அருணாசலத்தின் அலுவல்
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Kalki Krishnamoorthy
- Hits: 2097
இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று எண்ணிவிடலாம். அவ்வளவு நிஜம் போல் இருக்கும். பிறகு ஆஸாமி யார் என்று தேடப் புறப்படுவீர்கள். தன்னுடைய விஷயம் அவ்வளவு விளம்பரமாவதை என் நண்பன் அருணாசலம் ஒருவேளை விரும்ப மாட்டான்.
இந்தப் பரந்த பூமண்டலத்திலே தற்போது தனி மனிதர்கள் முதல் அரசாங்கங்கள் வரையில் எல்லாரையும் திக்குமுக்காடச் செய்துவரும் பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம் அல்லவா? நமது தேசத்திலும் இதுதான் பெரிய திண்டாட்டமாக இருக்கிறது. காந்தி மகான் முதல் நவ நாகரிகத்திற் சிறந்த ஸர். எம். விஸ்வேஸ்வரையா வரையில் இந்தியப் பிரமுகர்கள் அநேகர் இந்தப் பிரச்னையைப் பற்றிச் சிந்தித்து இதைத் தீர்த்து வைக்க வழி தேடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்திலும், மத்திய வகுப்பார் அதாவது படித்த ஜனங்களுடைய திண்டாட்டந்தான் மிகக் கொடியது. ஏழைக் குடியானவர்கள், தொழிலாளிகள் முதலியவர்களின் திண்டாட்டம் அவ்வளவு பெரிதல்ல; ஏனென்றால் அவர்களுக்கு பட்டினி கிடக்கும் வித்தை நன்றாய்த் தெரியவரும். 'சித்திரமும் கைப்பழக்கம்' அல்லவா? பட்டினியும், வயிற்றுப் பழக்கந்தான். ஒரு நாளைக்கு ஒரேவேளை அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டுச் சந்தோஷமாய்க் காலங்கழிக்கக் கிராமத்துக் குடியானவர்களுக்குத் தெரியும். இத்தகைய மனப்பான்மைதான் தேச முன்னேற்றத்திற்கே தடையாயிருக்கிறதென்பது சிலர் கொள்கை. பட்டணங்களில் உள்ள படித்த ஜனங்களின் விஷயம் இப்படியல்ல. ஒரு வேளைக் காப்பி கிடைக்காவிட்டால் போதும்; அவர்களுடைய வாழ்க்கை சோகமயமாகி விடுகிறது.
இந்த வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடுதலையடைய அநேகர் அநேக வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இவைகளில் சர்வ சாதாரணமாக 100-க்கு 90 பேர் முயன்று பார்க்கும் வழி ஒன்று இருக்கிறது. அதுதான் பத்திரிகைக்கு எழுதுவது. தினசரிப் பத்திரிகையில் ஒரு விசேஷக் கட்டுரையைப் படிப்பார்கள் அல்லது மாதப் பத்திரிகையில் ஒரு சிறுகதையை வாசிப்பார்கள். "என்ன பிரமாதம்? இதைப் போல் நாம் ஒன்று எழுதக் கூடாதா?" என்று தோன்றும். உடனே பத்திரிகைத் தொழிலில் பெர்னார்ட்ஷாவையும் செஸ்டர்ட்டனையும் போல் பணம் சம்பாதிப்பதாகப் பகற் கனவுகள்!
"என்ன எழுதுவது?" என்பது அவர்கள் மனத்தில் தோன்றும் அடுத்த கேள்வி. "என்ன எழுதுவது?" என்பதையே தலைப்பாகப் போட்டுக் கொண்டு சிலர் எழுதத் தொடங்குவார்கள். "ஒன்றுமில்லை" என்ற தலைப்புடன் ஒரு வெள்ளைக்காரர் பெரிய புத்தகம் ஒன்று எழுதிவிடவில்லையா? வேறு சிலர் வேலையில்லாத் திண்டாட்டத்தையே விஷயமாகக் கொண்டு, "உத்தியோக வேட்டை" என்பது போன்ற தலைப்புக்களுடன் கட்டுரையோ, கதையோ எழுதுவார்கள். தங்களுடைய சொந்த அனுபவங்களுடன் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்ந்தால் நல்ல கதையாகி விடுமென்று நம்பிக்கை.
