கணையாழியின் கனவு
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Kalki Krishnamoorthy
- Hits: 2114
சகுந்தலை சுயம்வரம்
கனவுதான்; ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கனவு! அசோக வனத்திலிருந்த சீதையிடம் திரிஜடை தான் கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாகத் திரிஜடை, "....இராவணனுடைய மாளிகையிலிருந்து செந்தாமரையாள் ஆயிரம் முகமுடைய திருவிளக்கைக் கையில் ஏந்திக் கிளம்பி வந்து விபீஷணன் மனையில் புகக் கண்டேன். ஜானகி! இத் தருணத்தில் நீ என்னை எழுப்பவே கண் விழித்தேன்" என்று கூறி முடித்தாள். அப்போது சீதை, "அம்மா! மறுபடியும் தூங்கு, அந்தக் கனவின் குறையையும் கண்டுவிட்டு எனக்குச் சொல்லு" என்று வேண்டிக் கொண்டாள்.
("இது என்ன? நீர் கூட இராமாயண ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீரா?")
இல்லை, இல்லை உதாரணத்துக்காகவே மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட்டேன். ரகுராமன் கனவிலிருந்து கண் விழித்ததும் ஏறக்குறைய சீதையைப் போலவேதான் ஆதங்கப்பட்டான். "மறுபடியும் தூங்க மாட்டோ மா? அந்தக் கனவின் பாக்கியையும் காணமாட்டோ மா?" என்று ஏங்கினான்.
"ரகுராமனா? எந்த ரகுராமன்?"
ஓகோ! மன்னிக்க வேண்டும்.
இராமாயணத்தின் கதாநாயகனாகிய ரகுராமன் அல்ல; இவன் கணையாழி கே.பி. ரகுராமன், பி.ஏ.
("கணையாழியா? எந்தக் கணையாழி?")
அட உபத்திரவமே! கணையாழி என்றால், அநுமார் இராமரிடமிருந்து வாங்கிச் சீதையிடம் கொண்டுபோய்க் கொடுத்த கணையாழி அல்ல. இது, நான் சொல்லப் போகும் கதை நடந்த ஊர். அந்த ஊருக்கு ஏன் 'கணையாழி' என்ற பெயர் வந்ததென்பது வேறு கதை. அதை மற்றொரு சமயம் சொல்லலாம். இப்போது ரகுராமன் கண்ட ரஸமான கனவைக் கூறுகிறேன்.
சகுந்தலை - இது அவளுடைய உண்மையான பெயரல்ல; மற்றோர் இராமயணப் பெயர் வந்தால் வாசகர்களால் தாங்க முடியாது என்று பயந்து நான் மாற்றி இட்ட பெயர். சகுந்தலை ஆற்றங்கரை அரசமரத்தின் அடிக்கிளையில் ஏறி, உல்லாசமாய்ச் சாய்ந்து கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவள் வலது கரத்தில் ஒரு பூமாலை தொங்குகிறது. கே.பி.ரகுராமனும், இன்னும் கணையாழி கிராமத்திலே கதாநாயகர்களாவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாயிருந்த இளைஞர்கள் அனைவரும் அந்த மரத்தடியில் நின்று - உட்கார்ந்து - நின்று - உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தெளிவாய்ச் சொன்னால், தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள்!
சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொருவராகக் களைத்துப் போய் உட்காரத் தொடங்கினார்கள். ஒருவர், இருவர், மூவர், நால்வர்... உட்கார்ந்து விட்டார்கள். ரகுராமனும், வைத்தியநாதனும் மட்டுந்தான் பாக்கி. கடைசியில், வைத்தியநாதனும் தோல்வியுற்று உட்கார்ந்தான், அப்போது மரத்தின் மீதிருந்த சகுந்தலை குயிலினும் யாழினும் இனிய குரலில், "ரகுராமனே ஜயித்தார். அவருக்கே நான் மாலையிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே மரத்திலிருந்து கீழிறங்கலானாள். அப்போது ரகுராமன் அவளுக்குக் கைகொடுத்து இறக்கிவிடுவதற்காகத் துள்ளிக் குதித்துச் சென்றான். இத்தகைய ரஸமான, ருசிகரமான, நாவிலே ஜலம் ஊறச் செய்யும்படியான இடத்திலேதான் ரகுராமன் கண் விழித்தது. நிதானித்துப் பார்த்தான். தான் படுக்கையிலிருந்து எழுந்து தாழ்வாரத்தின் தூணையும், கூரை விட்டத்தையும் பிடித்த வண்ணமாய் நிற்பதைக் கண்டான். மறுபடியும் படுத்துத் தூங்கி, அந்தக் கனவின் குறையையும் காணமாட்டோ மாவென்று அவன் உள்ளம் துடிதுடித்தது. ஆனால், பிறகு தூக்கம் வரவேயில்லை. மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.
இந்தக் கனவு, முதல் நாள் சாயங்காலம் தானும் மற்றக் கணையாழி இளைஞர்களும் பேசிக் கொண்டிருந்ததன் பயனேயென்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.
"முன்னெல்லாம்போல் இக்காலத்திலும் சுயம்வரம் ஏன் நடத்தக் கூடாது? நமக்குள் தீரமான காரியம் செய்கிறவன் சகுந்தலையை மணம் புரிவதென்று ஏற்படுத்தி விட்டால்?..." என்றான் கல்யாணசுந்தரம்.
"அப்படி ஏற்படுத்தினால் நீதான் ஜயிப்பாய் என்று எண்ணமோ?" என்றான் இராமமூர்த்தி.
"எனக்கு ஒன்று தெரியும்; யார் அதிகமான தோப்புக் கரணம் போட முடியும் என்று பந்தயம் ஏற்படுத்தினால், ரகுராமன் தான் ஜெயிப்பான்" என்று வைத்தியநாதன் சொன்னான்.
எல்லாரும் சிரித்தார்கள். வைத்தியநாதன் கூறியதில் கொஞ்சம் உண்மையுண்டு. ரகுராமன் சிறு பையனாயிருந்த போதிலிருந்து பஸ்கி போட்டுப் பழகியவன். முன்னூறு, நானூறு பஸ்கி ஒரே மூச்சில் அவனால் போட முடியும்.
பிறகு, அவர்களில் ஒவ்வொருவனும் எந்தெந்தப் பந்தயத்தில் ஜயிப்பான் என்பதைப் பற்றிப் பேச்சு நடந்தது.
இவ்வாறு, தன்னைப் பரிகாசம் செய்வதற்காக, அவர்கள் சொன்னதையே தான் கனவில் செய்ததாகக் கண்டதை நினைக்க ரகுராமனுக்குச் சிறிது நாணமாயிருந்தது. ஆனாலும் என்ன? மற்றவர்களுக்கு அது தெரியப் போவதில்லை. தன் வரையில் மறுபடியும் கண்விழித்தே எழாமல் அந்தக் கனவு காண்பதிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்துவிட மாட்டோ மா என்று அவனுக்குத் தோன்றியது.
கணையாழியில் அன்றிரவு ரகுராமனைப் போல் பந்தயத்தில் மற்றவர்களைத் தோற்கடித்துச் சகுந்தலையை மணம் புரிவது சம்பந்தமான கனவு கண்டவர்கள் இன்னும் பலர் உண்டு. வைத்தியநாதன் என்ன கனவு கண்டான் தெரியுமா? அவனும், இராமமூர்த்தி, ரகுராமன் முதலியோரும் வரிசையாக இலைகளுக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். எதிரில் ஒரு பெரிய அண்டா நிறைய இட்டிலியும், ஒரு ஜாடி நிறைய எண்ணெயும், மிளகாய்ப் பொடி வகையராக்களும் வைத்திருந்தன. சகுந்தலை அந்த இட்டிலிகளை எடுத்துப் பரிமாற ஆரம்பித்தாள். அருகில் வைத்திருந்த கறுப்புப் பலகையில் அவர்கள் தின்ற இட்டிலிகளுக்குக் கணக்குப் போட்டு வந்தாள். மற்றவர்கள் எட்டு, பத்து, பதினைந்து, பதினெட்டாவது இட்டிலியில் நின்று விட்டார்கள். ஆனால் வைத்தியநாதனோ மேலே மேலே போய்க் கொண்டிருந்தான். இட்டிலி பரிமாறிக் கொண்டிருந்த - ஒரே ஒரு தந்த வளையல் மட்டும் அணிந்த - சகுந்தலையின் மலர்க் கரத்தை அவன் பார்ப்பான். "இத்தகைய அழகிய கையினால் இட்டிலி பரிமாறப் படுகையில், அந்த அண்டாவிலுள்ள இட்டிலிகளைச் சாப்பிடுவதுதானா ஒரு பிரமாதம்? முடிவென்பதே இல்லாமல் இட்டிலிகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கலாமே!" என்று அவனுக்குத் தோன்றும். கடைசியாக, அவன் நாற்பத்தாறாவது இட்டிலி தின்று கொண்டிருக்கையில், சகுந்தலை பவழத்தை வென்ற தன் இதழ்களைத் திறந்து, "இதோ வைத்தியநாதனேதான் வெற்றி பெற்றார். அவருக்கே நான் மாலை சூட்டுவேன்!" என்று கூறி மாலையை எடுத்து வந்தாள். அந்த சமயத்தில் - நாற்பத்தாறாவது இட்டிலி வைத்தியநாதனுடைய தொண்டைக்குக் கீழே இறங்காமல் அங்கேயே நின்றுவிட்டது. திக்கு முக்காடிப் போய் வைத்தியநாதன் உளறிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். பனிக்காக அவன் தலையில் கட்டிக் கொண்டிருந்த கம்பளித் துணியின் முடிச்சு கழுத்தில் இறுகியிருப்பதை உணர்ந்து அதைத் தளர்த்தி விட்டான்.
