சந்திரமதி
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Kalki Krishnamoorthy
- Hits: 1971
1
சில நாளைக்கு முன்பு, வங்காளி பாஷையிலிருந்து மொழி பெயர்த்த "காதல் சக்கரம்" என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தபோது, எங்கள் ஊரில் பல வருஷங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. மேற்படி கட்டுரை விஷயத்துக்கும், நான் சொல்லப் போகும் சம்பவத்துக்கும் அதிக சம்பந்தமில்லையென்பது உண்மைதான். ஆனால் தலைப்பு மட்டும் இரண்டுக்கும் பொருத்தமானது. நான் சொல்லப்போவது ஒரு காதல் சம்பவமே. அதற்கு, ஒரு சக்கரம் அன்று - நாலு சக்கரங்கள் உதவி செய்தன. என்னுடைய கதையில் ஒரு மோட்டார் வண்டி முக்கியமான ஸ்தானத்தை வகிக்கிறது.
தயவு செய்து இருபத்தைந்து வருஷம் பின்னால் போங்கள். அப்போது என்னுடைய பள்ளிக்கூடத்தில் இப்போதுள்ளது போன்ற ஆடம்பரம் ஒன்றும் கிடையாது. கட்டிடம் இல்லை; பெஞ்சு, நாற்காலி கூட இல்லை. கீற்றுக் கொட்டகையில் தான் பள்ளிக்கூடம் நடந்தது. கீழே மணலைக் கொட்டிப் பரப்பியிருந்தது. வெறும் பலகைகளை வரிசையாக போட்டுப் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அந்தக் காலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால் எனக்கு வெகு உற்சாகமிருந்தது; பிள்ளைகளும் உற்சாகமாகப் படித்தார்கள்.
நான் சொல்லும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் முப்பது குழந்தைகள் இருந்தன. அக்கிரகாரத்திலிருந்து ஐந்து குழந்தைகள்; வேளாளத் தெருவிலிருந்து எழெட்டுப் பேர்; பாக்கிக் குழந்தைகள் குடியானத் தெருவிலிருந்து வந்தன.
குடியானக் குழந்தைகளில் நாலைந்து பெண்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்திக்குச் சந்திரமதி என்று பெயர். அவள் நாட்டாண்மைக்கார நல்லானின் மகள். தாயில்லாக் குழந்தை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதியாரின் பின் வரும் வரிகள் ஞாபகத்துக்கு வரும்:
'பச்சைக் குழந்தையடி - கண்ணில் பாவையடி சந்திரமதி இச்சைக்கினிய மது - என் இருவிழிக்குத் தேன்நிலவு.'
அவளுடைய முகத்தில் களை சொட்டிற்று. கருவண்டுகளைப் போன்ற அவளுடைய பரந்த கண்கள் யாருடைய உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். தலை மயிரை அலட்சியமாய் எடுத்து ஒரு சொருக்குப் போட்டுக் கொண்டு வருவாள். அப்போது அவளைப் பார்த்தால் பண்டை காலத்துத் திறமை வாய்ந்த சிற்பி ஒருவன் சாமுத்திரிகா லட்சணத்தில் அணுவளவும் பிசகாமல் அமைத்த ஒரு சிலை உயிர் பெற்று நடந்து வருவது போல் தோன்றும்.
அழகைப் போலவே சமர்த்து. அவளுடைய வகுப்பில் அவள்தான் எப்போதும் முதலாவதாயிருப்பாள். அவளைப் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தியபோது எனக்குண்டான துக்கத்தைச் சொல்லி முடியாது. நமது சமூக நிலைமையைப் பற்றி நினைத்து அடிக்கடி வருந்துவேன். வேறொரு தேசமாயிருந்தால், இந்த மாதிரி அழகும் சமர்த்துமுள்ள பெண்கள் வருங்காலத்தில் எவ்வளவோ முன்னுக்கு வருவார்கள். இந்நாட்டிலோ, சின்ன சாதி - பெரிய சாதி, ஏழை - பணக்காரன் முதலிய எவ்வளவோ வித்தியாசங்கள், கட்டுப்பாடுகள். பெண் குலத்தின் பெருமை பிரகாசிப்பதற்கு வழியே கிடையாது. வயதாகும்போது இந்தப் பெண்ணை யாராவது ஒரு குடிகாரன் கழுத்தில் கட்டிவிடுவார்கள்; அடியும் உதையும் பட்டு எப்படியோ காலத்தைக் கழித்து விட்டு, கடைசியில் எல்லாரும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வாள். இவ்வாறெல்லாம் நான் எண்ணமிட்டதுண்டு.
நாலைந்து வருஷங்கள் சென்றன. சந்திரமதி நான் எதிர் பார்த்தது போலவே அழகு வடியும் இளமங்கையானாள். அவளுடைய கல்யாணமும் நான் எதிர்பார்த்தது போலவே நடக்குமென்று தோன்றிற்று. குளக்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ நான் போகும்போது சில சமயம் சந்திரமதி எதிர்ப்படுவாள். "ஸார்! சௌக்கியந்தானா?" என்று கேட்பாள். எனக்கு உடம்பு பூரித்துப் போகும். ஒருநாள் காலை நேரத்தில் குளக்கரையில் இருந்த இலுப்பந்தோப்பில் தரையிலே புஷ்பப்பாவாடை விரித்தது போல உதிர்ந்திருந்த இலுப்பைப் பூக்களை அவள் திரட்டிக் கொண்டிருந்தாள். மேலே மரக்கிளைகளில் நானாவிதமான பட்சிகள் பாடிக்கொண்டிருந்தன. இலுப்பைப் பூவின் மனோகரமான மணம் கம்மென்று வீசிக்கொண்டிருந்தது! அந்தக் காட்சியும், கீதமும், மணமும் என்னைப் பூரணமாய் வசீகரித்தன. அவ்விடத்தில் சற்று நின்று, "என்ன, சந்திரமதி! உனக்குக் கல்யாணமாமே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அவளுடைய கண்களில் ஜலம் துளித்ததைக் கண்டதும், என்னுடைய சிரிப்பு சாம்பலாகிவிட்டது.
