சொல்லாதது - Solaadhadhu
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Arignar Anna
- Hits: 2358
அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால், அப்படிப்பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசைமொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒரு நாளாவது, சொல்ல வேண்டுமென்று எண்ணியதை சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும், அது ஒரு புதுவிதமான களையைத் தரும். அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடுசொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.
"குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அடடா என்ன நேர்த்தி, இலாவண்யம்" என்று, சுந்தரியின் பாலப்பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.
"சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடையாது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக் கொண்டு தானே இரண்டு ஜீவன்கள் வாழ வேண்டும்! உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறுகாய் தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம்" என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே, அந்த பச்சை மேல்சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய சிவந்த மேனிக்கு அழகாகத்தான் இருந்தது. பம்பாய் நகர சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? அழுமூஞ்சி அலமு, பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா, அவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள் என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்கு பணக்காரவீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?
சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.
"எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்து வைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக்கடைகாரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ, வெறியனோ, எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப்பட்டாக வேண்டும்" என்று தனபாக்கியம் சொல்லவில்லை, அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசி நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கி விட்டது.
"அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாலே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண் என்ன செய்வது? அவள் ஆப்பக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரசமரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே அழுதுகொண்டிருகிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக்கூடாதா? நமது பையனுக்குக் கலியாணம் செய்து கொள்ளலாமே" என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே! இது போலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். அவனுக்குச் சுந்தரியிடம் மையல்.
"கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்கு போய் வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிறாயாமே" என்றும் லோகு முதலி சொன்னதில்லை. மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத்தினால்.
"எனக்கு என்னமோ அப்பா, அந்த கடைப் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா சுந்தரியின் அழகு என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? தூக்கமே இருப்பதில்லை. தவறித் தூங்கினாலோ, கனவுதான். கனவிலே அந்த கிளிமொழியால் பிரசன்னமாகிறாள் அப்பா. நான் என் உயிர் போவதானாலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளவே மாட்டேன். சத்தியமாக சொல்கிறேன் அப்பா. சுந்தரிதான் எனக்கு வேண்டும். இல்லாவிட்டால் கலியாணமே வேண்டாம்" என்று கனகசபேசன் சொல்லவில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா?
சுந்தரியாவது சொன்னாளா மனதிலே நினைத்ததை. சொல்லவேயில்லை. "அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒரு மாதிரியாகச் சிரிக்கிறான். தண்ணீர் கேட்கிறானே, அப்போது நான் குவளையைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே என்னைத்தொடுகிறான். என்னைத்தான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறுகிறான். என் காதில் படும்படி " என்று சுந்தரி சொல்லவில்லை. அவள் சொல்வானேன். சுந்தரியைப் போலத் தனபாக்கியமும் வாலிபப் பெண்ணாக இருந்தவள்தானே!
"சுந்தரி உன்னை நான் கட்டாயமாகக் கலியாணம் செய்து கொள்கிறேன். ஏமாற்றிவிடுவேன் என்று எண்ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார் எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிபடுத்திக் கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்!"
"என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம். ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!"
"சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு."
"சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை,"
"எங்கள் விட்டிலே மண்டை உடையக் கூடிய சண்டை நடப்பதானாலும் சரி உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்து விட்டேன்."
"மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப்பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்...."
"சீ ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?"
இவை சுந்தரிக்கு கனகு சொல்லாதவை. கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!
சிலகாலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத் தான் கனகு மருமகனானான்.
"குரங்குபோல் இருக்கிறாயே, உன்னைக் கட்டிக்கொண்டேனே, நான் ஒரு மடையன். அப்பன் மிரட்டினால் என்ன, பிடிவாதமாக இருந்தால், எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம்? பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக் கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற சுந்தரியை இழந்துவிட்டேன், இனி உன்னோடு அழவேண்டும். என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையால் அடிக்க வேணும்" என்று கனகு சொல்லிக்கொள்ளவில்லை, எண்ணாமலுமில்லை. அவன்தான் என்ன செய்வான் பாவம்! அறுபது வேலிநிலமும் இலுப்பப்பட்டியாரிடம் அடகு இருந்தது. தன்னுடைய அழுமுஞ்சியைக் கனகு கழுத்திலே கட்டிவிட்ட பிறகுதான், வட்டியும் அசலும் செல்லாகி விட்டதாக மிராசுதார் எழுதிக்கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக்கொண்டான். சொல்ல முடியுமோ?