இம்மாதிரியே கல்யாணசுந்தரம், ராஜசேகரன், மாசிலாமணி, இராமமூர்த்தி முதலியவர்கள் எல்லோரும் அன்றிரவு வெவ்வேறு விதமான கனவுகள் கண்டார்கள்.
கல்கத்தா ரங்கநாதம்
கணையாழி, அருணை நதி தீரத்திலுள்ள வளம் பொருந்திய கிராமம். அந்தக் கிராமத்தார் பரம்பரையான புத்திசாலிகள். அவர்கள் தானிய லக்ஷ்மியை இஷ்டதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள். இந்த வழிபாட்டில் வட்டி, வட்டிக்கு வட்டி, கூட்டு வட்டி ஆகிய மந்திரங்களை இடை விடாமல் உச்சரித்து வந்தார்கள். சக்திவாய்ந்த இந்த மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு, தனலக்ஷ்மியும் அக்கிராமவாசிகளுக்கு அடிமை பூண்டு வாழ்ந்து வந்தாள்.
இத்தகைய கிராமத்தில் இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் ஆங்கிலப் படிப்புள்ளவர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? அந்த ஊரில் இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் எல்லாரும் அநேகமாக எம்.ஏ.க்கள்; எம்.ஏ. அல்லாதவர்கள் பி.ஏ.க்கள்; அதுவும் இல்லாதவர்கள் பாதி பி.ஏ.க்கள். எல்லோரும் பணக்காரர்கள் ஆதலால், உத்தியோகத்தைத் தேடி அலையாமல் வேண்டுமானால் உத்தியோகம் தங்களைத் தேடி வரட்டும் என்று ஊரில் தங்கி விட்டவர்கள்.
அப்படிப்பட்ட கணையாழி கிராமத்தில் இப்போது வசித்து வந்த முந்தின தலைமுறையைச் சேர்ந்தவர்களில் கல்கத்தா ரங்கநாதம் என்று ஒருவர் இருந்தார். கணையாழியில் பிறந்துங்கூட லேவாதேவி செய்யாத அபூர்வ மனிதர்களில் இவர் ஒருவர். அக்கவுண்டண்ட் ஜெனரல் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுச் சமீபத்தில் விலகியவர். வெகுகாலம் கல்கத்தாவில் வசித்தபடியால், இவருக்குக் கல்கத்தா ரங்கநாதம் என்று பெயர் வந்தது. இரண்டு வருஷத்துக்கு முன்பு இவருடைய அருமை மனைவியும், மூத்த புதல்வனும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் காலஞ்சென்ற பிறகு, தம் புதல்வி சகுந்தலையை ஸ்ரீ ரவீந்தரநாதரின் சாந்திநிகேதனத்தில் விட்டுவிட்டுத் தாம் கணையாழிக்கே வந்துவிட்டார். இங்கு ஒரு சமையற்காரனை வைத்துக் கொண்டு ஏகாங்கியாய் வாழ்ந்து வந்தார்.
ஐந்தாறு பீரோக்கள் நிரம்பிய அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள்தான் அவருக்குத் துணையாய் இருந்து வந்தனர்.
சில சமயம் கணையாழி இளைஞர்களில் சிலர், அவர் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அதாவது, பெரும்பாலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; அவர் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால், சிற்சில சமயம் அவர் உண்மையில் தாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா, அல்லது கேட்டுக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்கிறாரா என்று அவர்களுக்குச் சந்தேகம் உண்டாவதுண்டு.
உதாரணமாக, அவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று கேள்வி பிறந்தது. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்தான் என்று ஒருவன் சொன்னான். "இல்லை, இல்லை! அவர் பங்களூர்க்காரர்" என்றான் மற்றொருவன். "என்ன, உங்களுக்குத் தெரியுமா ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று?" என்பதாக ஒருவன் ரங்கநாதம் அவர்களைப் பார்த்துக் கேட்டான். அப்போது அவர் அரை நிமிஷம் திகைத்திருந்துவிட்டு, "ஸரோஜினி நாயுடு தானே? வங்காளி ஸ்திரீதான். சந்தேகமென்ன?" என்று கூறினார்.
இத்தகைய மெய்மறந்த பேர்வழி ஒரு நாள் கணையாழி இளைஞர்களிடம் மிகவும் உற்சாகமாகவும், பரபரப்புடனும் வார்த்தகளைக் கொட்டிப் பேசத் தொடங்கியபோது அவர்களுக்குப் பெரிதும் ஆச்சரியமாய்ப் போயிற்று. முதலில் அவர் கணையாழி ஸ்டேஷனில் எந்தெந்த ரயில் எவ்வெப்போது வருகிறதென்பதை மிக நுட்பமாய் விசாரித்தார். பிறகு கணையாழியைச் சுற்றி மோட்டார் போகக்கூடிய நல்ல சாலைகள் என்னென்ன இருக்கின்றனவென்று கேட்டார். அப்புறம், அந்த இளைஞர்களில் யாருக்காவது கலியாணம் ஆகியிருக்கிறதாவென்று வினவினார். ஒருவருக்கும் ஆகவில்லையென்றார்கள். ஸ்ரீதரன் என்பவனுக்கு மட்டும் சமீபத்தில் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. மணப்பெண்ணுக்கு வயது பதினொன்று என்று அறிந்த போது அவரால் சிரிப்பைத் தாங்கவே முடியவில்லை.
"இந்தக் காலத்திலே கூடவா இத்தகைய பொம்மைக் கலியாணங்கள் நடக்கின்றன?" என்று ஆச்சரியப்பட்டார். கலியாணத்தைப் பற்றிய பேச்சு வளர்ந்தது. "பெண்களுக்கு வயது வந்த பிறகு அவர்களே கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி விட்டு விட வேண்டும்" என்னும் தமது கொள்கையைத் தாங்கி ஸ்ரீ ரங்கநாதம் விரிவாகப் பேசினார்.
பிறகு, அந்த ஊரில் படிப்புள்ள ஸ்திரீகள் யாராவது இருக்கிறார்களா என்றும், மாதர்கள் கூடிப் பொழுது போக்குவதற்குரிய சங்கம் ஏதாவது இருக்கிறதா என்றும், இன்னும் என்னவெல்லாமோ விசாரித்தார். ஒரு நாளும் இல்லாத புதுமையாக, கணையாழியின் சமூக வாழ்க்கையில் கிழவர் இவ்வளவு சிரத்தை காட்டியது ஏன் என்பது கடைசியாகத் தெரியவந்தது. அவருடைய புதல்வி சகுந்தலைக்கு விசுவ பாரதியில் கல்விப் பயிற்சி முடிந்து விட்டதென்றும், அவள் மறுநாள் காலை ரயிலில் கணையாழிக்கு வருகிறாளென்றும் இரண்டு முன்று மாதம் இங்கே தங்கியிருப்பாளென்றும் அறிவித்தார்.
தங்களுடைய வாழ்க்கையிலேயே புதுமையான அநுபவம் ஒன்று ஏற்படப் போகிறதென்ற உணர்ச்சியுடன், அன்றிரவு கணையாழி இளைஞர்கள் படுக்கச் சென்றார்கள்.
