பறிமுதல் - parimudhal

1

43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.

அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால், புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும் இரும்புக் கம்பி.

இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமலிருந்தால் அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது!

வாரத்திற்கு ஒரு முறை - தவறுதலாகவோ என்னவோ - அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம் அவன் அந்தச் சிறையிலிருந்து ஓர் அற்புதமான கிரந்தத்தை எழுத.

தூக்குத் தண்டனை அநுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவாள். கிரந்தம் உலகத்திற்குப் போய்விடும். அதற்கு மேல் சாந்தி! வேறு என்ன வேண்டும்?

அந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானஸீகமாக அல்லாமல் வேறு முறையில் வைத்துக் காப்பாற்ற முடியுமா?

ஜெயில் சூப்பிரண்ட் பரமேச்வரத்திற்குத் திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. அவருடைய அந்தராத்மா அப்படிச் செய்யச் சொல்லியதோ, என்னவோ?

கேட்பானேன்? வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.

2

43 நெர். அதை எடுத்துக்கொள்ளும்பொழுது பட்ட துடிப்பைப் பார்க்க வேண்டுமே! உயிரையே வேண்டுமென்றாலும் பணயம் வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையுமே வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும் ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில் எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே வித முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

43-ம் நெம்பருக்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ!... அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.

'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறைசெய்ய வேண்டியது' என்பது ஒரு சமூக உண்மை.

பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும் அவரும் ஒரு சிறைவாசி தான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம். இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்ளேதான் நாள் முழுதும் குடியிருக்கிறார். இவரும் இஷ்டம்போல் அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு இவரும் சிறைவாசம் செய்யவேண்டியிருக்கிறது. இது பரமேச்வரத்திற்குத் தெரியாது; அவர் அதைப் பற்றி நினைத்ததே இல்லை.

பரமேச்வரத்திற்கும் மற்றக் கைதிகளுக்கும், இருக்கும் அறையைப் பற்றியமட்டில், வித்தியாசமுண்டு. சிறையிலே, ஏ கிளாஸ் பி கிளாஸ் இல்லையா? இதற்கெல்லாம் மேலாக ஜெயில் சூப்பிரண்ட் கிளாஸ் என்று வைத்துக்கொண்டால் போகிறது.

3

அன்று இரவு சூப்பிரண்ட் பரமேச்வரம் பிள்ளை பறிமுதலைப் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தார். எழுதியவர் 43 நெர். கைதி. தலைப்பு ஒன்றும் தெரியவில்லை. படித்துத்தான் ஆகவேண்டும்!

படிக்க ஆரம்பிக்கிறார்...

"நல்ல இருள்...
தொட்டால் கையில் கறுப்பு ஒட்டிக் கொள்ளும் மாதிரி.
அப்பொழுது நீ வந்தாய்.
இருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய்.
நீ யார்?
முகத்தை ஏன் மறைக்க வேண்டும்?
முத்தமிட்டுவிடுவேன் என்று பயமா? ஆனால் நீ என்னைத்
தழுவலாமோ?
உனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.
நீ யார்?...
இன்று நீயேன் வரவில்லை? இன்று நிலவு காய்கிறது.
நிலவுக்கு நீ அவசியமில்லையா? அல்லது உனக்கு நிலவு
அவசியமில்லையா?
இன்று என் மனம் தகர்ந்துவிடுகிறதே? இப்பொழுது
வர மாட்டாயா?
உள்ளத்தில் ஒரு ஊழிக் கூத்து, ஊழியின் இறுதி... உனக்கு
இரக்கமில்லையா?
நீ யார்?...
இன்று நள்ளிரவு.
நீ வருவாய். வந்துவிட்டாய்! அடி, நீ யார்?
என்னை வாழ்விக்க வருகிறாயோ?
காதலா, கருணையா?
தாயின் அன்பா?
உன்னைத் தாய் என்று நினைக்க முடியவில்லை. நீ எனக்கு...
அடி, நீ யார்?
உன் முகத்திரையைக் களைந்தால் நீ என்ன செய்வாய்?
அடி, நீ யார்?"

4

பரமேச்வரம் வாசித்து முடிக்கும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.

இதில் என்ன குற்றமிருக்கிறது? இருந்தால் அழித்துவிடத்தான் வேண்டுமா? அழித்தால் என்ன கிடைத்துவிடுகிறது? அழித்துத்தான் ஆக வேண்டுமா?

புது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா! அவனை அழிக்க முடியுமா? சமூகம் அசட்டுத்தனம் செய்யும்.

அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன? அந்நியனுடையதாக இருந்தால் என்ன? சரித்திரத்தில் எங்கும் இப்படித்தான்.

கடமை இருக்கிறது. கடமை அவசியந்தான். கடமைக்காக எதையும் செய்துவிடுகிறதா?

பரமேச்வரத்தின் மனது ஒரு கொந்தளிக்கும் கடல்போல் தறிகெட்டுப் புரண்டது.

வெளிக் காம்பௌண்டில் உலாவ வருகிறார்.

தம்மையறியாமல் அந்தச் சிறு காகிதக் கட்டு அவர் பைக்குள் செல்லுகிறது. அதை அழிப்பதா? வைத்துக் கொண்டால் என்ன?

5

நல்ல இருட்டுத்தான்.

காம்பௌண்ட் சுவரிலிருந்து ஒரு கறுத்த உருவம் குதிக்கிறது.

கடமை! வார்டர்களைக் காணோம். அந்தப் பக்கம் சற்று ஒரு மாதிரித்தான்.

ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடித்துக் கொள்ளுகிறார்.

சல்லடம் தரித்த பெண்.

அவன் சிநேகிதை.

"நீ..." என்கிறார்.

"ஆம்! அவரைப் பார்க்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் வழியுண்டு."

"பார்க்கக் கூடாது! வீணாக நீயும் அகப்பட்டுக் கொள்ளாதே! போய்விடு! நீ சிறுமி!"

"நான் பெண்ணுமல்ல, சிறுமியுமல்ல. எங்கள் சமுதாயத்தின் அடிமை; தொண்டர்."

"நம்முடைய சமுதாயமில்லையா?" என்று சிரித்தார்.

"நீ ஒரு துரோகி. உனக்கு அங்கு இடம் கிடையாது!" என்றாள்.

6

அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த பையில் என்னமோ சிறிய கட்டு பொத்தென்று விழுந்தது.

இருவரும் மௌனமாக நிற்கின்றனர்.

"நீ!..." என்றாள்.

"போ! போ!"

அவளை ஒரே துக்காகத் தூக்கி, காம்பௌண்ட் மதில் மேல் வைத்தார். அடுத்த நிமிஷம் அந்த உருவம் மறைந்தது.

"பறிமுதல் செய்யப்பட்ட சிறு காகிதக் குப்பை, கைதி 43-ம் நெம்பரின் பைத்தியக்கார உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது" என்று எழுதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.

எது பறிமுதலானது?