'இந்தப் பாவி' - Indha Paavi
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Pudumaipiththan
- Hits: 2198
காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் கவிதை. ஷேக்ஸ்பியரின் 'ரோமியோவும் ஜுலியட்டும்' என்றால் அவருக்கு வேறொன்றும் வேண்டியதில்லை; கம்பராமாயணத்தில் மதனின் மலர்ப்பாணங்களால் தாக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவரையொருவர் நினைந்து 'மனக்கோட்டை' கட்டுகிறார்களே, அஃதென்றால் அவர் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்.
ஓங்குமரக் காட்டி னுள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ரமஞ்சமித்தை தூங்கும் நவரசத்தேன்.
வித்உருமம் தன்னை உந்தன் மெல்லிதழ் என்றால் இதிலே
முத்தம் கிடைக்கும் அதில் முத்தம் கிடையாதே.
என்ற வரிகளை அடிக்கடி பாடுவார். "ஆஹா! சுப்ரதீபக் கவிராயரின் கவிதா சக்தியை என்னவென்று சொல்லுவது" என்று சொல்லிக் கொண்டு புகழ்மாலைகள் பல புலவருக்குப் புனைவார்.
கோமதிநாயகம் பிள்ளையிடத்து மாணவர்கள் பேரன்பு பூண்டவராயிருந்தனர். அவர் சொல்லை வேதவாக்கென மதித்தனர். அவர் விரும்பா மாணவனும் கிடையாது. அவரை விரும்பா மாணவனும் கிடையாது. கோமதிநாயகம் பிள்ளை வார்த்தைக்கு ஆசிரியர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் ஒரு தனிப்பெருமை உண்டு.
'ரோமியோவும் ஜுலியட்டும்' என்ற நாடகம் எங்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.
"அந்நிலையில்லா அம்புலியின்மீதா தாங்கள் ஆணையிடுகின்றீர்கள்? தங்களுடைய காதலும் அவ்விதம் போய்விடக் கூடாதே" என்று ஜுலியட் திங்கள் மீது ஆணையிட்டுத் தனது காதலை வெளிப்படுத்திய தன் காதலனுக்குச் சொன்ன வாக்கியங்களை வாசித்ததும் பரவசமடைந்தார் எங்கள் ஆசிரியர். சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டார். அவரது அகக்கண் முன்னே ஒரு பெரிய நாடகம் நடைபெறுகின்றதென்பதை நாங்கள் அறிந்தோம்.
"எனது வாழ்க்கையில் என் கண்ணால் கண்ட, என் நண்பரொருவர் அனுபவித்த காதலின் நிகழ்ச்சியொன்றுள்ளது. அதை செவியுற்ற எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்நாடகத்தை வாசிக்கும் பொழுது அச்சம்பவம் என் நினைவுக்கு வந்தது. இன்று நேரமாகி விட்டதால் நாளைக்குச் சொல்லுகிறேன். இருந்து எல்லோரும் கேட்பதாயிருந்தால் எனக்கு ஆக்ஷேபணையில்லை" என்று மறுபடியும் தன்னைச் சரிபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
மாணவர்கள் எல்லோரும் கேட்க ஆவலுள்ளவர்களாகயிருந்தார்களென்பதை அறிந்த கோமதிநாயகம் பிள்ளை கதையை ஆரம்பித்தார்.
"சிவந்திப்பட்டி தமிழ்மணங்கமழும் பொருணையாற்றங்கரை மேலுள்ள ஒரு குக்கிராமம். முந்நூறு வீடுகளுக்கு மேல் இருக்காது. கிராமவாசிகள் எல்லோருமே ஹிந்துக்கள். புராதனமான பாண்டிய அரசனால் கட்டப்பட்ட கோவில் ஒன்று இருக்கிறது. தமிழர் நாகரிகத்தையும், சிற்பத் திறமையையும் காட்டக்கூடிய கற்சிலைகள் பல உள. சிரங்களாலாய மலையைக் கரங்களில் தாங்கி நடனம் புரியும் வீரபத்திரனுடைய சிலையைப் பார்த்த எவருமே மறக்க முடியாது. அதிகம் சொல்வானேன்? இயற்கையெழில் அனைத்தும் செயற்கையழகு முழுவதும் படைத்த ஒரு கிராமம்.
