அமர வாழ்வு - முடிவுரை

Article Index

 

லெப்டினென்ட் கர்னல் ராகவனும், நானும் மதராஸ் மெயில் வண்டியில் சென்னையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது குமரப்பாவைப் பற்றியே நாங்கள் அதிகமாகப் பேசும்படி இருந்தது. சென்னை ஆஸ்பத்திரியில் அவர் கீழ் வேலை பார்த்தபோது அவரைப் பற்றி நான் எண்ணியது பெருந்தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன். குமரப்பா ஐரோப்பாவுக்குப் போயிருந்த போது வியன்னாவில் ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து அவரிடம் பக்தி கொண்டாராம். சுபாஷ் பாபு இந்தியாவிலிருந்து மறைந்த பிறகும் அவருடைய காரியங்களைப் பற்றிக் குமரப்பாவுக்குச் செய்தி வந்து கொண்டிருந்ததாம். நான் ஒரு பெரிய தேசபக்தருடைய மகளாதலால் என்னையும் நேதாஜியின் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்று குமரப்பா நினைத்தாராம். அதைத்தான் நான் தவறாக அர்த்தம் செய்து கொண்டு அவஸ்தைப் பட்டேன். என்னைப் பாறையடியில் நிறுத்தி ராகவனைச் சுடும்படிச் செய்தது உண்மையில் ஒரு சோதனைதான். அந்த துப்பாக்கியில் வெடி குண்டு கிடையாது; புகைக் குண்டுகள் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் திரும்பத் திரும்ப அலுப்பில்லாத அதிசயத்துடன் நாங்கள் பேசிக் கொண்டு போனோம்.

"நமது வாழ்க்கையின் அதிசய சம்பவங்களுக்குள்ளே மிகவும் அதிசயமானது, ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவு நாம் குமரப்பாவைச் சந்தித்ததுதான்" என்று ஒருமுறை நான் சொன்னேன்.

"அதே இடத்தில் நாம் இருவரும் சந்தித்ததைக் காட்டிலுமா?" என்றார் என் அருமைக் காதலர்.

"ஆமாம்; அதைவிடக் கூட அதிசயந்தான்!"

கர்னல் ராகவன் சிறிது கோபத்தோடு, "அது எப்படி?" என்று கேட்டார்.

என்னுடைய பெட்டிக்குள்ளே சில நாளாகப் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஒரு தினசரிப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டினேன். அதைப் படித்ததும் ராகவனுக்கு எல்லையற்ற வியப்பு ஏற்பட்டதென்பதை அவருடைய முகக்குறி உணர்த்திற்று. மேற்படி பத்திரிகைச் செய்தி வருமாறு...

"இந்திய சுதந்திரப் படையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆப்தருமான மேஜர் ஜெனரல் குமரப்பா சென்னை... ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டார். சிகிச்சை எதுவும் பயன்படாமல் இன்று மாலை அவர் மரணமடைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்..."

லெப்டினென்ட் கர்னல் ராகவன் திரும்பத் திரும்பத் திரும்ப மேற்படி செய்தியைப் படித்துப் பெருமூச்சு விட்டார்.

"தேதியைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன்.

"ஆம்; ரட்லம் ஜங்ஷனில் நாம் சந்தித்ததற்கு மூன்று தினங்களுக்கு முன்னால்!" என்றார் ராகவன்.

"அன்றிரவு அவரைப் பார்த்தபோதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது!" என்று நான் சொன்னேன்.

"அமர வாழ்வைப் பற்றி ஜெனரல் குமரப்பா கூறியதின் உண்மைப் பொருள் இப்போதுதான் எனக்கு நன்றாய் விளங்குகிறது!" என்றார் என் உயிர்த்துணைவர்.