ரங்கதுர்க்கம் ராஜா

1

இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) "எச்.எம்.எஸ்.பிரிட்டானியா" என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின் கைப்பிடிக் கம்பிகளில் சாய்ந்து கடலை நோக்கிக் கொண்டு நிற்கிறான் ஓர் இளைஞன். அந்தக் கப்பல் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பி இங்கிலாந்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. நாளைக் காலையில் ஏடன் துறைமுகத்தைச் சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலில் அந்த நிமிஷத்தில் ஐரோப்பிய நடனம் நடந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்கிற்று. வெள்ளைக்காரப் பிரயாணிகள் அநேகமாய் எல்லாரும் நடனத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரயாணிகள் - தூங்கச் சென்றவர்கள் போக, பாக்கிப் பேர் - துரைமார்களும் துரைசானிகளும் நடனமாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நமது இளைஞன் மட்டும் தன்னந்தனியாக இங்கே நின்று கொண்டிருந்தான். ஏன்? (ஆமாம். மறந்து போனான். நியாயமாய் உங்களைக் கேட்கக் கூடாதுதான். கதை சொல்வது நீங்கள் இல்லையே? நான் அல்லவா?)

அமைதியான கடல்; தாவள்யமான நிலவு; அகண்டமான ஆகாயம்; அநந்தமான நட்சத்திரங்கள். இந்த அற்புதக் காட்சியில் கருத்தைச் செலுத்தியிருந்தான் அவ்விளைஞன். அந்த நேரத்தில் அவன் மனத்திலே ஓர் அபூர்வமான எண்ணம் உண்டாயிற்று. அது விரைவில் தீர்மானமாக மாறியது. அத்தீர்மானம் என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா? - ஒரு நாளும் முடியாது என்றான். கப்பலிலிருந்து குதித்துக் கடலில் மூழ்கி உயிரை விட்டு விடுவது என்பதே அத்தீர்மானம்! இவ்வளவு உசிதமான - புத்திசாலிகள் அனைவருக்கும் முன் மாதிரியாயிருக்கக் கூடிய - தீர்மானத்துக்கு அவன் வந்ததன் காரணம் என்னவென்று சற்றே பார்க்கலாம்.

2

கே.ஆர். ரங்கராஜன் ஓர் அதிசயமான இளைஞன். அவனிடம் அநேக அதிசய குணங்கள் இருந்தன. அவற்றில் எல்லாம் முக்கியமானது தனிமை வாழ்வில் அவன் கொண்டிருந்த பற்றுதான். இதற்குக் காரணம் இந்த ஏழை உலகத்தின் மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பேயாகும். இந்த உலகத்தில் அவனுக்குப் பிடித்த மனிதர்கள் யாருமே இல்லை. யார் என்ன பேசினாலும் அது அசட்டுத்தனமாகவே அவனுக்குத் தோன்றும். (நமக்குள் இருக்கட்டும், நேயர்களே! - உண்மையும் அதுதான் போலிருக்கிறதே? நாம் இன்று பேசுகிறதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பின் யோசித்துப் பார்த்தால் ஒரு மாதிரியாகவே தோன்றுகிறதல்லவா?) எனவே யாரிடமும் அவன் கலகலப்பாகப் பேசுவதே கிடையாது.

பிறருடைய அசட்டுத்தனத்தில் அவனுக்கு எவ்வளவு தீவிரமான நம்பிக்கை இருந்ததென்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதுமானது. அவன் பி.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியவன். அப்புறம் எம்.ஏ. பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான். பணமும் கட்டி விட்டான். ஆனால், பரீட்சைக்குப் போகவில்லை. இதற்குக் காரணம், 'நாம் எழுதுகிற விஷயத்தை அறிந்து சீர் தூக்கிப் பார்க்க யோக்கியதை உள்ளவர் இங்கே யார் இருக்கிறார்கள்?' என்று அவன் எண்ணியதுதான். பி.ஏ. பரீட்சையில் நியாயமாகத் தான் தேறியிருக்கக் கூடாதென்றும் கைத் தவறுதலினால் தன்னுடைய நம்பரைத் தேறியவர்களின் ஜாபிதாவில் சேர்த்து விட்டார்களென்றும் அவன் சொல்வான்.

இந்த உலகத்தில் அவன் அலுத்துக் கொள்ளாமலும் விருப்பத்துடனும் பேசக் கூடியவர்களாக வெவ்வேறு காலத்தில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் அவனுடைய தாய்மாமன். தாயார் தகப்பனார் இருவரும் காலஞ்சென்ற பிறகு அவனை அருமையுடன் வளர்த்துப் படிக்க வைத்தவர் அவர் தான். அவர் ஆங்கிலக் கல்வி பயிலாதவர். ஆனால், உலக விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவர். இயற்கையாக அமைந்த நகைச்சுவையுடன் வெகு ரஸமாகப் பேசக் கூடியவர். நவீன இலட்சியங்களையும் இயக்கங்களையும் பற்றிச் சொன்னால் மிக நுட்பமாக அறிந்து கொள்ளக் கூடியவர். அவருடன் எத்தனை நேரம் பேசினாலும் ரங்கராஜனுக்கு அலுப்புண்டாகாது.

அவ்வளவு அரிய குணங்களும் ஆற்றல்களும் படைத்த அந்த மனிதருக்கு ஒரே ஒரு சாமர்த்தியம் மட்டும் இல்லாமல் போயிற்று. யமனுடன் வாதாடி, "என் மருமகனை விட்டு வரமாட்டேன்" என்று சொல்லிச் சாதிப்பதற்கு அவருக்குச் சக்தி போதவில்லை. சென்ற வருஷம் அவர் காலஞ் சென்ற போது ரங்கராஜனுக்கு உலகவே சூனியமாகி விட்டதாகக் காணப்பட்டது. மூன்று மாத காலம் வரையில், "மேலே என்ன செய்யப் போகிறோம்?" என்று யோசிப்பதற்கே அவனுடைய மனம் இடங்கொடுக்கவில்லை. 'மாமா போய் விட்டார்', 'மாமா போய் விட்டார்' என்று அது ஜபம் செய்து கொண்டிருந்தது.


அடுத்தபடியாக, அவனுடைய மதிப்புக்குரியவராயிருந்தவர், அவன் படித்த கிராமப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர். முன்னெல்லாம் அவருடைய சிநேகத்திலும் ஸல்லாபத்திலும் அவன் பெரிதும் சந்தோஷமடைவதுண்டு. ஆனால், நாளாக ஆக அவருக்கும் தனக்கும் இடையில் ஒரு பெரிய அகழ் ஏற்பட்டு வருவதை அவன் கண்டான். அவருடைய மூப்பு அதிகமாக ஆக, புதிய இலட்சியங்கள், புதிய கருத்துக்கள் முதலியவற்றைக் கிரஹிப்பதற்கு வேண்டிய சக்தியை அவர் துரிதமாக இழந்து வருவதை நேருக்கு நேரே அவன் பார்த்தான். சில நாளைக்கெல்லாம் அவர்களுடைய சம்பாஷணை பழைமைக்கும் புதுமைக்கும் - அல்லது இளமைக்கும் முதுமைக்கும் நடக்கும் விவாதமாகவே மாறி வரத் தொடங்கியது. இந்த விவாதத்தின் காரம் அதிகமாக ஆக, உபாத்தியாயரின் பழைமைப்பற்று அபரிமிதமாகி ஏற்கெனவே இல்லாத மூட நம்பிக்கைகள், குருட்டுக் கொள்கைகள் எல்லாம் அவர் உள்ளத்தில் குடிகொள்ளத் தொடங்குவதை ரங்கராஜன் கண்டு மிக்க பீதியும், துயரமும் அடைந்தான். கடைசியில், அவருடன் தான் எவ்விதச் சம்பாஷணையும் வைத்துக் கொள்ளாமலிருப்பதே அவருக்குச் செய்யக் கூடிய பெரிய உபகாரமாகும் என்று தீர்மானித்தான்.

மற்ற ஹைஸ்கூல் உபாத்தியாயர்கள், கலா சாலை ஆசிரியர்கள் இவர்களில் யாரிடமும் ரங்கராஜனுக்கு மரியாதையாவது, சிநேகமாவது ஏற்பட்டது கிடையாது. அவர்கள் ஏதோ தண்டத்துக்கு வந்து அழுதுவிட்டுப் போனார்கள். இவன் கடனுக்குக் கேட்டுத் தொலைத்தான். அவனுடைய சகோதர மாணாக்கர்கள் விஷயத்திலும் அப்படித்தான். முதன் முதலில் அவன் ஹைஸ்கூலில் வந்து சேர்ந்தபோது, தன் பக்கத்திலிருந்த மாணாக்கனோடு பேச்சுக் கொடுத்தான். அவன் சென்ற வருஷமும் அதே வகுப்பில் இருந்தவன் என்று அறிந்ததும், "ஏன் அப்படி?" என்று கேட்டான். "ஏனா? இந்த வாத்தியார்ப் பயல் மார்க்குக் கொடுக்கவில்லை. அவன் தாலியறுக்க!" என்று பதில் வந்தபோது, அவனுடைய சகோதர மாணாக்கர்களிடன் அவனுக்கு ஏற்பட்ட அருவருப்பு, கலா சாலையை விட்டு வெளியே வரும் வரையில் சற்றும் குறைந்ததாகச் சொல்ல முடியாது.

இந்தப் பொது விதிக்கு விலக்காக ஒரே ஒருவன் மட்டும் இருந்தான். அவன் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜில் இரண்டு வருஷம் வரையில் ரங்கராஜனுடன் சேர்ந்து படித்தவன். இந்தப் பால்ய சிநேகிதனின், ஸகவாசம் எப்போதும் ரங்கராஜனுக்கு மகிழ்ச்சியளித்து வந்தது. ஆனால் இண்டர்மீடியட் பரீட்சையில் ஒரு முறை தேறாமல் போகவே, தர்மலிங்கம் கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தோடு போய் விட்டான்.

ரங்கராஜன் காலேஜ் படிப்பு முடிந்ததும் தனது பால்ய நண்பனைத் தேடிக் கிராமத்துக்குச் சென்றான். சாயங்காலம் ஆனதும், பழைய வழக்கத்தைப் போல் "ஆற்றங்கரைக்குப் போய் வரலாம்" என்று கூப்பிட்டான். தர்மலிங்கம், "என் வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே போனதும், ரங்கராஜனுக்கு கண்கள் திறந்தன. உள்ளே போனவன் தன் ஒரு வயதுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன் ரங்கராஜனுக்கு நிராசை ஏற்பட்டது. நண்பனும் தானும் இப்போது வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாகி விட்டதை அவன் கண்டான். மறுநாளே சிநேகிதனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

3

மாமா இருந்தபோது ஒரு சமயம் கல்யாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "கல்யாணம்" என்றதும் ரங்கராஜன் காதைப் பொத்திக் கொண்டான். சராசரியில் ஸ்திரீகளை விடக் கல்வியறிவில் சிறந்தவர்களாயிருக்கும் புருஷர்களுடைய ஸகவாசத்தையே அவனால் ஐந்து நிமிஷத்துக்கு மேல் சகிக்க முடிவதில்லை. வாழ்நாளெல்லாம் பிரிய முடியாதபடி ஒரு ஸ்திரீயை யாராவது கழுத்தில் கட்டிக் கொள்வார்களா? சனியனை விலை கொடுத்து வாங்குவது போல் அல்லவா? "மாமா அம்மாமியைக் கட்டிக் கொண்டு நீங்கள் அவஸ்தைப் படுவது போதாதா? என்னையும் அப்படிக் கெடுப்பதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?" என்றான். "அசடே! உனக்கு என்ன தெரியும் நானும் அம்மாமியும் சில சமயம் சண்டைப் போட்டுக் கொள்கிறோம் என்பது வாஸ்தவந்தான். அதைக் கொண்டா எங்கள் இல்வாழ்க்கையை நீ மதிப்பிடுவது? உன் அம்மாமி எனக்கு இல்வாழ்க்கையில் எவ்வளவு மன நிம்மதி, எவ்வளவு உற்சாகம், எவ்வளவு ஹாஸ்யரஸம் அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அளித்திருக்கிறாள் என்பதெல்லாம் உனக்கு என்ன தெரியும்?" என்று மாமா சொன்னார். "அப்படியானால், அந்தப் பாக்கியம் முழுவதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வேண்டாம்," என்றான் ரங்கராஜன்.