"இராமலிங்கம் பிள்ளை அக்கிராமத்தின் பண்ணையார்; பெருநிதி படைத்த பிரபு. அவருடைய குமாரன் தான் எனது நண்பன்; நான் சொல்லப்போகும் சம்பவத்தின் முக்கிய கதாநாயகன். நானும் பூர்ணலிங்கமும் கலாசாலை நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவருக்கிருந்த வாத்ஸல்யம் வேறு எந்த இரண்டு நண்பர்களிடத்திலும் நான் பார்த்ததில்லை. பூர்ணலிங்கம் கலாசாலையில் பல துறைகளிலும் பிரகாசித்தான். சீரிய நடையும் உயரிய நோக்கமும் கொண்டவன். கூர்மையான அறிவும் நேர்மையான கொள்கையும் படைத்தவன்; ஒரு சுந்தர புருஷன்.
"கலாசாலை முடிந்து கோடை விடுமுறைக்கு மாணவர்களும் மாணவிகளும் தத்தம் ஊருக்குப் பிரயாணமாயினர். நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் சில தினங்கள் தங்கிவிட்டுப் போகலாம் என நினைத்து பூரணலிங்கத்தை வழியனுப்பிவிட்டு சென்னையில் தங்கிவிட்டேன். சிவந்திப்பட்டிக்கு வருவதாக என் நண்பனிடம் வாக்களித்தேன். நான் கூடப் பிரயாணம் செய்யாமல் தனிமையாக (ஆனால் மற்ற நண்பர்களுடன் மட்டும்) பிரயாணம் செய்வது அவனுக்கு உற்சாகமூட்டவில்லை. இருந்தாலும் எனது மாமனாரின் மனவிருப்பத்தை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் இருவரும் ஒன்றாகப் போக முடியவில்லை.
"நல்ல நிலவு. ஆனந்தமாகப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மாணவர் கோஷ்டி பிரயாணம் செய்து கொண்டிருந்தது. தத்தம் இல்லம் செல்லும் உற்சாகத்தினாலும், கூட்டமாகப் பிரயாணம் செய்யும் கோலாகலத்தினாலும், பிரயாணம் மிகவும் சுகமாயிருந்தது. ரயில் விழுப்புரத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தது. வழியில் பலர் இறங்கிவிட்டனர். மிஞ்சிய சிலரும் இராத்திரியைச் சிவராத்திரியாக்கி விடவேண்டுமென்றே முடிவு செய்துவிட்டனர். திடீரென்று பக்கத்திலிருக்கும் பெண்கள் வண்டியிலிருந்து கூக்குரல் கிளம்பிற்று. வண்டியோ வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அடுத்த வண்டிக்குத் தாவிப் போகக்கூடிய தைரியம் ஒருவருக்கும் வரவில்லை.
"பெரும்பாலான ஜனங்கள் தூக்க அசதியிலிருந்தார்கள். பூர்ணலிங்கம் சட்டென்று அடுத்த வண்டிக்குத் தாவி வண்டிக்குள் நுழைந்துவிட்டான். அங்கு ஒரு முரடன் ஒரு இளம் பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அறுக்க முயற்சிக்கவும், அப்பெண் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலுவதையும் பார்த்தபொழுது கோபம் பொங்கி எழுந்தது. ஆள் வந்துவிட்டதனால் தனது கத்தியை உருவிப் பயமுறுத்திக் குதித்து ஓடிவிட எத்தனித்தான். ஆனால் பூர்ணலிங்கம் சிறிதும் அச்சமின்றி ஊக்கத்தைக் கைவிடாமல் திருடனைக் கட்டிப் பிடிக்கும் தருணத்தில் திருடன் கத்தியால் குத்தினான்.
"குத்து தெய்வாதீனமாக இடது கையில் விழுந்தது. குத்தையும் பொருட்படுத்தாமல் பூர்ணலிங்கம் திருடனை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். "சங்கிலியை இழுங்கள், இழுங்கள்" என்று கூக்குரலிடவே அதற்குள் சங்கிலி இழுக்கப்பட்டு ரயிலும் நின்றுவிட்டது. உதவிக்கு ஆளும் போலீசும் வரவே திருடன் கட்டப்பட்டான்; திருடன் வஸ்திரம், பூரணலிங்கம் உடை, இளம்பெண்ணின் ஆடை எல்லாம் இரத்தமாயிருந்தது. இதற்குள் அந்நங்கை சித்த ஸ்வாதீனத்தை இழந்தாள். அடுத்த ஸ்டேஷனில் நங்கையும் பூர்ணலிங்கமும் இறக்கப்பட்டார்கள்; உதவிக்குச் சில மாணவர்களும் இருந்தனர். காலையில் மதுரையிலுள்ள நங்கையின் தந்தைக்குத் தந்தி கொடுக்கப்பட்டு, சாயங்காலமே தந்தையும் தாயும் வந்து சேர்ந்தனர். தனது புத்திரியைக் காப்பாற்றிய பூர்ணலிங்கத்தைத் தழுவிக்கொண்டார் பெண்ணின் பிதா. கைக்குத்தைப் பார்த்து அழுதார்; வீரத்தை மெச்சினார்.