இத்தகைய கதை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, ஒரு நாள் அருணாசலம் என்னிடம் வந்தான். அவன் என்னுடைய பாலிய நண்பன். ஆனால் இடையில் பல வருஷங்களாக நாங்கள் சந்திக்கவில்லை. அவனுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டேன். மூன்று வருஷங்களாக முயன்று பி.ஏ. பரிக்ஷையில் தேறியவரையில் க்ஷேமந்தான் என்றும், அதனால் லாபந்தான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினான். வயது இருபத்தைந்து ஆகிவிட்டபடியால் சர்க்கார் உத்தியோகம் பெறும் ஆசையை விட்டு விட்டானாம். மற்றபடி தன்னுடைய அனுபவங்களை என் கையில் கொடுத்த கட்டுரையில் காணலாம் என்று தெரிவித்தான்.
அதை வாசித்துப் பார்த்தேன். சில அனுபவங்கள் மிகவும் ருசிகரமாகவே இருந்தன. உதாரணமாக ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு முறை அருணாசலம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பின்வருமாறு ஒரு விளம்பரஞ் செய்தான்.
தேவை
பி.ஏ. பட்டதாரிக்கு ரூ.100 சம்பளத்தில் ஓர் உத்தியோகம் தேவை. ரூ.1000 ரொக்க ஜாமீன் கட்டக்கூடும்.
பெட்டி நெம்பர் 7032 விளம்பரம் வெளியான மூன்றாம் நாள் கடிதங்கள் வரத் தொடங்கின. அக்கடிதங்களில் பல, பெட்டி நம்பர் 7032-ஐ வாயார மனமார வாழ்த்திவிட்டு ரூ.1000 தந்தி மணியார்டரில் அனுப்பத் தயாராயிருப்பதாகவும் எப்பொழுது வந்து உத்தியோகம் ஏற்றுக் கொள்ளலாமென்றும் விசாரித்திருந்தன. இப்படி எழுதியவர்கள் வெறும் பி.ஏ.க்கள் மட்டுமல்ல. அவர்களில் சிலர் 'லிடரேசர் ஆனர்ஸ்' பட்டம் பெற்றவர்கள். வேறு சிலர் டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்டு, புக் கீபிங் முதலியவைகளும் கற்றுத் தேர்ந்தவர்கள்.
உண்மையென்னவென்றால் இங்கிலீஷ் என்னமோ சுலபந்தான். ஆனால் விளம்பரத்தைக் கண்டதும் அவர்களுக்கேற்பட்ட பரபரப்பினால் விஷயத்தை நன்கு கிரஹிக்க முடியாமல் போயிற்று. அவர்களுடைய கண்கள் விளம்பரம் முழுவதையும் பார்த்தன. அவர்களுடைய வாய்கள் விளம்பரம் முழுவதையும் படித்தன; ஆனால் அவர்களுடைய மனத்தில் மட்டும் பின்வரும் வார்த்தைகள்தான் பதிந்தன! "பி.ஏ.ரூ.100 சம்பளம்; ரூ.1000 ரொக்க ஜாமீன் - பெட்டி நெம்பர் 7032."
இன்னும் சிலர், விளம்பரத்தைச் சரியாக அர்த்தம் செய்து கொண்டு பதில் எழுதியிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரைத் தவிர, மற்ற எவரும் மாதம் 30 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கத் தயாராயில்லை. அந்த விலக்கான ஒருவர் மட்டும் கேட்டதற்கு மேலேயே, அதாவது மாதம் ரூ.125 சம்பளம் கொடுப்பதாக எழுதியிருந்தார். இந்த தவறுதலினால், அவருக்கு ரூ.1000 நஷ்டமாயிற்று. மாதம் 80 ரூபாய் அல்லது 90 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக அவர் எழுதியிருந்தால், அருணாசலம் வலையில் விழுந்திருப்பான். கேட்டதற்குமேல், கொடுப்பதாகச் சொன்னபடியால் சந்தேகம் தோன்றி நேரில் போய் விசாரிக்கப் போனான். வால்டாக்ஸ் சாலையில் கரிமூட்டைகள் அடுக்கியிருந்த ஓர் அறைக்குப் பக்கத்து அறையில் மேற்படி கனவானைச் சந்தித்தான். தமது "கர்ரி பவுடர் ஏற்றுமதிக் கம்பெனி"யின் மானேஜர் உத்தியோகத்தை அவர் அருணாசலத்துக்குத் தருவதாகக் கூறினார்.