தேசாந்திரம் செய்துக் கொண்டிருந்த திருவேங்கடம், "எனக்கு மனைவி உண்டு. ஒரு மகளும் உண்டு. சிவப்பாக இலட்சணமாக இருப்பாள். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு ஏதேதோ பாடுபட்டு, என் மகளை வளர்த்து வருகிறாள். எனக்கு வேலை செய்ய முடிவதில்லை. வீட்டைக் கவனிக்க முடியவில்லை. இப்படி ஊருராக அலைந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோ டு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப்பது காவிதான். ஆனால் கள்ளச் சாவி கிடைத்தால் போதும், போதைக்குச் சரியான "சான்சு" கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி" என்று திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான், சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்ததினால் கைவிட வேண்டிநேரிட்டது பற்றியோ, ஊரூராகச் சுற்றிக் கொண்டு ஒய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்து வந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.
கனகுவின் மனைவியானாலே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்கு கனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை ஆப்பக்கடையக்காரின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை. எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் இதைப் பேசுவது என்ற பயத்தால்.
இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளில் நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவில்லை.
"இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்" என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணினதுண்டு. சொன்னதில்லை. "அடி அம்மா, ஜாக்கிரதை, அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வை" என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்டப் பேச்சுப் பேசியிருந்தால் தானே, சுந்தரி அம்மாவிடம் தானாகவாவது சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் இவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.
"அம்மா, வாயைக் குமட்டுகிறது. சாதம் பிடிக்கவில்லை. மயக்கமாக இருக்கிறது. என்னமோ போல இருக்கிறது உடம்பு" என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டுகொண்டாள். "ஐயையோ, மோசம் வந்து விட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்து விட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்கவில்லை. இப்படியும் நேரிட்டு விட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே, இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே! அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா!" என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை. விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்கமாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.
"தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாவி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே, வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே, சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ , அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய், உன் அன்பு மொழியை நம்பினாள் இந்த அபலை. இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்தாரமாக? இழிவு போகுமே". என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை, கூறிப் பார்ப்போம் என்று பல தடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது சொல்லிப்பயன் என்ன என்று எண்ணி, ஏங்குவாள்.
"அம்மா கன்னி கருவுற்றால், ஊர் தூற்றும் என்று பயந்து ஓடிவிட்டோ ம், நீ காப்பாற்று" என்று சொல்ல மனம் இடந்தரவில்லை, தனபாக்கியத்துக்கு. ஊரை விட்டு தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக் கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்க வந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. "அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான்" என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!
தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோவிலிலே பலமான பூஜை நடத்திக் கொண்டிருந்தார் லோகு முதலி.
கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே! மாளிகையிலே, கனகனும், காவேரியும், கனகபாடிகளின் பூஜை, காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்தூரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர், பலனின்றி.
"என் மகன் ராஜகோபால் இருக்கிறான். எனக்கென்ன கவலை!" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது? தெரிந்தாலும் கூறமுடியுமா?
"போனவன் திரும்பவில்லையே!" என்று பலர் ஆயாசமும், ஆச்சரியமும் கொண்டு, சுந்தரியைக் கேட்டனர். அக்கறை இல்லை அவருக்கு, ஆகவே அவர் அக்கரையில் இருக்கிறார், என்று சாக்குக் கூறுவது தவிர, வேறு வழியில்லை. விழியிலே நீர் வழிய வழிய வதைப்பட்டுக் கிடந்த அந்த வனிதைக்கு காலம் அவளுடைய கவலையைப் பற்றிய கவலையால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொண்டே இருந்தது. ஓராண்டு, ஈராண்டு, மூவாண்டு, ஐந்து ஆண்டுகள் கழிந்தன. தாலியுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் காணாது தத்தி நடக்கும் பருவமடைந்தான் தங்கராஜன், தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டி ராஜா என்று கொஞ்ச, இரண்டு அசை மொழிகளும் திரண்டு, குழந்தைக்கு தங்கராஜன் என்ற பெயராக ஏற்பட்டது. தங்கராஜனின் தகப்பரின் "ராஜ்யம்" "தங்கம்" இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது, இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராஸ்தாருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக்கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்தப் பிரயாணச் செலவு மிராஸ்தாரின் தங்க நகைகளை மார்வாடிக்கும், நிலத்தின் முக்கிய பகுதிகளை வேறோர் ஜெமீனுக்கும் கட்டணமாக்கிவிட்டது.
