திருவழுந்தூர் சிவக்கொழுந்து
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Kalki Krishnamoorthy
- Hits: 2248
1
இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம் ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய மின்னலில் ஸ்டேஷன் கட்டடம், பிளாட்பாரம், அப்பால் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் ஒரு கணம் தெரிந்து அடுத்த கணத்தில் மறைந்தன. மின்னலுக்குப் பிறகு இருட்டு முன்னை விடப் பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. மினுக் மினுக்கென்று தோன்றிய ஸ்டேஷன் லாந்தர் அந்த இருட்டை எடுத்துக் காட்டுவதற்காகப் போட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது, 'நீ என்ன என்னை எடுத்துக் காட்டுவது?' என்று இருள் கோபங் கொண்டு அந்த லாந்தரை அமுக்கிக் கொன்றுவிடக் கவிந்து வருவது போலிருந்தது.
சில பேர் ரயிலில் ஏறி விட்டால் உடனே அவர்கள் கண்ணைச் சுற்றத் தொடங்கி விடுகிறது. வண்டி இரண்டு அசைப்பு அசைந்ததும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு ரயிலில் தூங்க முடிவதே இல்லை. அதிலும் இடியும் மின்னலுமாய் இருந்த அந்த இரவில் தூக்கம் எப்படி வரப் போகிறது? ராத்திரி முழுவதும் ரயிலில் கழித்தாக வேண்டுமே என்று கவலையாயிருந்தது.
ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ரயிலின் ஆட்டத்தில் படிப்பதும் சுலபமாக இல்லை. இந்த நிலைமையில், "ஐயம்பேட்டை ஐயம்பேட்டை!" என்ற போர்ட்டரின் குரலைக் கேட்டதும் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே பார்த்தேன். கதவைத் திறக்கும் போதே 'தவுல் கந்தப்பனுக்கு இந்த ஊர்தானே?' என்ற நினைவு எழுந்தது.
ஐயம்பேட்டைக் கந்தப்பன் என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவருடைய ஊரையும், பெயரையும் நான் மாற்றியிருக்கிறேன். இந்தப் பெயர் பெற்ற தவுல் வித்வானை நந்தி தேவரின் அவதாரம் என்றே சிலர் சொல்வார்கள். அவர் தவுல் வாசித்தால் அது கேவலம், தவுலாக இராது. தேவ துந்துபி என்று சொல்லும்படியாகத்தான் இருக்கும். ஒரு சமயம் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை இவருடைய தவுல் வாசிப்பைக் கேட்டாராம். உடனே தம்மிடமிருந்த மிருதங்கம், கஞ்சிரா அவ்வளவையும் உடைத்து எறிந்து விட்டு, ஆறு மாதகாலம் தோல் வாத்தியத்தையே தொடாமல் இருந்தாராம்.
அவ்வளவு சிறந்த தவுல் வித்வான் ஐயம்பேட்டைக் கந்தப்பன். அதோடு தேசிய விஷயங்களில் அதிக சிரத்தையுள்ளவர்.
கதர் தான் கட்டுவார். காங்கிரஸ் மாநாடுகளில் அவரை அடிக்கடி பார்த்திருந்ததுடன், ரொம்ப ரசமாகப் பேசக் கூடியவர் என்றும் தெரிந்து கொண்டிருந்தேன். ஆகையினால் தான் அவரைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. ஒரு வேளை கந்தப்பன் தப்பித் தவறி இதே வண்டியில் வந்து ஏறினால் இராத்திரிப் பொழுது போவது தெரியாமல் போகுமல்லவா? என்று எண்ணினேன்.
இப்படி எண்ணியதுதான் தாமதம். இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்தில் அவசர அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. யார் என்று உற்றுப் பார்த்தேன். முதலில் வந்த ஆசாமி, தவுல் கந்தப்பன் தான்! இதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளாக நானிருந்த வண்டியின் கதவு திறக்கப்பட்டது. கந்தப்ப பிள்ளை உள்ளே ஏறினார். பின்னோடு வந்தவர்கள் இரண்டு தவுல்களையும் பெட்டி படுக்கைகளையும் வண்டியில் ஏற்றினார்கள்.
"எல்லா சாமானும் வந்துடுத்தா?"
"எல்லாம் வந்துடுத்துங்க."
"சரியா இருக்கா, பார்த்திடுங்க."
"போய்ட்டு வரீங்களா, தம்பீ!"
"போய்ட்டு வரோம், அண்ணே!"
"ஓடு! ஓடு! வண்டி கிளம்பிட்டுது. பக்கத்து வண்டியிலே ஏறிக்கோ! விழுப்புரத்திலே தூங்கிடாதே! தெரியுதா?"
ரயில் நகரத் தொடங்கியது. ஒரு நிமிஷத்திலே ஸ்டேஷன் விளக்கு மறைந்தது. காடாந்திரமாகக் கவிந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு ரயில் துரிதமாகச் சென்றது.
"என்ன, கந்தப்பபிள்ளை சௌக்கியமா?" என்று கேட்டேன்.
கந்தப்பபிள்ளை திடுக்கிட்டு, என்னைத் திரும்பிப் பார்த்தார். "சாமி நீங்களா? சௌக்கியந்தானுங்க. உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்" என்றார்.
2
"உம்மைப் பார்த்தது எனக்கு அதைவிட சந்தோஷம். ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். ஐயம்பேட்டை ஸ்டேஷனில் வண்டி நின்றதும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். தப்பித் தவறி இதே வண்டியில் நீரும் வந்து ஏறினால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அடுத்த நிமிஷம் பார்த்தால் நீரே வந்து இந்த வண்டியில் ஏறுகிறீர். நாளைக்கு சென்னை பட்டினத்தில் என் ஸ்நேகிதர்களிடம் நான் சொன்னால் நம்பவே மாட்டார்கள். 'இயற்கைக்கு விரோதம்' என்பார்கள்" என்றேன்.
"எந்த இயற்கைக்கு விரோதம், ஸ்வாமி" என்று கந்தப்பபிள்ளை கேட்டார்.
"இது என்ன கேள்வி! எந்த இயற்கைக்கு விரோதம் என்றால்...?"
"இல்லை, ஐயா! இப்போது பாருங்கள். இந்த ரயில் இருக்கிறது. தண்டவாளத்தில் ஓடுவது இதன் இயற்கை. அந்த இயற்கையை நம்பித்தான் நாம் எல்லோரும் ரயிலில் ஏறுகிறோம். ஆனால் திடீரென்று எப்போதாவது ஒரு தடவை ரயில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விடுகிறது. அதனால் விபத்து நேரிடுகிறது. இந்த விபத்தை நேரில் பார்க்காதவர்கள் 'அதெல்லாம் இல்லை; அப்படி ஒரு நாளும் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்திராது; இயற்கைக்கு விரோதம்' என்று சொல்லலாம் அல்லவா?"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்குள் அவர் மேலே பேசத் தொடங்கி விட்டார், "இதோ கேளுங்கள். வானத்தில் இடி இடிக்கிறது. இந்த ஐந்து நிமிஷத்தில் பத்து இடி இடித்துவிட்டது. இம்மாதிரி உலகத்தில் தினம் பதினாயிரம், லக்ஷம் இடி இடித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த இடியெல்லாம் பூமியின் மேல் விழுந்தால், இந்த உலகத்திலே ஒரு மனுஷன், ஒரு பிராணி உயிரோடு இருக்க முடியுமா? முடியாது. ஆகையால், இடி இடித்துவிட்டு ஆகாயத்திலே மறைந்து விடுவதுதான் இயற்கை. ஆனால் எப்போதோ ஒரு தடவை இடியானது பூமியின் மேல் விழுகிறது. அதுவும் ஒரு மனுஷன் மேல் விழுகிறது. அந்தப் பாழும் இடி அவனைக் கொல்லாமல் அவன் கண்ணன் மட்டும் கொண்டு போய் விடுகிறது! இதற்கு என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமி! இது இயற்கையா? இயற்கைக்கு விரோதமா?"
இப்படிக் கேட்டு விட்டு கந்தப்பன் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். வேறு எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
"என்ன சாமி, பேசாமல் இருக்கீங்க? சொல்லுங்களேன்? இடி விழுகிறது இயற்கையாய் இருந்தால், நம் எல்லோர் தலையிலும் ஏன் இடி விழவில்லை? நம் எல்லார் கண்ணும் ஏன் அவிந்து போகவில்லை? அது இயற்கைக்கு விரோதமாய் இருந்தால் ஒருத்தர் மேல் மாத்திரம் எப்படி விழுந்திருக்கும்! அவர் கண் மட்டும் எப்படிப் போயிருக்கும்? இது நடக்கக் கூடியதா ஸ்வாமி? நடக்கக் கூடியது இல்லாவிட்டால் எப்படி நடந்தது?"
கந்தப்ப பிள்ளையின் அப்போதைய அறிவுத் தெளிவைப் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தஞ்சாவூர் ஜில்லாவில் இன்னும் மதுவிலக்குச் சட்டம் வரவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஒரு வேளை... அப்படி இருக்குமோ? சே! சே! ஒரு நாளும் இல்லை. அவர் அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். காந்திக் குல்லா போட்டுக் கொண்டு கள்ளுக்கடை மறியல் செய்தவர். அப்படிப்பட்ட மனுஷரா மதுபானம் செய்திருப்பார்? இல்லவே இல்லை.
பின்னே, ஏன் இப்படி என்னவெல்லாமோ சம்பந்தமில்லாமல் பேசுகிறார்? இடியாவது? தலையில் விழுவதாவது? இயற்கைக்கு விரோதமாவது? எல்லாம் சர்வ பேத்தலாகவல்லவா இருக்கிறது?
பேச்சை மாற்றுவதற்காக நான், "பட்டணத்துக்குத் தானே வருகிறீர்கள்? அங்கே நாளைக்கு கச்சேரியாக்கும்! கல்யாணக் கச்சேரியா?" என்று கேட்டேன்.
"ஆமாம் சாமி! நாளைக்குப் பட்டணத்திலே கச்சேரிதான்" என்றார் கந்தப்ப பிள்ளை.
இப்படிச் சொல்லிவிட்டு, தவுலை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அதன் உறையை அவிழ்த்தார். தவுலின் இரண்டு புறத்தையும் தடவிக் கொடுத்தார். ஒரு தாயார் தன்னுடைய குழந்தையின் அழகான கன்னங்களைத் தடவுவதுபோல் அவ்வளவு செல்லமாகத் தடவினார்!
மனுஷர் இந்த இரயில் வண்டியில் தனித் தவுல் கச்சேரி ஆரம்பிக்கப் போகிறாரா என்ன? தூக்கம் வருகிறதற்கு நல்ல உபாயந்தான்! - இப்படி நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். அப்போது அவர் சொன்னார்:
3
"சாமி! நானும் தினம் பொழுது விடிந்தால் தவுல் அடித்துக் கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ நாதஸ்வர வித்வான்களுக்கு வாசித்திருக்கிறேன். ஆனால் நேற்றைக்கு ராத்திரி நான் பரவசமாய் வாசித்தது போல் வாசித்தது வெகு அபூர்வம். இந்தத் தோல் வாத்தியத்திலிருந்து நேற்று என்னெல்லாம் நாதங்கள் வந்தன? நானா வாசித்தேன்? இல்லை, இல்லை. நந்தி பகவானே என் விரல்களிலே வந்து உட்கார்ந்து கொண்டார்!
இதைக் கேட்டதும் அவருடைய பேச்சில் எனக்கு சிரத்தை உண்டாயிற்று. சற்று முன் அவர் தலைகால் இல்லாமல் பேசியதெல்லாம் முதல் நால் கச்சேரியின் ஆவேசந்தான் என்று அறிந்து கொண்டேன்.
"அப்படியா? எந்த ஊரில் ஐயா, அவ்வளவு நல்ல கச்சேரி? நாயனம் யார் வாசித்தது?" என்று கேட்டேன்.
"திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சாமி?"
"திருவழுந்தூர் சிவக்கொழுந்தா? அது யார்? நான் கேட்டதில்லையே?" என்றேன்.
வெகு காலத்துக்கு முன்பு சிவக்கொழுந்து என்று பிரசித்து பெற்ற நாயனக்காரர் இருந்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவர் நான் பிறப்பதற்கு முன்னாலேயே காலஞ்சென்ற மனிதர். அவருக்குத் திருவழுந்தூருமில்லை!