புதுமைப் பெண் வருகை
மறுநாள் காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அத்தனை பேருக்கும் சேர்ந்தாற்போல் என்ன காரியந்தான் இருக்கும்? ரகுராமன் டிக்கட் கொடுக்கும் குமாஸ்தாவின் அறையில் உட்கார்ந்து, அவருடன் வெகு சுவாரஸ்யமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கண் அடிக்கடி கடிகாரத்தின் முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தது.
வைத்தியநாதன், போர்ட்டர் சின்னப்பனுடன் ஏதோ ரஸமான சம்பாஷணையில் ஆழ்ந்திருந்தான். ஸ்ரீதரன், ஸ்டேஷன் பிளாட்பாரத்தைச் சென்னைக் கடற்கரையாகப் பாவித்து உலாவிக் கொண்டிருந்தான். கல்யாணசுந்தரம், எடை போடும் இயந்திரத்தின் மேல் உட்கார்ந்து நேற்று வந்த தினசரிப் பத்திரிகையின் விளம்பரப் பத்திகளை ஏகாக்கிர சிந்தையுடன் படித்துக் கொண்டிருந்தான்.
வண்டி வந்து நின்றது. ரங்கநாதம் ஸ்திரீகளின் பிரத்தியேக வண்டியை நோக்கி விரைவாய்ச் சென்றார். அவர் அவ்வளவு வேகமாக நடந்ததை ரகுராமன் பார்த்ததேயில்லை. அடுத்த கணம் ஸ்திரீகளின் வண்டிக்குள்ளிருந்து ஒரு சந்திர பிம்பம் வெளியே தோன்றுவதை அவன் கண்டான். 'இதென்ன பிம்பத்தின் மத்தியில் திடீரென்று முத்து வரிசை தோன்றுகிறது! அடடே! ஒரு பெண்ணின் முகமா அது? அவளுடைய இளநகையா அப்படிப் பளீரென்று ஒளி வீசுகிறது!' "அப்பா! இதோ இருக்கிறேன்!" என்று அவள் சொன்ன சொற்கள் தேனிற் குழைத்தவையா? அல்லது தேவாமிர்தத்துடன் தான் கலந்தவையா? ரகுராமனுடைய கால்கள் அவனையறியாமல் அந்தப் பக்கம் நோக்கி நடந்தன.
சாமான்கள் இறக்கப்பட்டு, சகுந்தலை வண்டியிலிருந்து கீழே இறங்குவதற்குள், கணையாழியில் கதாநாயகர்களாவதற்குத் தகுதிவாய்ந்த அவ்வளவு இளைஞர்களும் அங்கே சூழ்ந்து விட்டார்கள். போர்ட்டர் சின்னப்பன் தனது உத்தியோக வாழ்க்கையில் என்றும் காணாத அதிசயத்தை அன்று கண்டான். சாதாரணமாய் ஒரு சிறு கைப்பெட்டியைத் தூக்குவதற்குக் கூடத் தன்னைத் தேடிப் பிடிக்கும் வழக்கமுடைய சின்ன எஜமான்கள் எல்லாம் தலைக்குத் தலை பெட்டியோ, படுக்கையோ, வேறு சாமானோ எடுத்துக் கொண்டு போவதை அவன் அன்று பார்த்தான்.
சாமான்கள் ஏற்றப்பட்டு, ரங்கநாதமும் சகுந்தலையும் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், "சரி, சாயங்காலம் வருகிறோம். மற்ற விஷயங்கள் பேசிக் கொள்ளலாம்" என்று வைத்தியநாதன் சொன்னான்.
"சரி, சாயங்காலம் வாருங்கள்" என்று ரங்கநாதமும் சொன்னார். ஆனால் வழியில் சகுந்தலை, "மற்ற விஷயங்கள் என்ன?" என்று கேட்டபோது, அவர் தமது வழுக்கை மண்டையைச் சொறியத் தொடங்கினார்.
அன்றைய தினத்துச் சாயங்காலமானது, மத்தியான்னம் இரண்டு மணிக்கே வந்துவிட்டதாகத் தோன்றியது. மணி மூன்று அடிப்பதற்குள் ரகுராமன், வைத்தியநாதன் முதலான ஏழெட்டுப் பேரும் ரங்கநாதம் அவர்களின் வீட்டுக் கூடத்தில் கூடிவிட்டார்கள். ரங்கநாதமும் அவர்களை எப்போதையும் விட அதிக உற்சாகத்துடன் வரவேற்றார். ஒரு நாளும் இல்லாத திருநாளாக அவர்களுக்கெல்லாம் காப்பிக் கொண்டு வரும்படி சமையற்காரனுக்கு உத்தரவிட்டார்.
காப்பியுடன் சகுந்தலையும் வந்தாள். அவள் உட்கார்ந்ததும், "நேற்றுச் சொன்னேனல்லவா? என்னுடைய பெண் இவள் தான்" என்று ரங்கநாதம் கூறினார்.
"காலையிலேயே தெரிந்து கொண்டோம்" என்றான் கல்யாணசுந்தரம்.
"காலையில் நீங்களாக அல்லவா தெரிந்து கொண்டீர்கள்! இப்போது நான் முறைப்படி அறிமுகப்படுத்தி வைக்கிறேன்" என்றார்.
"எனக்கு இவர்களை இன்னார் என்று அறிமுகப்படுத்தவில்லையே, அப்பா?" என்றாள் சகுந்தலை.
"ஆமாம், அதைத்தான் இப்போது செய்யப் போகிறேன். இதோ இவர் தான் வைத்தியநாதன்" என்றதும், எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஏனென்றால், அவரால் சுட்டிக் காட்டப்பட்டவன் பெயர் கல்யாணசுந்தரம்.
"இல்லை, என் பெயர் கல்யாணசுந்தரம். அதோ அவர் பெயர் வைத்தியநாதன்" என்றான் கல்யாணசுந்தரம்.
"வைத்தியநாதன், எம்.ஏ." என்றான் அவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டவன். "எம்.ஏ." என்று பரிகாசமாயச் சேர்த்ததாக அவனுடைய எண்ணம். சமயத்தில் அதையும் போட்டு வைத்துவிடலாமென்று உத்தேசமும் உண்டு.
"அப்பா எப்போதுமே இப்படித்தான். அவருக்குப் பெயர், ஊர் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை. ஏன், அப்பா! என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று சகுந்தலை கேட்டாள்.
உடனே ஒரு பலமான அதிர்வேட்டுச் சிரிப்பு கிளம்பிற்று. அதில் ரங்கநாதமும் சமையற்காரனும் கூடக் கலந்து கொண்டார்கள். ஆனால் ரகுராமன் மட்டும் சிரிக்கவில்லை. காரணம், அரை நாழிகையாக அவன் வேறொரு யோசனையில் ஆழ்ந்திருந்தான். சகுந்தலையிடம் ஏதாவது பேச வேண்டுமென்பது அவனுக்கு எண்ணம். ஆனால் என்னத்தைப் பேசுவது?...
கடைசியாக தைரியம் கொண்டு, "கல்கத்தாவிலே என்ன விசேஷம்?" என்று கேட்டு விட்டான். இந்த மூன்று வார்த்தைகளை வெளியே கொண்டு வருவதற்குள் அவனுக்கு மூச்சு முட்டிவிடும் போல் இருந்தது.
"கல்கத்தாவிலா? எவ்வளவோ விசேஷம்!" என்றாள் சகுந்தலை. அப்போது தேசமெங்கும் சுதந்திர இயக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. கல்கத்தாவில் வெகு மும்முரமாயிருந்தது. அது சம்பந்தமான நிகழ்ச்சிகளைச் சகுந்தலை கூறலானாள். வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை என்பார்களே, அந்த மாதிரி எல்லாரும் அவ்விவரங்களைக் கேட்கலாயினர்.
சாயங்காலம் அவர்கள் வீடு திரும்பிச் சென்றபோது, "பாரதியார் புதுமைப் பெண் என்று பாடியிருக்கிறாரே, அவள் இவள் தான் போல் இருக்கிறது" என்றான் கல்யாணசுந்தரம். அந்தச் சமயந்தான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்ட சம்பாஷணை அவர்களுக்குள் நடந்தது. அன்றிரவேதான் ரகுராமன், வைத்தியநாதன் முதலியோர் இன்பக் கனவுகள் கண்டார்கள்.