மாமா எவ்வளவோ சொல்லியும் பயனில்லை.

அவ்வாறே உத்தியோகத்தைப் பற்றியும் பிரஸ்தாபம் வந்தது. வேலை ஒன்றும் இல்லாமலிருந்தால் இப்படித்தான் ஏதேனும் குருட்டு யோசனைகள் தோன்றிக் கொண்டிருக்குமென்றும் ஏதேனும் ஓர் அலுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் மாமா சொன்னார். பலவித உத்தியோகங்களைப் பற்றியும் வாதித்தார்கள். அதிலிருந்து நம் கதாநாயகனுடைய யோக்கியதைக்குத் தகுந்ததாக ஒருவித உத்தியோகமும் இல்லை என்பது வெளியாயிற்று. சர்க்கார் உத்தியோகமா? சிவ சிவா! அந்த வார்த்தையைக் கேட்டதுமே கிராமத்து ஜனங்களைப் போல் அறிவுத் தெய்வமும் பயந்து மிரண்டு அருகில் கூட வராதே! வக்கீல் வேலையா? பகவானே! முட்டாள் கட்சிக்காரர்களுடனும் மூட ஜட்ஜுகளுடனும் அல்லவா இழவு கொடுக்க வேண்டும்? வைத்தியத் தொழிலா? அதைப் போல் அறியாமையை அடிப்படையாகக் கொண்ட தொழிலே வேறு கிடையாது! வாத்தியார் வேலையா? மந்தபுத்தியுள்ள மாணாக்கர்களுடன் நாளெல்லாம் மாரடிப்பதைவிட வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம் - இப்படியே, படித்தவர்கள் பிரவேசிப்பதற்குரிய நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் விலக்கப்பட்டது.

"இதெல்லாம் உனக்கு ஒன்றும் பிடிக்காவிட்டால் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது தானே? காங்கிரஸில் சேர்ந்து வேலை செய்யலாமே? உயர்ந்த மேதாவிகள் காங்கிரஸில் இருக்கிறார்களே?" என்று மாமா கேட்டார்.

அரசியல் என்றாலே ரங்கராஜனுக்குப் பிடிப்பதில்லை. ஞானசூனியர்களும், அரை குறை அறிவுள்ளவர்களுந்தான் அரசியல் முன்னணிக்கு வருகிறார்கள் என்று அவன் சொல்வான். காங்கிரஸைச் சேர்ந்தவர்களில் ஒரு நாலைந்து பேர் மட்டும் அறிவுத் தெளிவுடையவர்கள் என்று அவன் ஒப்புக் கொள்வதுண்டு; ஆனால், அவர்கள் பாடுபடுவதெல்லாம் வியர்த்தமென்றும், இந்த மூட ஜனங்கள் ஒரு நாளும் முன்னுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுவான்.

மேற்கண்டவாறு மாமா யோசனை சொன்னதும் ரங்கராஜன் அன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். அதில் வெளியாகியிருந்த ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளையும் படித்துக் காட்டினான்.

"மாமா! மகாத்மாவும், வல்லபாயும், இராஜகோபாலாச்சாரியும், ஜவஹர்லாலும் சுயராஜ்யத்துக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதென்பது அசாத்தியமென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியே நம்மை ஆள்வோரும் முட்டாள்களாயிருக்கும் காரணத்தினால் நாம் சுய ராஜ்யம் அடைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நிர்வகிக்கப் போகிறவர்கள் யார்? இதோ இப்போது வாசித்தேனே, அதைப் போலெல்லாம் அர்த்தமில்லாமல் பிதற்றக் கூடிய ஏழாந்தர, எட்டாந்தர மூளையுள்ள மனிதர்கள் தானே? இவர்களிடம் இராஜ்யபாரத்தைக் கொடுப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?" என்றான்.

ரங்கராஜனுடைய காலத்தில் பெரும்பகுதி படிப்பில் போய்க் கொண்டிருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள உயர்தர இலக்கியங்களில் அவன் படிக்காதது ஒன்றுமில்லை. நேரம் போவது தெரியாமல், ஊன் உறக்கங்களை மறந்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால், படிப்புங்கூடக் கசந்து போகும்படியான ஒரு சமயம் வந்தது. பண்டைக்கால ஆசிரியர்களின் சிறந்த நூல்களையெல்லாம் படித்தாகி விட்டது. இக்காலத்து ஆசிரியர்கள் எழுதுவதோ அவனுக்கு ஒன்றும் பிடிப்பதில்லை. வோட்ஹவுஸ் போன்றவர்களின் வெறும் 'புருடை' நூல்களில் எப்போதும் ஐந்தாறு பக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடிவதில்லை. நாளடைவில் ஷா, செஸ்டர்டன், பெல்லாக் முதலியவர்கள் கூடச் சுவை நைந்த பழங்கதைகளையே படைக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு உயிர் வாழ்க்கையே ஒரு பாரமாய் விட்டது. மனத்தைச் செலுத்துவதற்கு ஏதேனும் ஒரு வழி விரைவில் காணாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது.

அத்தகைய வழி அவன் யோசனை செய்யாதது ஒன்றே ஒன்று தான் பாக்கியிருந்தது; வெளி நாடுகளுக்கு யாத்திரை சென்று வரவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வெகு நாளாய் உண்டு. மாமா இருந்தவரையில் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு அவ்வளவு அவசியத்தையும் அவன் அப்போது காணவில்லை. இப்போது அவசியம் அதிகமான போது சந்தர்ப்பமும் சரியாயிருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தில் பெரும் பகுதியை ஒன்றுக்கு பாதி விலையாக விற்றுப் பிரயாணத்துக்குப் பணம் சேர்த்துக் கொண்டான். முதலில், இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துப் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' என்னும் கப்பலில் பிரயாணமானான்; மூன்று நாள் கப்பல் பிரயாணத்துக்குப் பிறகு அவனுடைய மனோநிலை எவ்வாறிருந்தது என்பது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.

4

ரங்கராஜன், அதுவரையில் வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகியதில்லை. சினிமா டாக்கிகளில் பார்த்தது தவிர அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. 'பிரிட்டானியா' கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பெரும்பாலோர் துரைமார்களும் துரைசானிகளுமே. மூன்று நாள் அவர்கள் சமீபத்திலிருந்து அவர்களுடைய நடை உடை பாவனைகளைப் பார்த்ததன் பயனாக அவனுடைய உத்தேசம் பெரிய மாறுதல் அடைந்தது. இந்த மாதிரி ஜனங்களிடையே இன்னும் பத்து நாள் பிரயாணம் செய்ய வேண்டும். அப்புறம்? இதே மாதிரி ஜனங்கள் மத்தியில் தான் அயல் நாட்டில் வசிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வந்தாலோ? மறுபடியும் இந்த அசட்டு மனிதர்களிடையேதான் வாழ வேண்டும். சீச்சீ! இதென்ன வாழ்க்கை!

நீலநிறக் கடலில் கம்பீரமாய் எழுந்து விழுந்து கொண்டிருந்த அலைகள் அவனை, "வா! வா!" என்று சமிக்ஞை செய்து கூப்பிட்டன. கடல் நீரில் பிரதிபலித்த சந்திர பிம்பத்தின் சலன ஒளி அலைகளும் அவ்வாறே அவனை ஆதரவுடன் அழைத்தன. வெகு தூரத்தில் வான வட்டமும் கடலும் சந்திக்கும் இடத்தில் தோன்றிய ஒரு தனி நட்சத்திரம் கண் சிமிட்டி அவனைக் கூப்பிட்டது. சமீபத்திலே பறந்த ஒரு கடற்பறவையின் குரல் அவன் செவியில், "அகண்டமான இந்தக் கடலும், வானமும் வெளியும் இருக்கையில் மனிதப் புழுக்கள் வாழும் குறுகிய இக்கப்பலுக்குள் ஏன் இருக்கிறாய்?" என்று பரிகாசம் செய்வது போல் தொனித்தது. தூரத்தில் மற்றொரு கப்பல் வருவதை ரங்கராஜன் பார்த்தான். அதிலும் இவர்களைப் போன்ற அறிவீனர்களும், மந்த மதியுடையோரும் குறுகிய புத்திக் காரர்களும், அற்பச் சிந்தனையாளர்களும் இருக்கப் போகிறார்கள். என்னே இந்த உலக வாழ்க்கை!

அடுத்த விநாடி ரங்கராஜன் தலைகுப்புறக் கடலில் விழுந்தான். படாலென்று மண்டையில் ஏதோ தாக்கியது. ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் நீருக்குள்ளிருந்து கிளம்பிக் குமிழி குமிழியாய் மேலே போய்க் கொண்டிருந்தன. அவனோ கீழே கீழே போய்க் கொண்டிருந்தான். ஐயோ மூச்சுவிட ஏன் இவ்வளவு கஷ்டமாயிருக்கிறது! இந்தச் சொக்காய் மென்னியை இறுகப் பிடிக்கின்றனவே! அவற்றைக் கிழித்தெறியலாம். ரங்கராஜன் கோட்டை கழற்றிவிட்டு ஷர்ட்டைக் கிழிக்கத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் அவன் ஸ்மரணை இழந்தான்.

அதல பாதாளத்திலிருந்த எங்கேயோ மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறோமே; எங்கே போகிறோம்? அப்பா! இதோ கொஞ்சம் வெளிச்சம் காண்கிறது. மூச்சு நன்றாய் விட முடிகிறது. அடிவாரத்திலிருந்து மேல் பரப்புக்கு வந்து விட்டோ ம் போலிருக்கிறது. கண்களைச் சற்றுத் திறந்து பார்ப்போம். இது என்ன அதிசயம்? இங்கே எப்படி வந்தோம்? இந்த இளம்பெண் யார்? இவள் ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறாள்? என்ன அலட்சிய புத்தி கொண்ட பார்வை? அது என்ன மாறுதல், அவள் முகத்தில் இப்போது? என்ன சிந்தனை செய்கிறாள்? அதோ கொஞ்சம் வயதானவளாய்த் தோன்றும், அந்த ஸ்திரீ யார்? இங்கே நிற்பவர் டாக்டரைப் போல் காணப்படுகிறாரே? நாம் எங்கே இருக்கிறோம்? இது கப்பல் அறை போல் தான் இருக்கிறது. ஆனால், நாம் வந்த கப்பலில் இவர்களைக் காணவில்லையே? எல்லாம் புது முகமாயிருக்கிறதே? ஒரு வேளை தண்ணீரில் மூழ்கி இறந்து போன நாம் இப்போது ஆவி உலகத்தில் இருக்கிறோமோ? இவர்கள் எல்லாம் ஆவிகளோ? ஒரு வேளை கனவோ? கடலில் விழுந்தது கூடக் கனவில் தானோ? நிஜம் போல் தோன்றுகிறதே, மறுபடியும் கண்ணை மூடிப் பார்ப்போம்.

ஒரு நிமிஷம் திறந்திருந்த ரங்கராஜனுடைய கண்கள் மறுபடியும் மூடிக் கொண்டன.

 

1

ரங்கராஜன் இரண்டாவது முறை கண் விழித்த போது, அவன் படுத்திருந்த அறையில் ஒருவருமில்லை. ஆனால், சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் காலடிச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் ஒருவர் முன் தடவை கண் விழித்த போது பார்த்த இந்திய டாக்டர், இன்னொருவர் வெள்ளைக்கார டாக்டர்.

ரங்கராஜன் விழித்திருந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஏக காலத்தில், "ஹலோ!" என்று கூவினார்கள். பிறகு வெள்ளைக்கார டாக்டர், "ராஜா சாகிப்! உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

'ராஜா சாகிப்பாவது, நாசமாய்ப் போனதாவது' என்று ரங்கராஜன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆனால், வெளியில், "எனக்கென்ன தெரியும்? நானா டாக்டர்! நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்?" என்றான்.