"ஸார்! நான் சொல்றதைக் கேளுங்கள். என்னை நீங்கள் கட்டிக் கொண்டு விடுங்கள். நான் வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்" என்றாள்.
எனக்கு அப்போது வயது ஐம்பது. ஆனாலும் நாம் இருபத்தைந்து வயது இளைஞனாயிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று. நான் மட்டும் வாலிபனாயிருந்திருந்தால், சந்திரமதியை அந்தக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேனா? என்னுடைய சாதி, சம்பிரதாயம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் அவளுக்காகத் தத்தம் செய்யத் தயாராயிருப்பேன். அவளுக்காக மோட்சத்தைக் கூடத் தியாகம் செய்வேன். ஆனால் என்ன பிரயோஜனம்? சீதைக்குச் சுயம்வரம் வைத்து ஜனகர், "உலகத்தில் ஆண்மையும் வீரமும் அற்று போய்விட்டனவா?" என்று கதறினாராமே, அந்த மாதிரி தான் நானும் "நம் தேசத்தில் வாலிபமும் தீரமும் நசித்துப் போய் விட்டனவா!" என்று நினைத்து வருந்தினேன்.
2
இப்போது, இந்தக் கதையில் சில புதிய பாத்திரங்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களில் ஒருவன் தான் மேலே நான் குறிப்பிட்ட கறுப்பு மீசைக்காரன். அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும். ஆனால் தலைமயிருக்கும், மீசைக்கும் ஏதோ வர்ணம் தடவி, நரை விழுந்தது தெரியாமல் பாதுகாத்து வந்தான். அவனுக்குக் 'கறுப்பு மீசைக்காரன்' என்றும், 'அக்கரையான்' என்றும் பெயர் வழங்கி வந்தது. அக்கரைச் சீமையில் அவன் என்ன அக்கிரமம் செய்தானோ, யார் குடியைக் கெடுத்தானோ, நிறையப் பணத்துடன் நாலைந்து வருஷத்துக்கு முன்னால் எங்களூருக்கு வந்து சேர்ந்தான். கொஞ்சம் நிலமும் வாங்கியிருந்தான். நிலம் வாங்குவதற்கும் சாகுபடி செய்வதற்கும் நல்லான் அவனுக்கு உதவி செய்தான்.
நல்லான் ஊருக்கு நாட்டாண்மைக்காரனானாலும் சொத்து ஒன்றுமில்லாதவன். ஏதோ கொஞ்சம் இருந்ததைக் கள்ளுக்கடைக்குத் தொலைத்துவிட்டான். அக்கரையானும் அப்படியொன்றும் மதுவிலக்கில் தீவிரமானவனல்ல. ஆகவே, இருவருக்கும் சிநேகம் நாளுக்கு நாள் முதிர்ந்து வந்தது. கடைசியில் நல்லான் தன் பெண் சந்திரமதியைக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்துவிடப் போவதாய் ஊரில் ஒரு வதந்தி பிறந்தது.
நல்லானுடைய நோக்கம் என்னவோ அவ்வளவு கெட்டது என்று சொல்லமுடியாது. அக்கரையானுக்கு நல்ல சொத்திருந்தது. பெண்டாட்டியா, பிள்ளையா ஒன்றும் இல்லை. சந்திரமதியை அவனுக்குக் கட்டிக் கொடுத்தால், அவ்வளவு சொத்துக்கும் அவளே எஜமானியாவாள். எனவே, நல்லான் தன் பெண்ணின் நன்மையைத்தான் கோரினான். ஆனால் அவளுடைய மனநிலை இன்னதென்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லை; உணர முயற்சி செய்யவுமில்லை.
அவளுடைய மனநிலை எனக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அதைப் பூரணமாக அறிந்து கொண்டு விட்டதாகவே ஒரு சமயம் நான் எண்ணியதுண்டு. அது எவ்வளவு தவறான எண்ணமென்று பின்னால் தெரிந்தது. தலை நரைத்த கிழவனாகிய எனக்கு, இளம் பெண்ணின் ஹிருதயம் எவ்வாறு தெரியும்? நிற்க.
எங்கள் கிராமத்துக்கு அடுத்த கிராமத்தில் ஒரு பெரிய ஜமீன்தார் இருந்தார். அவருடைய பிள்ளைகள் சிறு பிள்ளைகளாயிருந்த போது என்னிடம் படித்தார்கள். பிறகு அவர்கள் சமீபத்திலுள்ள பட்டணத்துக்குப் போய் ஹைஸ்கூலில் சேர்ந்து படித்தார்கள். பட்டணத்து ஹைஸ்கூல்களின் சமாசாரந்தான் உங்களுக்குத் தெரியுமே? வருஷத்தில் பாதி நாளைக்குமேல் விடுமுறைதான். விடுமுறைக்காகப் பிள்ளைகள் ஊருக்கு வரும்போதெல்லாம் அவர்களை ஜமீன்தார் என்னிடம் அனுப்பி வைப்பார். இந்தப் பிள்ளைகளுடன் ஜமீன்தாரின் மைத்துனர் மகன் ஒருவனும் வருவான். அவன் பெயர் துரையப்பன். முதலிலே இந்தப் பையனை அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. டாப்பு ஜெரப்பு அதிகம்; ரொம்பக் கர்வக்காரன்; பெரியவர்களிடம் மட்டுமரியாதை கிடையாது. "ஐயோ! இந்த டம்பாச்சாரியோடு சேர்ந்து நம்முடைய ஜமீன்தாரின் நல்ல பிள்ளைகளும் கெட்டுப் போவார்களே!" என்று கவலைப்பட்டேன்.
