கோபாலபுரம்

1

கோபாலபுரம் ஒரு சிற்றூர்.

சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், நான் ஏன் சைத்திரிகனாகப் பிறந்திருக்கக்கூடாது என்று படும்.

ஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின் சின்னங்களைக் காண்பதே அருமை. தூரத்து மைதானத்தில் இரண்டு மூன்று எருமையோ, ஆட்டுக்குட்டியோ, மேய்வதைப் பார்ப்பதும், மாட்டுக்காரனின் குரல் கேட்பதும் விதிவிலக்கு.

வாழ்க்கையில் கசப்புற்றவர்களுக்கும், தனிமை என்றும் காதல் என்றும் அழகு என்றும் அர்த்தமில்லாமல் பேசும் கவிஞர்களுக்கும் அவ்விடத்தில் மன நிம்மதி கிடைக்கும்.

நானும் அவ்வூரில் தங்கியவன் தான். அதாவது ஒரு காலத்தில் என்னை அவ்வூர்க்காரர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுது...

அது பெருங்கதை.

மனிதன் தெய்வ சிருஷ்டியின் சிகரம் என்பது சாஸ்திரக்காரரும் விஞ்ஞானிகளும் ஏகோபித்துப் பாடும் முடிவு.

நான் கவனித்தவரை, அந்த மாதிரிக் கேவலமான சிருஷ்டியைப் படைத்த பிறகு, கடவுளுக்கு உணர்ச்சி ஏதாவது இருந்தால் வெட்கத்தினால் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் கூறுவேன்.

மனிதனாவது! கடவுளாவது! சீச்சீ! சுத்த அபத்தம்! இதில் தெய்வம் தன்னை வழிபட வேண்டும் என்று மனிதனை எதிர் பார்க்கிறதே அதைப்போல் முட்டாள்தனம் வேறு உண்டா? நான் மட்டும் கடவுளாக இருந்தால், கட்டாயம் இந்தச் சிருஷ்டித் தொழிலை நெடுங்காலத்திற்கு முன்பே விட்டுவிட்டுத் தூக்குப் போட்டுக் கொண்டிருப்பேன்.

என்ன மனிதன், சீ!

அன்றைக்கு நடந்தது எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது.

அதற்கு முன்பு கோபாலபுரம் என்னமாய் இருந்தது!

 

2

லக்ஷ்மி ஒருத்தியே போதுமே ஊர் நிறைந்தாற்போல் இருக்க! சாயங்காலத்திலே சிவன் கோயில் கிணற்றில் ஜலமெடுக்க வரும் போது தமிழ்ப் பெண்மையின் இலட்சியம்... சீச்சீ, அவளும் நாற்றமெடுக்கும் தசைக்கூட்டந்தானே! பெண்மையாவது இலட்சியமாவது! அவள் என்ன செய்வாள்?... எப்பொழுதும் சிரித்த கண்கள், புன்னகை ஒளிந்த அதரங்கள். பண்ணை ஐயரின் மகள் என்றால் கவலை என்னத்திற்கிருக்கிறது? மாமரத்து மோட்டுக் கிளைக்குயில்கள்போல் குதூகலமாக இருந்தாள். குயில்களுக்குத் தம் மோகனக் குரல் - இன்பத்தால் மற்றவரைத் துன்பப்படுத்துவது தெரியுமா? அப்படித்தான் அவளுக்கும். வாழ்க்கை, இன்பம் என்ற பெருங்களியாட்டமாகச் சென்றது.

அப்பொழுது நான் அங்கே போய்த் தொலைந்தேன். வேறு எந்த ஊராவது என் மனத்தில் தோன்றக் கூடாதா? எவனோ ஒரு முட்டாள், "வாழ்க்கை இன்பத்தின் சிகரத்தை அனுபவிக்க வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணிக் கரையிலிருக்கும் சிற்றூர்களில் தங்க வேண்டும். அதிலும் முக்கியமாகக் கோபாலபுரத்தில் வாழ வேண்டும்" என்று எழுதிவைத்தான். நானும் முட்டாள்தனமாக அங்கே சென்றேன். போன ஒரு மாசம், கொஞ்சங்கூடத் தலைகால் தெரியவில்லை. கோபாலபுரம் மோட்சமாக இருந்தது. கோபாலபுரம்... அப்பப்பா, அதை நினைக்கும் பொழுதே... சீச்சீ! என்ன முட்டாள்தனம்!...

பண்ணை ஐயரைப் போல சிநேகத்திற்கு நல்ல மனிதர் கிடையாது அவருடன் பேசிக்கொண்டிருந்தால் என்ன சுவாரஸ்யம்! ஆனால், ஒவ்வொரு மனிதனிலும் ஒரு பேய் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தெரியுமா? எவனொருவனைக் கீறினாலும் இரத்தந்தான் வரும், உள்ளிருக்கும் தீமையைக் காண்பிக்கும் சிவப்பு வெளிச்சம் மாதிரி! மனிதன், அதற்கப்புறம் அவன் சுவாரஸ்யமாகப் புளுகும் விதி, அதைப் பற்றி அதிகமாகக் கூறவேண்டுமானால், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சரியான வேதாந்தம். அதிலிருந்துதான் அம்மாதிரியான அசட்டுத்தனம் வர முடியும். மனிதனுக்கும் தெய்வத்திற்கும் என்ன சம்பந்தம்? விதியாம் விதி!