டாக்டர்கள் சிரித்தார்கள். வெள்ளைக்கார டாக்டர் "பேஷ்! ராஜாசாகிப் தண்ணீரில் ஓர் அமுங்கு அமுங்கியது அவருடைய மூளையை கூர்மைப்படுத்தியிருக்கிறது போல் காண்கிறது," என்றார்.

"உங்களுக்கும் அந்தச் சிகிச்சை கொஞ்சம் தேவை போல் காண்கிறதே!" என்றான் ரங்கராஜன்.

டாக்டர்கள் மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, "ராஜா சாகிப்! போனது போகட்டும். இனிமேலாவது மிதமாய்க் குடியும். மது மயக்கம் பொல்லாதது" என்றார் வெள்ளைக்கார டாக்டர்.

"மது மயக்கமோ, காதல் மயக்கமோ?" என்றார் இந்திய டாக்டர்.

இப்போது ரங்கராஜனுக்கு உண்மையிலேயே தலை மயங்க ஆரம்பித்தது.

"கனவான்களே! தயவு செய்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஒன்றல்ல, நூறு சந்தேகங்களை வேண்டுமானாலும் நிவர்த்தி செய்கிறோம், ராஜா சாகிப்! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவுகூடச் செய்ய வேண்டாமா!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

"எனக்குள்ளது ஒரே சந்தேகந்தான். நான் பைத்தியமா, நீங்கள் பைத்தியமா என்பதை மட்டும் சொல்லி விட்டால் போதும்."

ஒரு பெரிய அவுட்டுச் சிரிப்புக் கிளம்பிற்று. வெள்ளைக்கார டாக்டர் அருகில் வந்து ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்து, "பேஷ்! பேஷ்! நல்ல கேள்வி! ஏ! ஹஹ்ஹஹ்ஹா!" என்று மறுபடியும் சிரித்தார். அவருடைய திருவாயிலிருந்து சாராய நாற்றம் குபுகுபுவென்று வந்தது.

"டாக்டரே! தயவு செய்து தூரநின்று பேசும். நான் வைதிகப் பற்றுள்ள ஹிந்து. உம்மைத் தொட்டால் தலை முழுக வேண்டும்," என்றான் ரங்கராஜன். பிறகு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. உங்களுக்கும் அது சந்தேகம் போலிருக்கிறது. போகட்டும், நீங்கள் யார் என்றாவது தயவு செய்து சொல்வீர்களா?" என்று கேட்டான்.

வெள்ளைக்கார டாக்டர் ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தவர் போலிருந்தார். இந்திய டாக்டர், "ஆஹா! ராஜா சாகிப் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள அநுமதி கொடுங்கள். நான் தான் டாக்டர் சிங்காரம், குமாரபுரம் ஜமீன்தாரின் குடும்ப வைத்தியன். இவர் டாக்டர் மக்டானல். இந்தக் கப்பலின் வைத்தியர். -போதுமா? இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?"

"இந்தக் கப்பலின் பெயர் என்ன?"

"எச்.எம்.எஸ்.ரோஸலிண்ட்."

"நிஜமாகவா? இதன் பெயர் 'பிரிட்டானியா' அல்லவென்று நிச்சயமாகத் தெரியுமா?"

டாக்டர் சிங்காரம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஆனால், டாக்டர் மக்டனால் சிரிக்கவில்லை. அவர் ஒரு சீட்டில், "கொஞ்சம் மூளை பிசகியிருப்பதுபோல் காண்கிறது" என்று எழுதி டாக்டர் சிங்காரத்திடம் காட்டினார்.

"ஓ டாக்டர் கனவான்களே! இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள். நான் யார்?" என்று கேட்டான் ரங்கராஜன்.

இப்போது டாக்டர்கள் சிரிக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் மக்டனால், "நாங்கள் யாரென்று தெரியப்படுத்திக் கொண்டோ ம். நீர் யாரென்று நீரல்லவா தெரியப்படுத்த வேண்டும்? உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.

"என் பெயர் ரங்கராஜன் என்று இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியோ தப்போ என்று இப்போது சந்தேகமாய் விட்டது."

"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?"

"என்னை நீங்கள் 'ராஜாசாகிப்' என்று அழைப்பதனால்தான்."

"அப்படியா? அது போகட்டும். இன்னும் தூக்கக் கலக்கம் உமக்குப் போகவில்லை. சற்று நேரம் தூங்கும். அப்புறம் நாங்கள் வந்து உம்முடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம்" என்று டாக்டர் மக்டானல் சொல்லிவிட்டு, டாக்டர் சிங்காரத்தையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் சென்றதும் அவர் டாக்டர் சிங்காரத்திடம், "இது ஒரு விசித்திரமான கேஸ். தண்ணீரில் அலை வேகமாய்த் தாக்கியதால் மூளை சிறிது குழம்பியிருக்கிறது. தம்மை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பழைய ஞாபகம் கொஞ்சம் இருக்கிறது. அதனால்தான் ரங்கராஜ் என்று பெயர் சொல்கிறார். ரங்கதுர்க்கம் ராஜா என்பதில் 'துர்க்கம்' தழுவி விட்டது. இங்கிலாந்துக்குப் போகும் போது இவர் 'பிரிட்டானியா' கப்பலில் போயிருக்க வேண்டும், விசாரித்தால் தெரியும்," என்று கூறினார்.

2

டாக்டர்கள் வெளிச் சென்றதும் ரங்கராஜன் படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான். அவை தன்னுடையவை அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த சாமான்களும் அப்படியே. பெட்டிகளைத் திறந்து சோதிக்கலானான். அவற்றில் சாதாரண உடுப்புகளுடன் சரிகைப் பூவேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள், குல்லாக்கள் முதலியவை காணப்பட்டன. சாராயப் புட்டிகள், சிகரெட் பெட்டிகள் முதலியவை இருந்தன. இந்த அறையில் யாரோ ஓர் இளம் ஜமீன்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும். டாக்டர்கள் அவனை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பரிசோதனை செய்தபோது, "ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜா" என்று தலைப்பில் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன. மறுபடியும் புரட்டியபோது, சில புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன் திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம் அவனைப் போலவே இருந்தது. மூக்கு, முழி, உதடு, நெற்றி, தலைக்கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில் மட்டுந்தான் வித்தியாசம் காணப்பட்டது.

இன்னொரு புகைப்படம் ரங்கராஜனுடைய உள்ளத்தில் விசித்திரமான உணர்ச்சியை உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சியின் இயல்பு எத்தகையதென்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை. அது ஓர் இளம் கன்னிகையின் படம். முதல் தடவை தான் கண்விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்ற பெண் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவள் யார்? தன்னிடம் சிரத்தைக் கொண்டு தன்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? சீ! அவள் தன்னைப் பார்க்கவா வந்தாள்? வேறு யாரையோ அல்லவா பார்க்க வந்தாள்? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அச்சமயம் ரங்கராஜனுக்குத் தான் முன்பின் பார்த்திராத ரங்கதுர்க்கம் ராஜாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது.

ஆனால், உடனே சாமாளித்துக் கொண்டான். 'என்ன நமக்குக் கூட அசடு தட்டுகிறதே!' என்று நினைத்தான். ஆனால் உடனே, 'நமக்கு அசடு தட்டினால் அதுவும் கொஞ்சம் உயர் தரமாய்த்தான் இருக்கும்' என்று எண்ணிக் கொண்டான். பெட்டிகளை மூடிவிட்டு எழுந்தான்.

குழப்பம் நீங்குவதற்கு அவன் இன்னும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

உண்மையாகவே இந்தக் கப்பல், தான் பம்பாயில் ஏறி வந்த கப்பல் இல்லையா? இல்லையென்றால், இது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இரண்டாவது, தன்னை யார் என்று இவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த பேர்வழியின் சங்கதியென்ன? தன்னை அவனென்று இவர்கள் தவறாக எண்ணங் கொண்டிருப்பதை எவ்வாறு நிவர்த்திப்பது?

ரங்கராஜன் அறையிலிருந்து வெளிவந்து நடக்க முயற்சித்தான். கொஞ்சம் பலஹீனத்தைத் தவிர, மற்றபடி தேகம் சரியான நிலைமையிலிருப்பதாக உணர்ந்தான். தளத்தின் விளிம்பு வரை சென்று கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்று தான் இவ்வாறு நின்றதும், அப்போது தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களும், கடைசியில் தலைக்குப்புறக் கடலில் விழுந்ததும் எல்லாம் தெளிவாக ஞாபகம் வந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறதென்றும், அதை நிவர்த்திப்பது தன் கடமையென்றும் உறுதி கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபோது, கப்பலின் ஒரு பக்கத்தில் 'எச்.எம்.எஸ். ரோஸலிண்ட்' என்று பெரிதாக எழுதியிருந்தது தெரிய வந்தது. எனவே, தான் வந்த கப்பல் இது இல்லையென்பது நிச்சயம்.

அப்போது அந்தப் பக்கம் மாலுமி ஒருவன் வந்ததைக் கண்டதும் அவனை, நிறுத்தி "இந்தக் கப்பல் எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இப்போது எங்கேயிருக்கிறோம்?" என்று கேட்டான். அந்த மாலுமி ரங்கராஜனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் குப்பென்று சிரித்தான். "ஓ! கடலில் விழுந்த ராஜா இல்லையா நீர், இன்னொரு தடவை விழப் போகிறீரா?" என்று கேட்டான். ரங்கராஜனுக்குக் கோபம் வந்தது. "ஓய் உம்முடைய பரிகாசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இந்தக் கப்பலின் காப்டனை நான் உடனே பார்க்க வேண்டும். அவரிடம் தயவு செய்து என்னை அழைத்துப் போகிறீரா?" என்று கேட்டான்.

"ராஜாசாகிப் ரொம்பக் கோபமாயிருப்பது போல் காண்கிறது. வாரும், போகலாம்" என்றான் மாலுமி. ரங்கராஜன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். போகும் வழியில் அந்தக் கப்பல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் போகிறதென்றும், ஏடனைத் தாண்டியாகிவிட்டதென்றும், இரண்டு நாளில் பம்பாய்த் துறைமுகத்தை அடையுமென்றும் அந்த மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டான். ஒருவாறு அவனுக்கு நிலைமை தெரியவந்தது. 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து, தான் கடலில் குதிக்க எத்தனித்த அதே சமயத்தில் எதிரே ஒரு கப்பல் வரவில்லையா? அந்தக் கப்பல் தான் இது. தான் கடலில் குதித்த அதே சமயத்தில் இந்த முட்டாள் ராஜாவும் எக்காரணத்தினாலோ கடலில் விழுந்திருக்க வேண்டும். அவனை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை எடுத்திருக்கிறார்கள், இந்தக் கப்பல்காரர்கள். தன்னுடைய தோற்றமும், அவனுடைய தோற்றமும் விபரீதமாக ஒத்திருந்தபடியால் அவர்கள் இந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ராஜாவின் கதி என்னவாயிற்றோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்; தன்னுடைய கடமை தெளிவானது; தான் ரங்கதுர்க்கம் ராஜா அல்லவென்பதை உடனே கப்பல் தலைவனிடம் தெரியப்படுத்தி விடவேண்டும்.

3

"ஓகோ! ராஜாசாகிபா? என்ன அதற்குள் அலையக் கிளம்பிவிட்டீரே! டாக்டர் உத்தரவு கொடுத்தாரா?" என்றான் காப்டன்.

"டாக்டர் உத்தரவு கொடுக்கவில்லை. ஆனால், உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக வந்தேன்."

"அந்த முக்கியமான விஷயம் இன்னும் மூன்று நாளைக்கு பம்பாய் போய்ச் சேரும் வரையில் காத்துக் கொண்டிருக்காதா? இதோ பாரும், ராஜா சாகிப்; வானம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. புயல் அடிக்கும் போல் இருக்கிறது."

