கடிதம் - kaditham
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Pudumaipiththan
- Hits: 2008
1
சிங்கார வேலு ஓர் இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை - ஏன், வாழ்க்கையையே - திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால் அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.
'பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்!' என்று அவர் ஒரு நாளும் கனவு காணவில்லை; ஆனால் பேனாவை வைத்துக் கொண்டு பிச்சையெடுக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.
அவருடைய சிறுகதைகளைப் பொறுத்தவரை சமூகம் நூறு பேரில் அவரை ஒருவராக மதித்தது. முக்கால்வாசிப் பேருக்கு அழகு என்பது என்ன என்று தெரியாது. சிலருக்கு அழகாயிருக்கிறது என்று முதலில் சொல்லுவதற்குத் தைரியமில்லை.
இந்த மாதிரியான சமூகத்தினிடையே சிங்காரவேலு உயிர்வாழ வேண்டுமென்றால் வாழ்க்கை உண்ணாவிரதத்தில் முக்தியடைந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது கருணை மிகுந்த தெய்வம் அட்சய பாத்திரம் ஒன்றைக் கொடுத்து வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இயற்கையின் சட்டத்தை மீறவும், தெய்வத்தின் கருணையைப் பெறவும் முடியாத இந்தக் கலிகாலத்தில் பிறந்ததைப் பற்றி சிங்கார வேலு நொந்து கொள்வதில் பயன் இல்லை.
அவருடைய சமூகமாகவும் ரஸிகர்களாகவும் சில நண்பர்கள் இருந்தார்கள். அதனால் அவருக்குப் பசி என்ற கவலை ஏறக்குறைய இல்லையெனலாம். ஏனென்றால் அவருடைய தேவைகள் வெகு கொஞ்சம். குடும்ப பாரம் கிடையாது. கனவு கண்டுகொண்டிருப்பதற்குப் போதிய அவகாசம் இருந்தது. எனினும் அதை இலக்கியமாக வடிவெடுக்க வைக்கும் ஊக்கம் குறைந்துவர ஆரம்பித்தது.
புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லிவிட வேண்டாம். செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது! இதில் வாழும் கிரந்த கர்த்தா மனமிடிந்து பாழாய்ப் போவான்; ஆனால் சிங்காரவேலு இப்படி நாசமாவதற்குக் கோழையல்லர். தைரியத்தினால் ஏற்பட்ட மனக் கசப்பு அவரை ஒன்றும் எழுதவிடவில்லை.
அவர் சமூகத்தில் நம்பிக்கை வைத்த மனிதர். ஓடித் தளர்ந்த சிந்தனைகள் எல்லாம், ஈட்டி குத்தும் மாதிரி, கதைகளைச் சிருஷ்டித்தன.
2
அன்று...
எப்பொழுதும்போல் அந்தத் தனியறையில் பாயில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
வெற்றிலையை மென்று மென்று துப்பியாகிவிட்டது.
என்ன செயற்கை ஊக்கம் கொடுத்தாலும் அந்தக் கதையைத் தொட முடியவில்லை.
ஏழு நாட்களாக இந்தக் கதிதான்.
கையிலிருந்த பேனாவையும் காகிதத்தையும் கீழே பொத்தென்று போட்டார்.
பின்புறமிருந்த தலையணையில் சாய்ந்துகொண்டு, வெற்றிலைச் செல்லத்தைப் பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு, வெற்றிலை போட ஆரம்பித்தார்.
அதுவும் ஒரு கலை - அவருக்கு.
தெரு வாசற்படியில் யாரோ வருவதுபோல் காலடிச் சப்தம்.
"சிங்காரம்!" என்ற குரல்.
"சுந்தரமா? வா!"
அவருடைய நண்பர் சுந்தரம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, "என்ன வெளியே போகலாமா? மணி ஐந்திருக்குமே!" என்றார்.
"வெற்றிலையைப் போடு, முதலில்!"
"என்ன, இன்னும் கதையை முடிக்கவில்லையே! ஆரம்பம் வெகு ஜோராய் இருக்கிறது. சீக்கிரம் முடியுங்கள்!"