ஆனால் நாளடைவில் அந்தப் பையன்மேல் இருந்த வெறுப்பு எனக்குக் குறைந்து வந்தது. அவன் மேல் அபிமானங்கூட உண்டாயிற்று. அதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். என்னைப் பற்றிக் கூட ஒரு மாதிரி நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனாலும் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்? துரையப்பனையும் சந்திரமதியையும் பற்றி ஊரில் வதந்தி உண்டாகிப் பரவிற்று. கோவிலிலும், குளக்கரையிலும், மாந்தோப்பிலும், களத்து மேட்டிலும் துரையப்பனும் சந்திரமதியும் சந்திப்பதாகப் பேச்சு ஏற்பட்டது. ஒன்றைப் பத்தாகச் சொல்லுவதுதான் நம்முடைய ஊர் வழக்கமாயிற்றே. ஆகையால், இந்தப் பேச்சை நான் முழுதும் நம்பவில்லை. ஆனாலும் அது உண்மையாயிருக்கக்கூடாதவென்று ஆசைப்பட்டேன். சந்திரமதிக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் வந்தாலும் தகும். எப்படியாவது அவள் கறுப்பு மீசைக்காரனுக்கு வாழ்க்கைப்படாமல் இருந்தால் நல்லது. துரையப்பன் பணக்காரனாயிருக்கலாம்; சந்திரமதி ஏழையாயிருக்கலாம். அவர்களுடைய சாதிகளிலும் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இதனாலெல்லாம் என்ன மோசம்? அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொண்டு ஏன் சுகமாயிருக்கக் கூடாது?
வதந்தியில் கொஞ்சம் உண்மை உண்டென்று எனக்குச் சீக்கிரத்தில் தெரிய வந்தது. ஒரு நாள் அந்தக் கறுப்பு மீசைக்காரன் - அவன் மோரக்கட்டையில் இடி விழ! - என்னிடம் வந்தான். "ஸார்! அப்புறம் என்மேல் தப்புச் சொல்லாதேங்கோ. யாரோ ஒரு வெள்ளாழப் பையன் வருகிறானாமே இங்கே, துரையப்பன் என்று - அவன் இனிமேல் இந்த ஊர்ப்பக்கம் தலைக் காட்டக் கூடாது. அப்படித் தலை காட்டினால், வெட்டி மடைவாயில் வைத்துவிடுவேன்!" என்றான். இந்த உருட்டலுக்கெல்லாம் நானா பயப்படுகிறவன்? துரையப்பனுடைய தகப்பனார் லேசுபட்டவரல்ல வென்றும், கவர்மெண்டே அவர் கைக்குள் அடக்கமென்றால், துரையப்பன் மேல் யாராவது கையை வைத்தாலும் போதும், அவன் கதி அதோகதிதான் என்றும் நான் திரும்பிப் பயமுறுத்தினேன். "எல்லாம் சீக்கிரம் பார்க்கலாம்!" என்று அக்கரையான் உறுமிக் கொண்டு போய்விட்டான்.
இன்னும் ஒரே ஒரு புதிய ஆளை உங்களுக்கு நான் தெரியப்படுத்தியாகவேண்டும். அவனுடைய பெயர் நாகரத்தினம். குடியானப் பையன். இவனைப் பற்றி எப்படியெல்லாம் என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது என்பதை நினைக்கும் போது எனக்கே வெட்கமாயிருக்கிறது. அவனும் நாலாம் வகுப்பு வரையில் என் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். அப்புறம் விவசாயத்தில் அவன் தகப்பனுக்கு ஒத்தாசையாக வேலை செய்யத் தொடங்கினான். தகப்பன் இறந்த பிறகு அவன் விவசாயத்தை விட்டுவிட்டான். ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் வாங்கி, சத்த வண்டி ஓட்டத் தொடங்கினான். இந்தத் தொழிலில் அவன் உல்லாசமாகக் காலங் கழித்தானென்றே சொல்லவேண்டும். சில நாள் நான் பார்த்திருக்கிறேன்; அவன் சத்தத்துக்கு வண்டி அடித்து விட்டுத் திரும்பி வெறும் வண்டியைச் சாலையோடு ஓட்டிக் கொண்டு வருவான். அப்போதெல்லாம்
'மானா மருதையிலே - ஒரு மருக் கொழுந்து கூடைக்காரி!'
என்று வாய்விட்டு உல்லாசமாகப் பாடுவான். அதைக் கேட்கும்போது, எனக்குக்கூட, இந்தப் பிள்ளைகளுடன் டானா, டாவன்னா என்று மாரடித்துக் கொண்டிருப்பதை விட்டு வண்டி ஓட்டத் தொடங்கலாமா என்று தோன்றும்.
இப்படிக் குஷாலாக இருந்தவனுக்கு மறுபடியும் படிப்பில் ருசியுண்டானது எனக்கு மிகவும் வியப்பளித்தது. ஒரு நாள் என்னிடம் வந்து, தான் படித்ததெல்லாம் மறந்து போகிறதென்றும், மறுபடியும் படிக்கவேண்டுமென்றும், இங்கிலீஷ் கற்றுக் கொள்ளக்கூட ஆசையாயிருக்கிறதென்றும் சொன்னான். இராத்திரியில் தினம் வந்து படிப்பதாகக் கூறினான். நான் மகிழ்ச்சியுடன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.
