கூபே - gube
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: K Parthasarathy
- Hits: 2131
மந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார்.
"முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான் இன்று ரயிலில் பயணம். இல்லையானால் இரயில் பயணத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு பிளேனில் டிக்கட் வாங்குங்கள்!"
"கண்டிப்பாக 'கூபே' கிடைத்துவிடும் சார்! எப்படியும் எமர்ஜன்ஸி கோட்டா ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இன்னிக்குக் 'கூபே'க்கு ஏகப்பட்ட டிமாண்ட் என்கிறார்கள். ஆனாலும் நமக்கு உறுதியாகக் கிடைக்கும்."
"கூபே கிடைக்காவிட்டால் பிரயாணமே இல்லை! ஞாபகமிருக்கட்டும்."
"கவலையே வேண்டாம்; பிரயாரிட்டி இருக்கிறது. கட்டாயம் கிடைத்துவிடும்."
"அவசரமாகப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட ஃபைல் எல்லாம் கட்டி வைத்திருக்கிறது. எல்லாமே அவசரம். பொது முதல் வகுப்புப் பெட்டியில் வைத்து ஃபைல் பார்க்க முடியாது. கூபேயானால் தூக்கம் வருகிற வரை உங்கள் உதவியோடு ஃபைல்களை 'டிஸ்போஸ்' செய்துவிட முடியும்."
"நீங்கள் வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பெண்டிங் பேப்பர்ஸ் எல்லாம் டிஸ்போஸ் ஆக வேண்டும் என்பதில் எனக்கே அதிக அக்கறைதான் சார்."
"சிரமமாயிருந்தால் நானே இரயில்வே டிவிஷனல் ஆபீஸருக்கோ சூப்பிரண்டெண்ட்டுக்கோ ஃபோன் செய்யத் தயார்."
"ஏற்கெனவே உங்கள் பெயரைச் சொல்லி அவர்களுக்கெல்லாம் நானே டெலிஃபோன் செய்தாயிற்று."
"சீஃப் செகரட்டரி மூலமாகவும் சொல்லலாம்."
"அவரும் பிரஷர் கொடுத்திருக்கிறார்."
"சுலபமா காலையிலே பிளேனில் போயிடலாம். ஓவர் நைட் ஜர்னி எல்லாம் நான் ரயிலிலேயே வைத்துக் கொள்வதற்கு ஒரே காரணம், பெண்டிங் ஃபைல் டிஸ்போஸ் செய்யலாம் என்பதுதான். வீட்டிலானாலும் செகரடேரியட்டிலானாலும் பார்க்க வருகிறவர்களின் கூட்டம் மொய்க்கிறது. ஒரு வேலை நடப்பதில்லை. பிளேனில் ஃபைல் பார்க்க முடியாது."
உதவியாளருக்கு மந்திரியின் சுபாவம் நன்கு தெரியும். முக்கியமான ஃபைல்களும், பெண்டிங் பேப்பர்களும் இரயில் பயணத்தின் போது தான் தீர்மானமாகும். பயணத்துக்கு எப்படியும் 'கூபே' கம்பார்ட்மெண்ட் ஏற்பாடு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தது. மந்திரி எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார். இரயிலில் பயணம் செய்ய நேரும்போது 'கூபே'யை மட்டும் அவரால் தியாகம் செய்ய முடியாது; தியாகம் செய்ய விரும்பவும் மாட்டார்.
அன்றோ எக்கச்சக்கமான நிலைமை. கவர்ன்மெண்ட் கோட்டா ஏறக்குறைய தீர்ந்து போய் விட்டிருந்தது. அவரது அந்தஸ்திலுள்ள வேறு பல பிரமுகர்களும், வி.ஐ.பி.களும் அதே இரயிலில் பயணம் செய்தார்கள். மொத்த இரயிலிலும் கூபே இணைத்த பெட்டிகள் ஒன்றோ இரண்டோ தான் இருந்தன.
கூபே அலாட் ஆகவில்லை என்றால் இரயில்வே பிளாட்பாரத்திலேயே இரைந்து கூப்பாடு போட்டுவிட்டுப் பயணத்தை இரத்து செய்து வீடு திரும்பவும் அவர் தயங்க மாட்டார் என்பது பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அதிகாரிக்கும் நன்கு தெரியும். பலமுறை அப்படித்தான் நடந்திருக்கிறது.
முன்பு எப்போதோ ஒரு முறை கோபத்தில் 'கூபே'க்கு ஏற்பாடு செய்யத் தவறிய ஓர் உதவியாளரை வேலையிலிருந்தே சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அவர். அவருடைய முன்கோபமும் ஆத்திரமும் பிரசித்திப் பெற்றவை. தமது அதிகார வரம்புக்கு அப்பால் இருப்பவர்கள் என்று பாராமல் இரயில்வேக்காரர்களைக் கூட வாட்டி எடுத்து விடுவார் அவர். கோபத்தில் கண் மண் தெரியாது அவருக்கு.