இரவு படுக்கைக்குப் போகுமுன் சகுந்தலை, ரங்கநாதம் அவர்களிடம், "அப்பா! இந்த ஊர்ப் பிள்ளைகள் கொஞ்சம் பைத்தியமாயிருப்பார்கள் போல் இருக்கிறதே!" என்று சொன்னாள்.
"என்ன? பைத்தியம் என்றா சொன்னாய்?" என்று ரங்கநாதம் கேட்டார்.
"ஆமாம்."
"ரொம்ப சந்தோஷம்."
"அதில் சந்தோஷம் என்ன, அப்பா?" என்று சகுந்தலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"இல்லை, நான் அவர்களை அசடுகள் என்று நினைத்தேன், நீ பைத்தியம் என்கிறாயே?"
சகுந்தலை இன்னும் அதிகமாகச் சிரித்துவிட்டு, "அதென்ன அப்பா! அசடைவிடப் பைத்தியம் மேலா?" என்று கேட்டாள்.
"ஆமாம்! அசடுகளினால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பைத்தியங்களினால் ஏதாவது காரியம் செய்ய முடியும்."
"அவர்களைக் கொண்டு கொஞ்சம் காரியம் செய்விக்கலாமென்றுதான் நினைக்கிறேன்! பார்க்கலாம்" என்றாள் சகுந்தலை.
அல்லோல கல்லோலம்
கணையாழியில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதன் உபாத்தியாயரின் பெயர் கனகசபை வாத்தியார். கொஞ்சம் பழைய காலத்து மனிதர். ஐயோ! சாமி! அன்று அவர் அடைந்த காப்ராவைப் போல் அதற்கு முன் அவருடைய வாழ்நாளில் என்றும் அடைந்ததில்லை.
"ஸார்! ஸார்! யாரோ வரா, ஸார்?" என்று ஒரு பெண் கூவினாள். உடனே எல்லாப் பெண்களும் ஜன்னலண்டை குவிந்து வேடிக்கை பார்க்கலானார்கள். வாத்தியாரும் அந்தப் பக்கம் நோக்கினார். உடனே பள்ளிக்கூடம், பெஞ்சு, நாற்காலி, மேஜை, மைக்கூடு எல்லாம் அவரைச் சுற்றிச் சுழலத் தொடங்கின. சட்டென்று 'பிளாக் போர்டு' துடைக்கும் குட்டையை எடுத்துத் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டார். மேஜை மீதிருந்த தலைப்பாகையை உதறி அங்கவஸ்திரமாகப் போட்டுக் கொண்டார். பிறகு, நாற்காலி முதுகின் மேல் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்து, அதை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். இதற்குள், சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே அதை மேஜை அறையில் செருகிவிட்டுப் பெண்களைப் பார்த்து, "சனியன்களே! உட்காருங்கள். அவரவர்கள் இடங்களில் உட்காருங்கள்!" என்று பாம்பு சீறுவது போன்ற குரலில் அதட்டினார்.
அடுத்த நிமிஷத்தில் ஸ்ரீமதி சகுந்தலா தேவியும், அவளுடைய தகப்பனாரும் பள்ளிக்கூட அறைக்குள் வந்தார்கள். "வாத்தியாரே! இவள் என்னுடைய பெண், கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறாள். பள்ளிக்கூடத்தைப் பார்க்க வேண்டுமென்றாள். அழைத்து வந்திருக்கிறேன்" என்று ரங்கநாதம் கூறினார். வாத்தியாருக்கு இந்த விஷயம் விளங்கச் சற்று நேரம் பிடித்தது. அவர் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டரெஸ் அம்மாள்தான், தீடீரென்று வந்துவிட்டாள் என்று எண்ணியே அவ்வளவு குழப்பத்துக்குள்ளாகியிருந்தார். இந்தக் காலத்தில் தான் சின்னச் சின்னப் பெண்களுக்கெல்லாம் இன்ஸ்பெக்டரெஸ் உத்தியோகம் கொடுத்து தலை நரைத்த கிழவர்களை மிரட்டுவதற்கென்று அனுப்பி விடுகிறார்களே!
வாத்தியாருடைய கோலத்தைப் பார்த்துச் சகுந்தலை புன்னகை செய்து கொண்டு, "உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?" என்று கேட்டாள்.
"எதற்கு?" என்றார் வாத்தியார்.
"தினம் நான் இங்கு வந்து குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். செய்யலாமல்லவா?" என்றாள்.
கனகசபை வாத்தியாருக்கு திடீரென்று பேசும் சக்தி வந்தது. "அடடா! இப்படி ஒருவரும் இல்லையே என்று தானே காத்துக் கொண்டிருக்கிறேன்? இந்த ஊரில் இவ்வளவு பேர் இருக்கிறார்களே? ஒருவராவது இங்கு வந்து எட்டிப் பார்த்தது கிடையாது. குழந்தைகள் வீட்டில் இருந்தால் தொல்லையென்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். அதுவும் பாதி நாளைக்கு அனுப்புவதில்லை. 'கணக்கு வரவில்லை', 'பாட்டு வரவில்லை' என்று மட்டும் அடிக்கடி புகார் செய்கிறார்கள்..." என்று இவ்வாறு வாத்தியார் தம் முறையீட்டை ஆரம்பித்தார்.
சகுந்தலை கால்மணி நேரத்திற்குள் பள்ளிக்கூடத்திலுள்ள குழந்தைகளிடத்திலெல்லாம் பேசிப் பெயர், வகுப்பு எல்லாம் விசாரித்து சிநேகம் செய்து கொண்டாள். பிறகு, 'ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா' என்னும் ஹிந்தி தேசியக் கொடிப் பாட்டில் இரண்டடி சொல்லிக் கொடுத்தாள். பின்னர், "நாளைக்கு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளிக் கிளம்பினாள்.
சகுந்தலையும் அவள் தகப்பனாரும் திரும்பி வீட்டுக்குப் போகையில் கணையாழியின் வீதியில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் ஏக காலத்தில் வாசல் பக்கத்தில் என்ன தான் வேலை இருந்ததோ, தெரியவில்லை. புருஷர்களும் கொஞ்சம் வயதான ஸ்திரீகளும் வாசலிலும் திண்ணையிலும் காணப்பட்டனர். இளம் பெண்களோ வீட்டு நடைகளின் கதவிடுக்குகளிலும், காமரா உள்ளின் ஜன்னல் ஓரங்களிலும் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவென்றால், சகுந்தலையும் அவள் தந்தையும் அந்த ஊர்ப் பெண்கள் பள்ளிக்கூடத்தைப் பார்க்கப் போயிருக்கிறார்கள் என்ற செய்தி பரவவே, கல்கத்தா பெண்ணைப் பார்ப்பதற்கென்று அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்து அவ்வளவு பேரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு கணையாழி முழுவதும் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது.
புரட்சி
சகுந்தலை வந்தது முதல் கணையாழி இளைஞர்களுக்குக் கல்கத்தா ரங்கநாதம் வீட்டில் அடிக்கடி ஏதாவது வேலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு எந்த விஷயத்தில், என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவர் அவர் ஒருவரே என்று கருதுவது போல் காணப்பட்டது.
ஒரு நாள் எல்லாரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சகுந்தலை, "இந்த ஊர் எனக்குப் பிடிக்கவேயில்லை. ஏன் வந்தோம் என்று இருக்கிறது" என்றாள். ரங்கநாதம் சற்றுத் தூக்கிவாரிப் போட்டவர் போல அவள் முகத்தைப் பார்த்தார்.
"ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? இந்த ஊரில் என்ன பிடிக்கவில்லை? இந்த ஜில்லாவிலேயே அழகான கிராமம் என்று இதற்குப் பெயர் ஆயிற்றே?" என்று கல்யாணசுந்தரம் சொன்னான்.
"ஊர் அழகானதுதான். ஆனால், மனிதர்கள் மோசமானவர்கள். எப்பொழுது பார்த்தாலும் தெருவெல்லாம் அசிங்கம். பள்ளிக்கூடத்துக்குப் பக்கதில் குப்பை மேடு; கோவிலுக்குப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகை; குடியானவர்கள் தெருப் பக்கம் போகவே முடியவில்லை; அவ்வளவு குப்பையும், நாற்றமும். நேற்றுக் கொஞ்சம் தூரம் போய்ப் பார்த்தேன். முடியாமல், திரும்பி வந்து விட்டேன்" என்றாள்.