குடியானப் பிள்ளைகளுக்குள்ளே நாகரத்தினத்தைப் போன்ற புத்திசாலியைக் காண்பது அரிது. சீக்கிரம் அவனுக்குப் படிப்பு வந்தது. அக்கறையுடனும் படித்தான். என்னிடம் அவனுக்கிருந்த பக்தி விசுவாசத்தையோ சொல்லி முடியாது. அப்படிப்பட்டவனிடம் எனக்கு மிகவும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில் வியப்பில்லையல்லவா? ஒருநாள் ராத்திரி அந்த நல்ல அபிப்பிராயம் அடியோடு மாறிப் போயிற்று. "இந்த விஷப் பாம்பையா இத்தனை நாளும் நல்லவன் என்று நினைத்திருந்தோம்?" என்று வியப்புண்டாயிற்று.
3
கதையில் முக்கியமான இடம் இப்போதுதான் வருகிறது. துரையப்பனையும், சந்திரமதியையும் பற்றிய வதந்தி ஏற்பட்டு ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டது. சங்கராந்தி விடுமுறைக்கு ஜமீன்தார் பிள்ளைகளும் துரையப்பனும் வந்திருந்த போது ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. தை சென்று, மாசியும் பிறந்து விட்டது. சித்திரையில் சந்திரமதிக்கும் கறுப்பு மீசைக்காரனுக்கும் கல்யாணம் நடக்குமென்று கேள்விப்பட்டேன். இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று.
சில தினங்கள் மாலை நேரத்தில் நான் ஆற்றங்கரையில் உலாவச் செல்வதுண்டு. அன்று வழக்கம்போல் சென்றவன் வாய்க்கால் மதகின்மேல் உட்கார்ந்து சந்திரமதியைப் பற்றிய சிந்தனையில் வெகுநேரம் ஆழ்ந்திருந்துவிட்டேன். நன்றாக இருட்டிவிட்டது. நிலவு கிடையாது. "சரி, போகலாம்" என்று எண்ணியபோது, மதகுக்கடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. இருட்டிய பிறகு ஆற்று மணலோடு நடந்து யாரோ அங்கு வந்திருக்க வேண்டும். பேச்சில் 'வெள்ளாழப் பையன்', 'சந்திரமதி' என்ற சொற்கள் காதில் விழவே உற்றுக் கவனித்தேன். குரலிலிருந்து, பேசியவர்கள் நல்லானும், கறுப்பு மீசைக்காரனும், நாகரத்தினமும் என்று தெரிந்தது.
நல்லான், கறுப்பு மீசைக்காரன் இவர்களுடனே நாகரத்தினமும் இருந்ததுதான் எனக்கு வியப்பு அளித்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆவலுண்டாயிற்று. சமய சந்தர்ப்பங்களும் அதற்கு உதவி செய்தன. அவர்கள் பேசியதைக் கேட்கக் கேட்க எனக்குக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. "அட பாவிகளா! இப்படியா சூழ்ச்சி செய்கிறீர்கள்! வெளிப் பார்வைக்குச் சாதுவைப் போல் தோன்றிய இந்த நாகரத்தினத்தின் வஞ்ச நெஞ்சந்தான் என்ன!"
என்னை அறியாமல், "அடே படுபாவி!" என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்துவிட்டன. "யார் அங்கே?" என்று ஒரு குரல் கேட்டது. "ஏன், நான் தான்!" என்றேன். அடுத்த நிமிஷம் மூன்று பேரும் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அக்கரையான், தன் மடியில் செருகியிருந்த கொடுவாளைக் கையில் எடுத்துக் கொண்டான். "இதோ பாருங்க, ஸார்! இந்தக் கொடுவாளால் சிங்கப்பூரில் ஒன்பது பேரின் தலையைச் சீவியிருக்கிறேன் நான்; தெரியுமா?" என்றான். அவன் வாயிலிருந்து சாராய நாற்றம் குப்பென்று அடித்தது.
அந்தக் கும்மிருட்டில், நிர்மானுஷ்யமான இடத்தில் அவன் அப்படிப் பேசியது எனக்குப் பயத்தை உண்டாக்கிற்று. கை கால்கள் வெடவெடத்தன. மேலும் அவன் தொடர்ந்து, "நாங்கள் பேசியது உங்கள் காதில் விழுந்திருக்கும். அதை வேறு யாரிடமும் சொல்வதில்லையென்று உங்கள் தலைமேல் அடித்துச் சத்தியம் செய்யுங்கள். இல்லாவிட்டால் இங்கேயே உங்களை வெட்டி இந்த மதகின் அடியில் புதைத்து விடுவேன்" என்றான்.
4
வாழ்க்கையில் நம்முடைய குணத்தைச் சோதிக்கக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன; அந்த சந்தர்ப்பங்களில் தீரத்துடன் நடந்துகொள்ள நாம் தவறி விடுகிறோம். பிறகு வாழ்நாள் முழுவதும், "அடாடா! அப்படிச் செய்தோமா? இப்படிச் செய்தோமா" என்று சிந்தித்துக் கவலைப்படுகிறோம்.
கறுப்பு மீசைக்காரன் என்னைப் பயமுறுத்தியபோது, "போ! உன்னாலானதைச் செய்து கொள்; நான் வாக்குறுதி ஒன்றும் கொடுக்க மாட்டேன்" என்று நான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. "எனக்கென்ன அப்பா வந்தது? உங்கள் வினை. நான் தலையிடலை. நான் ஒருவரிடமும் சொல்லவில்லை" என்றேன். கறுப்பு மீசைக்காரன் அது போதாது என்றான். அவன் இஷ்டப்படி, "சத்தியமாய்" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொடுத்தேன்.