"ஆமாம், வேலையில்லை! எழுதித் தூக்கி நிறுத்துகிற அவசரம் ஒன்றுமில்லை. என்னடா, நல்ல கதையை ரஸிக்கிறதற்கு ஒரு பயலும் இல்லை. சும்மா எழுது எழுது என்றால்! நான்கு பகுத்தறிவற்ற குயில் இல்லை. எனக்கு நான் எழுதுவதைச் 'சரி, நன்றாயிருக்கிறது' என்று சொல்ல நான்கு பேர்கள் வேண்டும். சுற்றி ஒன்றுக்குமற்ற கழுதைகளை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது?" என்றார் சிங்காரம்.
"ரஸிக்கிறதற்கு நாங்கள் எல்லாரும் இல்லையா?" என்றார் சுந்தரம்.
"நீ எனது சிநேகிதன். உனக்கு என்மேல் பிரேமை. நான் என்ன எழுதினாலும் உனக்கு நன்றாகத்தான் தெரியும். மூன்றாவது மனிதன் எவனாவது இதுவரை என் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறானா? அதிருக்கட்டுமப்பா! நான் கதை எழுதுகிறேன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? வா, போகலாம்! கதை எழுதி..." என்று சொல்லி எழுந்து வெளியே புறப்படத் தயாரானார்.
மௌனமாகக் கையிலிருந்த புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு நண்பரும் எழுந்தார்.
அன்று பேச்சு எங்கெல்லாமோ சுற்றியும் கடைசியில் இதில்தான் வந்து விழுந்து கொண்டிருந்தது.
3[தொகு]
ஐந்தாறு நாட்கள் கழித்து...
இரவு ஏழு மணி இருக்கும்.
சிங்கார வேலு தமது அறையில் உட்கார்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருக்கிறார்.
அந்தக் கதை அதுவும் அப்படியே அரைகுறையாகத்தான் கிடக்கிறது.
"ஸார், தபால்!" என்ற சப்தம்.
சிங்காரவேலுவுக்குக் கடிதம் வருவது விதி விலக்கு. முக்கால்வாசி வேறு யாருக்காவது போகவேண்டிய கடிதம் தவறுதலாக இங்கு வந்துவிடுவது உண்டு. துணைத் தபால்காரனாக இவரும் சிரமப்படவேண்டியதிருக்கும்.
ஜன்னல் வழியாக விழுந்த கடிதத்தை எடுத்து விலாசத்தைக் கவனித்தார். அதில் தவறு ஒன்றுமில்லை. விலாசம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் கையெழுத்து அவருக்கு அறிமுகமானதாக இல்லை. தபால் முத்திரை எப்பொழுதும்போல் ஒரே கறுப்புமயமாக இருந்தது.
பிரித்து வாசித்தார்.
4
விசாகப்பட்டி, 10.9.33
இலக்கிய கர்த்தரான திரு.சிங்காரவேலு அவர்கள் திவ்விய சமூகத்திற்கு,
நான் பெரிய படிப்பாளி ஒன்றுமில்லை; ஆனால் கலையில் எனக்கு ஆர்வம் மிகுதியும் உண்டு.
தங்கள் சிறுகதைகளுக்கு நிகராகத் தமிழ் இலக்கியத்தில், ஏன், உலக இலக்கியத்திலேயே - எனக்கு ஆங்கிலத்திலும் சிறிது பயிற்சி யுண்டு - பெரும்பான்மையாகக் கிடையாது என்றே சொல்லுவேன். தங்கள் 'சாலாவின் சங்கடங்கள்' என்ற சிறுகதை வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியமாக இருக்கிறது.
அது ஒரு புதிய மானத உலகத்தையே திறந்து காண்பிக்கிறது. அதைப் பற்றிப் புகழ்வதற்கு, நானும் ஓரளவு எழுதும் பயிற்சி பெற்றவனாக இருந்தால் எனது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே எடுத்துரைப்பேன். ஆனால் அந்தோ, அவ்வளவும் மூங்கையன் கண்ட கனவாகவே இருக்கின்றன. இன்னும் தங்கள் எண்ணிறந்த கதைகளை விடாது படித்துவந்தவர்களில் நானும் ஒருவன். இன்னும் புதிய கற்பனைகளை, கனவு லோகங்களைச் சிருஷ்டிக்க இறைவன் தங்களுக்குப் போதிய சக்தி அருளுவானாக.