அப்போது அவள் தந்தை, "அதற்கு என்ன அம்மா செய்யலாம்? நம்முடைய ஜாதி வழக்கமே அப்படி. வீதிகளையும், வீட்டுச் சுற்றுப்புறங்களையும் சுத்தமாய் வைத்திருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் தான். நமக்கு எப்போதுதான் அந்த வழக்கம் வரப்போகிறதோ தெரியவில்லை" என்றார்.
"இந்த நண்பர்கள் எல்லாரும் மனம் வைத்தால் காரியம் ஒரு நிமிஷத்தில் நடந்து விடுகிறது. வேண்டுமானால், சாந்திநிகேதனத்துக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு இப்போது வந்து பாருங்கள்! எவ்வளவு சுத்தமாயிருக்கும், தெரியுமா? படித்தவர்களாய் உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்குச் செய்து காட்டினால் மற்றவர்கள் அப்புறம் கிராமத்தைச் சுத்தமாய் வைத்துக் கொண்டிருக்கத் தாங்களே கற்றுக் கொண்டு விடுவார்கள்" என்றாள் சகுந்தலை.
அது என்ன அதிசயமோ, தெரியாது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் கணையாழியின் வீதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள் எல்லாம் எங்கேதான் போயினவோ? கணையாழி இளைஞர்களுக்குத் திடீரென்று கிராம சுகாதாரத்தில் அக்கறை உண்டாகிவிட்டது. வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் அவர்கள் சுத்தத்தைப் பற்றியே பேசலானார்கள். அவர்களுடைய முயற்சி 'கீழ்' ஜாதியினரின் தெருக்களில் கூடப் பலன் தர ஆரம்பித்து விட்டது. கோழிகளும், பன்றிகளும் பேசக்கூடுமானால் அவை தங்களைப் பட்டினிக்குள்ளாக்கிய கணையாழி இளைஞர்களின் மீது பெரிதும் புகார் கூறியிருக்குமென்பதில் சந்தேகமில்லை. உண்மையில் குடியானவர்கள் எல்லாரும் கூடப் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். "சின்ன எஜமான்கள் இப்படி மூன்று மாதம் வீதி துப்புரவு செய்தால் அடுத்த பஸலி சாகுபடிக்கு வயலுக்கு எருக்கூடக் கிடைக்காது" என்று முறையிடத் தொடங்கினார்கள். இவ்வாறு கணையாழியின் சமூக வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் புரட்சி ஏற்படலாயிற்று.
பெருமழை
மற்றொரு நாள் சகுந்தலை வாழ்க்கையிலே வெறுப்புக் கொண்டவள் போல் பேசினாள்!
"இந்த உலகத்தில் ஏன் உயிர் வாழ வேண்டுமென்று தோன்றுகிறது. அதிலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். முன்னெல்லாம், நம் தேசத்தில் பெண் பிறந்தால் கங்கையில் எரிந்து விடுவது வழக்கமாமே? ஏன், அப்பா! என்னை ஏன் அப்படி நீங்கள் செய்யவில்லை?" என்று கேட்டாள்.
ரங்கநாதத்தின் முகத்தில் திகைப்புக் குறி காணப்பட்டது. அருகிலிருந்த ரகுராமன், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம் முதலியோரின் நெஞ்சுகள் துடிதுடித்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சமயம் தங்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் சகுந்தலையின் உயிரைக் காப்பாற்றுவதென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
"ஏன் அம்மா, அப்படிச் சொல்லுகிறாய்?" என்று ரங்கநாதம் கனிந்த குரலில் கேட்டார்.
"நான் உங்கள் பெண்ணாய்ப் பிறந்ததால் சுகமாய் இருந்து கொண்டிருக்கிறேன். அப்படியின்றி, சொர்ணம்மாளாய்ப் பிறந்திருந்தால்?"
"சொர்ணம்மாள் யார்?" என்று ஸ்ரீதரன் கேட்டான். எல்லாருக்கும் அந்தச் சொர்ணம்மாளின் பேரில் சொல்ல முடியாத இரக்கமுண்டாயிற்று.
"சொர்ணம்மாள் எங்கள் வீட்டு வேலைக்காரி" என்றாள் சகுந்தலை. உடனே, அந்த இளைஞர்களுக்குக் கொஞ்சம் அலட்சிய புத்தி ஏற்பட்டது.
"அவளுக்கு என்ன இப்போது வந்துவிட்டது?"
சகுந்தலை சொல்லத் தொடங்கினாள்: "சொர்ணம்மாளுக்கு என்னுடைய வயதுதான். அவள் ஏழு மாதம் கர்ப்பமாயிருக்கிறாள். இன்று காலையில், இனிமேல் அவள் வேலைக்கு வர வேண்டாமென்றும், வேறு வேலைக்காரி வைத்துக் கொள்கிறேனென்றும் சொன்னேன். உடனே அழத் தொடங்கிவிட்டாள். வேலையை விட்டுப் போனால் அவள் புருஷன் அவளைக் கொன்று விடுவானாம். அவள் உடம்பின் மீதிருந்த காயங்களையும், வீங்கியிருந்த இடங்களையும் காட்டினாள். நேற்றுச் சாயங்காலம் அவள் புருஷன் நன்றாய்க் குடித்துவிட்டு வந்து, 'கண்ணே! நம்முடைய லோகிதாட்சன் எங்கே! கொண்டா இங்கே' என்றானாம்..."
ரகுராமன் முதலியோர் சிரித்தார்கள். "எனக்கும் அதைக் கேட்ட போது முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் சொர்ணத்தின் உடம்பிலிருந்த காயங்களை மறுபடி பார்த்ததும் அழுகை வந்துவிட்டது. பிறகு பொன்னன், 'அடி பாதகி! என்னுடைய அருமைக் கண்மணி லோகிதாட்சனைக் கொன்றுவிட்டாயல்லவா?' என்று சொல்லிக் கொண்டே அவளை அடி அடியென்று அடித்தானாம். வேலைக்குப் போகாவிட்டால் கொன்று போட்டே விடுவான் என்று சொன்னாள்" - அப்போது சகுந்தலையின் கண்களில் நீர் துளித்தது.
"இப்படி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ? பாழும் கள்ளுக் குடியை ஒழிப்பதற்கு வழியொன்றும் இல்லையா? இந்த ஊரில் பெரிய மனிதர்கள் எல்லாரும் கூடத் தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடுகிறார்களாமே? என்ன அநியாயம்?" என்றாள்.
மறுநாள் குடிகாரப் பொன்னன் பக்கத்தில் ரகுராமனும் கல்யாணசுந்தரமும் நின்றார்கள். பொன்னன் சொல்கிறான்: "அதோ வாரும் பிள்ளாய், மதிமந்திரி சத்தியகீர்த்தியே! நம்முடைய அருமை நாயகியான சூர்ப்பணகாதேவியை நீ ஒளித்து வைத்துக் கொண்டு அனுப்ப மாட்டேன் என்கிறாயல்லவா? இந்த நிமிஷத்தில் அவளை இங்கே கொண்டுவிட்டால் ஆயிற்று. இல்லாவிடில் இந்திரஜித்திடம் சொல்லி உம்மைச் சிரச்சேதம் செய்து விடுவோம். பிள்ளாய்!..."
"பொன்னா! இதோ பாரு. மதுபானம் குடி கெடுக்கும். ரொம்பப் பொல்லாதது. குடிப்பதை விட்டு விடு" என்றான் ரகுராமன்.
"எஜமான்களே, இதோ பாருங்க! நீங்கள் காலைக் காப்பி குடிக்கிறதை நிறுத்திவிடுங்க. நானும் மாலைக் காப்பி குடிக்கிறதை விட்டுடறேன்" என்றான் பொன்னன்.
இம்மாதிரியாக ஒவ்வொரு குடிகாரனையும் இரண்டு மூன்று படித்த, நாகரிக இளைஞர்கள் சுற்றிக் கொண்டு பிரசங்கப் பெருமழை பொழியும் காட்சிகள் மாலை நேரங்களில் காணப்பட்டது.
பூகம்பம்
கணையாழி கிராமத்து ஸ்திரீ சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய மானஸீக பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட பெரும் பிளவுகளில், வெகு நாளைய நம்பிக்கைகள், மாமூல் வழக்கங்கள் எல்லாம் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்தன.