"கேட்டதே இல்லையா? நினைத்துப் பாருங்க சாமி. 1929-30இல் நீங்க எங்க இருந்தீங்க?"
"ஓஹோ! 1929-30 லா? பாதி நாள் சர்க்கார் விருந்தாளியா இருந்தேன். பாக்கிப் பாதி நாள் சேலம் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் இருந்தேன்.
"சரிதான்; அதனால் தான் நீங்கள் கேள்விப்படவில்லை. திருவழுந்தூர்த் தம்பி அந்த இரண்டு வருஷ காலம்தான் பிரசித்தமாயிருந்தது. ஆனால் அந்த இரண்டு வருஷத்திலேயே அது சங்கீத உலகத்தையே ஜயித்துவிட்டது."
எனக்குப் பகீர் என்றது. கலை உலகில் மகா மேதாவிகளாக கிளம்பும் சிலர் அற்பாயுஸிலே இறந்து விடுவது சகஜமாயிருக்கிறதல்லவா? உடனே, கிட்டப்பாவின் ஞாபகம் எனக்கு வந்தது.
"ஐயோ, பாவம்! கிட்டப்பா மாதிரி..."
"இல்லீங்க, சாமி, இல்லீங்க! உங்கள் வாயாலே, அப்படிச் சொல்லாதீங்க. தம்பி தீர்க்காயுஸா இருக்கட்டும்னு சொல்லுங்க."
"ரொம்ப சந்தோஷம், ஐயா! தீர்க்காயுளாய், சிரஞ்சீவியாய், என்றும் பதினாறாய், மார்க்கண்டனைப் போலிருக்கட்டும். ஆனால், பெயர் ஏன் இப்போது மறைந்து போச்சு? ஏன் அவர் வாத்தியம் வாசிக்கிறதில்லை?"
"ஏன் வாசிக்கிறதில்லை? வாசித்தால் உலகம் தாங்காது. எல்லாரும் பைத்தியம் பிடித்துப் போய் விடுவார்கள். அதனால் தான் நான் கூட அடிக்கடி தம்பியைப் பார்க்கப் போகிறதில்லை. நேற்று ராத்திரி அது வாசித்துக் கேட்டேன். அப்போது முதல் வெறி பிடித்தது போலிருக்கு. தவுலைக் கிழித்து எறிந்து விட்டு, 'இனி மேல் ஒருத்தனுக்கும் தவுல் வாசிக்கிறதில்லை' என்று சபதம் பண்ணத் தோன்றுகிறது. அடாணா ராகம் ராத்திரி வாசிச்சுது பாருங்கள்! ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணிலே ஜலம் வந்தது. மறு நிமிஷம் எழுந்து ஆனந்தக் கூத்தாடலாம் என்று தோன்றிற்று. அதை நினைக்கும் போதே மயிர்க் கூச்சல் எறிகிறது."
4
கதையே அடியே பிடித்துச் சொல்லும்படி நான் ரொம்பவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தவுல் கந்தப்ப பிள்ளை சொல்லத் தொடங்கினார்.
"திருவழுந்தூர்த் தம்பியை நான் முதன் முதலில் சந்தித்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு மேலிருக்கும். அப்போதுதான், அதனுடைய பெயர் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. ஒரு கோயில் கும்பாபிஷேகத்தில் தம்பியின் கச்சேரிக்கு என்னை தவுலுக்கு அழைப்பதற்கு வந்திருந்தார்கள். ஒரு மைனர் பையனின் கச்சேரிக்குப் போய் வாசிக்கிறதாவது என்று நினைத்து முதலில் சாக்குப் போக்குச் சொன்னேன். ஆனால் வந்தவர்கள் என்னை விடவில்லை. 'உங்களைத்தான் தவுலுக்கு அமர்த்த வேணுமென்று சிவக்கொழுந்து பிள்ளை பிடிவாதமாய்ச் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தினார்கள். உடனே அப்படிப்பட்ட பையனைப் பார்க்க வேணுமென்று எனக்கும் தோன்றி, சம்மதம் கொடுத்து அச்சாரமும் வாங்கிக் கொண்டேன்.
கச்சேரி செய்யக் கிளம்பி இரண்டு வருஷத்துக்குள்ளே பிள்ளையாண்டான் இவ்வளவு பேர் எடுத்திருக்கிறானே, ஏதோ சுமாராய் ஊதுவான் என்று நினைத்துக் கொண்டுதான் போனேன். ஆனால், தம்பி நாயனத்தை வாயிலே வைத்து ஊத ஆரம்பித்தானோ இல்லையோ, இது சுமார் வாசிப்பில்லை, பிரமாதம் என்று தெரிந்து போயிற்று. அரைமணி வாசிப்பதற்குள் எனக்குப் பரவசமாய்ப் போய்விட்டது. மன்னார்குடி சின்னப்பக்கிரி, செம்பொன்னார் கோயில் ராமசாமி முதலிய மகாவித்வான்களின் பரம்பரைக்கு வாரிஸாக வந்திருப்பவன் இந்தப் பிள்ளையாண்டான் தான் என்று தீர்மானித்து விட்டேன்.
என்னைத்தான் தவுலுக்கு வைக்க வேண்டுமென்று தம்பி வற்புறுத்திய காரணம் என்னவென்று தெரிய வந்தது. என்னுடைய தவுல் வாசிப்பின் மேல் சிவக்கொழுந்துக்கு அபாரப் பிரியம். அது மட்டுமல்ல, கொஞ்ச காலமாகத் தம்பி எங்கே கச்சேரிக்குப் போனாலும் அங்கே சண்டையாக முடிந்து கொண்டிருந்ததாம். தம்பியின் மேல் மற்ற நாதஸ்வர வித்வான்களுக்கெல்லாம் அவ்வளவு அசூயை உண்டாகியிருந்தது.
சாமி! புகழ் என்பது இருக்கிறதே, அது மகா பொல்லாதது. ஒரு மனுஷனுக்கு ஒரு பக்கத்தில் எவ்வளவு புகழ் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு இன்னொரு பக்கம் அவன் மேல் கோபமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும், கலை, வித்வத் என்று சொன்னால் போதும். 'நேற்று முளைத்த இந்தப் பையன் இவ்வளவு நன்றாக வாசிக்கிறதா? இவ்வளவு செல்வாக்கு அடைகிறதா?' என்று எல்லாருக்கும் ஒரே வயிற்றெரிச்சல். ஆகவே, நாதஸ்வரக்காரர்கள் கூடுமிடமெல்லாம் திருவழுந்தூர்த் தம்பியை இகழ்ந்து பேசுவதே வேலையாய்ப் போயிருந்தது.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் ஒரு பிரசித்தமான கோயிலில் பங்குனி உற்சவத்துக்குச் சிவக்கொழுந்தை வரவழைத்திருந்தார்களாம்.
உள்ளூர் நாயனக்காரர் ஒருவரும் வாத்தியம் வாசித்தார். உற்சவம் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு கோஷ்டிக்கும் புகைந்து கொண்டிருந்தது. திருக்கல்யாண உற்சவத்தின் போது மண்டபத்தில் கச்சேரி நடந்தது. தம்பி வாசித்துக் கொண்டிருக்கையில் உள்ளூர் நாயனக்காரரும் அவருடைய ஸெட்டைச் சேர்ந்தவர்களும் பின்னால் உட்கார்ந்து கேலி செய்து கொண்டிருந்தார்கள். 'நாயனத்தை நிமிர்த்திப் பிடிக்கிறதா, தலை கீழாய்ப் பிடிக்கிறதா என்று தெரியாத பசங்களெல்லாம் கச்சேரி பண்ண வந்துடறாங்க" என்று ஒருத்தன் சொன்னானாம். 'கேட்கிறவனுங்க ஞானசூன்யங்களாயிருந்தால், எவன் வேணுனாலும் தான் வாசிக்க வருவான்' என்றானாம் இன்னொருவன். இதெல்லாம் சிவக்கொழுந்தின் காதில் பட்டும் படாமலும் விழுந்து கொண்டிருந்த போதிலும், அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் தம்பி வாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர் ஸெட்டின் தவுல்காரர் ஒரு தடவை 'தாளம் தப்பிப் போச்சு!' என்று சொன்னபோது தம்பிக்குக் கோபம் வந்து விட்டது. திரும்பிப் பார்த்து, 'யாரடா தாளம் தப்பிப் போச்சு என்று சொல்லுகிறவன்? முன்னாலேயே வந்து தாளம் போடுங்கடா!' என்று காரமாய்ச் சொல்லிற்று. தம்பியின் மேல் அபிமானம் உள்ளவர்கள் பக்கத்தில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பிரமாதமாய்க் கோபம் வந்துவிட்டது.
அவர் 'இவன்கள் கிடக்கானுக, தம்பி, ரொம்ப தாளத்தைக் கண்டுட்டானுக! சோத்துக்குத் தாளம் போடறவனுகதானே! நீ பாட்டுக்கு வாசி' என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். கலகம் முற்றி விட்டது. உள்ளூர் நாயனக்காரர் நாயனத்தைத் தூக்கி அடிக்க வந்தார். தவுல்காரர் ஒருவரையொருவர் கோலினால் அடித்துக் கொண்டார்கள். ஜாலர்களைப் பிடுங்கி எறிந்தார்கள். சற்று நேரம் ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. தர்மகர்த்தா, குருக்கள் முதலியவர்கள் வந்து சண்டையை விலக்கி நிறுத்தினார்கள். பிறகு யார் மேல் குற்றம் என்று விசாரணை நடந்தது. சபையிலும் இரண்டு கட்சி, சிலர் உள்ளூர் அபிமானத்தின் மேல் உள்ளூர் நாயனக்காரர் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள்.
5
அதிகம் பேர் தம்பியின் கட்சியில் இருந்தார்கள். ஆனால் தர்மகர்த்தா உள்ளூர்க் கட்சியில் இருந்தார். அவர் தம்பியின் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து, 'நீ வாசித்தது போதும் எழுந்து போகலாம்' என்று கட்டளையிட்டார். ஆனால், கோயில் குருக்கள் ஐயாவுக்கு, தம்பியின் வாசிப்பு என்றால் உயிர். ஆகையால் அவர், 'சிவக்கொழுந்து கோயிலை விட்டுப் போனால் நானும் இதோ கிளம்பி விடுகிறேன்' என்று ஆவேசம் வந்தவர் போல் கிளம்பி விட்டார். அப்புறம் மறுபடியும் மத்தியஸ்தம் பண்ண வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை; பல தடவைகளில் கலகம் நடக்கவே சிவக்கொழுந்து யோசனை பண்ணி, என்னை எப்படியாவது தவுலுக்குச் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தது. நான் அதோடே சேர்ந்து விட்டால் அப்புறம் எவனும் வாலை ஆட்ட மாட்டான் என்று தம்பிக்கு அவ்வளவு நிச்சயம்.
6
இதெல்லாம் பிற்பாடு தம்பியே மனசைவிட்டுச் சொல்லித் தான் நான் தெரிந்து கொண்டேன். அது முதல் நாங்கள் இருவரும் சேர்ந்தே கச்சேரிக்குப் போகத் தொடங்கினோம். மற்ற நாயனக்காரர்களுக்கெல்லாம் இதனால் என் பேரில் காய்ச்சல், என்னை பகிஷ்காரம் பண்ணுகிறது என்றும் தீர்மானம் செய்திருந்தார்கள். ஆனால், எனக்கு என்ன வந்தது சாமீ! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழ கதர் வேஷ்டி. சோற்றுக்குத் துணிக்கு ஏதோ பகவான் கொடுத்திருக்கிறார். 'கிடக்கிறான்கள்' என்று நான் அலட்சியமாய்த் தான் இருந்தேன்.
அந்த சமயத்தில் அவர்களுடைய பகிஷ்காரம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
இந்த சமயத்தில் நான் குறுக்கிட்டு, "பிள்ளைவாள்! தம்புரா சுருதியைப் பற்றி எதற்காக இவ்வளவு...?" என்று ஆரம்பித்தேன். நான் மேலே பேச அவர் இடங் கொடுக்கவில்லை.