"நான் சொல்ல வேண்டிய விஷயம் மூன்று நாள் காத்திராது. மிகவும் அவசரமானது. முக்கியமானது."

"அப்படியானால் சொல்லும் சீக்கிரம்."

"நீர் என்னை 'ராஜாசாகிப்' என்று அழைக்கிறீர். என்னை ரங்கதுர்க்கம் ராஜா என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். இது தவறு. நான் ரங்கதுர்க்கம் ராஜா அல்ல. சாதாரண மனிதன். என் பெயர் ரங்கராஜன். தற்செயலாகப் பெயர் இப்படி ஏற்பட்டிருக்கிறது."...

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் டாக்டர்கள் இருவரும் அங்கு வந்தார்கள். பெரிய டாக்டர் கப்பல் தலைவனுடைய காதில் ஏதோ சொன்னார். உடனே காப்டன் 'ஹஹ்..ஹஹ்ஹா' என்று சிரிக்கத் தொடங்கினார்.

கொஞ்சம் சிரிப்பு அடங்கியதும் ரங்கராஜன் கூறினான்: "நீரும் இந்த டாக்டர்களைப் போன்ற மழுங்கல் மூளை உள்ளவர் என்று நான் நினைக்கவில்லை. போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். இங்கிலாந்திலிருந்து இந்தக் கப்பலில் கிளம்பிய ரங்கதுர்க்கம் ராஜா நான் அல்ல. ஐந்து நாளைக்கு முன்பு பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' கப்பலில் நான் இங்கிலாந்துக்குப் பிரயாணமானேன்."

"அப்படியானால் இங்கே எப்படி வந்து குதித்தீர்?" என்று கேட்டார் காப்டன்.

"அது எனக்குத் தெரியாது. ஏடனுக்கு இப்பால் 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்ததுதான் தெரியும்"

"ஏன் குதித்தீர்?"

"உங்களைப் போன்ற மூடர்கள் வாழும் உலகத்தில் உயிர் வாழப் பிடிக்காமல் போனபடியால் தான்."

"போதும், போதும், டாக்டர் ராஜாசாகிபை அழைத்துக் கொண்டு போங்கள். சரியானபடி சிகிட்சை செய்யுங்கள்," என்றார் காப்டன்.

டாக்டர்கள் ரங்கராஜனை அழைத்துக் கொண்டு சென்றதும், காப்டன் அங்கிருந்த மாலுமியிடம், "இந்தப் பையன் கதை சொல்லத் தொடங்கியதும் நான் கூட மிரண்டு விட்டேன். டாக்டர் சொன்னதுந்தான் ஒரு மாதிரி நிச்சயமாயிற்று. இந்தப் பையனுடைய கதை நிஜமென்றால், இவனைப் போன்ற இன்னொரு முட்டாள் இருக்க வேண்டுமல்லவா? உலகம் ஏககாலத்தில் இத்தகைய இரண்டு அசடுகளைத் தாங்குமா?" என்று கூறவே இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

டாக்டர்கள், ரங்கராஜனை நேரே அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் உட்கார வைத்தனர். அதே சமயத்தில் தலைப்பாகை சகிதமாக ஓர் இந்தியக் கனவான் அங்கே வந்தான். மெஸ்மெரிஸம் என்னும் வித்தையில் தாம் கை தேர்ந்தவர் என்றும், ரங்கதுர்க்கம் ராஜா தம்மை வேறு யாரோ என்று எண்ணி மயங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததென்றும், அவருடைய பிரமையைத் தாம் போக்கிவிட முடியுமென்றும் கூறினார்.

"எங்கே, உமது சாமர்த்தியத்தைக் காட்டும்," என்றார் வெள்ளைக்கார டாக்டர்.

மெஸ்மெரிஸ்ட் ரங்கராஜன் அருகில் சென்றார். "தம்பி! நீ நான் சொல்வதைக் கேட்பாயாம். நல்ல தம்பியல்லவா? நீ சாதாரண மனிதனாய் இருப்பதற்குப் பதில், பெரிய ஜமீனுக்குச் சொந்தக்காரனாக வேண்டுமானால், நான் சொல்வதைக் கொஞ்ச நேரம் தடை சொல்லாமல் கேட்க வேண்டும். தெரிகிறதா? ஹும், ஹும்" என்றார். ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு, "அது தான் சரி, நல்ல பிள்ளை எங்கே சாய்ந்து கொள். கைகால்களைத் தளரவிடு. என் கணகளையே உற்றுப் பார். தூங்கு தூங்கு..." என்று பல தடவை உச்சரித்தார்.

ரங்கராஜன் கண்களை மூடினான். மெஸ்மெரிஸ்ட் கையால் அவனுடைய நெற்றியைத் தடவிக் கொண்டே சொல்கிறார். "நீ இப்போது உன்னை யாரோவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ ரங்கதுர்க்கம் ராஜா. உனக்குச் சொத்து சுதந்திரங்கள் ஏராளமாய் இருக்கின்றன. நீ குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவியை காதலிக்கிறாய். (இப்போது ரங்கராஜனுக்குச் சிரிப்பை அடக்குவது பிரம்மப் பிரயத்தனமாயிருந்தது). நீ ரங்கதுர்க்கம் ராஜா... ரங்கதுர்க்கம் ராஜா..." இவ்வாறு பல தடவை கூறிவிட்டு, "இப்போது எழுந்திரு" என்று ஆக்ஞாபித்தார் மெஸ்மெரிஸ்ட்.

ரங்கராஜன் எழுந்து உட்கார்ந்தான். "இப்போது இவரை யார் என்று கேளுங்கள்," என்று டாக்டர்களைப் பார்த்து கூறினார். டாக்டர் மக்டானல், "நீர் யார்?" என்று கேட்கவே, "நான் ரங்கராஜன்" என்று கண்டிப்பாகப் பதில் வந்தது. மெஸ்மெரிஸ்டின் முகம் விழுந்து போயிற்று. அவர், "இன்னும் மூன்று நாள் சேர்ந்தாற் போல் மெஸ்மெரிஸம் செய்தால், ராஜாவுக்குத் தமது சுய உணர்வு நிச்சயம் வந்து விடும்," என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

டாக்டர் சிங்காரம் தமது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தார். "நான் செய்கிறேன். இப்போது மெஸ்மெரிஸம்" என்று சொல்லிக் கொண்டே அந்தக் கடிதத்தை ரங்கராஜன் பக்கம் நீட்டினார். "இந்தக் கடிதம் யார் எழுதினது, என்ன எழுதியிருக்கிறது என்று தயவு செய்து பாரும்" என்று சொல்லி ரங்கராஜன் கையில் கொடுத்தார்.

ரங்கராஜன் கடிதத்தை பிரித்து பார்த்தான். அதன் ஆரம்பம் அவன் மனத்தைக் கவர்ந்தது. அது ஒரு காதல் கடிதம் என்று உடனே தெரிந்து போயிற்று. அதைப் போன்ற ஆச்சரியமான காதல் கடிதத்தை யாரேனும் எழுதக் கூடுமென்பதாக அவன் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டான். எனவே, முகத்தில் புன்னகை ததும்ப அதை வாசித்துக் கொண்டு போனான்.

இதைப் பார்த்த டாக்டர் சிங்காரம், "வாருங்கள் மெஸ்மெரிஸம் வேலை செய்யட்டும்; நாம் போய்ப் பிறகு வரலாம்" என்று கூறி டாக்டர் மக்டானலை அழைத்துச் சென்றார்.

இரண்டு மணி நேரங்கழித்து அவர் குமாரபுரம் ஜமீன்தாரிணியையும் அழைத்துக் கொண்டு ரங்கராஜனுடைய அறையை நோக்கி வந்தபோது, கப்பல் விளிம்புக்கருகில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு ரங்கராஜனும் குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி பிரேமலதா தேவியும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது அவரும் குமாரபுரம் ஜமீன் தாரணியும் அடைந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டாக்டர் சிங்காரத்துக்கு ஏற்பட்ட ஆச்சரியமிகுதியினால் அவர் வாயிலிருந்த சுருட்டு லபக்கென்று விழுந்து போய் விட்டது.

 

1

ரங்கராஜனுடைய கவனத்தைக் கவர்ந்த ஆச்சரியமான காதல் கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா? அதைக் கடிதம் என்று சொல்வதைவிடக் காவியம் என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். அதனுடைய சில பகுதிகளைச் சற்று ருசி பாருங்கள்:

"என் உடல் பொருள் ஆவியைக் கொள்ளை கொண்ட என் கண்ணில் கருமணி போன்ற, அருமையில் சிறந்த, பெருமையில் மிகுந்த, தேனைப் போல் இனித்த மானைப்போல் விழித்த....குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவிக்கு ரங்கதுர்க்கம் ராஜாவாகிய நான் எழுதிக் கொண்டது.

பெண் பாவாய்!

என் இருதயமானது உமக்காக எவ்வாறு துடிதுடித்துக் கொண்டிருக்கிறதென்பதும், இரவிலும், பகலிலும் கனவிலும், நனவிலும் நான் எப்படி உம்மையே கண்டு, கேட்டு, வருந்தி, மகிழ்ந்து வருகிறேன் என்பதும், எல்லாம் நீர் அறிந்ததே. என்னுடைய இருதயத்தை உமக்குத் திறந்துகாட்டி, 'நான் இருப்பதா? இறப்பதா?' என்னும் கேள்வியை உம்மிடம் கேட்டுப் பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நானும் இந்தக் கப்பல் டோ வர் துறைமுகத்திலிருந்து கிளம்பியது முதல் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதற்கு இதுவரையில் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'நாளைக்கு நாளைக்கென்று' நாள் போய் வருகிறது. 'பொறுத்ததெல்லாம் போதும். இனிப் பொறுக்க முடியாது' என்பதற்கேற்ப இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இரண்டு மூன்று தடவைகளில் உம்மிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்திருக்கிறேன் என்பது வாஸ்தவமே. அப்போதெல்லாம் நீர் 'முடியாது' என்று செப்பியிருக்கிறீர். ஆனால் மனப்பூர்வமாக அப்படி நீர் சொல்லவில்லையென்பது எனக்குத் தெரியும். ஸ்திரீகள் 'முடியாது' என்று சொன்னால், அது 'சரி' என்பதற்கு அடையாளம் என்பதை நான் அறியாதவன் அல்ல. மேலும் நான் மனப்பூர்வமாகக் கேட்கவில்லையென்றும் விளையாட்டுக்குக் கேட்கிறேன் என்றும் நீர் நினைத்திருக்கலாம். அவ்வாறு இல்லையென்றும், இந்த மாதிரி விஷயங்களில் விளையாடும் வழக்கம் எனக்கில்லையென்றும் உறுதி கூறுகிறேன்.

சுருங்கச் சொன்னால், நீர் என்னை மணம் புரிய இசைந்து என்னைப்போல் பாக்கியசாலி உலகில் வேறு யாருமில்லாமல் செய்ய வேண்டுமென்பதற்கு என்னுடைய காரணங்கள் வருமாறு:

(1) நான் உம்மைக் காதலிக்கிறேன்.

(2) நீர் என்னைக் காதலிக்கிறீர்.

(இதை நீர் மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் என்னிடமிருந்து மறைக்க முடியாது. மனத்திற்கு மனமே கண்ணாடியல்லவா?)

(3) என்னைப்போல் எல்லா வகையிலும் சிறந்த குணம், பணம், கல்வி, உருவம், அந்தஸ்து எல்லாம் பொருந்திய மணாளன் உமக்குக் கிடைப்பது அரிது.

(4) உம்மைப்போல் அழகும், குணமும், கல்வியும் பொருந்தியவர்கள் அநேகர் இருக்கலாமாயினும், அவர்களுடைய துர்ப்பாக்கியத்தினால் அப்படிப்பட்டவர்கள் மேல் என் மனம் செல்லவில்லை. அதிர்ஷ்டம் உமக்கு இருக்கும்போது அவர்கள் மேல் எப்படி என் மனம் செல்லும்?