ஒரு நாள் இரவு, சந்திரசேகரன் வழக்கம்போல் படுக்கையறைக்குள் புகுந்தபோது பெரியதோர் அதிசயத்தைக் கண்டான். அவனுடைய தர்மபத்தினி ஸ்ரீமதி சாரதாம்பாள் ஹரிஹரய்யர் இங்கிலீஷ் பாலபாடத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, "பி-ஐ-ஜி=பிக்கு=பன்றி" என்று எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தாள்.
"இது என்ன அதிசயம்? இங்கிலீஷ் படிப்பிலே திடீரென்று இவ்வளவு பிரேமை ஏற்பட்டதென்ன?" என்று சந்திரசேகரன் பரிகாசக் குரலில் கேட்டான்.
"ஆமாம்; பரிகாசம் பண்ணத்தான் உங்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால் உலகத்தில் நாலு பேரைப் போல் எனக்கு இரண்டு எழுத்துத் தெரிய வேண்டுமென்று உங்களுக்கு இருந்தால் தானே?" என்றாள் சாரதா. அவளுடைய நீலக் கருவிழிகள் கண்ணீர்ப் பிரவாகத்தைப் பெருக்குவதற்கு ஆயத்தம் செய்யத் தொடங்கின. ஆனால் சந்திரசேகரன் வெறும் ஆண் சடந்தானே? ஆகவே அவன் அதைக் கவனியாமல், "நான் வேண்டுமானால் காரணம் சொல்லட்டுமா? சகுந்தலை மாதிரி நாமும் ஆகவேண்டுமென்று ஆசை. நிஜமா, இல்லையா?" என்றான்.
உடனே ஒரு தேமல் சத்தம் - "எனக்குத் தெரியுமே, நீங்கள் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று!" - அவ்வளவுதான். கண்ணீர் வெள்ளம் பெருகத் தொடங்கி விட்டது. அன்றிரவு வெகுநேரம் வரை அந்த வெள்ளத்தில் கரை காணாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் சந்திரசேகரன்.
மறுநாள் மத்தியானம், (ஸ்ரீராஜமய்யர் அவர்களால் இலக்கியப் பிரசித்தி பெற்ற) வம்பர் மகாசபை கணையாழியில் கூடியபோது, "கல்கத்தாப் பெண்" என்னும் விஷயம் பற்றி விவாதம் நடந்தது. ஏற்கனவே இந்தக் கதையில் ஏராளமான பெயர்கள் வந்துவிட்டபடியாலும், இக்கதையில் பெயர்கள் அவ்வளவு முக்கியமல்ல வாகையாலும், மகாசபை அங்கத்தினரின் பெயர்களை விட்டுவிட்டு விவாகத்தின் சாராம்சத்தை மட்டும் தருகிறேன்:
"என் காலத்தில் எவ்வளவோ அதிசயத்தைப் பார்த்துவிட்டேன். இப்போது கல்கத்தாப் பெண் ஒரு அதிசயமாய் வந்திருக்கிறாள். இந்தக் கட்டை போவதற்குள் இன்னும் என்னென்ன அதிசயம் பார்க்கப் போகிறதோ?"
"அந்தக் கடன்காரி பார்வதி செத்துப் போனாளே அவள் மட்டும் இருந்திருந்தால் இந்தப் பெண்ணை இப்படி வளர்த்துவிட்டிருக்க மாட்டாள்."
"அவளே இந்தப் புருஷனைக் கட்டிண்டு, எவ்வளவோ சிரமப்பட்டாளாமே? இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணுமென்று பிடிவாதம் பிடித்தானாம். அந்தக் கஷ்டம் தாங்காமலேயே அவள் கங்கையில் விழுந்து செத்துப் போனதாகக் கேள்வி."
"போனவள் இந்தப் பெண்ணையும் கங்கையில் தள்ளிவிட்டுச் செத்துப் போயிருக்கலாம், ஒரு பாடாய்ப் போயிருக்கும்!"
"ஏன் அத்தை, அப்படி அநியாயமாகச் சொல்கிறாய்? சகுந்தலைக்கு என்ன வந்துவிட்டது? ராஜாத்தி மாதிரி இருக்கிறாள். எங்களையெல்லாம் போல் அடுப்பங்கரையே கதியாயிருக்க வேண்டுமா?" என்றது ஓர் இளங்குரல்.
"அடுப்பங்கரை வேண்டாம்; சந்திக்கரையிலேயே நிற்கட்டும். நாலு குழந்தை பெற்றெடுக்க வயதாச்சு. காளை மாதிரி திரிகிறது! அவளுக்கு என்ன வந்துடுத்தாம்?"
"நாலு குழந்தை பெற்றவர்களெல்லாம் என்ன சுகத்தைக் கண்டுவிட்டோ ம், அவள் அதைக் காணாமல் போய் விட்டாள்? கோடி வீட்டு அம்மணியைப் பார். பதினேழு வயது ஆகவில்லை; மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது. தினம் பொழுது விடிந்தால் குழந்தைகளை அடித்துக் கொல்கிறார்கள். என்னைக் கேட்டால், சகுந்தலைதான் பாக்கியசாலி என்பேன்"
"ஆமாண்டி, அம்மா! நீயும் வேண்டுமானால் அவளைப் போலச் செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வீதியோடு உலாவி வாயேன்."
"செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வந்தால் சகுந்தலையைப் போல் ஆகிவிட முடியுமா? அதற்கு வேண்டிய படிப்பும் புத்திசாலித்தனமும் வேண்டாமா?"
"அவள் மட்டும் என்ன கொம்பிலிருந்து குதித்து வந்தாளா? என்னையும் படிக்க வைத்திருந்தால் நானுந்தான் அவளைப் போல் ஆகியிருப்பேன், என்ன ஒசத்தி?"
"ஆமாம், நீயும் அவளைப் போலவே படித்து, பாஸ் பண்ணி, புடவைத் தலைப்பை வீசிக் கொண்டு திரியணும்; ஊரிலிருக்கிற தடிப் பிரம்மச்சாரிகள் எல்லாம் உன்னைச் சுற்றிக் கொண்டு அலையணும் என்று ஆசைப்படுகிறாயாக்கும்!"
"சீ! என்ன அத்தை! வயதாயிற்றே தவிர உங்களுக்கு மானம், வெட்கம் ஒன்றும் கிடையாது. இப்படித்தானா பேசுவது?"
சீக்கிரத்தில் கணையாழி வம்பர் மகாசபை அங்கத்தினருக்குள் அபிப்பிராய பேதம் வலுபடலாயிற்று. இளங்கோஷ்டியென்றும் முதிய கோஷ்டியென்றும் பிரிவினை உண்டாயிற்று. இளங்கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் சகுந்தலையிடம் அநுதாபமும், அபிமானமும் கொள்ளலானார்கள். சமயம் நேர்ந்தபோது அவளுக்குப் பரிந்து பேசினார்கள்.
இதற்கெல்லாம் காரணம் ஒரு நாள் ஜானகி துணிந்து சென்று சகுந்தலையைத் தன் வீட்டில் மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொண்டு போக அழைத்ததுதான். அப்போது ஜானகி வீட்டுக்கு வந்திருந்த இளம் பெண்களுடன் சகுந்தலை வெகு சீக்கிரம் சிநேகம் செய்து கொண்டாள்.
கணையாழி யுவதிகளுக்கெல்லாம் திடீரென்று படிப்பில் அபரிமிதமான ருசி உண்டாகிவிட்டது. லலிதா ஒரு நாள் ஒரு தமிழ் நாவலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். சகுந்தலை, "அது என்ன புத்தகம்?" என்று கேட்டுக் கொண்டே புஸ்தகத்தை வாங்குவதற்குக் கையை நீட்டினாள். "இது, தமிழ்; உங்களுக்குத் தெரியாது" என்றாள் லலிதா.
சகுந்தலை சிரித்தாள். "அது என்ன? எனக்குத் தமிழ் தெரியாது என்று அடித்துவிட்டீர்களா? என் சொந்த பாஷை தமிழ்தானே?" என்றாள் அவள்.
"இல்லை; வெகுகாலம் வடக்கேயே இருந்தவளாச்சே; இங்கிலீஷ்தான் தெரியும், தமிழ் படிக்கத் தெரியாது என்று நினைத்தேன்" என்று லலிதா சொன்னான்.