"'அம்மா சாவித்திரி, நகைகளைப் பற்றி எனக்குத் துளிகூடக் கவலையில்லை. இந்நகைகளை அபகரிக்கும் ஆசையில் உனது உயிருக்கு உலைவைத்துவிடாமல் கடவுள் காப்பாற்றினது நமது பூர்வஜென்மப் புண்ணியம்தான்' என்று சொன்னார் சோமசுந்தரம் பிள்ளை.
"சாவித்திரி சென்னையில் பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி. அவள் தந்தை சோமசுந்தரம் பிள்ளை மதுரையில் ஒரு பிரபல வியாபாரி. மிகவும் செல்வாக்கு உள்ளவர். இச்சம்பவத்துக்குப் பிறகு பூர்ணலிங்கம் அடிக்கடி சோமசுந்தரம் பிள்ளையின் வீட்டிற்குச் செல்வதுண்டு. பூர்ணலிங்கம் வீட்டிற்கும் சோமசுந்தரம் பிள்ளையின் குடும்பத்தார் வந்து போய் அவர்களுக்குள் அன்னியோன்னியம் பெருகிற்று. 'கோமு, சாவித்திரி தங்கக்குணம். பெண் பிறந்தால் இப்படிப் பெண்ணன்றோ வேண்டும்!' என்று பல தடவைகள் பூர்ணலிங்கம் அன்னை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
"சென்னையில் பூர்ணலிங்கமும், சாவித்திரியும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் கடற்கரையில் சந்தித்து சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை தவறுவது எப்படி சாத்தியமில்லையோ, அதே போன்று அவர்கள் சந்திப்பும் இருந்து வந்தது.
"'வெண்மதியைப் பார்த்தனையோ? கடலின் கம்பீரத்தை நோக்கு. தூரத்திலே தோன்றும் முகிற் கூட்டங்கள் பரமானந்தத்துடன் பிரயாணம் செய்வது தெரிகிறதா? தோணியோட்டி பாடுவது கேட்கிறதா?' என்று பூர்ணலிங்கம் பேசுவதும், 'இயற்கையின் அழகே அழகு. அலைகள் ஒன்றோடொன்று கூடி விளையாடுவது எவ்வளவு நன்றாயிருக்கிறது பாருங்கள். அந்த அலையைப் பாருங்கள். எவ்வளவு பிரமாண்டமான அலை. கொஞ்சம் தள்ளிப் போய்விடுவோம். நம்மை மோதிவிடும்' என சாவித்திரி சொல்லுவதும் சகஜமாக இருந்தது.
"ஒருவருக்கொருவர் வாய்விட்டு சொல்லிக்கொள்ளாவிடினும், அவர்களுக்குள் காதல் இருந்து வந்தது! வளர்ந்து பெரிய விருக்ஷமாகியும்விட்டது.
"ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு நேரம் வரை பூர்ணலிங்கம் கடற்கரையில் காத்திருந்தும் அன்று சாவித்திரி வரவில்லை. 'வராமலிருக்கக் காரணம் என்னவாயிருக்கலாம்? ஒரு வேளை கலாசாலை அதிகாரிகள் போகக்கூடாதென்று தடுத்திருப்பார்களோ; அதெப்படியிருக்க முடியும்? இருக்கக் கூடாதா? அப்படியானால் இதுவரைக்கும் அப்படியொன்றுமில்லையே? மதுரையிலிருந்து சாவித்திரியின் தந்தை வந்திருக்கலாம். வந்திருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க வேண்டுமே? கலாசாலைக்குப் போய்விட்டு வரலாமா? அனுமதி கிடைக்குமோ, கிடைக்காதோ? ஊருக்குப் போயிருக்கலாமோ? இப்பொழுது ஊரில் என்ன? விடுமுறை ஒன்றும் இல்லையே?