அவர்களுடைய சம்பாஷணை இன்னதென்பதை இங்கே நான் எழுதினாலும் சத்தியத்தை மீறியதாகுமென்று பயப்படுகிறேன். ஆதலின், பின்னால் நடந்த சம்பவங்களை மட்டும் கதையைப் போல் எழுதிச் சொல்கிறேன். அவற்றிலிருந்தே, மேற்படி சம்பாஷணையின் போக்கை நீங்கள் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
"ஞான ரதம்" என்னும் நூலில் கந்தர்வலோகத்து 'மதனன் விழா'வைப் பற்றிப் படித்திருப்பீர்கள். எங்கள் ஊர் குடியானத் தெருவிலும் மாசி மாதத்துப் பௌர்ணமியன்று காமன் பண்டிகை கொண்டாடுவார்கள். பாரதியார் வர்ணித்திருக்கும் கந்தர்வலோக விழாவிலுள்ள சௌந்தரிய அற்புதம் ஒன்றும் இங்கே கிடையாது. 'நுண்வான்' கொண்டு அமைக்கப்பட்ட பதுமைகள், 'சைத்ரிக்' ஜீவன் பெற்ற சித்திரங்கள், மாடநிலத்து மண்டபங்கள், ஸுரிய காந்தக் கல்மேடைகள், அழகே உருவெடுத்த கந்தர்வ யுவர்கள், யுவதிகள், அவர்கள் இணையிணையாக வட்டங்களிட்டுக் கூத்தாடும் காட்சிகள் முதலியவற்றை எங்கள் ஊர் மதனன் விழாவில் பார்க்க முடியாது. ஆனால் கந்தர்வலோகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் பொதுவான அம்சம் ஒன்றுமட்டும் உண்டு. அது தான் பூரண சந்திரனின் மோகன நிலவு. குப்பைக் கூளங்கள் நிறைந்து தரித்திரம் தாண்டவமாடும் எங்கள் கிராமத்திலே கூட மாசி மாதத்துப் பௌர்ணமியன்று இரவு சௌந்தரிய தேவதை கொலுவீற்றிருப்பாள்.
இன்னொரு விதத்திலும், கந்தர்வலோக மதனன் விழாவுக்கும், எங்கள் ஊர் மன்மதசாமி உற்சவத்துக்கும் ஒற்றுமை உண்டு; அதாவது விழாவில் கலந்துகொள்வோர் காட்டும் உற்சாகத்தில், தொண்டு கிழவர் முதல் குஞ்சு குழந்தைகள் வரையில் இரவு முழுதும் மெய்மறந்து களிப்புக் கடலில் மூழ்கியிருப்பார்கள்.
தந்தத்தையொத்த வெண்ணிறத் தென்னங்குருத்துகளைக் கொண்டு சப்பரம் கட்டுவார்கள். அதில் சிவபெருமான் படம் ஒன்றை வைத்து ஊர்வலம் விடுவார்கள். சப்பரத்துக்கு எதிரில் மன்மதவேஷமும், ரதிவேஷமும் போட்டு இரண்டு பிள்ளைகளை நிறுத்தியிருப்பார்கள். மன்மதன் கையில் ஒரு வில்லை வைத்துக் கொண்டு பாணம் விடுவதுபோல் சைகை காட்டிக் கொண்டிருப்பான். ரதி, "வேண்டாம், வேண்டாம்" என்று சமிக்ஞை செய்து கொண்டிருப்பாள். இப்படி ஊர்வலம் விட்டு, இரவு பின் ஜாமத்தில் வெள்ளி முளைக்கும் நேரத்தில்தான் மன்மதசாமி கோவிலுக்கு வந்து சேர்வார்கள். பிறகு மன்மத தகனம் நடக்கும். பின்னர், எல்லாரும் கும்பலாய்க் குளத்திற்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
யாரோ ஒருவர் எழுதியிருந்தாரே, அதுபோல், சிவபெருமான் ஒரு சிறந்த ரஸிகர் என்பதில் சந்தேகமில்லை. பாருங்கள், அவர் மன்மதனுடைய உடலை எரித்துவிட்டு, அவனுடைய சக்தியை மட்டும் உலகத்தில் விட்டு வைத்திருக்கிறார்! இதற்குப் பதிலாக, அவர் மன்மதனுடைய உடலைச் சும்மா விட்டுவிட்டு, அவனுடைய சக்தியை அழித்திருந்தாரானால், உலகம் எவ்வளவு வெறுமையாய்ப் போயிருக்கும்? வாழ்க்கை எவ்வளவு விரஸமாயிருந்திருக்கும்?
மன்மத தகனம் நடைபெற்ற அன்றிரவிலேயே, வேறொரு பக்கம் அவனுடைய சக்தி வேலை செய்து கொண்டிருந்தது. எங்கள் கிராமத்திற்கு மேற்கே அரை மைல் தூரத்தில் பெரிய சாலை போகின்றது. அதற்குக் கிராமத்திலிருந்து கிளைப்பாதை வழியாகப் போக வேண்டும். கிளைப்பாதை பெரிய சாலையுடன் சேரும் இடத்தில் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாயிருக்கின்றன. அவ்விடத்தில் அன்று இரவு வெள்ளி முளைக்கும் நேரத்திலே ஒரு மோட்டார் வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் டிரைவருடைய ஆசனத்தில் துரையப்பன் உட்கார்ந்திருந்தான். கிளைப்பாதையை அவன் அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் கிளைப்பாதையில் இரண்டு உருவங்கள் தென்பட்டன. அவை அருகில் நெருங்கிய போது, சந்திரமதியும் நாகரத்தினமும் என்று தெரிய வந்தது. மேற்குத் திசையில் அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்த வெளிறிய சந்திரனின் ஒளி சந்திரமதியின் முகத்தில் படுங்கால், அவளுடைய இதழ்களில் புன்னகையும், கண்களில் நீர்த்துளியும் இருப்பது தெரிய வந்தது. அந்நீர்த்துளிகளில் சில சமயம் நேராகச் சந்திரக்கிரணங்கள் விழுந்தபோது, அவை ஒளி வீசும் முத்துக்கள் போல் பிரகாசித்தன.