(5) உமக்காக என்னையும், எனக்காக உம்மையுமே கடவுள் படைத்திருக்கிறார் என்பது திண்ணம். இதை நான் மட்டும் சொல்லவில்லை; இந்தக் கப்பலில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆகவே, கடவுளுடைய விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமல்லவா?

என்னுடைய கோரிக்கைக்கு இணங்க நீர் தயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். உம்முடைய தகப்பனாருடைய நிலைமை எனக்குத் தெரியாதோ என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம். நான் அவ்வாறெல்லாம் ஏமாறுகிற பேர்வழியல்ல. உம் தகப்பனாருடைய ஜமீன் கடனில் மூழ்கியிருக்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். பின் ஏன் இந்தச் சம்பந்தத்துக்கு நான் சம்மதிக்கிறேன்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்முடைய தகப்பனாரிடம் இராஜதந்திரம் இருக்கிறது. என்னிடம் பணம் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்துவிட்டால், சென்னை அரசாங்கமே எங்கள் கையில் தான் - இந்த அபிப்பிராயம் எனக்கும் டாக்டர் சிங்காரம் அவர்களுக்கும் ஏககாலத்தில் தனித் தனியே தோன்றியது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்னொரு விஷயம்; நானும் டாக்டர் சிங்காரமும் சில சமயம் ஒரே விஷயத்தைச் சொல்ல நேர்ந்த போது, அவர் சொல்லிக் கொடுத்ததையே நான் சொன்னதாக நீர் சந்தேகப்பட்டீர். இந்தக் கடித விஷயத்தில் அத்தகைய சந்தேகம் உமக்கு ஏற்பட சிறிதும் நியாயம் இல்லை. இதை நானே எழுதினதுமல்லாமல் அவரிடம் காட்டக் கூடவில்லையென்பதை வற்புறுத்தி அறிவிக்கிறேன்.

கடைசியாக, என்னை மணம்புரிய இசையும்படி உம்மை நான் கேட்டுக்கொள்வது ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியம்; அது என்னவெனில், நம்முடைய, சமஸ்தானத்தின் மானேஜர் மிஸ்டர் ஹுட்துரை சம்மதத்தின் பேரில் தான் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடும். சமஸ்தானம் மன்னர்களின் கல்யாணம் மற்றச் சாதாரண மனிதர்களின் கல்யாணங்களைப் போலல்ல. இது ஓர் இராஜாங்க விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மிஸ்டர் ஹுட் துரைக்கு உம்மைப் பிடித்திருக்குமென்று எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு. ஏனெனில், உம்மைப்போன்ற நாகரிகமடைந்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவர் பல தடவைகளில் சொல்லியிருக்கிறார். உம்மைப்பற்றி நான் தக்க முறையில் எடுத்துக் கூறினால் அவர் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிராது.

இந்த நிபந்தனைக்குட்பட்டு நமது கல்யாணத்தை இப்போதே நிச்சயம் செய்துவிட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன்!

இந்தக் கடிதத்துக்குத் தாங்கள் உடனே சம்மதமான பதிலைத் தெரிவிக்க வேண்டியது. இன்று மாலைக்குள் தங்களிடமிருந்து அநுகூலமான பதில், கடித மூலமாகவோ வாய்மொழியாகவோ கிடைக்காவிட்டால் இன்றிரவு நான் தற்கொலை செய்து கொள்வேன்; அல்லது அந்த முயற்சியில் பிராணனை விடுவேன் என்பது சத்தியம், சத்தியம், சத்தியம்.

இங்ஙனம், நளின பூஷண ராவ் ராஜா ஆப் ரங்கதுர்க்கம்

2

மேற்படி கடிதத்தைப் படித்ததும் முதலில் கொஞ்ச நேரம் ரங்கராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. அப்புறம் சிறிது விளங்க ஆரம்பித்தது. புத்தகங்கள் நிறையப் படித்து ஜீரணிக்கப் பெறாதா பொறுக்கி எடுத்த முட்டாள் ஒருவனால் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜமீன்தார்கள், ராஜாக்கள் முதலியோரிடம் ரங்கராஜன் எப்போதுமே அதிக மதிப்பு வைத்ததில்லை. ஆனால் இத்தகைய கடிதம் எழுதக் கூடிய புத்திசாலி ஒருவன் அவர்களிடையே இருப்பான் என்று அவன் கூட எதிர்பார்த்தது கிடையாது. அதிலும் அந்தக் கடைசி வாக்கியம்!

ஒரு விஷயம் அவனுக்கு திருப்தியளித்தது. இந்தக் கடிதம் யாருக்கு எழுதப் பெற்றதோ, அந்தப் பெண்மணி இந்த வடிகட்டின அசட்டினுடைய அதிசயமான காதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்பது நிச்சயம். ஆனால் உடனே இன்னோர் எண்ணம் தோன்றியது; அப்பெண் தன்னைப் பார்த்தபோது, இக்கடிதத்தை எழுதிய புள்ளி என்று தானே நினைத்திருப்பாள்? ஐயோ! அவமானமே!

ரங்கராஜனுக்கு வெகு கோபம் வந்தது. அந்த முட்டாள் டாக்டரைக் கண்டு இரண்டு திட்டுத் திட்டி விட்டுக் கடிதத்தை அவரிடம் கொடுத்து வர வேண்டுமென்று கிளம்பினான். அறைக்கு வெளியே நாலடி வைத்ததும் ஓர் இளம்பெண் எதிரில் வருவதைக் கண்டான். முதன் முதலில் தனக்கு ஸ்மரணை வந்தபோது எதிரில் நின்றவளும், புகைப்படத்திலிருந்தவளும் இந்தப் பெண் தான் என்பதில் சந்தேகமில்லை. சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அந்தப் பித்துக்கொள்ளி டாக்டரைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதிலாக இவளிடம் கடிதத்தை கொடுத்து விட்டாலென்ன?

நல்ல யோசனைதான். ஆனால் எனது கதாநாயகனைப் பற்றி இதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதை நிறைவேற்ற அவனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. சர்வகலாசாலையின் பரீட்சை மண்டபம் எதிலும் ஏற்படாத மயக்கமும் தயக்கமும் இப்போது அவனுக்கு ஏற்பட்டன. இந்த நெஞ்சு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது? பகவானே! இதோ நெருங்கி வந்துவிட்டாள், ஆனால் இந்த நாக்கு ஏன் இப்படி ஒட்டிக் கொள்கிறது? -இந்த அசந்தர்ப்பமான நிலைமையிலிருந்து அவனை என் கதாநாயகியாக்கும் விடுதலை செய்தாள்.

"என்னுடைய கடிதம் ஒன்று தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அப்படியானால் அதைத் தயவுசெய்து கொடுத்து விடுகிறீர்களா?" என்று ஸ்ரீமதி பிரேமலதா கேட்டபோது, ரங்கராஜன் இரண்டாந்தடவை சமுத்திரத்திலிருந்து தன்னை யாரோ தூக்கி எடுத்துக் காப்பாற்றியது போன்ற உணர்ச்சியடைந்தான். ஆனால், இன்னமும் சிறிது தடுமாற்றத்துடனேயே, "மன்னிக்க வேண்டும், அந்தக் கடிதம் என்னிடம் வந்ததற்கு நான் ஜவாப்தாரியல்ல. இப்போது அதைத் திருப்பிக் கொடுப்பதற்காகத்தான் அந்தப் பைத்தியக்கார டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை நீட்டினான். பிரேமலதா அதை வாங்கிக் கொண்டு "அவர்கள் பேரிலெல்லாம் குற்றம் சொல்லக் கூடாது. என்னுடைய தவறுதான். நான் உடனே அதைக் கிழித்தெறிந்திருக்க வேண்டியது. இருந்தாலும் ரொம்ப விசித்திரமான கடிதமாயிருந்தபடியால் வைத்திருக்கலாமென்று தோன்றிற்று," என்று சொல்லிக் கொண்டே அதைச் சுக்கு சுக்காய்க் கிழித்துச் சமுத்திரத்தில் எறிந்தாள். இதற்குள் அவர்கள் கைப்பிடிக் கம்பிகளின் ஓரமாய் வந்திருந்தார்கள்.

"அந்த டாக்டர் பைத்தியம் அக்கடிதத்தை நான் எழுதினேன் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் பெரிய வேடிக்கை," என்றான் ரங்கராஜன்.

"அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லை. ஒருவர் நான் இன்னார் இல்லையென்றால் 'இல்லை; நீர் அவர் தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? என்னை அப்படி யாராவது சொன்னால் கோபந்தான் வரும்," என்றாள் பிரேமலதா.

இவள் சொல்வதில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்குமோ என்று ரங்கராஜன் சந்தேகம் கொண்டான். அதாவது உண்மையில் தான் ரங்கதுர்க்கம் ராஜாவென்றே எண்ணி, ஆனால், புத்தி மாறாட்டமாயிருக்கும் நிலைமையில் அதை வற்புறுத்திச் சொல்லாமலிருப்பதே நலமென்று கருதி இப்படிக் கூறுகிறாளோ என்று நினைத்தான்.

இதைப் பற்றி அவன் சிந்திப்பதற்குள் பிரேமலதா "ஆமாம், நீங்கள் மூடர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ விருப்பமின்றிக் கடலில் குதித்ததாகக் காப்டனிடம் சொன்னீர்களாமே, அது உண்மையா?" என்று கேட்டாள்.

"உண்மைதான். ஆனால், அப்படிச் செய்தது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்" என்றான் ரங்கராஜன்.

"ஜலத்துக்குள் முழுகினதும் பயமாயிருந்ததாக்கும்!" என்று சொல்லி பிரேமா புன்னகை புரிந்தாள்.

இவ்வாறு ஒரு பெண்ணினால் பரிகசிக்கப்படும் நிலைமையைத் தான் அடையக் கூடுமென்று ரங்கராஜன் கனவிலும் கருதியதில்லை. ஒரு பக்கம் கோபம்; ஒரு பக்கம் வெட்கம்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. பயம் என்பது எப்படியிருக்குமென்றே எனக்குத் தெரியாது." இப்படிச் சொன்னதும் ரங்கராஜனுக்கு வெட்கமும் கோபமும் இன்னும் அதிகமாயின. ஒரு பெண்ணிடம் தான் தைரியசாலி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும்படியான நிலைமை வந்ததே! என்ன வெட்கக் கேடு! எக்காரணத்தினாலோ அவளை விட்டுச் செல்வதற்கும் மனம் வராததால் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று.

"பின்னர் இந்தப் பச்சாதாபம் ஏன் ஏற்பட்டது?" என்றது பிரேமாவின் பரிகாசக் குரல்.

"என்ன பச்சாதாபம்?"

"கடலில் விழுந்தது தவறு என்ற எண்ணம்."

இதற்குத் தக்க விடை கண்டுபிடிக்க ரங்கராஜன் ஒரு பெரிய மானஸிக முயற்சி செய்தான். "தங்களைப் போன்ற பெண்மணி வசிக்கக்கூடிய உலகத்தை விட்டுப் போக முயல்வது தவறேயல்லவா?" என்றான். இவ்வளவு தைரியம் தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்க அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.

பிரேமலதாவின் முகத்தில் நாணத்தின் ஒரு மெல்லிய சாயை தோன்றி மறைந்தது. பின்னர் அவள், "அதுதான் உண்மையான காரணமென்றால் நீங்கள் கடலில் விழுந்ததில் தவறில்லையே!" என்றாள்.

"அது எப்படி?"

"கடலில் விழுந்ததனால் தானே என்னைப் போன்ற பெண்மணி ஒருத்தி இருப்பது உங்களுக்குத் தெரிய வந்தது?"

ரங்கராஜன் தன் மனத்திற்குள், "அப்பனே! உனக்கு நன்றாய் வேண்டும்! நீ தான் மகா மேதாவி, உலகத்திலேயே பாக்கியெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணியிருந்தாயல்லவா? இப்போது கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழி!" என்று சொல்லிக் கொண்டான்.