"எனக்குத் தெரியும் சாமி, தெரியும். நீங்கள் தம்புரா சுருதியை ஆதரிக்கிறவர் என்று அந்த விவகாரம் இப்போது வேண்டாம். திருவழுந்தூர் தம்பி அப்படியெல்லாம் புது வழிக்குப் போகவில்லையென்றுதான் சொல்கிறேன். ஆனாலும் வாசிப்பு அற்புதமாயிருந்தது. தேவகானம் என்றால் தேவகானந்தான். அதற்கேற்றார் போல் நாளுக்கு நாள் செல்வாக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது, பணம் வந்து குவிந்தது.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு எவ்வளவோ சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால், ஒரே ஒரு விஷயம் மனத்திற்கு மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தது. கலைக்கும் வித்வானுக்கும் பெரிய சத்ரு எது தெரியாதா, சாமி! தம்பிக்கும் அந்தக் கொடிய மதுபானப் பழக்கம் இருந்தது. எப்படியாவது அந்தப் பழக்கத்திலிருந்து தம்பியை விடுவிக்க வேண்டுமென்று நான் ஆத்திரம் கொண்டிருந்தேன். அடிக்கடி ஜாடை மாடையாகச் சொன்னேன். சில சமயம் தெளிவாகவும் சொன்னேன். தம்பிக்கு, என்னிடம் ரொம்பப் பயபக்தி உண்டு. ஆகவே, நான் சொல்லும் போது பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும். கெட்ட பழக்கம் என்று அதுக்குத் தெரியாமலுமில்லை. ஆனால் விடுவதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ, நான் சொல்லிக் கொண்டு வந்ததன் பயனாக, ரொம்ப மீறிப் போகாமல் கட்டுக்குள் இருந்தது. இந்த மட்டிலாவது இருக்கிறதே என்று நான் ஒருவாறு திருப்தியடைந்திருந்தேன்.
இப்படியிருக்கையில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. தேசமெங்கும் அமளிதுமளிப்பட்டது. எனக்கு ரொம்ப நாளாகவே தேசிய விஷயங்களில் சிரத்தை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமே! அந்த நாளில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். சில சமயம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டங்களில் தலைவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தம்பியின் மனம் கனிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்தேன். கடைசியில், காந்தி மகானைக் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது. அன்று கும்பகோணத்தில் பிரமாண்டமான கூட்டம். பட்டணமே திரண்டு வந்தது போலிருந்தது. தம்பிக்கு இரண்டு வருஷமாகக் கும்பகோணத்தில் தான் ஜாகை. நானும் அடிக்கடி கும்பகோணம் வருவேன். அன்றைய தினம் பொதுக்கூட்டத்துக்கு நானும் தம்பியும் போயிருந்தோம். கூட்டத்தில் அன்று பேசியவர்கள் எல்லாரும் ரொம்பவும் உருக்கமாகப் பேசினார்கள். என் பக்கத்திலிருந்த தம்பியின் கண்களில் ஜலம் பெருகி வழிவதைப் பார்த்தேன்.
7
கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தபிறகு, திடீரென்று சலசலப்பு உண்டாயிற்று. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டமாக வருவது தெரிந்தது. கூட்டங்களைத் தடியால் அடித்துக் கலைத்து விடும்படி அன்றைய தினந்தான் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாம். ஜனங்களுக்கு இது ஒன்றும் தெரியாது. அவர்களில் பெரும்பாலோர் திரும்பிப் பார்த்து, இது என்ன சமாச்சாரம் என்று யோசிப்பதற்குள் போலீஸ்காரர்கள் திடும் பிரவேசமாக கூட்டத்திற்குள் பிரவேசித்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார்கள். உடனே, கூட்டம் கலைய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷத்துக்குள் முக்கால்வாசிப் பேர் ஓடிப் போய் விட்டார்கள். கடைசி வரையில் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன். நான் ஓடவில்லை. தோளிலும் முதுகிலும் நாலைந்து அடி வாங்கிக் கொண்ட பிறகு மெதுவாகத்தான் அங்கிருந்து சென்றேன்.
தம்பி முன்னயே ஓடிப் போய் எனக்காக ஒரு சந்தின் முனையில் காத்துக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டழுதது. இருவரும் அதிகமாகப் பேசாமல் வீட்டை நோக்கிச் சென்றோம். வழியில் கடைத்தெருவில், ஹனுமார் கோயிலண்டை வந்ததும் தம்பி, 'நில்லுங்க, அண்ணே!' என்று கூச்சல் போட்டது. அனுமார் சந்நிதியில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தது.
"ஸ்வாமி! ஆஞ்சநேயா! இன்று முதற் கொண்டு மதுபானம் என்பதையும் கண்ணாலும் பார்க்க மாட்டேன்; கையாலும் தொடமாட்டேன். சத்தியம்! சத்தியம்" என்று பிரமாணம் செய்தது.
பாவி நான், அப்போது, சும்மா இருந்திருக்கக் கூடாதா? "தம்பி, அனுமார் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அதிலும் கடைத்தெரு அனுமார் ரொம்ப சக்தியுள்ளவர். அவருடைய சந்நிதியில் பிரமாணம் செய்திருக்கிறாய், ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்" என்றேன்.
அப்போது தம்பி, "அப்படி நான் என் பிரமாணத்தை மீறினால், என் தலையில் இடிவிழட்டும்; என் கண் அவிந்து போகட்டும்" என்று உரத்த குரலில் சொல்லிற்று.
ஸ்வாமி! நிஜமாகச் சொல்கிறேன், அப்போது என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. 'அட பாவி! இவ்வளவு பயங்கரமான சபதம் ஏன் செய்தாய்?' என்று உரத்த குரலில் சொல்ல விரும்பினேன்; ஆனால் நா எழவில்லை.
8
சிவக்கொழுந்தினிடம் எனக்கு அபிமானம் அதிகமாவதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்தது. என் தமக்கை ஒருத்தி கும்பகோணத்தில் புதுச் செட்டித் தெருவில் இருந்தாள். நான் கும்பகோணம் போனால் அங்கேதான் தங்குவது வழக்கம். அவள் மகள் வனஜாட்சியை இந்த மானக்கேடானா தொழிலுக்கு விடக்கூடாது. நல்ல இடமாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று நானும் சுந்தர காமாட்சியுமாக யோசித்து முடிவு கட்டி வைத்திருந்தோம்.
நான் கும்பகோணத்தில் இருக்கும் காலங்களில் சிவக்கொழுந்து தம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் நான், "ஆகா! நம்முடைய வனஜாவுக்கும் சிவக்கொழுந்துக்கும் மட்டும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டால் எவ்வளவு மேலாய் இருக்கும்?" என்று எண்ணுவேன். என்னுடைய ஆசை நிறைவேறலாம் என்பதற்கு அறிகுறிகளும் தோன்றி வந்தன. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவர் பிரியம் ஏற்பட்டு வந்ததாகத் தோன்றியது.
வனஜா, பார்க்கிறதற்கு, ரம்பை, ஊர்வசி என்று சொல்கிறார்களே அந்த மாதிரியெல்லாம் பிரமாதமாக இருக்க மாட்டாள். ஆனால், அப்படி அவலட்சணமும் இல்லை. முகத்தில் நல்ல களை. குடித்தனப் பெண் பாங்காய் இருப்பாள். ஆனால் புத்திசாலித்தனத்தில் அவளுக்கு ஈடான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது. ஏனோ என் மருமகளாச்சே என்று நான் சொல்கிறதாக நீங்கள் நினைக்கக் கூடாது. எனக்கே சொந்தத்திலே குழந்தை குட்டிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பற்றி நான் அப்படிச் சொல்கிறேனா? கிடையாது.
வனஜாவை சங்கீதக் கச்சேரிக்கோ நாட்டியத்துக்கோ தயார் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. இந்தத் தொழில் எல்லாம் எங்கள் தலை முறையோடு போகட்டும், குழந்தைகள் எல்லாரும் குடியும் குடித்தனமுமாக இருக்கட்டும் என்று ஆசைப்பட்டோ ம். ஆகையால், வனஜாவைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினோம். ஏழெட்டு கிளாஸ் வரையில் படித்த பிறகு பள்ளிக் கூடத்தையும் நிறுத்தி ஆயிற்று. அப்புறம் வனஜா வீட்டில் சும்மா தான் இருந்தாள்.
9
என்ன இருந்தாலும் பரம்பரையாக வந்த கலை போகுமா? வனஜாவுக்கு சங்கீதம் நாட்டியம் அபிநயம் எல்லாம் இலேசாக வந்தது. ஆனால் அவ்வளவும் குறும்புத்தனமாக மாறிற்று. வனஜா எங்கே என்னத்தைப் பார்த்தாலும் அதே மாதிரி தானும் செய்து விடுவாள். யார் எப்படிப் பாடினாலும், அதே மாதிரி பாடிக் காட்டுவாள். நாடகம் பார்த்தால், யார் யார் எப்படி நடித்தார்களோ அப்படியே நடித்துக் காட்டுவாள். மனுஷ்யாளுடைய சாதாரண நடை உடை பாவனைகள் அவளுக்கு அப்படியே வந்துவிடும். யார் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எப்படி நடக்கிறார்கள் - அம்மாதிரியெல்லாம் செய்து காட்டி பரிகாசம் பண்ணுவாள். வனஜா இருக்கும் இடமெல்லாம் ஒரே சிரிப்பும் விளையாட்டும் ஆகத்தான் இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். அலட்சியமாகத் தூக்கி எறிந்துதான் பேசுவாள். 'இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. பதவிசா இருக்க வேண்டும்' என்று அவளுக்கு நான் அடிக்கடி புத்தி சொல்வதுண்டு.
ஆனால், வனஜாவின் விஷமம், வாய்த் துடுக்கு, சிரிப்பு, விளையாட்டு, எல்லாம் ஒரே ஒரு ஆசாமியின் முன்னால் மட்டும் மாயமாய் மறைந்து போயின. சிவக்கொழுந்து தம்பி வந்துவிட்டால் இல்லாத நாணம் வெட்கம் எல்லாம் வந்துவிடும். தம்பி முன்னால் அவள் அதிர்ந்து பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் தான் பதில் சொல்வாள். வழக்கம் போல் கலீரென்று சிரிக்க மாட்டாள். தம்பி ஏதாவது வேடிக்கையாகப் பேசினால் இலேசாகச் சிரிப்பாள். சிவக்கொழுந்தின் நாயனம் கேட்பதில் அவளுக்கு ரொம்ப ஆசை. கும்பகோணத்தில் உத்ஸவம், ஊர்வலம் எதற்காவது தம்பி வாத்தியம் வாசித்தால் அதை அவள் கேட்காமல் இருக்க மாட்டாள். அடுத்தாற்போல் சிவக்கொழுந்து வீட்டிற்கு வரும்போது, அந்த ராகம் நன்றாய் இருந்தது, இந்தக் கீர்த்தனம் அபூர்வமாயிருந்தது என்றெல்லாம் சொல்வாள்.
நான் எப்போது வீட்டுக்கு வந்தாலும், பின்னால் தம்பி வருகிறதாயென்று ஆவலுடன் பார்ப்பாள். வராவிட்டால், ஜாடையாக, "அவர் சௌக்கியந்தானே? உடம்புக்கு ஒன்றுமில்லையே?" என்று கேட்பாள்.
சிவக்கொழுந்தின் மனமும் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். தம்பி இந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் வனஜா வாசலில் நின்று வரவேற்காவிட்டால், அவனுடைய கண் சுற்றும் முற்றும் பார்க்கும். வீட்டை விட்டுப் புறப்படும் போதும் அப்படித்தான். வனஜாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் போக மாட்டான். "போகலாமா! மாமா!" என்று கேட்டுக் கொண்டு நிற்பானே தவிர, கிளம்பமாட்டான்.
இந்தப் பிள்ளைகளுடைய மனசு எனக்குக் கண்ணாடி மாதிரி தெரிந்து போயிற்று. சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் தான் பகவான் பிணைத்துப் போட்டிருக்கிறார் என்று நான் தீர்மானம் பண்ணிக் கொண்டேன். இதைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. என் சகோதரிக்கும் இது ரொம்பத் திருப்தியாகத்தானிருந்தது.
எங்களுடைய எண்ணம் இவ்வளவு சுலபமாகப் பலிக்கப் போகிறதை எண்ணி நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய சந்தோஷத்தில் மண்ணைப் போடுவதற்கு ஒரு பாவி வந்து சேர்ந்தாள். அவளை உங்களுக்கும் தெரிந்து தான் இருக்கும். திருச்செந்தூர் மனோரஞ்சிதம் என்று பெயர். இப்போது அவள் பெயர் மங்கிப் போயிருக்கிறது. ஆனால், அடேயப்பா! அந்தக் காலத்தில் அவளுக்கிருந்த மவுஸைச் சொல்ல முடியாது. அவளுடைய நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தது. வந்து பத்து நாளைக்குள் கும்பகோணமே பயித்தியமாய்ப் போய்விட்டது.