"எந்த வேலையிலே நீ எனக்கு மருமகனாக வந்தாயோ, அன்றே என்னைச் சனி பிடித்துக் கொண்டது. என் முகத்திலே விழிக்காதே. உன்னைக் கண்டாலே எனக்குக் கடுங்கோபம் பிறக்கிறது."
"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும் கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது; உன்னுடையப் பணத்திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக் கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும்போதே எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ, அரிவாளையோ தேடச் செய்கிறது."
மாமனாரும் மருமகனும் சொல்லிக் கொள்ளவில்லையேயொழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் கண்கள் இக்கருத்துக்களையே காட்டின.
கேஸ் தோற்று விட்டது. கஷ்டம் முற்றிவிட்டது. இலுப்பப்பட்டி கைமாறிவிட்டது போலத்தான் - என்று மிராசுதாரர் சொல்லவில்லை. அவருடைய வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல் இவைகள் வேறு என்ன கூறின!!
சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசு குடும்பத்தைக் காப்பாற்றித் தீர வேண்டிய பொறுப்பைத் தான் பெற்றான். குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதை போல!
தேசாந்திரி திருவேங்கிடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை! அவன் ஒரு நாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண்டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங்கேட்டவனல்ல. அன்று அவனுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை. பாதையிலே சுருண்டுக் கிடந்தான் ஒரு பரதேசி; தூக்கி எடுத்து வைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்.
பரதேசிக் கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்புலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக் கண்டு அனுபவ அறிவு பெற்று வந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியிலே வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். 'வீடு நமக்கு நாடு முழுவதுமே; ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும் பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்! ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான். ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான். தங்கராஜனைக் கண்டான். தகதகவென ஆடினான். சந்தோஷத்தால், மெல்ல மெல்ல விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.
"எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்."
"வேண்டாம் அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்."
"துறவிக்கு வேந்தன் துரும்பு. தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ணவிக்கிரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன் - இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்கு தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?"
திருவேங்கடம் தம் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக் கொண்டு இல்லை. மனதிலே எண்ணினான் பல. சொல்ல வாய் வரவில்லை.
திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி நிந்தனைக்குட்பட்டுக் கிடந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷமடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன் பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும் சின்னத் தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான். கூத்தாடுவான், கூவுவான் - கண்டு களிப்பாள் சுந்தரி. மறுகணம் அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்ததால் விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமைநாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாத நோயாகிவிட்டது.
இலுப்பப்பட்டியார் இறந்தார். கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார். காவேரி காசநோய்க்கு பலியானாள். கணவன் கப்பலேறினான். பர்மாவுக்குக் கடைக் கணக்கப் பிள்ளையாக! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகிவிட்டது!
தங்கராஜனுக்கு வயது பத்தாகி விட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. 'தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார். எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்கவில்லை. என்ன காரணத்தினாலோ, மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.
கணவன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்கமாட்டாமல், கனகன் தாய்நாடு சென்று அன்னக்காவடியாகவாவது வாழலாம் என்று அக்கரையை விட்டு இக்கரை வந்தான். சுந்தரி இருப்பதை, அவனுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றூருக்கு வந்தது. ஆற்றூரிலே அருமைநாயகம் என்பவர் ஆலை வைத்திருக்கிறார். அங்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற செய்தி தெரிந்தது. வேலைக்காக அவர் வீடு வந்தான்.
கனகனுடைய வரலாற்றைக் கேட்டார் அருமைநாயகம்.
"நீதானா அந்த ஆசாமி! அட மடையனே. உன்னாலே நிராகரிக்கப்பட்ட பெண்ணிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்" என்று அவர் சொல்லவில்லை.
"உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். இலுப்பப்பட்டி மிராசுதாரின் மருமகன் கனகு நீதானா? சரி, சரி! உட்கார்" என்று கூறினார், அருமைநாயகம். ஆச்சரியத்தால் திகைத்துப் போனான் கனகன்.
"தங்கம்! ராஜா! டே தம்பி தங்கராஜ்!" என்று அழைத்தார். "தாத்தா இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் பையன்.
"உன் அப்பா வந்திருக்கிறார்" என்றார். கனகன் மிரண்டான். பையனின் கண்கள் அகன்றன. வாய் திறந்தபடி நின்றான். முகத்திலே ஓர் விவரிக்க முடியாத உணர்ச்சிக் குறி!