3

"உங்களுக்கு ஆட்சேபமில்லையென்றால் இந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசலாமென்று தோன்றுகிறது," என்றாள் பிரேமலதா.

"இதில் ஆட்சேபம் என்ன இருக்கக் கூடும்?" என்றான் ரங்கராஜன்.

"இல்லை; உலகத்தில் எல்லாருந்தான் உட்காருகிறார்கள். ஆனால், புத்திசாலிகளும், அவர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த உலகத்தைத் தகுதியாக்குகிறவர்களும் உட்காரலாமோ என்னவோ என்று சந்தேகமாயிருந்தது."

ரங்கராஜன் வாய்விட்டுச் சிரிக்க வேண்டி வந்தது. பார்த்தால் பரம சாதுவாய்த் தோன்றும் இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு எப்படி வந்தது என்று வியந்தான்.

இருவரும் உட்கார்ந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் வெளி வந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசிற்று. அலைகளினால் மோதப்பட்ட கப்பல் தொட்டில் ஆடுவது போல் அசைந்து கொண்டிருந்தது.

"இந்த உலகம் சிலருக்கு வெறுத்துப் போவது ஏன் என்பது எனக்கு விளங்குவதேயில்லை. உலகத்தில் அநுபவிப்பதற்கு எவ்வளவு இன்பங்கள் இருக்கின்றன! உதாரணமாக, சாயங்கால வேளைகளில் கப்பல் பிரயாணத்தைப் போல் இன்பமளிப்பது வேறென்ன இருக்கக்கூடும்?"

"உண்மைதான், ஆனால், இவையெல்லாம் இரண்டாந்தரமான சந்தோஷங்களே. ஒத்த மனமுள்ளவர்களின் சல்லாபமும் சேரும்போதே இயற்கை இன்பங்கள் கூட உயிருள்ளவையாகின்றன."

இந்தக் கட்டத்திலேதான், இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூறியபடி டாக்டர் சிங்காரமும் ஜமீன்தாரிணியும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலேயே சிறிது பிரமித்து நின்ற பிறகு, அவர்கள் அருகில் வந்தார்கள். "ராஜா சாகிப், நான் செய்த மெஸ்மெரிஸம் பலித்துவிட்டதல்லவா? ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்துக் கொண்டு டாக்டர் சிங்காரம் ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

ஜமீன்தாரிணி, "என்ன ராஜாசாகிப்! உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.

ரங்கராஜன் எழுந்து நின்று, "சௌக்கியம் தான், அம்மா! உட்காருங்கள்," என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினான்.

"இல்லை, இல்லை. நாங்கள் வேறு காரியமாகப் போகிறோம். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்" என்றாள் ஜமீன்தாரிணி.

டாக்டர் சிங்காரம், "பிரேமா! ஜாக்கிரதை! ராஜா சாகிப் மறுபடியும் கம்பிக்கு அருகே போனால் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்," என்றார்.

"நானும் கூட விழுவதற்கா? அவ்வளவு தியாகத்திற்கு நான் தயாராகயில்லை," என்றாள் பிரேமா. ஆயினும் அச்சமயம் அவள் ரங்கராஜனைப் பார்த்த பார்வை அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிப்பதாயிருந்தது.

டாக்டரும் ஜமீன்தாரிணியும் போன பிறகு ரங்கராஜன், "இந்த டாக்டரைப் போன்ற மனிதர்களுடனேயே ஒருவன் பழக வேண்டுமென்றிருந்தால் கடலில் விழுந்து பிராணனை விடலாமென்று தோன்றுவது ஆச்சரியமா?" என்றான்.

"நான் அப்படி நினைக்கவில்லை. அசட்டுப் பேச்சுக்களைக் கேட்பதிலும் அசட்டு மனிதர்களுடன் பழகுவதிலுங்கூட ஒரு ரஸம் இல்லையா? கடவுள் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் அநேக சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாமே? உதாரணமாகப் பாருங்கள்; நான் இப்போது கிழித்தெறிந்த காதல் கடிதம் எவ்வளவு ரஸமாயிருந்தது? இம்மாதிரி கடிதம் ஓர் ஆசிரியரின் கற்பனையிலிருந்து தோன்றியிருந்தால், நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போம்?"

"வாஸ்தவந்தான். இந்தக் கடிதத்துக்கு உபமானமாகச் சொல்லக் கூடிய கட்டம் ஒன்று ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்டு பிரெஜுடிஸ்" என்னும் நாவலில் வருகிறது."

"காலின்ஸ், எலிஸபெத்திடம் தன் காதலை வெளியிடுகிறானே, அதைத்தானே சொல்கிறீர்கள்?"

ரங்கராஜனுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சுவையை அறிந்து அநுபவிப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லையென்பது அவன் எண்ணம். இந்தப் பெண் அதைப் படித்திருந்ததுமல்லாமல், தான் எந்த கட்டத்தை மனத்தில் நினைத்தானோ, அதையே சொல்கிறாள்.

"ஜேன் ஆஸ்டின் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமோ?" என்று கேட்டான்.

அவ்வளவுதான்! அப்புறம் இரண்டு மணி நேரம் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒருவருக்குப் பிடித்த ஆசிரியர்களும் புத்தகங்களும் இன்னொருவருக்கும் பிடித்திருந்ததாகத் தெரியவந்தது.

கடைசியாக, அவர்கள் பிரிந்து செல்லும் தருவாயில் பிரேமலதா, "நீங்கள் ரங்கதுர்க்கம் ராஜா இல்லையென்று எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை. நானாயிருந்தால் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவேன்," என்றாள்.

2

ரோஸலிண்ட் கப்பல் பம்பாய்த் துறைமுகத்துக்குச் சாதாரணமாய் வந்து சேர வேண்டிய தினத்துக்கு மூன்று நாளைக்குப் பிறகு வந்து சேர்ந்தது. துறைமுகத்துக்குச் சுமார் இருநூறு மைல் தூரத்தில் கப்பல் வந்தபோது பெரும் புயலடித்ததாகவும், அதன் காரணமாகக் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தன. துறைமுகத்துக்குச் சமீபத்தில் வந்து கப்பல் நின்றதும் தயாராய் அங்கே காத்திருந்த படகு ஒன்றிலிருந்து அவசரமாய் ஒரு மனிதன் கப்பலில் ஏறினான். அவன் நேரே கப்பல் தலைவரிடம் சென்று ஒரு தந்திச் செய்தியைக் கொடுத்தான். அதைப் படித்ததும் காப்டனுடைய முகம் சிவந்ததைப் பார்த்தால், தலைகால் தெரியாத கோபம் அவருக்கு அதனால் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமிருந்தது. சாதாரணமாய், மிதமிஞ்சிக் குடித்திருக்கும் போது கூட அவர் முகம் அவ்வாறு சிவந்தது கிடையாது. வந்த தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, "எங்கே அந்த மோசக்கார பையன்?" என்று கேட்டுக் கொண்டே அவர் விரைந்து நடந்தார். கடைசியாக, அவர் ரங்கராஜனைக் கண்டுபிடித்ததும், "மிஸ்டர்! எங்களையெல்லாம் நீர் ஏமாற்றி விட்டீரல்லவா? இந்தியர்களே இப்படித்தான்," என்றார்.

"நானா ஏமாற்றினேன்? என்ன ஏமாற்றம்?" என்று புன்னகையுடன் ரங்கராஜன் கேட்டான்.

பக்கத்திலிருந்த டாக்டர் சிங்காரம், "என்ன காப்டன் இந்தியர்களைப் பற்றி இப்படி அவதூறு கூறுகிறீர்? யார் என்ன ஏமாற்றினார்கள்?" என்றார். ஜமீன்தாரிணியும் கூடச் சேர்ந்து, "என்ன, என்ன?" என்று கேட்டாள்.

"இதோ பாரும் இந்தத் தந்தியை," என்று காப்டன் தந்தியை நீட்டினார்.

ரங்கராஜன் கையை நீட்டி தந்தியை வாங்கினான். அவன் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக் கொண்டது. தன் ஜீவியத்தின் அபூர்வ இன்பக் கனவு இந்த க்ஷணத்தோடு முடிவடையப் போவதாக அவனுக்குத் தோன்றிற்று.

 

1

"கொண்டு வா கத்தி! இதோ இந்தக் கண்களைத் தோண்டி எறிந்து விடுகிறேன். இப்படி ஏமாற்றுகிற கண்கள் இருந்தாலென்ன? இல்லாமல் நாசமாய்ப் போனாலென்ன?" என்று அலறினார் டாக்டர் சிங்காரம். அவர் கையில் ரங்கராஜனிடமிருந்து வாங்கிய தந்தி இருந்தது.

"என்ன? என்ன?" என்று தவித்தாள் ஜமீன்தாரிணி.

இதோ பாருங்கள் என்று தந்தியை அவளிடம் கொடுத்தார். பிறகு ரங்கராஜனை ஒரு நொடிப் பார்வை பார்த்துவிட்டு, "பேர்வழி முழிப்பதைப் பார்!" என்றார்.

ஜமீன்தாரிணியும், பிரேமலதாவும் ஏக காலத்தில் தந்தியைப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.

"மால்டா: உங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கதுர்க்கம் ஜமீன்தாரைக் கடலிலிருந்து மீட்டோ ம். அவர் தம்மைப் பற்றிச் சரியான தகவல் கொடுக்க இரண்டு மூன்று நாளாகி விட்டது. அவருடைய சாமான்களையெல்லாம் லண்டனுக்குத் திருப்பியனுப்பி விடவும். எங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கராஜன் என்னும் வாலிபனைப் பற்றித் தகவல் தெரியவில்லை. ஒரு வேளை அவன் தங்களால் மீட்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். அவனுடைய பெட்டியிலிருந்த ரூ. 1000 சொச்சத்தைக் குறிப்பிடும் விலாசத்துக்கு அனுப்பி விடுகிறோம். - காப்டன் கட்லெட்."

ஜமீன்தாரிணி அதைப் படித்ததும் முன்னால் வந்து "காப்டன்! இது நிஜந்தானா?" என்று கேட்டாள்.

"எது நிஜந்தானா?"

"இந்தத் தந்தி நிஜந்தானா?"

"இதோ உங்கள் அருமையான டாக்டர் இருக்கிறாரே. அவருடைய கழுத்தின் மேல் தலை இருப்பது நிஜந்தானா?"

"அதுதான் நானும் கேட்கிறேன். நீர் நிஜந்தானா? நான் நிஜந்தானா? இந்த உலகம் நிஜந்தானா?" என்று டாக்டர் சிங்காரம் அடுக்கினார். "வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

"பிரேமா! வா, போகலாம்" என்று சொல்லி ஜமீன்தாரிணி பிரேமாவைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். டாக்டர் சிங்காரமும் பின்னால் போனார். அவர்கள் மூலை திரும்பும்போது, "அந்த மெஸ்மெரிஸ்டும் கப்பல் டாக்டரும் எங்கே காணோம்?" என்று பிரேமா கூறியது ரங்கராஜன் காதில் விழுந்தது. உடனே, அந்தப் பக்கம் பார்த்தான். அதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சற்று முன்பாகவே அவன் அந்தப் பக்கம் பார்த்திருந்தால் பிரேமாவின் கண்கள் அறிவித்த செய்தியை அவன் பெற்றிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக அவன் இப்போது காப்டனுடைய கடுகடுத்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது.

"என்ன சொல்கிறீர இப்போது?" என்றார் காப்டன்.

"நீர் அல்லவா சொல்ல வேண்டும்?"

"சொல்வது என்ன? இனிமேல் ஒரு நிமிஷங்கூட உம்மைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. இந்தப் படகிலேயே இறங்கிப் போய் விடும்."

"பரஸ்பரம் அப்படித்தான், காப்டன்! இதோ நான் போகத்தான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம்; அன்றைய தினம் நான் உம்மிடம் வந்து, 'நான் ரங்கதுர்க்கம் ராஜா இல்லை'யென்று படித்துப் படித்துச் சொல்லவில்லையா? என் பேரில் இப்போது எரிந்து விழுகிறீரே, ஏன்?"