கதைக்குக் காலில்லை என்பார்களே, அந்தமாதிரி, கலை உலகத்தில் ஒருவருக்குப் புகழ் ஏன் வருகிறது, ஏன் போகிறது என்பதற்குக் காரணமே சில சமயம் இருப்பதில்லை. அந்த மனோரஞ்சிதம் என்கிற பெண் பிள்ளை ரொம்ப சாதாரணம் என்பது என் அபிப்பிராயம். இராத்திரியிலே, முகத்திலே பவுடரை வாரி அப்பிக் கொண்டு, பளபளவென்று சம்கி புடவையைக் கட்டிக் கொண்டு, எலக்டிரிக் லைட்டுக்கு முன்னால் வந்து நின்றால் ஏதோ பிரமாதமாய்த் தானிருக்கும். வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பகலிலே பார்த்தால், என் முகத்திலே இருக்கிற லட்சணம் கூட இருக்காது.
அவள் பாட்டோ ரொம்ப மட்டம். ஹிந்துஸ்தானி மெட்டுகளிலே தளுக்காய் நாடகத்துக்கு வேண்டிய பாட்டுக்கள் பாடுவாள். அவ்வளவுதான். சாரீரம் சுமாராயிருக்கும். ஆனால் கால் மணி நேரம் காம்போதியைப் பிடித்து ஆலாபனம் பண்ணச் சொல்லுங்கள்; வெறும் பூஜ்யம். தாளம் தவறாமல் ஒரு தியாகராஜ கீர்த்தனத்தைப் பாடச் சொல்லுங்கள்; முடியாது! 'தாளத்தை வீட்டிலே வைச்சுட்டு வந்திருக்கேன், எடுத்துக்கிட்டு வரலை' என்று சொல்லக் கூடிய பேர்வழி.
10
இந்த சாதாரண நாடகக்காரியின் மேலேதான் கும்பகோணம் அப்படி பயித்தியம் பிடித்து அலைந்தது. ஒரு நாளைக்கு டிக்கடி கிடைக்கவில்லை என்று, ஜனங்கள் கொட்டகை மேல் கல்லை விட்டெறிந்தார்கள். எவ்வளவுக் கூட்டம் வந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் அந்தப் பெண் பிள்ளை பகலிலே எங்கேயாவது வெளியிலே கிளம்பினால் போதும், ஆயிரம் ஜனங்கள் பின்னோடு போய்க் கொண்டேயிருப்பார்கள். அவள் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தால் அன்றைக்கு உற்சவம் மாதிரிதான். அவ்வளவு ஜனங்கள் கூடிவிடுவார்கள். ஆனால் எல்லாரும் அந்த நாடகக் காரியைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஸ்வாமியைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.
இப்படி ஊரெல்லாம் பயித்தியமாகப் போனதில் நான் ஆச்சரியப்படவில்லை. பாலாமணி காலத்திலிருந்து இந்த மாதிரி எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திருவழுந்தூர்த் தம்பியும் அந்த மாதிரி பிரமை பிடித்துப் போனதுதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது. அதனால் எனக்கு உண்டான மன வேதனைக்கு அளவே கிடையாது. தம்பியினுடைய வித்வத் என்ன? யோக்யதை என்ன? செல்வாக்கு என்ன? இவன் போய் அந்த நாடகக்காரி காலிலே விழுகிறதாயிருந்தால் அதைவிட அவமானம் வேறென்ன இருக்கிறது சாமி?
11
அந்த நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்ததிலிருந்து சிவக்கொழுந்து ஒரு நாள் நாடகமாவது பார்க்காமலிருந்தது கிடையாது. வெளியூர்களுக்கு எங்கேயாவது கச்சேரிக்குப் போனாலும் நாடகம் நடக்கும் ராத்திரிக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடுவான்.
மனோரஞ்சிதம் மேடைக்கு வந்து விட்டால், நம்ம பையனைப் பார்க்கவே முடியாது. தேன் குடித்த குரங்கு என்பார்களே, அந்த மாதிரிதான்.
வேடிக்கையை வேணுமானால் கேளுங்கள். சிவக்கொழுந்துக்குப் பிடித்திருந்த நாடகப் பைத்தியம் வனஜாட்சியையும் பிடித்துக் கொண்டது. அவளும் தவறாமல் நாடகத்துக்குப் போய் வந்தாள். ஆனால் அவள் நாடகம் மட்டும் பார்க்கப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டு மூன்று நாள் நானும் கவனித்தேன். சிவக்கொழுந்து மேடையையே பார்த்துக் கொண்டிருக்க, வனஜாட்சி சிவக்கொழுந்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கொட்டகையில் அவன் ஒரு மூலையில் இவள் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும், எப்படியோ அவளுடைய கண் அவன் இருக்குமிடந்தேடிக் கண்டுபிடித்துவிடும்.
இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வனஜாட்சியின் மனவேதனை எனக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் இந்த அசட்டுப் பிள்ளையை நினைத்து நினைத்து உருகிப் போய்க் கொண்டிருந்தாள் என்பதையும் கண்டேன். நாடகக் கம்பெனி வந்ததிலிருந்து, சிவக்கொழுந்து எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. வனஜாட்சி சில சமயம் "ஏன் மாமா! இந்த நாடகக் கம்பெனி எப்போது ஊரை விட்டுப் போகப் போகிறது?" என்று கேட்பாள். கேட்கும் போதே அவள் கண்களில் ஜலம் தளும்பி நிற்கும். நான் அவளுடைய குறிப்பை அறிந்து கொள்வேன். என்னுடைய மனமும் கஷ்டப்பட்ட தென்றாலும், வெளிப்படையாக, "சீ! பைத்தியமே உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? ஊரில் யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? ஏதாவது வேலை இருந்தால் பார் போய்!" என்பேன். இன்னும் சில சமயம் அவள், "மாமா! நானும் டிராமாவில் சேரப் போகிறேன்" என்பாள். நாடகத்தில் மனோரஞ்சிதம் பாடியபடியெல்லாம் பாடி, அவள் நடித்தபடியெல்லாம் நடித்துக் காட்டுவாள். "ஐயோ! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பலமாகப் பிடித்து விட்டதே" என்று எண்ணி வருத்தப்படுவேன்.
நம் ஊர்க்காரர்கள் சாதாரணமாய் ஒன்று என்றால், நூறு என்பார்கள். ஒன்றும் இல்லாத போதே பொய்யும் புளுகும் கற்பனை செய்வார்கள். கொஞ்சம் நிஜமும் இருந்தால் கேட்க வேணுமா? சிவக் கொழுந்தின் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. இந்த மாதிரி மேதாவியான பிள்ளைக்கு இப்படி அசட்டுப் பட்டம் வந்ததேயென்று எனக்கு எவ்வளவோ வருத்தமாய் இருந்தது.
கடைசியாக நாடகம் முடிந்தது. அதாவது கும்பகோணத்தில் மனோரஞ்சிதம் கம்பெனியாரின் நாடகம் முடிந்தது. அவர்கள் அடுத்தபடியாக சென்னை பட்டிணத்திற்குக் கிளம்பினார்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்புகிற அன்று சிவக்கொழுந்து அந்த நாடகக் காரியின் ஜாகைக்குப் போய் அங்கேயே இருந்ததாகவும், ரொம்பவும் அசட்டுப் பிசட்டு என்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் அவர்களை வழி அனுப்புவதற்குப் போயிருந்தானாம். ரயில் கிளம்பிக் கொஞ்ச தூரம் போன பிற்பாடு கூட, சிவக்கொழுந்து, "நான் பட்டணத்துக்கு வரேன், அவசியம் வந்து உங்களைப் பார்க்கிறேன்" என்று இரைந்து கத்தியதாகவும், அதைக் கேட்டு பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கேள்விப்பட்டேன்.
12
நாடகக் கம்பெனி ஊரை விட்டுப் போன பிறகு, வனஜாவுக்குக் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. "ஏன், மாமா! இனி மேல் திருவழுந்தூர்த் தம்பி நம் வீட்டுக்கு வருவாங்கல்ல?" என்று கேட்டாள். அவள் கேட்டதற்கு தகுந்தாற்போல், சிவக்கொழுந்தும், இரண்டொரு தடவை வீட்டுக்கு வந்தான். அப்போதெல்லாம் வனஜாவின் தோரணையைப் பார்க்க வேண்டுமே? அடேயப்பா! ராணி தான்! குறுக்கே நெடுக்கே போவாள். சிவக்கொழுந்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள். ஏதாவது கேட்டால், பதில் சொல்லவும் மாட்டாள். காதில் கேட்காதது போல் போய்விடுவாள்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் வேடிக்கையாகவும் ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. நான் அவர்களுக்கு, புத்தி கித்தி ஒன்றும் சொல்லவில்லை சாமி! என்னுடைய உலக அனுபவத்திலே தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி இளம் பிள்ளைகள் காரியத்திலே, புத்தி சொல்கிறதனால் பிரயோசனமே ஏற்படுவதில்லை. அதனால்தான் சிவக்கொழுந்து அந்த நாடகக்காரி மையலில் அகப்பட்டிருந்தபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இதிலேயெல்லாம் அவர் அவர்களும் பட்டுப் பட்டுத் தேற வேண்டும். கஷ்டமோ, சுகமோ, அனுபவித்துத்தான் புத்தி வர வேண்டும். குறுக்கே ஏதாவது சொன்னோமானால் பைத்தியம் முற்றிப் போய்விடுகிறது.
இப்படி இரண்டு மூன்று மாதம் ஆயிற்று. சென்னைப் பட்டணம் கந்தஸ்வாமி கோயில் உற்சவத்திற்கு சிவக்கொழுந்தை அழைத்துக் கொண்டு வரும்படி எனக்குக் கடிதம் வந்தது. பட்டணத்தில் அந்தப் பழிகாரி இருக்கிறாளே என்று அப்போதே மனசில் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அதற்காக வந்தக் கச்சேரியை விட முடியுங்களா? கிளம்பிப் போனோம். ஆகா! சாமி! அந்தக் கச்சேரியில் சிவக்கொழுந்து என்னமாய் வாசித்தது என்கிறீர்கள்? அது தான் கடைசி கச்சேரி என்று தம்பியின் அந்தராத்மாவுக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. அதனால்தான், அவ்வளவு அற்புதமாய் அமைந்ததோ, என்னமோ? ஒரு நாள் ராத்திரி தம்பி பைரவிராகம் வாசித்த போது, கேட்டவர்கள் எல்லாம் அழுது விட்டார்கள். தம்பியின் வாசிப்பில் முன்னைக்கு இப்போது கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. முன்னேயெல்லாம், கல்யாணி, சங்கராபரணம், ஹம்ஸத்வனி, நாட்டை, கேதாரம் இந்த மாதிரி ராகங்கள் வாசிப்பதிலேதான் தம்பிக்கு உற்சாகம். எனக்கும் தவுல் வாசிக்க ரொம்ப உற்சாகமாய் இருக்கும். கொஞ்ச நாளாகத் தம்பி காம்போதி, கேதாரகௌளம், உசேனி, முகாரி, கமாசு - இப்படி அதிகமாக வாசிக்க ஆரம்பித்திருந்தது. இந்த ராகங்களெல்லாம் வாசிக்கும் போது, எனக்குச் சில சமயம் கண்ணில் ஜலம் வந்துவிடும். உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு எறியும். தவுல் வாசிப்பதற்கே ஓடாது! ஏதோ விரல் வழக்கம் போல் தட்டிக் கொண்டிருக்குமே தவிர, மனசெல்லாம், தம்பியின் வாசிப்பில் ஈடுபட்டிருக்கும். நடு நடுவே, இரண்டு கையையும் தூக்கிக் கும்பிட்டு, 'ஹர ஹர! மகாதேவா!' என்பேன். இதைப் பார்த்துவிட்டு, சிலபேர் சிரிப்பார்கள்; முட்டாள்கள்! சங்கீதம் அனுபவிக்கும் விதம் அவர்களுக்கென்ன தெரியும்?
மூன்று நாள் கச்சேரியும் முடிந்தது. நாலாம் நாள் பொழுது விடிந்தது. "இன்றைக்கு ஊருக்கு புறப்படலாமா, தம்பி!" என்றேன்.