கர்ரி பவுடர் எனப்படும் இந்தியக் குழம்புப் பொடியை வாங்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய தேசங்களிலுள்ள துரைசானிமார், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களென்றும், இப்போதுதான் கம்பெனி ஆரம்ப நிலையில் இருக்கிறதென்றும், போகப் போகச் சம்பளம் அதிகம் தருவதாகவும், ஆனால் ரூ.2000 ரொக்க ஜாமீன் கட்டினால் இப்போதே ரூ.250 சம்பளம் தருவதாகவும் சொன்னார். "யோசித்துக் கொண்டு வருகிறேன்" என்று திரும்பி வந்துவிட்டான்.
"கதை எப்படியிருக்கிறது?" என்று அருணாசலம் கேட்டான்.
"நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் கதை முடிவு சுகமில்லை" என்றேன்.
"அதில் என்ன குற்றம்?" என்று கேட்டேன்.
"மங்களகரமாக முடியும் கதைகள் எப்போதும் இரண்டாந்தரந்தான். இங்கிலீஷ் கதைகள் படித்திருக்கும் உனக்கு இது தெரிந்திருக்க வேண்டும். 'கலியாணம் செய்து கொண்டு சுகமாக இருந்தார்கள்' என்று முடிப்பது நம்முடைய தேசத்துக் கர்நாடக முறை. புதிய முறைக் கதைகளில் கதாநாயகனோ, நாயகியோ அகால மரணமடைய வேண்டியது மரபு. எதிரியைக் கொண்டு கொல்விக்க முடியாவிட்டால், விஷம் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ தற்கொலை செய்விக்க வேண்டும். அல்லது கதாபாத்திரங்களை உயிரோடு விட்டாலும் அவர்களைத் தீராத துக்கத்திலாவது ஆழ்த்திவிட்டுக் கதையை முடிக்க வேண்டும்" என்று பிரசங்கம் செய்தேன்.
"வாழ்க்கையில்தான் வேண்டிய துக்கம் இருக்கிறதே! கதைகளாவது சந்தோஷமாய் முடியக்கூடாதா?" என்று கேட்டான் அருணாசலம்.
"வாழ்க்கையில் வேண்டிய துக்கம் அதிகமாயிருப்பதால் தான் கதைக்கும் துக்கமாய் முடிவுவேண்டும். அப்போதுதானே உண்மைக்குப் பொருத்தமாயிருக்கும்!"
"சரிதான், ஆனால் இந்தக் கதையைப் பொருத்த வரையில் அது பொருத்தமில்லை. ஏனென்றால் இதில் வரும் கதாநாயகன் நானே. விஷங் குடித்தோ, தூக்குப் போட்டுக் கொண்டோ உயிர் விட எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. படிப்பிலும், அழகிலும், குணத்திலும் சிறந்த மனைவியை விட்டுவிட்டு, உயிரைவிட யாருக்குத்தான் மனது வரும்?"
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பெருமையுண்டு. அருணாசலத்துக்கு அவன் மனைவி விஷயத்தில் பெருமை. இப்போது ஸ்ரீமதி சம்பங்கி எல்.டி பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள். "அப்படிக் கதையைச் சந்தோஷமாய் முடிப்பதாயிருந்தாலும், நீ முடித்திருக்கும் முறை சரியல்ல. ஒரு வேலையும் கிடைக்காமல் கடைசியில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கதை எழுதத் தொடங்குகிறானென்றும், வெகு சீக்கிரத்தில் பிரசித்த பத்திரிகாசிரியனாகவும், நூலாசிரியனாகவும் ஆகி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலானானென்றும் முடித்திருக்கிறாய். இது உண்மைக்கு நேர் மாறு பாடாயிருக்கிறது. நல்ல கதையின் இலட்சணம், அது நிஜம்போல் தோன்ற வேண்டும்."
"கதை இருக்கட்டும். நான் பத்திரிகைகளுக்கு எழுதிப் பணம் சம்பாதிப்பதைப் பற்றி என்ன சொல்கிறாய்?"
"பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சோப்பு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். மூக்குப் பொடி வியாபாரம் செய்து லட்சாதிபதியாகலாம். காமகேசரி லேகியம் விற்றுக் குபேரனாகலாம்; வெற்றிலை பாக்குக் கடை லாபத்தில் மோட்டார் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பத்திரிகைக்கு எழுதிப் பிழைக்கும் ஆசையிருந்தால் பட்டினி கிடப்பதில் காந்தி மகானுடன் போட்டி போடத் தயாராயிருக்க வேண்டும்."
"வேண்டாம், என்னிடம் ரூ. 2000 இருக்கிறது. அதைக் கொண்டு நானே ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்தினாலென்ன?" என்று வினவி, தமிழ்நாட்டில் வெற்றியடைந்த இரண்டு, மூன்று பத்திரிகைகளின் பெயரையும் கூறினான்.