ஊருக்குப் போவதாயிருந்தால் எனக்குத் தெரிவிப்பாளே?' என்று நினைத்து ஒரு காரணம் கற்பிக்க வழி தெரியாமல் ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டான். அன்றிரவு முழுவதும் பூர்ணலிங்கத்திற்குத் தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பகைவன் போன்று இரவு பூராவும் ஓயாது போர் புரிந்து கொண்டிருந்தது. 'ஒரு காரணமும் இல்லையே, எப்படி வராமலிருக்க முடிந்தது? என்ன அதிசயமாயிருக்கிறது! என்மேல் வெறுப்புற்றனளோ, ஒருகாலுமிருக்காது. பின் என்ன?' இவ்விதம் விடியும் வரை சலிப்பின்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
"மறுநாள் மத்தியானம் பூர்ணலிங்கத்துக்குச் சாவித்திரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சாவித்திரி எழுதியிருந்ததாவது:
என் மனதுக்குப் பிடிக்காத சிலர் சொன்ன அவதூறின் காரணமாகக் கலாசாலை அதிகாரிகள் வெளியில் போக எனக்கு அனுமதி மறுக்கின்றனர். என் தந்தைக்கு எழுதியிருக்கிறார்கள். அதைப் பற்றி ஒன்றுமில்லை; கவலையும் வேண்டுவதில்லை. கற்பு நிலை என்னவென்பது எனக்கு நன்கு தெரியும். பிறர் புகுத்திக் கற்பு நிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று.
"கடிதத்தைப் பார்த்ததும் பூர்ணலிங்கத்தின் துக்கம் நெருப்பில் எண்ணெயிட்டது போலாயிற்று. உடம்புக்கு அசௌகரியமென்று மத்தியானம் ரஜா எடுத்துக்கொண்டான்.
"சில தினங்களில் சென்னைக்கு வந்த சோமசுந்தரம் பிள்ளை தனது புத்திரிக்கு எச்சரிக்கை செய்தார். 'மணம் முடியாத மங்கை தன்னையொத்த வாலிபனிடம் பழகுவது தகாத காரியமன்றோ? சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிரானதல்லவா?' என்று தன் புத்திரிக்கு உபதேசம் செய்தார். பூர்ணலிங்கத்தின் மேலுள்ள அன்பு மாறி வெறுப்பாயிற்று. இதற்கு முன்பு சென்னை வந்தபொழுதெல்லாம் பூர்ணலிங்கத்தைப் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற சோமசுந்தரம் பிள்ளை இத்தடவை பார்க்காமல் போய்விட்டார். தந்தை வந்துபோன செய்தியும் தன்னைக் கண்டித்துப் போன வரலாறும் பூர்ணலிங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
"என்ன கொடுமையிது? எவ்விதம் அவ்விரு காதலர்களும் இதைச் சாதிக்க முடியும்? இடிவிழுந்தால்கூட மாண்டு ஒழிந்து போகலாம். மிருகங்கள் கூடச் சுதந்திரமாகவும், யதேச்சையாகவும் இருக்கின்றனவே. பேசிப் பயனென்ன? அப்புறம்.
"சோமசுந்தரம் பிள்ளை வந்துவிட்டுப் போய் ஒரு வாரம்தான் ஆயிற்று. பூர்ணலிங்கத்துக்குச் சாவித்திரியிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது:
தந்தை எனக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறதாகவும் சொற்ப தினங்களில் முடிவாகிவிடும் என்றும் நம்பத் தகுந்த என் சிநேகிதை ஒருவளிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. என் உடல், பொருள், ஆவி அனைத்தும் வெகுகாலத்துக்கு முன்பே நான் தங்களுக்குக் கொடுத்து விட்டேன். ஆனால் தாங்கள் என்மீது எத்தகைய எண்ணம் கொண்டவர்களென்பது நான் நினைக்கிறபடி இருக்குமென்று எதிர்பார்த்தாலும், 'விசாலாக்ஷி, இண்டர்மீடியேட்' என்ற விலாசத்துக்குத் தங்கள் மனதைத் தெரிவித்து விடுங்கள். என்னைக் காதலிப்பின், ஆட்கொள்ளுவது உண்மையானால், வருகிற வெள்ளிக்கிழமை புறப்படும் கப்பலில் இரங்கூனுக்குப் புறப்படுவதற்கு வேண்டிய வசதி செய்வீர்களென எதிர்பார்க்கிறேன். சுதந்திரத்துக்கும், காதலுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். பார்த்துக்கொள்வோம்.
"பூர்ணலிங்கம் தாமதியாது எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துப் பதிலும் எழுதிவிட்டான். தன்மீது சாவித்திரி கொண்ட நம்பிக்கையின்மையைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான்.