"அதெல்லாம் இல்லை. வடக்கே இருந்தால்தான் தமிழிலே அபிமானம் அதிகமாக உண்டாகிறது. வங்காளிகளெல்லாம் தங்கள் சொந்த பாஷையில் தான் அதிகமாய்ப் படிப்பார்கள். தெற்கத்தியாரை இங்கிலீஷ் பைத்தியம் பிடித்தவர்கள் என்று பரிகாசம் செய்வார்கள்" என்று சகுந்தலை சொன்னாள்.
"என்ன இருந்தாலும் இங்கிலீஷ் தெரிந்திருந்தால் அது ஒரு ஒசத்திதானே?" என்றாள் தங்கம்மாள்.
"ஒரு ஒசத்தியுமில்லை. இங்கிலீஷ் வெள்ளைக்காரர்களுடைய பாஷை. தமிழ் நமது சொந்த பாஷை நம்முடைய பாஷையில் பேசுவதும் படிப்பதும்தான் நமக்கு மேன்மை" என்றாள் சகுந்தலை.
ஆண்டாளுவின் குழந்தைக்கு ஆண்டு நிறைவு வந்தபோது குழந்தையை மணையில் வைத்துப் பாடுவதற்குச் சகுந்தலையையும் அழைத்திருந்தார்கள். ஊர்ப் பெண்களெல்லாரும் அவரவர்களுக்கு தெரிந்திருந்த "மருகேலரா," "சுஜன ஜீவனா," "நகுமோமு," "தினமணி வம்ச" முதலிய தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினார்கள்.
"ஒருவருக்கும் தமிழ்ப் பாட்டுத் தெரியாதா?" என்று சகுந்தலை ஜானகியிடம் கேட்டாள்.
"தமிழில் நலங்குப் பாட்டுத்தான் தெரியும். அது நன்றாயிராது" என்றாள் ஜானகி.
"பாரதி பாட்டுக்கூடத் தெரியாதா?" என்று சகுந்தலை மறுபடியும் கேட்டது லலிதாவின் காதில் விழுந்தது. அவள், "ஆகா, நம்முடைய அலமேலுவுக்குப் பாரதி பாட்டுத் தெரியுமே. அலமேலு! சகுந்தலைக்குப் பாரதி பாட்டுக் கேட்கவேண்டுமாம். உனக்குத் தெரியுமே, சொல்லு" என்றாள். அலமேலு கொஞ்ச நேரம் கிராக்கி செய்த பிறகு,
'இராஜ விசுவாச லாலா லஜபதியே!'
என்று பாடத் தொடங்கினாள். "இராஜத் துரோகக் குற்றத்திற்காகத் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட லஜபதிராய் இங்கே இராஜ விசுவாசியாகி விட்டாரே!" என்று எண்ணியபோது சகுந்தலைக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. ஆயினும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அலமேலுவை இன்னொரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். அவள்,
'வந்தே மாதரமே! மனதிற்கோர் ஆதாரமே!'
என்று ஆரம்பித்து,
"காட்சி கண்காட்சியே! திருவனந்தபுரத்துக்
காட்சி, கண்காட்சியே!"
என்று முடிவு செய்தாள்.
எல்லாம் முடிந்த பிறகு சகுந்தலை தன் சிநேகிதிகளிடம் அலமேலு சொன்ன பாட்டுக்கள் பாரதி பாடியவையல்லவென்று தெரிவித்தாள்.
"உங்களுக்கு பாரதி பாட்டுத் தெரியுமா?" என்று ஜானகி கேட்டாள்.
"எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் பாரதி புத்தகம் இருக்கிறது. நீங்கள் என் வீட்டிற்கு வந்தால் நாமே மெட்டுப் போட்டுப் பாடக் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஹிந்துஸ்தானி, வங்காளிப் பாட்டுகளும் சொல்லிக் கொடுக்கிறேன்" என்றாள் சகுந்தலை.
"வருவதற்கு இஷ்டந்தான். ஆனால் உங்கள் வீட்டில் ஓயாமல் புருஷப்பிள்ளைகள் வருகிறார்களே?" என்று லலிதா கேட்டாள்.
"வந்தால் உங்களுக்கென்ன? நீங்கள் ஏன் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டும்? அவர்கள்தான் உங்களைக் கண்டு பயப்படட்டுமே?" என்றாள் சகுந்தலை.
பத்துப் பதினைந்து தினங்களுக்குள் கணையாழியில் இருந்த இளம்பெண்களில் ஒவ்வொருத்தியும் தனித்தனியே சகுந்தலையைத் தன்னுடைய பிராண சிநேகிதியாகக் கருதத் தொடங்கினாள்.
புயல்
சகுந்தலை கணையாழிக்கு வந்து சுமார் மூன்று மாதமாயிற்று. அப்போது கணையாழி வாலிபர்களில் மனோ நிலைமையை, பெரிய புயற் காற்றினால் அலைப்புண்ட தோப்பின் நிலைமைக்கே ஒப்பிடக்கூடும்.
வாலிபர்களைச் சொல்லப் போவானேன்? வயது நாற்பது ஆனவரின் விஷயம் என்ன? ஸ்ரீமான் இராமசுப்பிரமண்யம் என்பவரின் மனைவி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் காலஞ் சென்றபோது அவர், 'கிருகஸ்தாசிரமம் இனி நமக்கு வேண்டாம்' என்று தீர்மானம் செய்து, வந்த இடங்களையெல்லாம் தட்டிக் கொண்டிருந்தார். அவரே இப்போது சகுந்தலையை முன்னிட்டுத் தமது சங்கல்பத்தை மாற்றிக் கொள்ளத் தயாராயிருந்தாரென்றால், அதிகம் சொல்வானேன்? அவர் என்ணியதாவது; "சகுந்தலையைப் போல் கல்வியறிவும், புத்திசாலித்தனமும் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கைத் துணையாகத் தகுதியுள்ள இளைஞன் இந்தத் தேசத்தில் எங்கே இருக்கிறான்? அதற்கென்ன? சின்னப் பயல்கள் 'கக்கேபிக்கே' என்று பல்லை இளித்துக் கொண்டு வேண்டுமானால் நிற்பார்கள். அதைத் தவிர அவளுடைய அறிவு முதிர்ச்சிக்குத் தகுந்தபடி, மனமொத்து வாழக்கூடிய கணவன் அவர்களுக்குள் இருக்க முடியாது. ஆகையால் சகுந்தலை சின்னப் பையன் யாரையாவது மணந்து கொண்டால் நிச்சயமாக அவளுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அவளுக்குத் தக்க வாழ்க்கைத் துணையாகக் கூடியவன் நான் ஒருவன் தான்."
நாற்பது வயதுக்காரருடைய மனோநிலை இதுவானால் இருபது, இருபத்தைந்து வயதுப் பிள்ளைகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? நாளாக ஆக, அவர்களுடைய உள்ளத்தில் அடித்துக் கொண்டிருந்த புயலின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
ஸ்ரீதரன் தனக்கு நிச்சயமாகியிருந்த கலியாணத்தைத் தட்டிக் கழித்துவிட்டான். பி.எல். படிக்கும் உத்தேசம் தனக்கு இருப்பதாகவும், நியாயவாதியாகப் போகிற தான் சட்ட விரோதமாய் 12 வயதுப் பெண்ணை மணக்கச் சம்மதிக்க முடியாதென்றும், அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாமென்றும் அவன் கூறினான். இதைப் பற்றி சகுந்தலை அவனைப் பாராட்டியபோது, வயது வந்த பெண்ணாயிருந்தால் இவ்வருஷமே கலியாணம் செய்து கொள்வதில் தனக்கு ஆக்ஷேபமில்லையென்று குறிப்பாகத் தெரிவித்தான்.
குப்புசாமி கலியாணமாகி இரண்டு வருஷமாய் இல்வாழ்க்கையில் இருப்பவன். அவனுக்குத் திடீரென்று இப்போது விவாகப் பிரிவினை உரிமையில் விசேஷ சிரத்தை உண்டாயிற்று. "ஆனாலும் நமது சமூக ஏற்பாடுகள் மகா அநீதியானவை. மனிதன் தவறு செய்வது சகஜம். ஒரு தடவை தவறு செய்துவிட்டால் அப்புறம் பரிகாரமே கிடையாதா? ஏதோ நல்ல நோக்கத்துடன் தான் கலியாணம் செய்து கொள்கிறோம். அது தவறு என்று தெரிந்தபின் இரு தரப்பிலும் கலந்து தவறை நிவர்த்தி செய்தல் ஏன் கூடாது? இதை நான் புருஷனுடைய சௌகரியத்துக்காகச் சொல்லவில்லை. புருஷன் தான் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாமே? ஸ்திரீகளுடைய நன்மையை உத்தேசித்துத்தான் விவாகப் பிரிவினை முக்கியமாக வேண்டும். இஷ்டமில்லாத பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதைவிட ஒரேயடியாக உயிரை விட்டுவிடலாம்" என்று அவன் உபந்நியாசம் செய்த வண்ணமிருந்தான்.