இப்படிக்கு,
தங்கள் விதேயன்,
நாகப்பன்.
5
கடிதத்தை வாசித்ததும் முகம் மலர்ச்சியடைந்தது. உள்ளம் பூரிப்படைந்தது. குதூகலம் பிறந்தது. மறுபடியும் வாசித்தார். இன்னொரு முறையும் வாசித்தார். அந்தக் கடிதம் அவருடைய ஒரு பெரிய தாபத்தைத் தீர்த்தது.
"நீ ஒருவன் தான் - எண்ணிறந்தவர்களில் ஒருவனல்லன்! சமூகத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. முழுமோசமில்லை!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
கடிதத்தைச் சுந்தரத்திற்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதில் என்னதான் இருக்கிறதோ? மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறார். நாகப்பனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதவேண்டும் என்று நிச்சயித்தாகிவிட்டது.
மறுபடியும் படிக்க ஆரம்பித்த பிறகு மனது திடீரென்று மாறுகிறது. சில சில எழுத்துக்கள் தமக்கு அறிமுகமான யாரோ ஒருவரின் கையெழுத்து மாதிரித் தெரிகின்றன. ஆமாம்! யாரோ நமக்குத் தெரிந்த பயலுடைய வேலைதான். இல்லாவிட்டால் என் விலாசத்தை விசாகப்பட்டிக்கு யார் கொண்டுபோய்க் கொடுக்கப்போகிறார்கள்.
இந்தப் புளுகு மூட்டையை என்னிடமா அவிழ்க்க வேண்டும்? சீச்சீ! முட்டாள்! கோழை! தைரியமிருந்தால், உண்மையில் ரஸித்தால், பகிரங்கமாகப் பத்திரிகைக்கு ஏன் எழுதக் கூடாது? அவன் ரஸித்தது என் சிநேகத்திற்காகத்தான். சீ! இதை எழுதிவிட்டால் எனக்குத் திருப்தி, சாந்தி, எல்லாக் குட்டிச்சுவரும் வந்துவிடுமென்று எண்ணினானாக்கும்! முட்டாள்! அவனும் இந்தச் சமூகத்தில் ஒரு ஜந்துதானே! இந்த முட்டாள் கூட்டத்திற்குக் கதை எழுத வேண்டுமாம், கதை! அதைவிடக் கசையடி கொடுப்பேன்! முட்டாள்கள்! தரித்திரக் கழுதைகள்! நாளைக்கு வரட்டும்! கதை வேண்டுமாம், கதை!
இந்தப் பயல்கள் சாவகாசமே வேண்டாம். தொலைந்தால்தான் இந்தப் பீடை ஒழியும். உண்மைப் பற்றுதலைக் காண்பிக்க தைரியமில்லாத கோழைகள்! கடிதம் எழுதினானே கடிதம், என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டானா? சீச்சீ! முட்டாள்! அவனை என்ன சொல்ல?... பெற்று வளர்த்த சமூகம் இப்படிப்பட்டது. இதற்காக எழுதாமலும் இருக்கிறதில்லை.
காகிதம் எரியும் நாற்றம் அறை முழுவதும் பரந்தது.
விளக்கும் கரி பிடித்து எரிந்து, எண்ணெயற்றுச் சோர்ந்து மங்கிக் கொண்டே வந்தது. வெற்றிலைப் பெட்டியை எடுக்கும் சப்தம். சிங்காரவேலு வெற்றிலை போட்டுக்கொண்டார்.
விளக்கு அணைந்தது.
அவர் மனத்தில் புழுங்கிய தணலும் அவிந்தது.
அன்று அவர் வெகு நேரம் தூங்கவில்லை.
இந்த மாதிரி அசட்டுத்தனமான சமூகத்தை எப்படித் தூக்குவது?
கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?
இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா?
அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.
எத்தனை காலமோ?
ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!