"வெள்ளிக்கிழமை மாலை சென்னையின் பல்வேறு கலாசாலைகளின் மாணவர்களெல்லாம் சர்வகலாசாலை ஆதரவின் கீழ் நடக்கும் பிரசங்கத்தைக் கேட்கவேண்டி சர்வகலா சாலை மண்டபத்திற்கு வந்திருந்தனர். சாவித்திரி யாருமறியாமல் துறைமுகத்திற்கு நழுவிவிட்டாள்.
"அன்றிரவு சாவித்திரி கலாசாலை ஹாஸ்டலில் காணாமற் போகவே தேட ஆரம்பித்துவிட்டனர். போலீசுக்கும் சோமசுந்தரம் பிள்ளைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சாவித்திரியின் அறையும், பின்னர் சோமசுந்தரம் பிள்ளை வந்ததின் மேல், பூர்ணலிங்கம் அறையும் சோதனையிடப்பட்டன. அவசரம் காரணமாய் சாவித்திரி எழுதியிருந்த கடைசிக் கடிதத்தைப் பூர்ணலிங்கம் தவறுதலாகப் போட்டுவிட்டுப் போய்விட்டான். கடிதம் கிடைத்ததும் கப்பலுக்குக் கம்பியில்லாத் தந்திமூலம் செய்தியனுப்பப்பட்டது.
"மறுகப்பலில் இருவரும் இரங்கூனிலிருந்து போலீஸ் காவலில் கொண்டுவரப்பட்டனர். நீதிமன்றத்தில் பெண்ணைக் கடத்திச் சென்றதாகப் பூர்ணலிங்கத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டான்.
"தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்ததாவது:
p>பெண்ணைக் கடத்திச் சென்றதாகவோ, ஏமாற்றிச் சென்றதாகவோ குற்றம் சாட்ட முடியாது. பெண்ணும் எதிரியைப் போன்று கலாசாலையில் படித்த பெண். தன்னுடைய பொறுப்பும், கற்பு நிலையும் சாவித்திரிக்குத் தெரிந்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆதலால் எதிரியை நான் விடுதலை செய்கிறேன். மனமொத்து வாழச் செய்வதே மேல் என நான் அபிப்பிராயப்படுகின்றேன். பெண்ணைத் தந்தையிடம் ஒப்படைக்கும்படியாகவும் தீர்ப்புச் செய்கிறேன்.
"கலாசாலை அதிகாரிகள் பூர்ணலிங்கத்தை மன்னித்து மறுபடியும் கலாசாலையில் சேர்த்துக் கொண்டார்கள். சாவித்திரி வீட்டுக்கழைத்துச் செல்லப்பட்டாள். அவ்வருஷ முழுவதும் உயிரிருந்தும் இல்லாத நிலைமையிலேயே பூர்ணலிங்கம் இருந்தான். சாவித்திரியின் உருவம் அவன் அகக்கண் முன்னால் எப்பொழுதும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. வருஷக் கடைசியும் ஆயிற்று. சர்வகலாசாலைப் பரீட்சை முடிந்த மறுநாள் ஒரு கடிதம் வந்தது. பிரித்து வாசித்தான்.
"'எனதிருதயத்திற்குகந்த காதல! நமஸ்காரம். நாளை காலை எனது மணம். (கோமதி நாயகம் பிள்ளையின் கண்களினின்றும் கண்ணீர் வடிகிறது) என்னை மணக்கவிருப்பவன் பெயரை அறிய விரும்புகிறீர்களா? நான் எழுதலாமா? தாங்களன்றோ என் கணவர். (அசைவற்று நின்றுவிடுகிறார்.) என் தெய்வமே, தங்கள் கரத்தைப் பற்றும் பாக்கியம் எனக்கில்லாவிடினும் எனதிதயத்தைத் தாங்கள் அடைந்துவிட்டீர்கள். (பேச முடியவில்லை)... விடைபெற்றுக் கொள்வதற்குமுன் ஒரு பிரார்த்தனை; தாங்கள் உண்மையாக என்னைக் காதலித்தீர்களாயின், கடவுளறிய என் பதியாயின், என்னைத் தங்கள் பத்தினியாகக் கருதின், நான் இவ்வுலகைப் பிரிந்தேனென்பதற்காகத் தங்களுக்கு ஒருவிதத் தீங்கும் செய்து கொள்ளக்கூடாது..."
'கண்ணீர் தாரை தாரையாக ஓட ஒவ்வொரு வார்த்தையாகக் கடிதத்தைச் சொல்லிக்கொண்டே போனார். கடைசியில் "இந்தப் பாவி இன்னும் இருக்கிறேனே" என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தார்.