"அதற்கென்ன செய்வது? ரங்கதுர்க்கம் ராஜாவைப் போன்ற இரண்டு முட்டாள்களை உலகம் ஏககாலத்தில் தாங்காது என்று நினைத்தேன்."

"இரண்டு பேர் அல்ல, நாலு பேரைக் கூட தாங்க முடியுமென்று இப்போது தெரிந்து விட்டதல்லவா?"

"அது என்ன?"

"ஆமாம், ரங்கதுர்க்கம் ராஜா ஒன்று, டாக்டர் சிங்காரம் ஒன்று, உங்கள் கப்பல் டாக்டர் ஒன்று, அப்புறம் தாங்கள்."

காப்டன் பயங்கரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவசரமாய்த் திரும்பிச் சென்றார்.

2

ரங்கராஜன் எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள் ஒன்றுமில்லை. எனவே, உடனே கப்பலிலிருந்து படகில் இறங்கினான். படகு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புயலடித்து ஓய்ந்திருந்த கடல் இப்போது வெகு அமைதியாயிருந்தது. ஆனால் அவனுடைய உள்ளக் கடலிலோ அதற்கு நேர்மாறான நிலைமை குடி கொண்டிருந்தது. அங்கே வெகு வேகமுள்ள புயல்காற்று, சுழற்காற்று, சூறைக்காற்று எல்லாம் சேர்ந்து அடித்தன. பிரமாண்டமான அலைகள் எழுந்து விழுந்தன.

'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்த வரையில் அவனுடைய ஜீவிய சம்பவங்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் அதிவிரைவாய்த் தோன்றி மறைந்தன. பின்னர், 'ரோஸலிண்ட்' கப்பலில் அவனுடைய ஐந்து நாள் வாழ்க்கையைப் பற்றி எண்ணிய போது மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. "இவ்வளவு பெரிய சந்தோஷம் நீடித்திருக்க முடியாது. கண் விழித்ததும் பொய்யாகும் கனவைப் போல் விரைவிலே மறைந்து மாயமாய்விடும்" என்று இடையிடையே தன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்த பயம் உண்மையாகிவிட்டதே!

"இந்தியர்களுடைய வாழ்க்கையில் இந்நாளில் புதுமை ரஸிகத்துவம் எதுவும் இருக்க முடியாது. சாரமற்ற வாழ்வு. இத்தகைய வாழ்க்கை நடத்துவதை விட இறப்பதே மேல்" என்று நான் எண்ணியது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே பகவான் இந்த ஆச்சரியமான அநுபவத்தை அளித்தார் போலும்!

நிகழ்ந்தது எல்லாவற்றையும் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். முதல் நாள் அந்த அசட்டுக் காதல் கடிதத்தை வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குள் சம்பாஷணை ஏற்பட்டதும், நெடு நேரம் பேசிக் கொண்டிருந்ததும், அன்றிரவெல்லாம் லவகேசமும் தூக்கமின்றித் தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிசயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தன. இரவு சென்று பொழுது விடிந்ததும் ஒரே நினைவுதான். பிரேமலதாவை எப்படிச் சந்திப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடிப் போவது?

ஆனால் கப்பலாகையால் இந்தக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தால் ஒருவரையொருவர் சந்திக்கச் சந்தர்ப்பங்களுக்குக் குறைவு கிடையாது. எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே சந்திப்பு ஏற்பட்டது. பேச்சிலே அவர்கள் ஆழ்ந்துவிட்டபோது உலகத்தையே மறந்து விட்டார்கள். ஜமீன்தாரிணி உணவு நேரத்தை ஞாபகமூட்டுவதற்கு வந்தாள். ரங்கராஜனையும் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தாள். அது முதல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் பெரும்பாலும் அவர்கள் சேர்ந்திருக்கத் தொடங்கினார்கள்.

கரையோரமாகப் பலத்த புயல் அடிக்கும் காரணத்தினால் கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறதென்றும் பிரயாணம் நீடிக்கலாமென்றும் தெரிய வந்த போது ரங்கராஜனுடைய இருதயம் சந்தோஷமிகுதியினால் வெடித்து விடும் போல் இருந்தது.

அந்த ஐந்து தினங்களில் முதல் இரண்டு நாளைக்கும் பிந்தைய மூன்று நாட்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி ரங்கராஜன் நினைத்தான். முதலில் நேரமெல்லாம் பேச்சிலேயே போயிற்று. பின்னால் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதில் சென்றது. முதலில் எவ்வளவு நாள் பேசினாலும் போதாது போலவும், அவ்வளவு விஷயங்கள் பேசுவதற்கு இருப்பது போலவும் தோன்றியது. ஆனால் போகப் போகப் பேசுவதற்கு விஷயமே இல்லை போல் ஆகிவிட்டது. ஹிருதயம் நிறைந்துள்ள போது பேச்சு வருவதில்லை. பேசினால் தன் இருதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் அதுவோ பேச்சு வரம்பைக் கடந்து நின்றது. அதிலும் அந்த அசட்டுக் காதல் கடிதத்தைப் படித்த பின்னர், அணுவளவேணும் அறிவுள்ளவர்கள் காதல் பேச்சுப் பேச முடியுமா? ஒன்றுந்தான் பேசுவதற்கில்லையே; விடைபெற்றுக் கொண்டு பிரிந்து போகலாமென்றால், அதற்கும் மனம் வருவதில்லை. வாய் பேசாவிட்டால், பேச்சு இல்லையென்று அர்த்தமா? கண்களோடு கண்கள், ஹிருதயத்தோடு ஹிருதயம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன.

இடையிடையே வாய்க்கும் பேசுவதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தபோது, விஷயம் ஹிருதய சம்பாஷணையுடன் ஒத்ததாகவே இருந்தது.

"இளம்பிராயத்தில் நான் ஓர் இலட்சிய கன்னிகையை என் உள்ளத்தில் உருவகப்படுத்துவதுண்டு. அவளிடம் இன்னின்ன அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் நேரம் போவது தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். ஆனால், நாளாக ஆக, 'இது சுத்தப் பைத்தியம்; இந்த மாதிரி நமது நாட்டில் இருக்கவே முடியாது' என்று எண்ணி விட்டு விட்டேன். வெகு நாளைக்குப் பின்னர் இன்று என் மனோராஜ்யக் கன்னிகையை நேருக்கு நேர் காண்கிறேன். ஆகையாலேயே, ஒவ்வொரு சமயம் இதெல்லாம் வெறும் பொய்யோ என்று தோன்றுகிறது," என்றான் ரங்கராஜன்.

"நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய இலட்சியத்தைப்பற்றி நான் அப்படிச் சொல்லிக் கொள்வதற்கில்லை," என்றாள் பிரேமா.

ரங்கராஜனுடைய முகம் வாடிற்று. பிரேமாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று தூரத்திலே பறந்த கடற்பறவையை வெகு கவனமாக பார்க்கத் தொடங்கினான்.

"ஆமாம், நானும் சிறிது காலமாக ஓர் இலட்சிய புருஷரை மனத்தில் உருவகப்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்புவரை என் லட்சியத்துக்கு கிட்டத்தட்ட வரக்கூடியவரைக்கூட நான் சந்திக்கவில்லை. கடைசியாக ஒருவரைச் சந்தித்த போது, 'இவர்தான்' என்று தோன்றிற்று. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் என்னுடைய இலட்சியத்தைவிட மிக உயர்ந்து விளங்குகிறார். இன்னும் கொஞ்சம் கீழே இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது" என்றாள்.

இது என்ன உண்மையா, பரிகாசமா? அவளுடைய புன்னகை இரண்டுக்கும் இடம் தருவதாயிருந்தது.

மற்றொரு நாள் தமிழில் நவீன இலக்கியங்கள் அதிகம் இல்லாமலிருப்பது குறித்துப் பேச்சு வந்தது.

"இவ்வளவெல்லாம் படித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் தமிழில் நல்ல நாடகம் ஒன்று எழுதக் கூடாது?" என்று பிரேமா கேட்டாள்.

"அந்த எண்ணம் எனக்கு வெகு நாளாக உண்டு. ஆனால் ஆனால்... இதுவரையில் அதற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை."

"நான் வேண்டுமானால் சொல்கிறேன்; உங்களால் நாடகம் ஒரு நாளும் எழுத முடியாது."

"ஏன் இத்தகைய சாபம்?"

"நாடகம் என்றாள் அதில் எல்லாப் பாத்திரங்களும் மேதாவிகளாகவும் புத்திசாலிகளாகவுமே இருக்க முடியாது. நடுத்தரமானவர்களும் அசடுகளும் கூட வேண்டும். நீங்களோ முதல் தர மேதாவிகளைத் தவிர வேறு யாரோடும் பேச மாட்டீர்கள்; பழக மாட்டீர்கள். ஆகையால், இயற்கையாய்த் தோன்றக்கூடிய நாடக பாத்திரங்களை உங்களால் சிருஷ்டிக்க முடியாது."

"உங்களிடம் அந்தக் குறை கிடையாதல்லவா? நீங்கள் தான் டாக்டர் சிங்காரம் உள்பட எல்லாருடனும் பழகுகிறீர்களே! நீங்களே எழுதலாமே?"

"என்னால் முடியாது. ஆனால் உங்களுக்கு நான் உதவி செய்யக்கூடும்."

"அப்படியானால் நாம் நாடகம் எழுதி முடிக்கும் வரையில் புயல் நீடித்திருக்க வேண்டுமே? கரை சேர்ந்தால் நான் எங்கேயோ, நீங்கள் எங்கேயோ?"

"உண்மையாகவா? கரை சேர்ந்ததும் நாம் பிரிந்து போவது நிஜமாயிருந்தால், இப்போதே பிரிந்துவிடலாமே?" என்று பிரேமலதா எழுந்து செல்லத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி உட்காரச் செய்ய வேண்டியிருந்தது.

அப்படியெல்லாம் நடித்தவள் அந்தத் தந்தியைக் கண்டதும் எப்படி மாறிவிட்டாள்! சீ! இதென்ன உலகம்! இவ்வளவு கல்வி, அறிவு, சாதுர்யம், சாமர்த்தியம் எல்லாம் கேவலம் பட்டம், பணம் என்னும் பைசாசங்களுக்குப் பலியாவதற்குத்தானா? - கடலில் விழுந்த தன்னைத் தப்புவித்த முட்டாளை ரங்கராஜன் அப்போது மனமாரச் சபித்தான்.

ஆனால் உடனே வேறோர் எண்ணமும் தோன்றிற்று. ஏன் இவ்வாறு தான் மனக்கசப்பு அடைய வேண்டும்? தன் வாழ்நாளில் இத்தகைய இனிய கனவு ஒன்று ஏற்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கலாமே? அதைப் பற்றிய சிந்தனையில் சந்தோஷம் அடைந்திருக்கலாமே? - இப்படி எண்ணியபோது அந்தக் கனவு நிகழ்ந்த இடமாகிய 'ரோஸலிண்ட்' கப்பலை ரங்கராஜன் நிமிர்ந்து பார்த்தான். தானும் அவளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிய அதே இடத்தில் பிரேமலதா துயர முகத்துடன் நின்று தன்னை நோக்குவது போல் ஒரு க்ஷணம் தோன்றிற்று. அடுத்த க்ஷணம் ஒன்றுமில்லை. சீ! இதென்ன வீண் பிரமை! இதற்குள் படகு கரையை அடைந்தது. பம்பாய் நகரில் பிரவேசித்ததும், ஸ்வப்ன உலகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தது போல் ரங்கராஜன் உணர்ந்தான்.

3

'இனி என்ன செய்வது?' என்னும் பிரச்சனை அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது போல் ரங்கராஜனுடைய சொந்த வாழ்க்கையில் இப்போது அதி தீவிரமாக ஏற்பட்டது. சீமைக்கு மறுபடியும் போகும் யோசனையைக் கைவிட வேண்டியதுதான். அது கடவுளுக்கே இஷ்டமில்லையென்று தோன்றுகிறது. போதும் சீமைப் பயணம்.