மோட்டாரின் அருகில் அவர்கள் வந்ததும், துரையப்பன் சட்டென்று இறங்கிக் கதவைத் திறந்தான். சந்திரமதி பின் ஆசனத்திலும், நாகரத்தினம் துரையப்பனுக்குப் பக்கத்திலும் உட்கார்ந்தார்கள்; வண்டி கிளம்பிற்று; அதே சமயத்தில் தூரத்தில் நெருப்பின் ஜுவாலை கிளம்புவது தெரிந்தது; மன்மத தகனத்தின் கோலாகல சப்தம் வந்து கொண்டிருந்தது.
5
மோட்டார் வண்டி கிராம கிராமந்தரங்களையெல்லாம் கடந்து சென்று காலை சுமார் பத்து மணிக்குத் தஞ்சாவூரை நெருங்கிற்று. அப்போதெல்லாம் பட்டணங்களைச் சுற்றிலும் சுங்கச் சாவடிகள் உண்டு. மோட்டார் வண்டிக்காரர்கள் சில சமயம் ஏமாற்றி விடுகிறார்கள் என்பதற்காக, தூரத்தில் கார் சத்தம் கேட்கும்போதே, ஒரு நீளமான மூங்கிலை எடுத்துச் சாலையின் குறுக்கே மாட்டி விடுவார்கள். மோட்டார்கள் நின்றுதான் ஆக வேண்டும். துரையப்பனுடைய காரும் சுங்கம் கொடுப்பதற்காக நின்றது. அதே சமயத்தில், சுங்கச்சாவடிக்கு அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் வண்டியின் அருகில் வந்து, கதவைத் திறந்து கொண்டு சந்திரமதியின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை - கறுப்பு மீசைக்காரனும், நல்லானும்தான்!
துரையப்பன் திகைத்துப் போனான். சுங்க ரசீது கிடைத்தது. மூங்கிலையும் எடுத்தாகிவிட்டது. ஆனால் துரையப்பன் வண்டியை ஓட்டவில்லை.
அக்கரையான் தன்னுடைய பொடி டப்பியை எடுத்து, ஓர் உறிஞ்சு உறிஞ்சினான். பிறகு, கையை உதறிக் கொண்டே, "ஏன் தம்பி தாமதம்? ஓட்டுங்க; எங்கே போகலாமென்று உத்தேசித்து வந்தீங்களோ, அந்த இடத்துக்கே ஓட்டுங்க" என்றான். இதற்குள் வேடிக்கை பார்க்க ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள்.
அங்கு நிற்பதில் பயனில்லையெனக் கண்ட துரையப்பன் வண்டியை விட்டுக் கொண்டு சென்றான். பட்டணத்திற்குள் ஒரு சந்தில் நுழைந்து பூட்டியிருந்த ஒரு வீட்டுக்கெதிரில் நிறுத்தினான். நாகரத்தினத்திடம் சாவியைக் கொடுத்துத் திறக்கச் சொன்னான்.
எல்லாரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். துரையப்பன் மட்டும் தயங்கினான். கறுப்பு மீசைக்காரன் அவனுடைய கையைப் பிடித்து, "வாங்க தம்பி, வாங்க!" என்று கூறி இறக்கினான்.
உள்ளே போய் எல்லாரும் உட்கார்ந்த பிறகு, அக்கரையான், "தம்பி! இப்போது என்ன சொல்றீங்க?" என்று கேட்டான்.
"என்னத்தைச் சொல்கிறது? இந்தப் பெண் பட்டணம் பார்க்க வேண்டுமென்றாள்; அழைத்துக் கொண்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமில்லையென்றால், திரும்பியழைத்துக் கொண்டு போங்கள்" என்றான்.
"அப்படியெல்லாம் கோபிக்க வேண்டாம், தம்பி! அப்புறம் நாட்டாமைக்காரர் வீட்டு எருமைக் கன்றுக் குட்டி புல்லுத் தின்னாது" என்றான் அக்கரையான். அதைக் கேட்ட நல்லான் கொல்லென்று சிரித்தான்.
இப்படிக் கொஞ்ச நேரம் அகடவிகடப் பேச்சு ஆன பிறகு, "அதெல்லாம் இருக்கட்டும், தம்பி! மேற்கொண்டு நடக்கிறதைப் பற்றிப் பேசுங்க" என்றான் அக்கரையான்.
"மேற்கொண்டு என்ன நடக்கிறது?"
"நீங்க சொல்லாவிட்டால், நான் சொல்கிறேன்; எப்படியும் நீங்க சந்திரமதியை இட்டுக் கொண்டு வந்து விட்டீங்க. மறுபடியும் நாங்க அவளை அழைத்துக்கிட்டுப் போகிறது நியாயமில்லை. எப்படியாவது அவள் சுகமாயிருந்தால் நாட்டாமைக்காரருக்குச் சந்தோஷந்தான். ஆனால் அந்தப் பெண்ணை வளர்க்கிறதற்கு அவர் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். ஒரு மூவாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் குசாலாக அழைத்துக் கொண்டு போங்க. அவ்வளவுதான் நாங்க சொல்கிறது" என்றான்.
துரையப்பன் கொஞ்ச நேரம் யோசனை செய்தான். "சரி, மூன்று நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள். பணம் கொண்டு வருகிறேன்" என்றான். இதற்கு அவர்கள் சம்மதிக்கவே, துரையப்பன் வீட்டை விட்டு வெளியேறி மோட்டாரைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவனுடைய பெட்டி மட்டும் இவர்களிடம் இருந்தது.