"கொஞ்சம் பொறுங்கள் மாமா. புதன் கிழமை தானே சிதம்பரத்தில் கச்சேரி? நேரே காரிலேயே போய் விடலாம்" என்றது தம்பி.
சிவக்கொழுந்துக்குக் கொஞ்ச நாளாக மோட்டார் கார் பைத்தியமும் ஏற்பட்டிருந்தது. 'டிரைவ்' பண்ணக் கத்துக் கொண்டிருந்தான். அடுத்த தடவை பட்டணம் போகும்போது கார் வாங்கி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அன்று பகலெல்லாம் சுற்றி, கடைசியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு 'ஸெகண்ட் ஹாண்ட்' கார் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சொற்ப மைலே ஓடியிருந்த படியால், 'ஸெகண்ட் ஹாண்டா'ய் இருந்தாலும் வண்டி பார்ப்பதற்கு ரொம்ப நன்றாயிருந்தது.
நல்ல வேளை; கச்சேரியிலும் கார் வாங்குவதிலும் புத்தி சென்றதனால் மனோரஞ்சிதத்தை மறந்துவிட்டான் என்று நான் எண்ணி சந்தோசப்பட்டேன். ஆனால், அது அற்ப சந்தோஷமாய் போயிற்று. அன்று இராத்திரி சிவக்கொழுந்து நாடகத்துக்குப் போனான். "நீங்களும் வரீங்களா அண்ணே!" என்று அரைமனசாய்க் கூப்பிட்டான். "ரொம்ப சிரமமாய் இருக்கிறது; நான் வரவில்லை" என்று சொல்லி விட்டேன். அன்று இராத்திரியெல்லாம் என் மனசில் வேதனை குடி கொண்டிருந்தது.
13
மறுநாள் காலையில் தம்பி ரொம்ப நேரம் கழித்து தான் எழுந்தான். எழுந்ததும் பரபரப்புடன் ஸ்நானபானாதிகளை முடிக்கத் தொடங்கினான். ஜோராக டிரஸ் பண்ணிக் கொண்டான். எல்லாம் ஆனதும் "மாமா! கொஞ்சம் வெளியிலே போய் விட்டு வருகிறேன். சாப்பாட்டுக்கு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரும்பி வருவதற்கு நேரம் ஆனாலும் ஆகும்" என்றான்.
"தம்பி! இதென்ன பேச்சு? நாளைப் பொழுது விடிந்தால் சிதம்பரத்தில் இருக்க வேண்டுமே? புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யாமல் எங்கேயோ போகிறேன் என்கிறாயே?"
"கட்டாயம் இன்று இராத்திரியே கிளம்பி விடலாம் மாமா! ராத்திரி பத்து மணிக்குக் காரில் கிளம்பினால், பளபளவென்று பொழுது விடியும் போது சிதம்பரம் போய்விடலாம். உங்களுக்குத் தூக்கம் விழிக்க வேண்டாமென்றிருந்தால் நீங்கள் வேணுமானா ராத்திரி ரயில் ஏறி விடுங்கள்" என்றான்.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போனவன் இனிமேல் சாயங்காலம் தான் திரும்பி வருவான் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் அவன் திரும்பி வந்துவிடவே எனக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று.
"என்ன தம்பி! அதற்குள்ளே வந்துவிட்டாய்?" என்று நான் கேட்டதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், உள்ளே போய் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் விம்மி அழும் சத்தம் கேட்டது.
தம்பியுடன் சோக்ரா பையனும் போயிருந்தான். அவனைக் கூப்பிட்டு "என்னடா சமாசாரம்?" என்று விசாரித்தேன். அவன் எல்லா விவரமும் சொன்னான். ஸாந்தோமில் இருந்த மனோரஞ்சிதத்தின் பங்களாவுக்குப் போனார்களாம். வாசலில் ஏற்கனவே ஐந்து ஆறு மோட்டார் வண்டிகள் காத்துக் கொண்டிருந்தனவாம் "கும்பகோணம் சிவக்கொழுந்து பிள்ளை வந்திருக்கார்" என்று தம்பி சொல்லியனுப்பிச்சுதாம். வாசல் சேவகன் திரும்பி வந்து, "இப்போது அம்மாவுக்கு வேலை இருக்காம். பார்க்க முடியாதாம். இன்னொரு சமயம் வரச் சொன்னாங்க" என்று தெரிவித்தானாம். தம்பிக்கு முகம் அப்படியே சிறுத்துப் போச்சாம். வண்டியைத் திருப்பச் சொல்லி நேரே ஜாகைக்கு வந்து விட்டதாம்.
சாமி! இந்த விஷயம் எனக்கு ஆச்சர்யத்தை விளைவிக்கவில்லை. அந்தப் பெண் பிள்ளையை மதறாஸ்காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். பெரிய பெரிய வக்கீல்கள் என்ன, ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் என்ன, ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள் என்ன இப்படிப்பட்ட சீமான்களெல்லாம் அவள் வீட்டு வாசலில் போய்க் காத்துக் கொண்டிருந்தார்களாம்! இப்படியெல்லாம் பெருமை வந்தால், நல்ல மனுஷ்யர்களுக்கே கர்வம் தலைக்கேறிப் போய்விடும். ஒரு சாதாரண பெண் பிள்ளைக்குக் கேட்க வேண்டுமா? கேவலம் ஒரு மேளக்காரனை அவள் மதிப்பாளா?
சிவக்கொழுந்தின் மேல் எனக்குக் கோபமாய் வந்தது, இவனுடைய வித்வத் எங்கே? அவள் எங்கே? அந்த அற்பப் பெண்பிள்ளை எங்கே? அவள் வீட்டை தேடிக்கொண்டு இவன் ஏன் போகிறான்? இந்த அவமானம் அவனுக்கு நன்றாய் வேண்டும்! அப்போதுதான் புத்தி வரும். அழட்டும் நன்றாய் அழட்டும்.
இப்படி எண்ணி, அவனை சமாதானப்படுத்துவதற்கு நான் போகவில்லை. எனக்கு சில மனுஷ்யர்களை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என்று வெளியே போய்விட்டேன்.
சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்குத்தான் திரும்பி வந்தேன். வந்ததும், தம்பியைப் பற்றி விசாரித்தேன். சுமார் நாலு மணிக்குத் தம்பி அறையிலிருந்து எழுந்து வந்ததாகவும், நான் எங்கே என்று விசாரித்ததாகவும், உடனே வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றதாகவும், தெரிந்தது. ரயிலில் ஏறி நாம் பாட்டுக்குப் போய்விடலாமா, தம்பி எப்படியாவது திண்டாடிக் கொண்டு வந்து சேரட்டும் என்று முதலில் நினைத்தேன். அப்புறம் இந்த மாதிரி நிலைமையில் அவனைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது என்று தோன்றிற்று. மனத்திலே என்னமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருவேளை தம்பி வந்து சேராவிட்டால் நாளைக்குச் சிதம்பரத்தில் கச்சேரி என்ன ஆவது? அவன் தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டால், அதற்காக நாமும் அசட்டுத் தனமாகப் போகலாமா என்று நினைத்து, அவன் வரவுக்காகக் காத்திருந்தேன்.
சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் வாசலில் வண்டி வந்து நின்றது.
14
"மாமா வந்துட்டாங்களா?" என்று சிவக்கொழுந்து உற்சாகமாகக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த போது, 'போகிறது, பிள்ளைக்குப் புத்தி சரியாய்ப் போய்விட்டது போலிருக்கு' என்று நான் நினைத்துச் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நிமிடங்கூட இல்லை. உள்ளே வந்த தம்பியைப் பார்த்தேனோ இல்லையோ, அவனுடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று தெரிந்து போய்விட்டது. அப்படியே என் மனம் இடிந்து போயிற்று.
'அடி பாவி! சண்டாளி! உன்னால்தானே விபரீதம் வந்தது!' என்று அந்த நாடகக்காரியை மனத்திற்குள் திட்டினேன். நான் அன்று சாயங்காலம் தம்பியைத் தனியாய் விட்டு விட்டுப் போனதற்காக என்னையே நொந்து கொண்டேன். 'இப்போது நான் ரயிலில் போவது என்பது முடியாத காரியம். கூட இருந்து தம்பியை அழைத்துக் கொண்டு தான் போக வேண்டும்.'
இந்த இடத்தில் கந்தப்ப பிள்ளை சொன்னது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. எதையோ சொல்ல விட்டு விட்டார் என்று தோன்றிற்று. "நீர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை, ஐயா! அப்படிச் சிவக்கொழுந்தினிடம் என்ன மாறுதலைக் கண்டீர்?" என்று கேட்டேன்.
"தெரியவில்லையா, சாமி! அதைச் சொல்வதற்குக் கூட எனக்குச் சங்கடமாயிருக்கிறது. பையன் நன்றாகத் 'தண்ணி' போட்டுவிட்டு வந்திருந்தான்! அவ்வளவுதான். அனுமார் கோயிலிலே செய்த சத்தியம் போச்சு! மறுபடியும் 'சோக்ரா' பையனை விசாரித்தேன். சாயங்காலம் இன்னொரு தடவை அந்த நாடகக்காரி வீட்டுக்குப் போனதாகவும், அப்போதும் 'பார்க்க முடியாது' என்றே பதில் கிடைத்ததாகவும், இவர்கள் வாசலில் நிற்கும் போதே அவள் வெளியில் கிளம்பி வந்து மோட்டாரில் ஏறிக் கொண்டு போய்விட்டதாகவும் தம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையென்றும் 'சோக்ரா' சொன்னான். அதற்குப் பிறகு தம்பி கொஞ்ச நேரம் எங்கெல்லாமோ சுற்றி அலைந்து விட்டுக் கடைசியில் ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் வண்டியை விட்டுக் கொண்டு போயிற்றாம். நாசமாய்ப் போகிறவன்கள் தான் மதுபானக் கடைகள் வைத்திருக்கிறார்களே? சக்கைப் போடு போட்டு விட்டு வந்து விட்டான்!
இதையெல்லாம் கேட்டபோது ஒரு புறத்தில் எனக்குத் தம்பியின் பேரில் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் இரக்கமாயுமிருந்தது. அவன் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருந்தால், இந்த மாதிரி கோயிலில் செய்த பிரமாணத்தைக் கைவிட்டு மது பானம் செய்யத் தோன்றியிருக்கும்? பாழும் பெண் மோகத்தின் சக்திதான் என்ன? - போனது போகட்டும், இந்த தடவை எப்படியாவது பையனை ஜாக்கிரதையாய் ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், அப்புறம் கவலையில்லையென்று நினைத்தேன். 'இந்த நாடகக்காரிப் பைத்தியம் இத்துடன் இவனுக்கு விட்டுப் போயிற்று. பிறகு வனஜா இருக்கிறாள், பார்த்துக் கொள்கிறாள்!' என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
15
சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது. கம்பெனிக்காரர்கள் அனுப்பியிருந்த டிரைவர் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். சிவக்கொழுந்து டிரைவருக்குப் பக்கத்தில் முன் ஸீட்டில் உட்கார்ந்தான். நாங்கள் எல்லாம் பின்னால் இருந்தோம். தம்பி வண்டி ஓட்ட ஆரம்பிக்காமலிருக்க வேண்டுமே என்று என் மனசு திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஆனால் அவனிடம் அதைப் பற்றி நான் சொல்லவில்லை. சொன்னால், ஒரு வேளை 'குரங்கை நினைத்து கொண்டு மருந்து தின்னாதே' என்று சொன்ன கதைபோல் ஆகிவிடலாமல்லவா? ஆகையால் வாயை மூடிக் கொண்டு இருந்தேன்.
அன்றிரவு வானத்தில் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. ஆனால் நாங்கள் கிளம்பும் போது மழை பெய்யுமென்று தோன்றவில்லை. செங்கற்பட்டு தாண்டுகிற பொழுதுதான் சிறு தூற்றல் போட்டது. அப்போது ஆகாயத்தைப் பார்த்தேன். ஒரே காடாந்தகாரமாயிருந்தது. பெருமழை பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன்.
இப்படி எண்ணிச் சற்று நேரத்துக்கெல்லாம் நான் கண்ணசந்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. பெரிய இடிச் சத்தத்தைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன்.