'பம்பாயில் தங்கி ஏதேனும் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து விட்டால்?' என்று எண்ணிய போது, தானே வயிறு குலுங்கச் சிரித்தான். நாடோ டி வாழ்க்கையை வெறுத்துப் புதிய அநுபவங்களைத் தேடி அவன் புறப்பட்டதற்கு அது தக்க முடிவாயிருக்குமல்லவா?

இவ்வாறு பல யோசனைகள் செய்து கொண்டேயிருந்த போது திடீரென்று அவனுடைய ஜீவிய இலட்சியம் என்னவென்பது மனத்தில் உதயமாயிற்று. அவனுடைய கை விரல்கள் துடித்தன. "கொண்டா பேனாவும் காகிதமும்" என்று அவை கதறின. நூலாசிரியத் தொழிலுக்கு வேண்டிய அஸ்திவாரம் ஏற்கனவே அவனிடம் அமைந்திருந்தது. தூண்டுகோல் ஒன்று தான் பாக்கி; அதுவும் இப்போது ஏற்பட்டு விட்டது.

ஊருக்குப் போக வேண்டியதுதான்; நாவல்களும் நாடகங்களுமாக எழுதிக் குவித்துத் தமிழ் மொழியை ஆகாயத்தில் உயர்த்தியே விடுவது என்று தீர்மானித்தான்.

'பிரிட்டானியா' கப்பலில் விட்டிருந்த பணம் வந்து சேரும் வரையில் பம்பாயில் இருந்ததாக வேண்டும். அந்த நாட்களில் அவன் அந்த நகரை முழுதும் சுற்றிப் பார்த்து விட விரும்பினான். பம்பாயில் முக்கியமாக 'விக்டோ ரியா டெர்மினஸ்' ஸ்டேஷன் அவனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்ததாகத் தோன்றியது. தினந்தோறும் சாயங்காலம் 'மெட்ராஸ் மெயில்' புறப்படும் சமயத்துக்கு ரங்கராஜன் பிளாட்பாரத்தில் உலாவி வருவதைக் காணலாம். அப்படிச் செய்ததில் அந்தரங்க நோக்கம் ஒன்றும் அவனுக்கு லவலேசமும் கிடையாது. (அவ்வாறு அவன் நம்பினான்). முன்னைப் போல் ஜனங்களைக் கண்டு வெறுப்படைவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்ப்பதிலும் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனிப்பதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த புதிய உற்சாகமே அதன் காரணம். (இதுவும் அவனுடைய அபிப்பிராயமே.) ஆகையினால், ஒரு நாள் மாலை அவன் அவ்வாறு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பிரேமலதா தீடீரென்று எதிர்ப்பட்டு, புன்னகையுடன், "ஓ! உங்களை நான் எதிர்பார்த்தேன்," என்று சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது.

"அப்படியா? ஆனால், தங்களை நான் எதிர்பார்க்கவில்லை" என்றான்.

"பொய்! பொய்! நீங்கள் சொல்வது பொய்," என்றாள் பிரேமா.

"ரொம்ப சந்தோஷம். ரங்கதுர்க்கம் ராஜா அப்புறம் கோபித்துக் கொள்ளப் போகிறார். நான் போய்..."

இந்தச் சமயம் பிரேமாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ததும்பி நிற்பதை ரங்கராஜன் பார்த்தான். உடனே, "... போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று முடித்தான்.

"நானும் கூட வருவதில் ஆட்சேபம் இல்லையே!"

"எனக்கு ஆட்சேபம் இல்லை; ஆனால், ஒரு வேளை ராஜா சாகிப்பிற்கு"

"ரங்கதுர்க்கம் ராஜாவின் பாக்கியமே பாக்கியம்! உங்களைப் போன்ற ஒருவர் தம் பேரில் இவ்வளவு அசூயை கொள்வதற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

ரங்கராஜன் பிரேமலதாவைத் திரும்பி பார்த்தான். "அப்படியானால், நீ என்னை ரங்கதுர்க்கம் ராஜாவென்று எண்ணவில்லையா?" என்றான்.

"என்னைப்பற்றி இவ்வளவு தாழ்வாக நீங்கள் நினைத்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபஸ்மாரக் காதல் கடிதத்தை எழுதக் கூடியவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தீர்கள்?"

ரங்கராஜன் மிக்க ஆச்சரியத்துடன் பிரேமலதாவின் முகத்தை நோக்கினான். "அப்படியானால், அந்தத் தந்தியைப் படித்ததும் நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லாரும் சென்று விட்டீர்களே, அது ஏன்?" என்றான்.

"கடவுளே! அதுதானா கோபம்? கொஞ்சம் உங்களை வேடிக்கை செய்யலாமென்று நினைத்தோம். கப்பல் கரையோரமாய் போய் நிற்பதற்குள், நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் படகிலிறங்கிப் போய் விடுவீர்களென்று கண்டோமா?"

4

டிக்கட் வாங்கிக் கொண்டதும், "இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறதே, வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமா?" என்று ரங்கராஜன் கேட்டான்.

"அதையேதான் இப்போது சொல்ல நான் வாயெடுத்தேன்," என்றாள் பிரேமலதா. இவ்வாறு பிரேரணை ஏகமனதாக நிறைவேறவே, இருவரும் வெயிட்டிங் ரூமுக்குச் சென்றார்கள்.

"இந்தச் சிறு விஷயம் முதற்கொண்டு நம்முடைய மனம் இவ்வளவு ஒத்திருப்பது பெரிய ஆச்சரியமல்லவா?"

"அந்தத் தைரியத்தினால்தான் உங்களைக் கட்டாயம் இன்று ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்போம் என்று நிச்சயமாய் நம்பியிருந்தேன். இல்லாவிட்டால், இந்த ஒரு வாரமும் என்னால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது."

"நாம் ஒரு தவறு செய்தோம். அதனால் தான் இவ்வளவு நேர்ந்தது. கப்பலில் நம்முடைய ஹிருதயத்தின் நிலைமையை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

'நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங் கதைகள் நானுடைப்பதோ'

என்று இருந்து விட்டேன். வாய்ப்பேச்சும் சில சமயம் அவசியம் என்று இப்போது தெரிகிறது."

"நடுக்கடலில் நாம் சந்தித்தது ஒரு பெரிய ஆச்சரியமல்லவா?"

"அதை ஆச்சரியமென்றா சொல்வது? நம்ப முடியாத அற்புதம் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள பதினெட்டுக் கோடி சொச்சம் ஸ்திரீகளில் பிரேமலதா ஒருத்தியைத் தவிர, வேறு யாரும் என்னைப் பைத்தியமாய் அடித்திருக்க முடியாது. நான் அன்று கடலில் குதித்திராவிட்டால் அவளைச் சந்தித்திருக்கவே முடியாது. இதைக் கடவுள் சித்தமென்பதா, விதி என்பதா, பூர்வஜன்ம சொந்தம் என்பதா என்று தெரியவில்லை."

இந்த முறையில் சம்பாஷணை போய்க் கொண்டிருந்தது. பைத்தியம்! எவ்வளவு சரியான வார்த்தை! இந்தத் தினுசு பைத்தியம் பிடிக்கும் போது, மகா மண்டூகங்களான ரங்கதுர்க்கம் ராஜாக்களுக்கும், மகா மேதாவிகளான ரங்கராஜாக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போகிறது!

"பிரேமா! உன்னிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. நீ ஜமீன்தார் பெண்ணாயிருப்பது ஒன்று தான் பிடிக்கவில்லை" என்று பேச்சினிடையில் ரங்கராஜன் கூறினான்.

"அப்படியானால், நீங்கள் கவலையின்றி இருக்கலாம். உங்கள் காதலி மாசு மறுவற்றவள் என்று திருப்தி கொள்ளுங்கள். ஏனென்றால், நான் ஜமீன்தார் பெண் அல்ல!" என்றாள்.

"என்ன? என்ன? இது நிஜமா? அப்படியானால் நீ யாருடைய பெண்?" என்று கேட்டான்.

"டாக்டர் சிங்காரத்தினுடைய பெண் நான்" என்று பதில் வந்தது.

பிரேமலதா விஸ்தாரமாகக் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளியாயின

டாக்டர் சிங்காரம் ஒரு தமாஷ் மனிதர். அவர் வைத்தியப் பரீட்சையில் தேறிய தம் பெண்ணை இங்கிலாந்தில் உயர்தரப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சமயம் பிரேமலதாவைப் பார்த்துப் பிரேமை கொண்ட ரங்கதுர்க்கம் ராஜா டாக்டர் சிங்காரத்திடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவள் குமாரபுரம் ஜமீன்தார் பெண் என்றும் தாம் அவர்களுடைய குடும்ப வைத்தியர் என்றும் இவர் குறும்புக்குச் சொல்லி வைத்தார். இவர்கள், ஏறிய கப்பலிலேயே ராஜாவும் ஏறவே, அந்தத் தமாஷைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ரங்கராஜன் முதன் முதலில் ஸ்மரணை தெளிந்து பார்த்தவுடனேயே, அவருக்கு இவன் வேறு ஆசாமி என்று தெரிந்து போயிற்று. ஆனால், கப்பல் காப்டனும் டாக்டரும் தம்மை அலட்சியமாய் நடத்தினார்களென்று அவருக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது. அவர்களுக்கு அசட்டுப் பட்டம் கட்டுவதற்காகவும், பொதுவாகத் தமாஷில் உள்ள பற்றினாலும், அவன் தான் ராஜாசாகிப் என்று வறுபுறுத்திக் கொண்டு வந்தார். ரங்கராஜன் இதையெல்லாம் கேட்டு அளவிலாத ஆச்சரியம் அடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. டாக்டர் சிங்காரத்தைப் பற்றித் தான் கொண்டிருந்த அபிப்பிராயம் எவ்வளவு தவறானது என்பதை நினைக்க அவனுக்குச் சிறிது வெட்கமாயிருந்தது.

பிரேமலதா கடைசியில், "என் தந்தை கப்பலிலிருந்து இறங்கிய அன்றே சென்னைக்குப் போய் விட்டார். என்னையும் அம்மாவையும் ஒரு வாரம் பம்பாயில் இருந்து விட்டு வரச் சொன்னார். அதற்குள் உங்களுக்குப் 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து பணம் வந்து விடுமென்றும், எங்களை ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் சந்திப்பது நிச்சயம் என்று கூடச் சொன்னார். உங்களை நான் மணம் புரிந்து கொள்வதற்கு என் தாய் தந்தை இருவரும் கப்பலிலேயே சம்மதம் கொடுத்து விட்டார்கள்" என்று கூறியபோது, ரங்கராஜன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். வறண்ட பாலைவனம் போல் இருந்த தனது வாழ்க்கை இரண்டு வார காலத்தில் எவ்வளவு அதிசய அநுபவங்கள் நிறையப் பெற்றதாகிவிட்டதென்று எண்ணியபோது அவன் உள்ளம் பூரித்தது.

டிங், டிங், டிங் என்று மணி அடித்தது. ரங்கராஜனும் பிரேமலதாவும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்து வண்டியில் ஏறினார்கள். பிரேமலதாவின் தாயார் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். வண்டி புறப்பட்டது. ரங்கராஜன் பிரேமலதா இவர்களுடைய புதிய வாழ்க்கைப் பிரயாணம் ஆரம்பமாயிற்று.

'இவ்வாறு நமது கதை ஆரம்பத்திலேயே முடிவடைகிறது. ஆதலின், "ஆரம்பத்திலே முடிவின் வித்து இருக்கிறது; முடிவிலே ஆரம்பத்தின் வித்து இருக்கிறது" என்னும் சிருஷ்டித் தத்துவம் இக்கதையினால் விளக்கப்படுகிறது. நான் சற்றும் எதிர்பாராதபடி இந்தக் கதை தத்துவப் பொருளை உள்ளடக்கியதாய் அமைந்து விட்டது குறித்து, தானே ஆரம்பமாயும், தானே முடிவாயும் விளங்கும் பரம்பொருளை வாழ்த்துகிறேன்.'