சென்ற பத்து வருஷத்துக்குள் தமிழ் நாட்டில் பிறந்து இறந்த தமிழ்ப் பத்திரிகைகளின் ஜாபிதா ஒன்று வைத்திருந்தேன். அதை அவனுக்குப் படித்துக் காட்டி, "இதில் 99 பெயர்கள் இருக்கின்றன. சதம் பூர்த்தியாவதற்கு இன்னும் ஒன்று பாக்கி, வேண்டுமானால் நீ ஆரம்பி" என்றேன். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், அருணாச்சலம் மறுபடியும் வந்தான். அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு சோகமயமாயிருந்தது. "உன்னிடம் ஏதாவது வைரம் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"வைரமா? என்னிடம் ஏது? விதேசிப் பொருள்களில் எனக்குச் சிரத்தை கிடையாது என்று தெரியாதா?" என்றேன்.
"வேண்டாம்! சுதேசிக் கயிறாவது, நீளமான கயிறாக ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான்.
எனக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. "கயிறு எதற்காக?" என்றேன்.
"இன்றைய தினம் என் உயிரை விட்டு விட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறேன்" என்றான்.
அவனைச் சமாதானப்படுத்தி விசாரித்ததில் விஷயம் என்னவென்று தெரிய வந்தது. அவன் துணைவி ஸ்ரீமதி சம்பங்கி அம்மாள் எல்.டி. பரீட்சையில் தேறி, உபாத்தியாயினி வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தாளாம். திருச்சிராப்பள்ளியிலுள்ள பெண்களின் ஹைஸ்கூல் ஒன்றில் மாதம் ரூ.120 சம்பளத்தில் உபாத்தியாயினியாக நியமிக்கப் பட்டிருப்பதாய் அன்றைய தினம் உத்தரவு வந்ததாம். 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று பெரியோர் சொல்லியிருக்க, மனைவிக்கு உத்தியோகம் ஆன பிறகு, தான் உத்தியோகம் இல்லாமல் எப்படியிருப்பது என்று அருணாசலம் கவலைப்பட்டான். மனைவி சம்பாதித்துப் போட்டுத் தான் சாப்பிட்டுக் கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்வதை விட ஏன் இப்போதே பிராணத் தியாகம் செய்துவிடக் கூடாது என்பதற்கு நான் ஏதேனும் தக்க காரணம் எடுத்துக் காட்ட முடியுமா என்று வினவினான்.
'உயிர் உள்ளவரை நம்பிக்கைக்கு இடமுண்டு' என்ற மொழியை அவனுக்கு எடுத்துக்காட்டி ஆறுதல் கூறினேன். அவன் இவ்வளவு வைராக்கிய புருஷன் என்பது எனக்குத் தெரியாதென்றும், இனிமேல் கண்ணுங்கருத்துமாயிருந்து ஏதாவது ஒரு வேலை அவனுக்குத் தேடிக் கொடுப்பதாகவும் உறுதி கூறினேன். இப்போதைக்கு நீ உன் மனைவியுடன் திருச்சிக்குப் போ. என்ன படித்திருந்தாலும் ஸ்திரீதானே? அங்கே திக்குத்திசை தெரியாமல் தவிப்பாள். கொஞ்ச நாளைக்கு நீ அவளுடன் இருக்க வேண்டியது அவசியம்" என்றேன். "அப்படியே செய்கிறேன். ஆனால் நீ உன்னுடைய வாக்குறுதியை மறந்து விடக்கூடாது. 30 ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் போதும். ஆனால் உத்தியோகமின்றி இனி அதிக காலம் நான் உயிர் வாழ மாட்டேன்" என்று சொல்லி விட்டுப் போனான்.
ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு எனக்குத் தெரிந்த முதலாளி ஒருவர் ஒரு தமிழ் வாரப் பத்திரிகை ஆரம்பிப்பதாகச் சொன்னார். உதவி ஆசிரியர் ஒருவர் வேண்டுமென்று தெரிவித்தார். உடனே அருணாசலத்துக்குக் கடிதம் எழுதினேன். அவனுடைய பதில் எனக்கு ஆச்சரியம் உண்டு பண்ணிற்று. மாதம் 65 ரூபாய் சம்பளத்தில் தனக்கு முன்பே உத்தியோகம் ஆகிவிட்டதாகவும், சம்பள உயர்வுக்கு இடமுண்டு என்றும் தெரிவித்திருந்தான். என்னுடைய முயற்சிக்காக நன்றி செலுத்திவிட்டு, திருச்சிக்கு வந்தால் தன் வீட்டுக்கு வராமல் போகக் கூடாதென்று வற்புறுத்தியிருந்தான். அலுவல் என்ன என்று மட்டும் சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு காரியமாக நான் திருச்சிக்குப் போக நேர்ந்தபோது, அருணாசலத்தை அவசியம் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். அவனைப் பார்ப்பதில் இருந்த ஆவலைவிட, அவனுடைய அலுவல் என்னவென்பதை அறிவதில் அதிக ஆவல் இருந்தது. அவனுடைய கடிதங்களில் அதைப் பற்றி அவ்வளவு மூடுமந்திரம் செய்திருந்தான்.
மாலை ஆறரை மணிக்குமேல் வீட்டில் வந்து பார்க்கும்படி எழுதியிருந்தான். அன்று மாலை எனக்கு வேலையொன்றும் இல்லாமையால் நாலு மணிக்கே புறப்பட்டு அவன் வீட்டைத் தேடிக்கொண்டு போனேன். வெளிச்சத்திலேயே வீட்டை அடையாளங் கண்டுபிடித்து விட்டால், பிறகு இரவில் சுலபமாகப் போகலாம் என்று எண்ணம்.
ஐந்து மணிக்கு அவன் வீட்டைக் கண்டுபிடித்தேன். கதவு உட்புறம் தாளிட்டிருந்தது. தட்டினேன். உள்ளிருந்து, "யார் அது?" என்ற சத்தம் கேட்டது. அது அருணாசலத்தின் குரலாய் இருக்கவே, 'நல்லவேளை, மறுபடியும் போய்விட்டு வரவேண்டியதில்லை' என்று எண்ணி, "நான் தான் அருணாசலம், கதவைத் திற!" என்றேன்.
அருணாசலம் உள்ளிருந்து, "ஊ! ஊ!" என்று ஒரு விநோதமான சத்தம் இட்டான். அடுத்த நிமிஷம் வந்து கதவைத் திறந்தான். அவனுடைய கோலத்தைக் கண்டதும் திகைத்துப் போனேன். கலாசாலையில், "டம்பாச்சாரி" என்று பெயர் பெற்ற அருணாசலம் இடுப்பில் ஒரு முழத் துண்டை மூலக்கச்சம் கட்டிக் கொண்டு வந்து எதிரில் நின்றால் திகைக்காமல் என் செய்வது? போதாததற்கு அவனுடைய ஒரு கை ஏதோ மாவில் அளைந்த அடையாளத்துடன் இருந்தது. அச்சமயம் அவன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தான் என்பதைக் கண்டு பிடிப்பதற்குப் புத்திக்கூர்மை அதிகம் வேண்டியதில்லை. என்னை மளமளவென்று அழைத்துச் சென்று கூடத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, "சற்று உட்கார்ந்திரு. இதோ குக்கரை இறக்கிக் குழம்புக்குத் தாளித்துக் கொட்டிவிட்டு வந்துவிடுகிறேன்" என்றான். அப்போது அங்கே தொங்கிய தொட்டிலில் கிடந்த ஒரு குழந்தை 'வீல்' என்று கத்தியது.
"இந்தப் பயல் அழுதால் கொஞ்சம் தொட்டிலை ஆட்டு, ரொம்ப துஷ்டன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்.
தலையெழுத்தை நினைத்துக் கொண்டு தொட்டிலை ஆட்டினேன். அப்போது என்னவெல்லாமோ எண்ணம் தோன்றிற்று. அருணாசலத்தின் மேல் அளவில்லாத இரக்கம் உண்டாயிற்று. படித்த பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் இந்தக் கதிதான். அவளுந்தான் உத்தியோகம் பார்க்கிறாள். இவனுந்தான் உத்தியோகம் செய்கிறான். ஆனால் அவளுக்குச் சம்பளம் அதிகமாயிருப்பதால், வீட்டு வேலைகளையெல்லாம் இவன் செய்ய வேண்டியிருக்கிறது போலும்! அருணாசலத்தின் ரோஷமெல்லாம் எங்கே போயிற்று?