ஆஹா! அந்த மாதிரி மின்னலையும் இடியையும் என் ஜன்மத்தில் நான் பார்த்தது கிடையாது. அந்த இடிச் சத்தமானது ஆகாயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் கிளம்பி, மேகங்களைக் கீறிப் பிளந்து கொண்டு, ஆகாயத்தின் இன்னொரு மூலைக்குப் பிரயாணம் செய்வது போலிருந்தது. அதுவும் சட்டென்று அவசரமாய்ப் போய்விடவில்லை. அண்டகடாகங்களையெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கச் செய்து கொண்டு நிதானமாகப் பிரயாணம் செய்தது. அதே சமயத்தில் பளீரென்று மற்றொரு மின்னல் கிளம்பிற்று. கோடி சூரியன் ஒரே சமயத்தில் கிளம்பினால் எப்படியிருக்கும்? அவ்வளவு பிரகாசமான மின்னல் அரை நிமிஷம் நின்று உலகத்தை ஜகஜ்ஜோதியாகச் செய்தது. அந்த ஜகஜ்ஜோதியின் வெளிச்சம் தாங்காமல் என் கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் அப்படி மூடிக் கொள்வதற்குள், என் வயிற்றில் நெருப்பைக் கட்டும்படியான காட்சியைப் பார்த்துவிட்டேன் சாமீ! எனக்கு முன்னால் டிரைவரின் ஸீட்டில் உட்கார்ந்து சிவக்கொழுந்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
'ஐயோ! விபரீதம் வரப் போகிறதே!' என்று என் மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் தோன்றியது. அவ்வளவுதான், விபரீதம் வந்துவிட்டது!
அந்த ஒரு வினாடியில் நேர்ந்த சம்பவங்களை எப்படி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? படீர் என்று ஒரு பெரிய பயங்கரமான சத்தம்; என் ஜன்மத்தில் அந்த மாதிரி சத்தத்தை நான் கேட்டதே இல்லை; இனிமேல் கேட்கப் போகிறதுமில்லை. ஆகாயம் அப்படியே இடிந்து திடீரென்று நம் தலையில் விழுந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் தோன்றிற்று. அந்தப் பெரும் சத்தத்தினால் என் காது செவிடானது ஒரு வினாடி. அடுத்த வினாடியில் ஒரு பெரிய அதிர்ச்சி; பூலோகத்திலிருந்து என்னை யாரோ தூக்கிப் பாதாளத்தில் எறிவது போலிருந்தது.
16
எனக்குப் புத்தி தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது, நான் கண்ட பயங்கரமான காட்சியை என் ஆயுள் உள்ள வரையும் மறக்க மாட்டேன். எனக்கு எதிரே, ஒரு பெரிய ஆலமரம், பச்சை ஆலமரம், நெருப்புப் பற்றி எறிந்து கொண்டிருந்தது! அந்த மரத்துக்கு அடியில் ஒரு மோட்டார் வண்டியும் தீப்பற்றி எறிந்து கொண்டிருந்தது. ஆகாயத்திலும் பூலோகத்திலும் சூழ்ந்திருந்த காடாந்தகாரத்துக்கு நடுவில், இம்மாதிரி ஒரு பச்சை மரமும், அதனடியில் ஒரு மோட்டாரும் நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தால் என்னமாயிருக்கும்? அப்போது சிறு தூற்றல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. அந்த மழைத்துளிகள், எரிகின்ற தீயின் ஜ்வாலையில் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, அக்னி பகவான், நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசிப்பது போலவும், 'என்னுடைய பெருந் தாகத்துக்கு இந்தத் துளிகள் போதுமா?' என்று மேலும் மேலும் மேக மண்டலத்தை நோக்கிப் போவது போலவும் இருந்தது. இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் கிடந்த இடத்திலேயே கிடந்தேன். தெய்வாதீனமாக, அப்போது காரில் என் தவுல் இருந்தது ஞாபகம் வந்தது! உடனே எனக்கு உயிர் வந்து விட்டது, மறு நிமிஷம் பாய்ந்து சென்று வண்டியின் அருகில் போனேன். வண்டி மரத்தில் முட்டி நொறுங்கிக் கிடந்தது.
நல்ல வேளையாக என்ஜினில்தான் நெருப்புப் பிடித்து கொண்டிருந்தது. இன்னும் அடிப்பாகத்துக்கு வரவில்லை. தவுலையும், நாயனங்களையும் எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, மனுஷர்களின் நிலைமை என்னவென்று பார்த்தேன். டிரைவர் அப்போதுதான் எழுந்து வந்து கொண்டிருந்தான். அவன் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "அடபாவி! இப்படிப் பண்ணிவிட்டாயேடா! நீ நாசமாய்ப் போக!" என்று வைது விட்டு, தம்பி எங்கே என்று பார்த்தேன். கொஞ்சம் தூரத்தில் அவன் கிடந்ததைக் கண்டதும் இரண்டு எட்டில் பாய்ந்து ஓடினேன். கட்டை மாதிரி கிடந்தான். ஐயோ! பாவி போய்விட்டானோ? மாரைத் தொட்டுப் பார்த்தேன்; அடிக்கிற சத்தமே கேட்கவில்லை. கையைப் பிடித்துப் பார்த்தேன்; நாடி அடிக்கவில்லை. மூக்கின் அருகில் கையை வைத்தேன்; இலேசாக மூச்சு வருவது போல் தோன்றிற்று; கொஞ்சம் எனக்கு உயிர் வந்தது.
இதற்குள்ளாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம் கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தேன். எழெட்டுப் பேர் கையில் லாந்தர்களுடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு வெகு சமீபத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்ததாகப் பின்னால் தெரிந்து கொண்டேன். கடவுளுடைய செயலைப் பாருங்கள் ஐயா! அவர் தண்டனை அளிக்கும் போதுகூட, கொஞ்சம் கருணையும் காட்டுகிறார்; சஞ்சாரமே இல்லாத இடத்தில் இந்த மாதிரி விபரீதம் நடந்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்...?"
17
"பிள்ளைவாள்! எனக்குப் புரியவில்லை! என்ன தான் நடந்தது? ஏன் மரம் பற்றிக் கொண்டது? ஏன் மோட்டார் எரிந்தது?" என்றேன்.
"தெரியவில்லையா ஐயா! பச்சை மரம் ஏன் எரியும்? நீங்கள் தான் சொல்லுங்களேன்? இடி விழுந்து தான்..."
"ஐயோ, அனுமார் கோயிலில் செய்த சபதம்..."
"ஆமாம் சாமி, ஆமாம்! அனுமார் கோயிலில் சிவக்கொழுந்து செய்த சபதம் பலித்து விட்டது. அவ்வளவு சமீபத்தில் இடிவிழுந்த அதிர்ச்சியினால் தம்பியின் மூளைகலங்கிப் போயிருக்க வேண்டும். ஸ்டீரிங்கிலிருந்து கை நழுவியது. வண்டி மரத்தின் மேல் முட்டியது. மூலைக்கு ஒருவராய்ப் போய் விழுந்தோம். ஆனால், அதிசயத்தைக் கேளுங்கள்! யாரும் சாகவில்லை. எங்களுக்கெல்லாம் சிறு காயங்களுடன் போயிற்று. தம்பிக்கு மட்டும் - தம்பிக்கு மட்டும்... சாமி! அதை நினைக்கும் போது தெய்வத்தின் தண்டனை என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்தச் சமயம் இதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை. தம்பிக்கு மூர்ச்சை தெளிவிப்பதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தோம். மூர்ச்சை தெளியவில்லை. அடுத்த ரயிலில் கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரயிலில் தம்பியின் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் 'ஐயோ! இது தெய்வ தண்டனைதானோ' என்று எனக்குச் சந்தேகம் உதித்தது.
கட்டை மாதிரி அவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபடியால் உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று எனக்கு அடிக்கடி பயம் ஏற்படும். உடனே தம்பியின் முகத்தைப் பார்ப்பேன். அந்த முகத்தில் ததும்பிய ஜீவ களையைப் பார்த்து தைரியம் அடைவேன். இப்படி ஒரு தடவை பார்த்த போது மூடியிருந்த தம்பியின் கண்களின் ஓரத்தில் ஏதோ பளபளவென்று சிவப்பாகத் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன், பகவானே!
அப்போதுதான் என் நெஞ்சை யாரோ ஈட்டியால் குத்திப் பிளப்பது போல் இருந்தது. ஏனெனில் மூடியிருந்த இரண்டு கண்களின் முனையிலும் இரத்தத் துளிகள் காணப்பட்டன! எலக்டிரிக் லைட்டின் பிரகாசத்தில் அவை அப்படி உயர்ந்த ரத்தினக் கற்களைப் போல் பிரகாசித்தன!
என் மனசில் அப்போது ஏற்பட்ட பயங்கரமான சந்தேகம் நாலு நாளைக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் உறுதிப்பட்டது. கும்பகோணத்தில் நம்முடைய பிரபல காங்கிரஸ் டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவருடைய ஆஸ்பத்திரிக்குத்தான் அழைத்துச் சென்றேன். முதல் மூன்று நாலு நாளும் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை. நாலாம் நாள், என்னைக் கூப்பிட்டு, ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டார். "பையனுக்கு மனம் கொஞ்சம் குழம்பியிருக்கிறது. கொஞ்ச நாளில் இது சரியாகப் போய்விடும். ஆனால் கண் இரண்டும் போனது போனதுதான்" என்று சொன்னார். அவரை நான் காரணம் ஒன்றும் கேட்கவில்லை. எனக்குத்தான் காரணம் தெரியுமே? ஹனுமார் கோயிலில் தம்பி செய்த பிரமாணம் அப்படியே பலித்து விட்டது. இனிமேல் மதுபானம் செய்தால், என் தலையில் இடி விழட்டும், என் கண் அவிந்து போகட்டும் என்று சபதம் செய்தபடியே ஆகிவிட்டது.
18
தம்பி மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக புத்தி தெளிவடைந்து வந்தது. பத்து நாளைக்குள் நான் இன்னாரென்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தான். கண்ணுக்கு இன்னும் கட்டுப் போட்டிருந்தது. கண் போய் விட்டது என்ற செய்தியைச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான் இல்லாத சமயத்தில் டாக்டரையே தெரிவிக்கும்படி சொல்லிவிட்டேன். இனிமேல் தனக்குக் கண் தெரியவே தெரியாது என்று அறிந்ததும் அவனுக்கு மறுபடியும் சித்தப் பிரமை மாதிரி ஆகிவிட்டது. சம்பந்தமில்லாமல் தனக்குத்தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். இவ்வளவு கூத்தில் அவன் அந்த நாடகக்காரியை மட்டும் மறக்கவில்லை. அடிக்கடி 'மனோரஞ்சிதம்', 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக் கொண்டும் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டும் இருந்தான். இதனால் வனஜாவை அவனைப் பார்ப்பதற்கு அழைத்து கொண்டு வருவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை.
வனஜாவோ, தான் அவரைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்கக் கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய் கட்டளையிட்டிருப்பதாகச் சொல்லிக் காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். அவள் பார்க்க வரும் விஷயத்தைத் தம்பியிடம் தெரியப்படுத்த வேண்டாமென்று இரண்டு பேருமே பேசித் தீர்மானித்திருந்தோம். அவ்வாறே அவள் அவன் படுத்திருந்த அறையில் வந்து பேசாமல் மௌனமாய் நின்றாள்.
19
நான் பயந்தபடியே ஆயிற்று. சிவக்கொழுந்து தனக்குத் தானே பேசிக் கொள்கையில், 'அடி மனோரஞ்சிதம்! என் கிளியே! மடமயிலே! மானே! தேனே, என்றெல்லாம் பிதற்றினான். நான் மிகுந்த கவலையுடன் வனஜாவைப் பார்த்தேன். ஐயா! ஸ்தீரிகளின் இதயத்தை ஆண் பிள்ளைகளால் கண்டு பிடிக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களல்லவா? அது உண்மையென்று அப்போது எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி சிவக்கொழுந்து இன்னும் மனோரஞ்சிதத்தின் பெயரை ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, வனஜா மனம் வெறுத்துப் போய்விடுவாள் என்றும், தம்பியின் மேல் அவளுக்கிருந்த பாசம் போய்விடுமென்றும், அப்புறம் அவனைப் பார்க்க வர வேண்டுமென்றே சொல்ல மாட்டாள் என்றும் நினைத்தேன். ஆனால் நடந்தது இதற்கு நேர்மாறாக இருந்தது. வனஜாவின் மனம் கொஞ்சம் கூட சலிக்கவில்லையென்று கண்டேன். உண்மையில் அவளுடைய பாசம் முன்னைவிட அதிகமானதாகத் தோன்றிற்று.