இதெல்லாம் திங்கட்கிழமை நடந்தது. செவ்வாய், புதன், வியாழன் வரையில் அந்த வீட்டிலேயே இருக்கத் தீர்மானித்திருந்தார்கள். அவர்களுடைய உத்தேசம் என்ன வென்பதை வாசகர்களே ஊகித்திருக்கலாம். துரையப்பன் பணங் கொண்டு வருவான், அதை வாங்கிக் கொண்டு அவனை நன்றாய் அடித்துப் போட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிவிடலாமென்று எண்ணியிருந்தார்கள். ஆனால் சந்திரமதி அதற்குக் குறுக்கே நின்றாள். துரையப்பன் போனதிலிருந்து அவள் கண்ணீர்விடத் தொடங்கி விட்டாள். நாளாக ஆக, அவளுடைய துக்கம் அதிகமாயிற்று. துரையப்பன் திரும்பி வரும்போது அவ்வீட்டில் தன்னால் இருக்க முடியாதென்றும், இருந்தால் கட்டாயம் அவனிடம் உண்மையைக் கூறி எச்சரிக்கும்படி இருக்கும் என்றும் கூறினாள். கடைசியாகப் புதன்கிழமையன்று அவளை ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். நல்லானுக்கு தனியாக இருந்து சமாளிக்கத் தைரியமில்லை. அக்கரையானைத் தனியே விட்டுவிட்டுப் போனால் மூவாயிரம் ரூபாயும் தன்னிடம் ரொக்கமாக வரவேண்டுமேயென்ற பயமும் அவனுக்கு இருந்தது. ஆகவே, நாகரத்தினத்துடன் சந்திரமதியைக் கூட்டி ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள்.
புதன்கிழமை காலையில் நாகரத்தினமும் சந்திரமதியும் திருநாகேசுவரத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் ஸ்டேஷனில் ரயில் ஏறினார்கள். துரையப்பனை அடித்து ஹிம்ஸிக்கக் கூடாதென்று சந்திரமதி நூறு தடவை மன்றாடி நல்லானிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்; ஆனால் அக்கரையான் வாய் திறக்கவில்லை.
வியாழக்கிழமை பொழுது விடிந்ததிலிருந்து, துரையப்பன் வருவான், வருவான் என்று நல்லானும் கறுப்பு மீசைக்காரனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வரவேயில்லை. "ஓகோ! பையன் ஏமாற்றி விட்டான்!" என்று அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது. உடனே இரண்டு பேருக்கும் ஒருவித பயம் உண்டாகிவிட்டது. ஒரே மூச்சாக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலேறினார்கள்.
6
வாசகர்களுடைய மனத்தில் நெடு நேரமாயிருந்து வரும் சந்தேகத்தை இப்போது நிவர்த்தி செய்கிறேன். "ஏதோ அருகில் இருந்து பார்த்தது போல சொல்கிறீரே, இவ்வளவு விவரங்களும் உமக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்பீர்கள். கறுப்பு மீசைக்காரனும், நல்லானும் ஒன்று விடாமல் எனக்குச் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். சனிக்கிழமையன்று அவர்கள் என்னைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அப்படி என்னைத் தேடி வந்ததற்குக் காரணம், நாகரத்தினமும் சந்திரமதியும் அன்று வரையில் ஊருக்கு வந்து சேராததுதான்!
அதனால் இந்த இரண்டு பேரும் எவ்வளவு திடுக்கிட்டுப் போயிருக்க வேண்டும். எவ்வளவு கவலைக்குள்ளாகியிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகையினாலேதான், அதுவரையில் என்னைத் திருணமாக மதித்திருந்த அக்கரையான் என்னைத் தேடிக்கொண்டு வந்தான்.
"ஸார்! மோசம் போய்விட்டது, ஸார்! நீங்கள் தான் யோசனை சொல்லவேண்டும், ஸார்!" என்றான். நல்லானோ பேசக்கூட முடியாதவனாய்க் கவலையில் மூழ்கியிருந்தான்.
அவர்கள் எல்லா விவரமும் சொன்ன பின்னர், "நாகரத்தினத்துக்கும் சந்திரமதிக்கும் என்னதான் நேர்ந்திருக்கலாமென்று உங்களுக்குத் தோன்றுகிறது?" என்று கேட்டேன். துரையப்பன் ஆள் பலத்துடன் வந்து வழியில் அவர்களைச் சந்தித்து, நாகரத்தினத்தைக் கொன்றுவிட்டு, சந்திரமதியைக் கொண்டு போயிருப்பானென்று அவர்கள் நினைத்தார்கள். உண்மையில் சந்திரமதியைப் பற்றி நான் அப்போது அவ்வளவு கவலைப்படவில்லை. நாகரத்தினத்தைப் பற்றித்தான் வருத்தப்பட்டேன். அந்தப் பையனும் இந்தத் துஷ்டர்களுடைய சதியாலோசனையில் சேர்ந்ததற்காக எனக்கு என்னதான் வருத்தம் இருந்த போதிலும் அவன் மேல் அபிமானமும் இருந்தது.
"ஏதோ என்னாலானதைப் பார்க்கிறேன்; நீங்கள் ஒன்றும் வெளியில் சொல்ல வேண்டாம். சந்திரமதி மாமன் ஊருக்குப் போயிருப்பதாகவே இருக்கட்டும்" என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, உடனே பக்கத்து ஊர் ஜமீந்தார் வீட்டுக்குப் போனேன். அவரிடம் பல விஷயங்களையும் பற்றிப் பேசிவிட்டு, "துரையப்பன் இப்போது எங்கே இருக்கிறான்? சௌக்கியமாயிருக்கிறானா?" என்று கேட்டேன்.
அவர், "அதை ஏன் கேட்கிறீர்கள். போங்கள்! அவனால் எங்களுக்கு ரொம்பத் தொல்லையாகி விட்டது. இங்கே காமன் பண்டிகையன்றைக்கு மோட்டாரில் வந்திருந்தான். மறுநாள் காலையில் பார்த்தால் ஆளைக் காணோம். சொல்லாமல் போய்விட்டான். பல இடங்களுக்கும் கடிதம் போட்டதில் இன்றுதான் தகவல் வந்தது. பையன் திருநெல்வேலியில் அவனுடைய மாமனார் வீட்டில் இருக்கிறானாம். உடம்பு ஏதோ அசௌக்கியமாம்" என்றார். கடிதத்தை எடுத்து நானே பார்த்தேன். திருநெல்வேலியில் புதன்கிழமைதான் அந்தக் கடிதம் தபாலில் போடப்பட்டிருந்தது.
எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. துரையப்பன் கறுப்பு மீசைக்காரனைக் கண்டு பயந்து போய்விட்டான். "உடும்பு வேண்டாம்; கையை விட்டால் போதும்" என்று எண்ணி இந்தப் பக்கத்திலேயே இல்லாமல் ஓடிவிட்டான். இன்னொரு விவரமும் அவனைப்பற்றி எனக்குந் தெரிந்தது. அவனுக்குக் கலியாணம் ஏற்கனவே ஆகியிருக்கிறதென்று. இது தெரியாமல் போனதனால் அல்லவா அவன் சந்திரமதியைத் தொடர்ந்து அலைவதுபற்றி நான் கோபங் கொள்வதற்குப் பதில் சந்தோஷமடைந்தேன்? என்ன மதியீனம்!
7
துரையப்பன் கதை தீர்ந்தது; அவன் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் நாகரத்தினமும், சந்திரமதியும் என்னவானார்கள்? அவர்களுக்கு வழியில் வேறு என்ன விபத்து நேர்ந்திருக்ககூடும்? ஐயோ, பாவம்? நல்ல குழந்தைகளாயிற்றே!
அப்புறம் சில தினங்கள் வரையில் எனக்கு வேறு எதிலும் புத்தி செல்லவில்லை. வீட்டிலும் வெளியிலும் ஆற்றங்கரையிலும் இலுப்பத் தோப்பிலும், எங்கே எதைப் பார்த்தாலும் சந்திரமதியின் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உடன் நாகரத்தினத்தின் ஞாபகமும் சேர்ந்தே வந்தது. சிறிது சிறிதாக என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கலாயிற்று. ஒரு வேளை... அப்படியும் இருக்குமோ? அவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்களா அவர்கள்?
எல்லாச் சந்தேகமும் அடுத்த சனிக்கிழமையன்று நீங்கிவிட்டது. அன்று எனக்குப் பின்வரும் கடிதம் வந்தது. என் மாணாக்கனாதலால் எழுத்துப் பிழைகளை மட்டும் நீக்கி விட்டுப் பிரசுரிக்கிறேன்:
"மகா-௱-௱-ஸ்ரீ ஸார் அவர்களுக்குத் தங்கள் அன்புள்ள மாணாக்கன் நாகரத்தினம் அநேக நமஸ்காரம்.
தங்களுக்கு நான் அதிகமான மனக் கஷ்டத்தைக் கொடுத்தேன். என்னைப் பற்றித் தாங்கள் விபரீதமான எண்ணங் கொள்ளவும் இடங்கொடுத்தேன். மன்னிக்க வேண்டும்.
நான் என்ன செய்யலாம்? சந்தர்ப்பங்கள் அப்படி நேர்ந்தன. என்னிடம் துரையப்பப் பிள்ளையும் உதவி கேட்டார்; கறுப்பு மீசைக்காரரும் உதவி கோரினார். அவர்களுக்கு இணங்கி நடப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியில் பகவானுடைய அருளால் என்னுடைய மனோரதமே ஈடேறிற்று.
ஸ்வாமி! எனக்கும் சந்திரமதிக்கும் இன்று நேற்று நேசம் ஏற்படவில்லை. தங்கள் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்த காலத்திலிருந்து ஏற்பட்டு வளர்ந்த நேசம். ஆனால் அது கைகூடுமென்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. எப்படியெப்படியோ நடந்து கடைசியில் எங்கள் எண்ணம் நிறைவேறிற்று.
என்னுடைய சித்தப்பன் ரங்கூனில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் என்னை எத்தனையோ நாளாய் வரச்சொல்லிக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். நானோ சந்திரமதியைப் பிரிய மனமின்றிப் போகாமல் இருந்தேன். இப்போது இரண்டு பேரும் சேர்ந்து போகிறோம்.
நாட்டாண்மைக்காரரிடம், அவருக்கு எங்கள் பேரில் உள்ள கோபம் தணிந்து, கறுப்பு மீசைக்காரரும் ஊரை விட்டுப் போன பிறகு நாங்கள் திரும்பி வருவோமென்று தெரியப்படுத்தவும்.
உங்கள் ஆசீர்வாதத்தினால் தான் எங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்ததாகச் சந்திரமதி தினம் நூறு தடவை சொல்கிறாள்.
இந்தக் கடிதம் கப்பலில் எழுதுகிறேன். ரங்கூனில் இறங்கியதும் தபாலில் சேர்ப்பேன். பிறகு, எங்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன். தாங்களும் இந்த ஏழைகளை மறந்து விடாமல் அடிக்கடி கடிதம் எழுத வேணும்.
இப்படிக்குத்
தங்கள் ஊழியன்
நாகரத்தினம்."
மேற்படி கடிதம் எனக்கு எவ்வளவு சந்தோஷம் அளித்திருக்குமென்று வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒரே ஒரு வருத்தந்தான்; என்னிடம் விஷயம் இப்படி என்று அந்தப் பயல் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? சொல்லியிருந்தால், பின்வரும் 'சந்திரமதி' பாட்டின் அடியை அவனுக்கு நான் கற்றுக் கொடுத்திருக்க மாட்டேனா?
"நீலக் கடலினிலே - நின்
நீண்டகுழல் தோன்றுதடி
கோல மதியினிலே - நின்
குளிர்ந்த முகம் காணுதடி
ஞால வெளியினிலே - நின்
ஞான ஒளி வீசுதடி
கால நடையினிலே - நின்
காதல் விளங்குதடி!"