அடுத்த விநாடி "அப்பா!" என்றான். பாய்ந்தோடி கனகுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஐயா! இது என்ன? வேலை தேடிக் கொண்டு இங்கே நான் வந்தேன். இது யார்? இந்தச் சிறுவன் என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் 'அப்பா' என்று அழைக்கிறானே. இதென்ன விந்தை?" என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சியைக் கண்டு அருமைநாயகம் சிரித்தபோது கண்கள் இப்படிக் கேட்க எண்ணுகிறான் என்பதை அவர் தெரிந்தே தான் சிரித்தார் என்பது தெரிந்தது.
அடுத்த விநாடி துள்ளி ஓடினான் தங்கம்.
"அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா வந்து விட்டார், ஓடி வா, சீக்கிரம் வா" என்று கூவினான். ஓடினான் வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு.
"அப்பா, அப்பா, அப்பா வந்துவிட்டார்." ஆம், ஆம். அவனுடைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவுதான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே யாருக்கும் தெரியாதபடி, அவனாகக் கூறிக்கொள்வான். அப்பா, அப்பா, இல்லை, அப்பா இங்கே இல்லை, அப்பா வரவில்லை, அப்பா இன்னமும் வரவில்லை. இன்று அப்பா வந்துவிட்டார் என்று கூவினான். மான்போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜனின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகிவிட்டது. அவனுக்குப் பித்தம் பிடித்து விட்டதோ என்று, தாயைக் கண்ட உடனே, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் தங்கராஜ், கணவன் இருந்த அறைக்குள். வாயிற்படியருகே சென்றாள். உள்ளே இருந்த கனகன், "சுந்தரி" என்று கூவினான். இருவரிலே யார் முதலிலே பாய்ந்தது என்று தெரியமுடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிந்தது.
"சுந்தரி! சுந்தரி! கண்ணே சுந்தரி" என்று கதறினான் கனகு. முகத்தைத் தன் இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்தான், அவள் கன்னத்திலே புரண்டோ டிய கண்ணீரைத் துடைத்தான். மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான்; கழுத்திலே தாலி இருக்கக் கண்டான் பயந்தான். சுந்தரிக்கு முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.
"தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்து வா" என்று கூறினாள். சிறுவன் ஓடினான். அவனைப் பின் தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். அரைமணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம். கணவன் தன் கதையைக் கூறினான். அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.
"அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்து விட்டார்" என்று ஆற்றூர் வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை. தாய் கட்டிய தாலி. "அக்கரைக்கு போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலே தான் இருப்பானாம்" என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். அவன் கட்டாத தாலி இவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?
சுந்தரி:- "தங்கம்! உங்க அப்பா ரொம்ப நல்லவரென்று எண்ணாதே! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லிடட்டுமா?"
கனகன்:- "சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி உனக்குக் கோடிப் புண்யம், அதை மட்டும் சொல்லாதே!"
தங்கம்:- "அம்மா, அம்மா, சொல்லம்மா! சொல்! அப்பா, அம்மா வாயை மூடாதே! அம்மா, சொல்லு!"
சுந்தரி:- "உங்க அப்பா என்ன செய்தாரு தெரியுமா! ஒருநாள்..."
கனகு:- "ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடியவில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா."
(பையன் ஓடினதும் கனகன், சுந்தரியைக் கட்டித் தழுவிக் கொண்டு)
"சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவு செய்து, சொல்லாதே கண்ணு."
சுந்தரி:- "இப்படித் தளுக்கு செய்து விட்டுத் தானே என்னைத் தவிக்க வைத்து விட்டுப் போயிட்டிங்க முன்னே."
கனகன்:- "அதற்காகத் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகி விட்டதே!"
சுந்தரி:- "ஐயோ! பாவம்! என்னாலே உங்களுக்கு இத்தனை கஷ்டம்."
(அறைக்கு வெளியே சிறுவன்)
தங்கம்:- "அப்பா! தண்ணீர்."
(அறைக்குள்ளே சுந்தரி)
சுந்தரி:- "விடுங்கள், வந்துவிடுவான்."
(உள்ளே நுழைந்த சிறுவன்)
தங்கம்:- "அப்பா வலி போயிடுத்து?"
சுந்தரி:- "ஓ! கிலியும் போயிடுத்து."
தங்கம்:- "நீ, என்னா புலியா, எங்க அப்பா கிலி அடைய. அது சரி, அம்மா! சொல்றேன் சொல்றேன்னு சும்மா இருக்கறயே, சொல்லம்மா!"
இந்த ரசமான நாடகம் அடிக்கடி நடந்தது. ஆனால் சுந்தரி ஒரு நாளாவது, தங்கராஜனுக்குக் காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவேயில்லை. எப்படிச் சொல்லமுடியும்!!