 

3

நான் உட்கார்ந்து எழுதும் அறையிலிருந்து பார்த்தால் லக்ஷ்மி ஜலமெடுக்கப் போவது தெரியும். அவளது களங்கமற்ற சிரிப்பு உள்ளத்தை எவ்வாறு தீய்த்தது என்று யாருக்குத் தெரியும்? நான் மனிதன், கண்டவிடத்தில் எனது உள்ளத்தின் கொதிப்பைத் திறந்து காண்பிக்க முடியும்? அதிலும் லக்ஷ்மியிடம்? மனிதனும் குரங்கு தான். எதை எடுத்தாலும் பிய்த்து முகரத்தான் தெரியும்.

அவள் எனது இலட்சியம். வேறு ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு அவனைக் காதலித்திருப்பவளைக் காதலிக்க எனக்கு உரிமையுண்டா? உணர்ச்சி, உரிமையைத்தான் கவனிக்கிற தாக்கும்! நட்சத்திரம் வேண்டுமென்று அழுகிற குழந்தைக்கு எதைக் கொடுத்து ஆற்ற முடியும்?

எனது காதல் பாபம். எனக்கும் தெரியத்தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான பாபங்கள் எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம், செய்யவேண்டும்! பாபந்தான் மனிதனது உடலைப் புனிதமாக்குகிறது.

மனிதன்... அவனைப் போல் அசட்டுத்தனமான பிரகிருதிகள் கிடையா. மனிதன் புழு!

அவளுக்கு என் உள்ளத்து எரிமலையின் கொந்தளிப்புத் தெரியாது.

கோபாலபுர மோகத்தில் நாவல் எழுத வேண்டும் என்ற பைத்தியம் பிடித்தது. கோபாலபுரத்தில் வாழ்க்கையைச் சித்தரிப்பது இலக்கியத்தின் வெற்றி என்று நினைத்தேன். படமும் படிப்படியாக வளர ஆரம்பித்தது. அதில் லக்ஷ்மியும் இடம்பெற்றது அதிசயமன்று. சன்னலிலிருந்து பார்க்கும்பொழுது லக்ஷ்மியின் களங்கமற்ற சிரிப்பு எனது நாவலின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.

அன்று தீபாவளிக்கு முதல் நாள். அவளுடைய புருஷனும் பட்டணத்திலிருந்து வந்திருந்தான். பண்ணையார் வீட்டில் ஏகத் தடபுடல் என்று நான் சொல்ல வேண்டுமா? மறுநாள் இந்தப் புழுக்களின் தன்மையைக் காண்பிக்கும் நாள் என்று யார் கண்டார்கள்?

4

மத்தியானம் நான் அவர்கள் வீட்டிற்குள் போனேன். வாசற்படியில் ஏறினதும் எனக்கு என்னமோ ஒரு மாதிரியாக இருந்தது. எல்லோரும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். பண்ணையார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எதிரில் ஒரு ஷோபாவில் லக்ஷ்மியும் அவள் கணவனும் உட்கார்ந்திருந்தார்கள். மூவருக்கும் எதிரில் அவள் தம்பி சுந்து, பெரிய மனிதன்போல் உட்கார்ந்திருந்தான். லக்ஷ்மியின் முகம் குன்றிப்போய் வெளிறியிருந்தது. அவள் கணவன் சித்திரப்பதுமை மாதிரி திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான்.

"அம்பி அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தான். உமது மேஜையில் இருந்ததாம். அதை எழுதியது நீர்தானா பாரும்!" என்றார் பண்ணையார். எனது மனம் களங்கமற்றிருந்தால்தானே! கடிதம் நான் தான் எழுதினது. ஆனால் அது எனது நாவலின் ஒரு பகுதி. அப்படிச் சொன்னால் நம்புவார்களா? அவள் பெயரும் லக்ஷ்மி. நானும் என்னால் இயன்றவரை சொன்னேன். மனம் களங்கமாக இருக்கும் பொழுது என்னதான் சொல்ல முடியும்? எனக்குச் சுந்துவின் மீது கோபம் வந்தது. ஆனால் பண்ணையாருக்கும் அவருடைய மாப்பிள்ளைக்கும் லக்ஷ்மியின் மீது சந்தேகம். என் முன்பே நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். கண்கள் எரிக்குமானால் அவள் என்னை அன்று தீய்த்துவிட்டிருப்பாள். என் மனம் அவளை நோக்கித் தகித்தது. அவள் உள்ளம் எனது செய்கையின் மீது கனன்றது. அவள் மீது அபவாதம்! காரணம் நான்! - அதாவது ஓரளவில் நான்!

மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது. அவளது அசட்டுத்தனம்.

பிறகு அங்கிருக்க முடியுமா? உலகமே எனக்கு எரிமலையாக இருக்கிறதே! ஓரிடத்திலும் தலைவைத்துத் தூங்க முடியவில்லை. மறுபடியும் வந்தாகிவிட்டது.

கோபாலபுரத்துக் கோபுரம் மாந்தோப்பிற்கு மேல் தெரிகிறது. ஊருக்குள் போக முடியுமா? அவளுடைய எண்ணம், மனம், எல்லாம் உடலைப்போல் மறைந்தன. நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அதுதான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயமாம். மனிதன், விதி, தெய்வம்; தள்ளு - வெறும் குப்பை, புழு, கனவுகள்!

கோபாலபுரம்! இப்பொழுது பெயரைக் கேட்டாலே நடுங்குகிறதே! மறக்க முடியாத மனத்தின் பாறாங்கல் கோபாலபுரம்.