கலியாணமாகாத கணையாழிப் பிள்ளைகளுக்கெல்லாம் இரவு பகல் ஒரே சிந்தனைதான். சகுந்தலையைத் தனிமையாக எப்படிச் சந்திப்பது, அவளிடம் தங்கள் மனோரதத்தை எப்படி வெளியிடுவது? இதற்குச் சந்தர்ப்பம் வாய்த்தல் நாளுக்கு நாள் கஷ்டமாகி வந்தது.
ஸ்ரீமான் ரங்கநாதம் அவர்களின் தோட்ட வீட்டிற்கு இதுவரை கணையாழி இளைஞர்கள் வந்து கொண்டிருந்தது போதாதென்று யுவதிகளும் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் இளைஞர்கள் மெதுவாக நழுவி விடுதல் வழக்கமாயிருந்தது. இதைக் குறித்துச் சகுந்தலை அவர்களைப் பரிகஸித்தாள். "இது என்ன, என்னிடம் உங்களுக்கில்லாத ப்யம் உங்களூர்ப் பெண்களைக் கண்டதும் உண்டாகிறது?" என்று கேட்டாள். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தபோது, "இருந்தாலும் ரொம்ப அநியாயம் செய்கிறீர்கள். இந்த ஊரில் காலேஜில் படித்த நீங்கள் இவ்வளவு பேர் இருந்துகொண்டு ஸ்திரீகளை இவ்வளவு உலகமறியாதவர்களாய் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் உங்கள் பாட்டனார்களைப் போலவே இருந்திருந்தால், உங்கள் மனைவிகளையும் பாட்டிகளாக வைத்திருக்கலாம்" என்றாள்.
தங்களுக்கு வரப்போகும் மனைவிகளைப் பாட்டிகளாக எண்ணிப் பார்த்தபோது அவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. ரகுராமன் ஒரு நிமிஷம் யோசித்துவிட்ட்டு "எனக்கு வரப்போகும் மனைவிக்கு நான் எல்லா விஷயங்களிலும் பூரண சம உரிமை கொடுக்கத் தயார்" என்றான். ஆனால் சகுந்தலை அவனுடைய குறிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இவ்விஷயத்தில் கல்யாணசுந்தரத்தின் அநுபவமும் அப்படியேதான் இருந்தது. சகுந்தலை ஒரு நாள் அடுத்த கிராமத்துப் பெண் பாடசாலையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாள். கல்யாணசுந்தரம் அவளை அழைத்துப் போக முன் வந்தான். எதிர்பாராமல் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த காதலை வெளியிட்டு விடுவதென்று தீர்மானித்தான். ஆனால் பேச்சு இலகுவில் வரவில்லை.
ரொம்ப நேரம் தயங்கிய பிறகு, தட்டுத் தடுமாறிக் கொண்டு "சகுந்தலை! நாம் இரண்டு பேரும் எங்கேயோ அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம் இல்லையா?" என்றான் கல்யாணசுந்தரம்.
"நாமா? ரொம்ப மெதுவாகவல்லவோ நடக்கிறோம்? மணிக்கு இரண்டரை மைல் வேகங்கூட இராதே?" என்றாள் சகுந்தலை.
இதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வழியில் ஒரு மரக்கிளையில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பட்சிகள் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ஒரு யோசனை தோன்றிற்று.
"நாம் இருவரும் இரண்டு பறவைகளாக மாறிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது. அப்போது உலகக் கவலையென்பதேயின்றி ஆகாயத்தில் என்றும் ஆனந்தமாய் உலாவித் திரிந்து கொண்டிருக்கலாமல்லவா?" என்றான்.
அதற்கு சகுந்தலை, "இப்போதுதான் ஆகாய விமானம் வந்து, பறவைகளைப் போல் மனிதனும் பறக்க முடியுமென்று ஏற்பட்டுவிட்டதே. இன்னும் பத்து வருஷத்தில் ஆகாய விமானம் சர்வ சாதாரணமாகிவிடும். அப்போது நீங்கள், நான் எல்லோரும் தாராளமாய்ப் பறக்கலாம்" என்றாள்.
கல்யாணசுந்தரம் மௌனக் கடலில் ஆழ்ந்தான்.
அமைதி
ஒரு நாள் கல்கத்தா ரங்கநாதம் அவர்களின் வீட்டிற்கு ஒரு புதிய விருந்தாளி வந்திருப்பதாகக் கணையாழியில் செய்தி பரவிற்று. அவரைப் பார்த்தால் வடக்கத்தியார் மாதிரி இருக்கிறதென்றும், அவரை எதிர் கொண்டு அழைத்துச் செல்வதற்கு ரங்கநாதமும் அவர் புதல்வியும் ஸ்டேஷனுக்குப் போயிருந்தார்களென்றும், வந்தவருடன் கை கோத்துக் கொண்டு சகுந்தலை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்தாளென்றும், இன்னும் இந்த மாதிரி சில்லறை விவரங்களும் அந்தரத் தபால் மூலம் பரவின.
நல்ல வேளையாக கணையாழி வாசிகளின் உண்மையறியும் ஆவல் அதிகமாக வளருவதற்கு இடம் ஏற்படவில்லை. ஏனென்றால் ஸ்ரீ ரங்கநாதம் அவ்வூரில் தமக்கு அறிமுகமான இளைஞர்களையெல்லாம் அன்று மாலை ஒரு சிற்றுண்டி விருந்துக்கு அழைத்திருந்தார். எல்லாரும் கூடியதும் அவர் புது விருந்தாளியைச் சுட்டிக் காட்டி, "இவர்தான் சகுந்தலையின் கணவர்; பெயர் ஷியாம் பாபு. இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இச்சிறு விருந்துக்கு உங்களை அழைத்தேன்" என்றார். இப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சுமார் 25 வயதுள்ள ஒரு வங்காள இளைஞர்.
அப்போது அங்கே கூடியிருந்த வாலிபர்கள் எல்லாருடைய மனமும் என்ன நிலையடைந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? காதல் சாஸ்திர விதிகளின்படி அவர்கள் மனோநிலை எப்படி ஆகியிருக்க வேண்டுமென்பதை நான் அறியேன். உண்மையாக நடந்தது மட்டும் எனக்குத் தெரியும். அவர்கள் உள்ளத்தில் சென்ற மூன்று மாத காலமாய் அடித்துக் கொண்டிருந்த பெரும் புயல் திடீரென்று ஓய்ந்து, ஆழ்ந்த, நிறைந்த அமைதி நிலவலாயிற்று. பரபரப்பெல்லாம் பழைய கதையாய் விட்டது. அன்று காப்பி சாப்பிட்டபோது யாரும் சட்டையில் கொட்டிக் கொள்ளவில்லை.
ஷியாம் பாபு கல்கத்தாவில் ஒரு கலாசாலை ஆசிரியர் என்றும், சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு வருஷமாய்ச் சிறையில் இருந்தாரென்றும், அவருடைய நெற்றியில் பெரிய காயத்தின் வடு போலீஸாரின் தடியடியினால் ஏற்பட்டதென்றும், இப்போது மறுபடியும் கல்கத்தா திரும்பியதும் கலாசாலை ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறாரென்றும் சம்பாஷணையின் போது தெரியவந்தன.
"உங்களுக்கெல்லாம் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மூன்று மாதமும் எப்படிப் போகப் போகிறதோ என்று பயமாயிருந்தது. உங்களுடைய சிநேகத்தினால் எவ்வளவோ சந்தோஷமாயும் உபயோகமாயும் காலம் போயிற்று. இரண்டு மூன்று நாளில் பிரயாணப்பட்டு விடுவோம். தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுக் கல்கத்தா போவதாயிருக்கிறோம்" என்றாள் சகுந்தலை.
இதற்கு அடுத்த நாலாம் நாளன்று கல்கத்தா ரங்கநாதம் அவர்களின் வீடு பூட்டிக் கிடந்தது.
கணையாழியின் வீதிகளில் முன்போல் குப்பைகள் சேரலாயின!