மாலை ஏழே கால் மணிக்கு இரயில் புறப்படுகிறது என்றால் ஆறரை மணிக்கே மந்திரியின் உதவியாளரும் செக்யூரிட்டி அலுவலரும் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். ஃபைல்கள் அடங்கிய அரசாங்கப் பெட்டிகளும் வந்து விட்டன. மந்திரி ஏதோ ஒரு திறப்பு விழாவுக்குப் போய் இருந்தார். விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்தே நேராக இரயில் புறப்படுகிற நேரத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்து விடுவதாக ஏற்பாடு.
ஆனால் அன்று மிகவும் சோதனையாகி விட்டது. பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அலுவலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த இரயிலின் பதினேழு பெட்டிகளிலுமாக நாலைந்து முதல் வகுப்புப் போகிகள் தான் இருந்தன. அதில் மூன்றே மூன்று 'கூபே'கள் தான் உண்டு. ஒரு 'கூபே' மத்திய உதவி மந்திரி ஒருவருக்கு அலாட் ஆகியிருந்தது. அதை ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு 'கூபே' இரயில்வே போர்டில் மிகவும் செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவருக்கு அலாட் ஆகி இருந்தது. மூன்றாவது 'கூபே' தான் தனியாருக்கு அலாட் ஆகியிருந்தது. அன்றுதான் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூர் புறப்படும் புது மணத் தம்பதிகளுக்காக அந்தக் 'கூபே' ஏற்பாடாகி இருந்தது.
இரயில் புறப்பட இருபது நிமிஷம் தான் இருந்தது. அந்தப் புது மணத் தம்பதிகள் 'கூபே'யில் வந்து அமர்ந்தும் விட்டார்கள். இன்னும் மந்திரி வரவில்லை. பி.ஏ.யும் அதிகாரியும் காத்திருந்தனர்.
மந்திரிக்காக எதாவது செய்வதாயிருந்தால் புதுமணத் தம்பதிகள் வந்து அமர்ந்திருக்கும் இந்த மூன்றாவது 'கூபே'யைத்தான் மாற்ற வேண்டியிருக்கும் என்றும், மத்திய உதவி மந்திரி, இரயில்வே போர்டு அங்கத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 'கூபே'யை எதுவும் செய்ய முடியாது என்றும் இரயில்வேக்காரர்கள் கையை விரித்து விடார்கள். புது மணத் தம்பதிகளுக்கு வழியனுப்ப வந்தவர்கள் போட்ட ரோஜா மாலைகள் கூபேயை நிரப்பிக் கொண்டிருந்தன. பிளாட் பாரத்தின் அந்த பகுதி யெல்லாம் ரோஜா இதழ்கள் சிதறி விட்டன. ஒரே கூட்ட மயம். உற்சாகச் சிரிப்புக்கள். ஜோக்குகள்.
அவர்களை எப்படி 'டிஸ்டர்ப்' செய்வதென்று தெரியாமல் இரயில்வே அதிகாரிகள் தயங்கினர்.
"இந்த மந்திரிகளாலே எப்பவும் தொந்தரவுதான் சார்! கடைசி நிமிஷத்திலே வந்து கழுத்தை அறுப்பாங்க..." என்று துணிந்து சொன்னார் ஒரு இரயில்வே அதிகாரி.
அந்தப் புது மணத் தம்பதிகளைத் தவிர உற்சாகமாக அவர்களை வழியனுப்ப வந்திருக்கும் உறவினர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று இரயில்வே அதிகாரிகள் பயந்தார்கள்.
"கூபே ஏற்பாடு செய்யவில்லை என்றால் மந்திரி என்னைத் தொலைத்து விடுவார்" என்றார் பி.ஏ.. உடனே அந்தப் புதுமணத் தம்பதிகளிடம் போய் அவர்களுக்குக் கூபே கிடையாது என்றும் முதல் வகுப்பில் இரண்டு லோயர் பெர்த்துக்கள் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தங்களுக்கு ரிசர்வ் ஆகியிருப்பதைச் சொல்லி இரைந்தார்கள். வெளியே வழியனுப்ப வந்திருந்த உறவினர்களும் கூப்பாடு போட்டார்கள்.
"என்னய்யா அக்கிரமம் இது? ரிஸர்வ் ஆகி 'சார்ட்'ல கூடப் பேர் போட்டப்புறம் இடத்தைத் தட்டிப் பறிக்கிறார்களே? மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு! நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா?"
இந்தக் குழப்பத்துக்கு நடுவே மந்திரி பிளாட்பாரத்துக்கு வந்து விட்டார். பதவியில் இருப்பவர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் உடனே சுற்றி நடப்பதைப் புரிந்து கொண்டு உஷாராகி விட்டார். பி.ஏ.யும் அருகில் வந்து காதோடு நிலைமையை விவரித்தார்.