தினந்தோறும் தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டுமென்றும் ஆனால் தம்பிக்குச் சொல்லக் கூடாதென்றும், அவள் பிடிவாதம் பிடித்தாள். தம்பிக்குத் தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு வர வேண்டுமென்றும் சொன்னாள். அவளே சில சமயம் எடுத்துக் கொண்டு வந்தாள். இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. முன்னே சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் கலியாணம் பண்ணி வைக்க வேண்டுமென்று நான் எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால் இப்போது அது நடக்கக் கூடிய காரியமா? அவளுடைய தாயார் சம்மதிப்பாளா? இந்தப் பைத்தியக்காரப் பிள்ளைதான் சம்மதிக்கப் போகிறானா? இவ்வளவுக்குப் பிறகு இன்னும் அவனுக்கு 'மனோரஞ்சிதம் பிரேமை' போகவில்லையே! பின்னே வனஜாவின் பாசத்தை வளர விடுவதில் என்ன பிரயோஜனம்?
இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் வனஜா சொன்ன ஒரு விஷயம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. "மாமா, நான் சொல்கிறதற்கு நீங்கள் சம்மதிக்க வேணும்" என்று அவள் ரொம்ப நேரம் பூர்வ பீடிகை போட்டுவிட்டுக் கடைசியில், "நான் என் பெயரை மாற்றி மனோரஞ்சிதம் என்று வைத்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் சம்மதம் கொடுக்க வேணும்" என்றாள். முதலில், அவளுடைய நோக்கம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை. பிற்பாடு அவளுடன் பேசித் தெரிந்து கொண்டேன். தம்பிக்குத் தான் கண் தெரியாதல்லவா? இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு வனஜா தன்னை மனோரஞ்சிதமாக மாற்றிக் கொள்ளப் போவதாய்ச் சொன்னாள். மனோரஞ்சிதம் மாதிரியே தன்னால் பேசவும் பாடவும் முடியுமென்றும் சொல்லி, அந்தப் படியெல்லாம் எனக்குச் செய்து காட்டினாள். குரல் பேச்சு எல்லாம் தத்ரூபம், நாடக மேடையில் நான் பார்த்தபடியே இருந்தது.
எனக்கென்னமோ தம்பியை இப்படி ஏமாற்றுவது பிடிக்கவேயில்லை. அதனால் என்ன கேடு விளையுமோ என்னமோ என்று பயமாயுமிருந்தது. ஆனாலும் வனஜாவின் பிடிவாதத்தையும் கண்ணீரையும் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. 'மாமா! எனக்கு அவரைத் தவிர வேறு கதி கிடையாது. வனஜாவை அவருக்குப் பிடிக்காதபடியால் மனோரஞ்சிதமாகி விடுகிறேன். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை விட்டு விடுவேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் உங்களை விடாது" என்றாள்.
பல நாள் தயங்கித் தயங்கி, கடைசியாக இந்த மோசடிக்கு நான் சம்மதித்தேன். அந்தப் பெண்ணின் துயரத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஒரு வேளை யுக்தி பலித்தால், சிவக்கொழுந்து மனந்தேறி முன்போல் மனுஷனாகலாம் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஆனால் கவலையும் திகிலும் ஒருபுறம் இல்லாமற் போகவில்லை. முதலில் யுக்தி பலிக்க வேண்டும்; பிறகு உண்மை வெளியாகும் போது, தம்பி என்ன செய்வானோ, என்னமோ? பகவான் இருக்கிறார், நடக்கிறபடி நடக்கட்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
மறுநாள், வனஜாவை அழைத்துக் கொண்டு தம்பியின் வீட்டுக்குப் போனேன்.
தம்பியிடம் இந்தப் பேச்சை எப்படி எடுக்கிறது என்று நான் தயங்கிக் கொண்டிருக்கையில், தற்செயலாக வனஜாவின் கைவளைகள் குலுங்கின. அதைக் கேட்டதும் தம்பிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போயிருக்க வேண்டும்.
"மாமா! யார் அது?" என்று கேட்டான்.
நல்ல வேளையாய்ப் போச்சு என்று நான் நினைத்துக் கொண்டு "தம்பி! உன்னைப் பார்ப்பதற்காகப் பட்டணத்திலிருந்து மனோரஞ்சிதம் வந்திருக்கு" என்றேன்.
20
"என்ன மனோரஞ்சிதமா?" என்று கேட்டுக் கொண்டு தம்பி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். ஒரு நிமிஷம் எனக்கு ரொம்பப் பயமாய்ப் போய்விட்டது.
அதே சமயத்தில் வனஜா சட்டென்று அருகில் வந்து "ஆமாம், நான் தான் வந்திருக்கிறேன். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடைய தோள்களைப் பிடித்து மெதுவாக படுக்க வைத்தாள்.
ஐயோ! அப்போது தம்பி பார்த்த பார்வை இன்னும் என் மனசில் அப்படியே நிற்கிறது. ஒளி இழந்த அவனுடைய கண்களால் அப்படி வெறிக்க வெறிக்க விழித்துப் பார்த்தான். ஒரு பொருளை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை மனுஷர்களுக்கு நன்றாய்த் தெரிகிறதல்லவா? அவ்விதமே, கண் பார்வையின் அருமையை அந்த சமயத்தில் தம்பி ரொம்பவும் உணர்ந்திருக்க வேண்டும். 'போன பார்வை திரும்பி வராதா?' என்ற அளவில்லாத ஆத்திரத்தை அச்சமயம் அவனுடைய முகத்திலே பார்த்த போது, எனக்கு பெரிய வேதனை உண்டாயிற்று. இவனை ஏமாற்றுகிறோமே என்ற பச்சாதாபமும் ஏற்பட்டது. ஆனால், எப்படியோ அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு இந்த மோசடியில் இறங்கியாகி விட்டது. இனிமேல் தயங்கி என்ன பிரயோஜனம்?
முன்னாலேயே நானும் வனஜாவும் யோசித்துக் கற்பனை செய்திருந்த கதையை அப்போது சொன்னேன். தம்பி ஸ்மரனையிழந்திருந்த போது அடிக்கடி 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அவள் வந்தால் தான் அவனுக்குக் குணமாகுமென்று நினைத்து நான் கடிதம் எழுதினதாகவும், அதன் பேரில் அவள் வந்திருப்பதாகவும் பாடம் ஒப்புவித்தேன்.
வனஜா நான் சொன்னதை ஆமோதித்தாள். "மாமாவின் கடிதம் பார்த்ததும் ஓடி வந்தேன்; உங்களுக்கு உடம்பு நன்றாய் சௌக்கியமான பிறகுதான் திரும்பிப் போகப் போகிறேன்" என்றாள்.
கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்த பிறகு, "எங்கே, அம்மா! ஒரு பாட்டுப் பாடுங்கள். தம்பி கேட்கட்டும்" என்றேன் நான். இதையும் முன்னாலேயே பேசி வைத்திருந்தோம்.
மனோரஞ்சிதம் நந்தன் சரித்திரத்தில் நந்தன் வேஷம் போட்டுக் கொள்வதுண்டு. அப்போது 'பட முடியாதினித் துயரம்' என்னும் அருட்பாவை ராக மாளிகையில் பாடுவாள். இப்போது வனஜா அந்தப் பாட்டை அதே மாதிரி ராகமாளிகையில் பாடினாள். குரல், பாடும் விதம், அங்கங்கே விழுந்த சங்கதிகள் முதற்கொண்டு அப்படியே இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். தம்பியோ பாட்டைப் பரவசமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். ஒளி இழந்த அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வந்து கொண்டிருந்தன.
எங்களுடைய யுக்தி இவ்வாறு பலித்து விட்டதைப் பற்றி நாங்கள் இருவரும் அசாத்தியமான சந்தோஷம் அடைந்தோம். பிறகு, வனஜா தினந்தோறும் தம்பியைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள். பகலெல்லாம் பெரும்பாலும் அவனுடைய வீட்டிலேயே கழிப்பாள். தம்பிக்கு நெருங்கிய உற்றார் உறவினர் யாரும் இல்லை. வீட்டில் தவசிப் பிள்ளையையும் சோக்ராவையும் தவிர வேறு யாரும் கிடையாது. அவர்களை நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் நான் வேறு நாதஸ்வர வித்வான்களுடன் கச்சேரிக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு தடவை அந்த மாதிரி போய் விட்டுத் திரும்பி வந்த போது சிவக்கொழுந்து மிகவும் உற்சாகத்துடனே, "மாமா! நானும் மனோரஞ்சிதமும் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம். இனிமேல், அவள் நாடக மேடை ஏறி நடிப்பதில்லை என்றும் தீர்மானமாகி விட்டது" என்று சொன்னான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன விபரீதமாக அல்லவா இருக்கிறது? ஏனோ, தம்பிக்கு உடம்பு குணமாவதற்காக இந்த ஏமாற்றத்துக்கு நான் சம்மதித்தேன். எப்போதுமே அவனுக்கு உண்மை தெரியாமல் இருக்குமா? தெரியும்போது என்ன கதி ஆவது?
ஆனால் இந்த ஆட்சேபம் ஒன்றும் வனஜாவிடம் பலிக்கவில்லை. "பிற்பாடு நானல்லவா கஷ்டப்பட போகிறேன்? உங்களுக்கு என்ன?" என்றாள். அழுது கண்ணீர் விட்டு எப்படியோ என்னை சம்மதிக்கப் பண்ணிவிட்டாள். அவளுடைய தாயாரையும் சம்மதிக்கச் செய்தாள்.
அடுத்த மாதம் திருநாகேசுவரம் கோயிலில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்திக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.
21
இப்படிச் சொல்லி விட்டு, கந்தப்ப பிள்ளை சும்மா இருந்தார். ஏதோ பெரிய யோசனையில் ஆழ்ந்தவர் போல் தோன்றினார்.
"அப்புறம் என்ன?" என்று கேட்டேன்.
"அப்புறம் என்ன? மாப்பிள்ளையும், மருமகளும் சௌக்கியமாயிருக்கிறார்கள். மணிமணியாய் இரண்டு ஆண் பிள்ளைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன" என்றார்.
எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவர் சொல்ல வேண்டியது இன்னும் பாக்கி இருப்பதாகத் தோன்றியது.
"இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"முந்திரிச் சோலை என்று கேட்டிருக்கிறீர்களா, சாமி? காரைக்காலுக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவே மத்தியில் சமுத்திரக் கரையோரத்தில் இருக்கிறது. முந்திரிச் சோலை மாரியம்மன் கோயில் வெகு பிரசித்தம். கிராமம் வெகு அழகாயிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் முந்திரி மரங்களும், சவுக்கு மரங்களும் தான். ஊருக்குக் கிழக்கே கொஞ்ச தூரம் வரையில் இந்தத் தோப்புகள்; அப்புறம் நாணல் காடு. நாணல் காட்டைத் தாண்டினால் வெண் மணல். அதற்கும் அப்பால் அலை வீசும் சமுத்திரம். இடைவிடாமல் அலைகளின் 'ஓ' வென்ற சப்தமும், சவுக்குத் தோப்புகளின் 'ஹாய்' என்ற சப்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த முந்திரிச் சோலைதான் என்னுடைய பூர்வீக கிராமம். இங்கே எனக்கு ஒரு சின்ன வீடும் கொஞ்சம் காணியும் உண்டு. சிவக்கொழுந்து, பெயரும் புகழுமாய் நன்றாயிருந்த காலத்தில், இந்த கிராமத்துக்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறான். ஊர் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாகவும், எப்போதாவது கச்சேரி செய்வதை நிறுத்தினால், இந்த ஊரில் வந்து வசிக்கப் போவதாகவும் அடிக்கடி சொல்வான்.
கல்யாணம் ஆன சில நாளைக்கெல்லாம் தம்பி, "மாமா! நான் முந்திரிச் சோலைக்குப் போகப் போகிறேன். உங்கள் வீட்டை எனக்குக் கொடுக்க வேணும்" என்றான். அதெல்லாம் கூடாதென்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "கண் பார்வை இல்லாமற் போனால் என்ன, தம்பி? அதற்காக நீ வாத்தியம் வாசிப்பதை நிறுத்தி விடக்கூடாது. அந்த காலத்தில் சரப சாஸ்திரியார் கண்ணில்லாமல் புல்லாங்குழல் வாசிக்கவில்லையா? கச்சேரி வராதோ என்று நினைக்காதே எதேஷ்டமாய் வரும்" என்றேன்.
எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. "வேணுமானால் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். சில வருஷமாவது நான் கிராமத்தில் இருக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு நாயனத்தையே நான் தொடப் போவதில்லை" என்று பிடிவாதமாய்ச் சொன்னான். அந்தபடியே அவனும் வனஜாவும் முந்திரிச் சோலைக்குப் போய்விட்டார்கள். இன்னமும் அங்கேதான் இருக்கிறார்கள்.
22
இவ்வாறு கந்தப்ப பிள்ளை மறுபடியும் கதையை முடித்தார். ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. அவருடைய கதையில், இடி விழுந்து சிவக்கொழுந்தின் கண் போனதைக் கூட நான் நம்பினேன். ஏனெனில், இம்மாதிரி அபூர்வ சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் வனஜா மனோரஞ்சிதமாக மாறி, சிவக்கொழுந்தை மோசம் செய்த விஷயத்தை மட்டும் என்னால் நம்ப முடியவில்லை. என்னதான் கண் குருடாயிருந்தாலும் இந்த மாதிரி ஏமாற்றுவது சாத்தியமா?
அப்படிக் கலியாணம் நடந்திருந்தாலும், பின்னால் தெரியாமல் இருந்திருக்குமா?
இப்படி எண்ணி, "அப்புறம், சிவக்கொழுந்துக்குத் தெரியவேயில்லையா? உங்களுடைய மோசத்தைக் கண்டு பிடிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
"ஸ்வாமி! இந்த எண்ணத்தினால் எத்தனை நாள் தூக்கம் பிடிக்காமல் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தம்பி எப்போது உண்மையைத் தெரிந்து கொள்வானோ, அப்போது அவனுக்கு எப்படிப்பட்ட கோபம் வருமோ, என்ன செய்வானோ என்று எனக்குத் திக்திக்கென்று அடித்துக் கொண்டுதானிருந்தது. இந்த பயத்தினாலும், அவர்கள் பேரில் எனக்கிருந்த பிரியத்தினாலும் அடிக்கடி முந்திரிச் சோலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது கட்டாயம் போய் விடுவேன். இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நானும் சந்தோஷமடைந்தேன்.
இந்த மாதிரி ஒரு தடவை போயிருந்தபோது, வீட்டுக் கூடத்தில் தம்பியின் வாத்தியம் வைத்திருந்ததையும், அதன் பக்கத்தில் சுருதிப் பெட்டி ஒன்று இருந்ததையும் பார்த்தேன். வனஜாவை, "தம்பி இப்போது வாத்தியம் வாசிப்பதுண்டா?" என்று கேட்டேன். சில சமயம் ராத்திரியில் வாசிப்பாங்க; நான் சுருதி போடுவேன்" என்று சொன்னாள்.
நல்ல வேளையாகத் தவுல் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அன்று ராத்திரி ரொம்பவும் பிடிவாதம் செய்து தம்பியை நாயனம் வாசிக்கச் சொல்லி, நானும் தவுல் அடித்தேன். ஆகா! அது என்ன வாசிப்பு? என்ன வாசிப்பு! சாமி! அது மனுஷ்யர்களுடைய சங்கீதமல்ல; தேவ சங்கீதம். ஒரு சமயம் அழுகை வரும்; ஒரு சமயம் சிரிப்பு வரும். ஒரு நிமிஷம் எங்கேயோ ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போவது போலிருக்கும்; அடுத்த நிமிஷம் மலை உச்சியிலிருந்து பாதாளத்தில் உருட்டி விடுவது போலிருக்கும்; ஒரு சமயம் ஊஞ்சலாடுவது போலிருக்கும், இன்னொரு சமயம் எழுந்திருந்து கூத்தாட வேண்டுமென்று தோன்றும். நடுவில் நடுவில் நான் தவுல் அடிப்பதை நிறுத்திவிட்டு, ஆஹா! ஆஹா! என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பேன்.
இம்மாதிரி தம்பி வாத்தியம் வாசிக்கிற விஷயம் தெரிந்ததிலிருந்து முன்னைக் காட்டிலும் அதிகமாகவே முந்திரிச் சோலைக்குப் போகத் தொடங்கினேன். நாளாக ஆக, தம்பியை ஏமாற்றிய விஷயமாய் எனக்குப் பயம் குறைந்து வந்தது. இனிமேல் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என்றே நினைத்து விட்டேன்.
23
முந்திரிச் சோலையில் தம்பியும் வனஜாவும் போய்த் தங்கி மூன்று, நாலு வருஷம் இருக்கும். ஒரு தடவை நான் அங்கே போயிருந்தபோது, தம்பியின் முன்னால் ஞாபக மறதியாக 'வனஜா' என்று கூப்பிட்டு விட்டேன். உடனே, என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டேன்.
"வனஜாவா? அது யார் மாமா?" என்றான் சிவக்கொழுந்து.
"இங்கே யாருமில்லை, அப்பா! என் மருமகள் ஞாபகமாகக் கூப்பிட்டு விட்டேன்!"
"அதனால் என்ன மாமா, இவளும் உங்கள் மருமகள் தானே? வனஜா என்ற பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால், அப்படியே கூப்பிடுங்களேன்" என்றான்.
"நல்ல வேளை, பிழைத்தோம்" என்று நினைத்துக் கொண்டேன்!
அன்று ராத்திரி வழக்கம் போல் சிவக்கொழுந்து வாத்தியம் வாசித்தான். அவன் சஹானா ராகம் வாசித்த போது என்னால் சகிக்கவே முடியவில்லை. ஒரு பரவசமாய் 'ஆண்டவனே! என்று அலறி விட்டேன். வாசித்து முடிந்ததும், 'தம்பி! கடவுளுக்கு அல்லவா கண்ணில்லை போலிருக்கிறது? இப்பேர்ப்பட்ட நாத வித்தையை உனக்குக் கொடுத்து விட்டு, உன் கண்ணை எடுத்துக் கொண்டு விட்டாரே?' என்று வாய் விட்டுக் கதறினேன்.
அப்போது சிவக்கொழுந்து புன்னகை செய்தபடி, "மாமா! ஸ்வாமி என் கண்ணை எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். வனஜாவைக் காட்டிலும் இன்னொருத்தி ஒசத்தி என்று நினைத்தேனே? என்னை விடக் குருடன் யார்?" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன சொல்கிறாய், தம்பி" என்றேன்.
"மாமா! எனக்குக் கண்ணில்லையென்று என்னை நீங்கள் ஏமாற்றப் பார்த்தீர்கள். ஆனால் உண்மையில் உங்களைத்தான் நான் ஏமாற்றினேன். முதல் நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த போதே இவள் வனஜாதான் என்று எனக்குத் தெரியும்" என்றான்.
அச்சமயம் அங்கு வந்த வனஜாவின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய புன்சிரிப்பிலிருந்து அவளும் இதற்கு உடந்தைதான் என்று தெரிந்து கொண்டேன்.
"வனஜா! நீயும் சேர்ந்து தான் இந்தச் சூழ்ச்சி செய்தாயா? தம்பிக்குத் தெரியுமென்பது முதலிலேயே உனக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"இல்லை, மாமா! கல்யாணத்துக்கு மறுநாள் தான் எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குச் சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாங்க! நீங்க அவரை ஏமாற்ற நினைத்ததற்காக உங்களை தண்டித்தார்களாம்!" என்றாள்.
"எப்படியும் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாய்ப் போய் விட்டீர்களல்லவா? நான் தானே பிறத்தி மனுஷனாய்ப் போய்விட்டேன்? எனக்கென்னவேலை இங்கே? நான் போகிறேன்" என்று சொல்ல்விட்டுக் கிளம்பினேன்.
24
என் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷம். ஆனால் வெளிக்கு மட்டும் கோபித்துக் கொண்டவன் போல் நடித்தேன். அவர்கள் இரண்டு பேரும் ரொம்பவும் சிரமப்பட்டு என்னை சமாதானப்படுத்தினார்கள்.
ஒரு மாதிரியாகக் கோபம் தீர்ந்தபிறகு, "போனது போகட்டும், தம்பி! முதல் நாளே இவள் வனஜாதான் என்று உனக்குத் தெரிந்து விட்டது என்றாயே? அது எப்படித் தெரிந்தது?" என்று கேட்டேன்.
அதற்குச் சிவக்கொழுந்து சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் பிரமிக்கும்படி செய்து விட்டது.
"பகவான் ஒரு அவயத்தை எடுத்துக் கொண்டால், இன்னொரு அவயத்தைக் கூர்மையாக்கி விடுகிறார். மாமா! எனக்குக் கண் போச்சு! ஆனால் காது கூர்மையாச்சு. வளையல் குலுங்கிய போதே வனஜாதான் என்று தெரிந்து கொண்டேன். மேலும் மனோரஞ்சிதம் வந்திருக்க மாட்டாள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் என் பிரதிக்ஞைக்கு பங்கம் செய்து கொண்டிருக்கும் போது, அடுத்த அறையில் அவளுடைய போதைச் சிரிப்பைக் கேட்டேன். அப்போதே என் மனம் 'சீ!' என்று வெறுத்து விட்டது. அப்படிப்பட்டவளா என்னைப் பார்க்க வரப் போகிறாள்? ஒரு நாளுமில்லை.
எனக்கேற்பட்ட ஆச்சரியமெல்லாம் நீங்கள் ஏன் அவ்வளவு பெரிய பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என்பது தான். அதன் காரணமும் நானே ஊகித்துக் கொண்டேன். நான் 'மனோரஞ்சிதம், மனோரஞ்சிதம்' என்று வெறுப்பினால் சொல்லிக் கொண்டிருந்ததைத் தப்பாக நினைத்துக் கொண்டு இப்படி என்னை மோசம் செய்யப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். இவள் 'பட முடியாதினித் துயரம்' என்று பாடியதும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் எனக்குப் போய் விட்டது. மாமா! நீங்களும் ஒரு சங்கீத ரஸிகர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே? அந்த நாடகக்காரியின் பாட்டுக்கும், உங்கள் மருமகள் பாட்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் போச்சு? ராகம், குரல், சங்கதிகள் எல்லாம் அப்படியே இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடகக்காரியின் பாட்டிலே ஆத்மா கிடையாது; அது தொண்டைக்கு மேலிருந்து வந்த பாட்டு. ஆனால் உங்கள் மருமகளோ இருதய அந்தரங்கத்திலிருந்து பாடினாள். இந்த வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்றான்.
இப்படி மருமகனும் மருமகளும் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டினார்கள். ஆனால் அதைக் குறித்து நான் வருத்தப்படவில்லை. ஐயா! என் தலையிலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. எப்படியாவது குழந்தைகள் இரண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி! எனக்கென்ன வந்தது? சாமி! காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த உலகத்தின் சுகதுக்கங்களெல்லாம் அனுபவித்தாகிவிட்டது. தம்பியின் நாத வித்தையில் சொர்க்கத்தின் சுகத்தைக் கூட அனுபவித்து விட்டேன். பகவான் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போது போகத் தயாராயிருக்கிறேன்.
வண்டி விழுப்புரம் ஸ்டேஷனில் நின்றது. கந்தப்ப பிள்ளையின் 'சோக்ரா' பையன் வேறு வண்டியிலிருந்து வந்து ஏறி, அவருடைய பிரிக்காத படுக்கையையும் பெட்டியையும் தூக்கிக் கொண்டான். கந்தப்ப பிள்ளை தவுலை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்து விட்டு அதைத் தாமே கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். "போய் வருகிறேன், ஐயா! பட்டணத்துக்கு வந்தால் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்றிரவு பாக்கி நேரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஐயம்பேட்டைக் கந்தப்பன் கூறிய அதிசயமான சம்பவங்கள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா? அல்லது, அவ்வளவும் கந்தப்ப பிள்ளையின் கற்பனையா? மறுபடியும் அவரைப் பார்க்கும் போது விசாரித்து உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நிஜமாயிருந்தாலும் சரி, கதையாயிருந்தாலும் சரி, ஒரு விதத்தில் பரம திருப்தியாயிருந்தது. என்னுடைய கதைகளைப் போல் துயரமாக முடிக்காமல் 'பிள்ளை குட்டிகளுடன் சௌக்கியமாயிருக்கிறார்கள்' என்று மங்களகரமாகக் கதையை முடித்தாரல்லவா?