்டாக்கிற்று.

சந்திரன் உதித்த திசையை நோக்கிப் படகு மெதுவாய் மிதந்து சென்றது.

"ஒரு நாள் ராயபுரத்துக் கடற்கரையில் இதே மாதிரி பால் நிலவு எரித்தபோது நாம் இருவரும் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா!" என்று ஜானகி ராமன் கேட்டான்.

"பேஷாய் ஞாபகம் இருக்கிறது" என்றாள் ராஜம்மாள்.

"இன்றைக்கு மறுபடியும் பாடலாமா?"

"ஆகா!"

சாந்தம் குடிகொண்டிருந்த சமுத்திர மத்தியில் இளஞ்சந்திரன் சொரிந்த மோகன நிலவொளியில் ஒரு ஸ்திரீயின் இனிய குரலிலும், ஒரு புருஷனின் கம்பீரமான குரலிலும், பின்வரும் இன்ப கீதம் எழுந்தது.


நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே

நானும் வரவேண்டுகின்றேன் வெண்ணிலாவே!

சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்

தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!