ஒன்றுமே செய்ய முடியாதபடி ஒரு கையாலாகாத நிலை உருவாகும்போது அதையே ஒரு தியாகமாக மாற்றிக் காண்பித்து விடும் தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியத்தைக் கையாண்டு விரைந்து செயல்பட்டார் மந்திரி.
மந்திரிக்குத் திறப்பு விழாவில் போட்டிருந்த இரண்டு சந்தன மாலைகளும் அவர்கள் வழங்கியிருந்த இரண்டு ஆப்பிள்களும் கைவசம் இருந்தன. கூடவே வந்திருந்த இரண்டொரு பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் உடனிருந்தார்கள்.
மந்திரி திடீரென்று ஒரு ஸ்டண்ட் அடித்தார். கூபே கம்பார்ட்மெண்டில் நுழைந்து சந்தன மாலைகளை அந்த ஊர் பேர் தெரியாத மணமகனிடம் அளித்துத் தம்பதிகளை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தார். இருவரிடமும் கைவசம் இருந்த ஆப்பிள் பழங்களை கொடுத்து வாழ்த்தினார். உடனிருந்த நிருபர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.
"உங்களைப் போன்ற மணமக்களுக்கு இடையூறாக நான் வர விரும்பவில்லை. என் பயணத்தை நான் உங்களுக்காகவே இரத்துச் செய்கிறேன். இந்த 'கூபே'யை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வருஷங்களுக்கு முன் திருமணமான முதல் இரவிலேயே இரயிலில் இட வசதி கிடைக்காத காரணத்தால் நானும் என் இளம் மனைவியும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் 'பாத்ரூம்' ஓரமாக வராந்தாவில் ஒண்டி ஒதுங்கி ஒதுங்கிப் பயணம் செய்த அந்தக் கொடுமையான அநுபவத்தை நான் இன்னும் மறந்துவிடவில்லை.
"அப்படி ஒரு துயரம் உங்களுக்கு இன்று நேர நான் காரணமாகி விடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகத் தேனிலவு சென்று வாருங்கள்" - என்று கண்களில் நீர் பனிக்கக் கூறினார். இரயில் கம்பார்ட்மெண்டின் உள்ளே வெளியே கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிஷம் அப்படியே உருகிப் போய்விட்டார்கள்!
கையிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்ட ஆப்பிளை எடுக்க மணமக்கள் இருவரும் ஒரே சமயத்தில் குனியவும் விழுந்த ஆப்பிள் மந்திரியின் காலடிக்கு ஓடி உருளவும் சரியாயிருந்தது. மணமக்கள் மந்திரியின் காலில் விழுந்து வணங்குவது போல் தோன்றிய அந்தக் காட்சியைப் புகைப்பட நிபுணர் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டார்.
மறுநாள் காலைப் பத்திரிகைகளில் எல்லாம் மந்திரியின் தியாகம் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகி விட்டது. தடபுடல் பட்டது.
'மந்திரியின் தியாகம்!' பெருந்தன்மையோடு தமக்கு ஒதுக்கப்பட்ட 'கூபே' கம்பார்ட்மெண்டைத் தேனிலவு செல்லும் புது மணத் தம்பதிகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு வீடு திரும்பினார். மணமக்கள் ஆசி கோரி அமைச்சரைக் காலில் விழுந்து வணங்கினர். முப்பது வருடங்களுக்கு முன்பு தமது சொந்தத் தேனிலவு பயணத்தில் பட்ட சிரமத்தை நினைத்து அமைச்சர் கண்ணீர் சிந்தினார் - என்பது போல் புகைப்படங்களுடன் தலைப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழே விழுந்த ஆப்பிளை எடுக்க மணமக்கள் குனிந்தது காலில் விழுந்து வணங்கிய படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் புதுமணத் தம்பதிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த 'கூபே'யைத் தட்டிப் பறிக்க மந்திரி முயன்றதும், அது பலிக்காத போது வேறு வழியில்லாமல் தியாகியாகியதையும் பற்றி ஒரு பத்திரிகை கூட மூச்சு விடவில்லை.
புது மணத் தம்பதிகளுக்கும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தவர்களுக்கும் கூட உண்மை மறந்து போய் மந்திரி தியாகம் செய்தது போலத்தான் நினைவிருந்தது. பி.ஏ., செக்யூரிட்டி அலுவலர், இரயில்வே ஆட்கள் எல்லாருமே அமைச்சரின் சமயோசிதத் திறமையை வியந்து பிரமித்துப் போயிருந்தார்கள்.
இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை வேளையில் மந்திரி தம் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவருக்குக் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அவருடைய மனைவி அவரைக் கேட்டாள்:
"ஏங்க இதென்ன பச்சைப் பொய்? நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே? கலியாணம் முடிஞ்சு அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெட்டை மாட்டு வண்டியில தானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம்? என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே?"
"சரி சரி! உன்னை யாரும் கேட்கலே இப்போ! வாயை வெச்சுக்கிட்டுச் சும்மா கிட" என்று கடுமையாக இரைந்து அவளைக் கோபித்துக் கொண்டார் மந்திரி.