சற்று நேரத்திற்கெல்லாம் சம்பங்கி அம்மாள் வந்தாள். என்னைப் பார்த்ததும், "ஓ! நீங்கள் ஆறரை மணிக்கல்லவா வருவீர்களென்று நினைத்தேன்?" என்றாள். அவள் முகத்தில் ஒரு சிறிது அதிருப்தி தோன்றியது. ஆனால் அதை உடனே மறைத்துப் புன்னகையுடன், "முன்னால் வந்ததற்குத் தண்டனை தொட்டில் ஆட்டும் வேலை கிடைத்ததாக்கும்" என்று கூறினாள். அப்போது எனக்கேற்பட்ட மனக்குழப்பத்தில் இன்ன பதில் சொன்னேன் என்பதே எனக்கே இப்போது ஞாபகம் இல்லை. ஏதோ உளறியிருக்க வேண்டும். இதற்குள் அருணாசலம் சமையலை முடித்து விட்டு, வேஷ்டி சொக்காய் முதலியவை போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான். பேச்சினிடையில், "இவர் இப்போது உயிரோடிருப்பதற்காக உங்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும் அல்லவா? தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறு கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டீர்களாமே!" என்று சம்பங்கி சொன்னாள்.
"ஆமாம். வைரங்கூட கிடையாது என்று சொல்லி விட்டேன்" என்று நானும் சிரித்துக் கொண்டே கூறினேன்.
"இங்கு வந்த பிறகு கூடக் கொஞ்ச நாள் அப்படித்தான் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நான் பதிலுக்கு ஒன்று சொல்லிப் பயமுறுத்திய பிறகுதான் அந்தப் பேச்சு நின்றது. சொல்லி விடட்டுமா?" என்று சம்பங்கி அருணாசலத்தைப் பார்த்தாள்:
"தாராளமாகச் சொல். எனக்கு ஆட்சேபணையில்லை" என்றான் அருணாசலம்.
"இவர் அப்படி ஏதாவது தற்கொலை செய்துகொண்டு இறந்தால், நான் மறுநாளே, பத்திரிகைகளில், 'படித்து உத்தியோகம் பார்க்கும் இளம் விதவைக்குப் புருஷன் தேவை' என்று விளம்பரம் செய்து கொள்வேனென்று கூறினேன். அது முதல் செத்துப் போவதைப் பற்றி வாய் திறப்பதில்லை."
"ஒரு வேளை உத்தியோகம் கிடைத்ததும் அந்தப் பேச்சை மறந்ததற்கு ஒரு காரணமாயிருக்கலாம் அல்லவா?" என்றேன். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேல் கண் என்பது போல், அவனுடைய அலுவல் என்னவென்று தெரிந்து கொள்வதிலேயே என் நோக்கம் இருந்தது.
"அதுவும் ஒரு காரணந்தான்" என்றான் அருணாசலம்.
"எந்த ஆபிசில் அப்பா, உனக்கு வேலை? அதை நீ சொல்லவேயில்லையே" என்றேன்.
அருணாசலம் சிரித்துக் கொண்டே, "ஆமாம், நேரில் தான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். என்னுடைய ஆபீஸ் இந்த வீடுதான். நீ வந்த போது செய்து கொண்டிருந்தேனே அதுதான் என்னுடைய வேலை" என்றான்.
முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் நன்றாக விசாரித்ததில் பின்வரும் ஆச்சரியமான விவரங்கள் தெரியவந்தன.
சம்பங்கி அம்மாளுக்குக் கிடைத்த ரூ.120 சம்பளத்தில், அருணாசலத்துக்கு மாதம் ரூ.65 சம்பளம் கொடுப்பாளாம். வீட்டுச் செலவுகளுக்குத் தலைக்குச் சரிபாதி போட்ட பின்னர், பாக்கி மிகுந்ததை அவரவர்கள் இஷ்டம்போல் செலவு செய்வார்களாம்; அல்லது சேர்த்து வைத்துக் கொள்வார்களாம்; மேற்படி சம்பளம் வாங்குவதற்காக அருணாசலம் சமையல், குழந்தையைப் பார்த்துக் கொள்வது உட்பட எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியது. ஒருவர் வேலையில் மற்றவர் உதவி செய்வது அவரவர்களுடைய இஷ்டத்தைப் பொறுத்தது.
"ஆமாம் ஸார்! இவர் மாதம் 30, 40 சம்பளத்துக்கு எங்கேயாவது போய் உழைப்பதில் என்ன சாதகம்? இவர் இல்லாமற்போனால் நான் சமையற்காரியும் குழந்தைக்கு நர்ஸும் வைத்தாக வேண்டும். இவரும் வேறெங்கேயோ போய்ச் சேவகம் செய்து, நானும் இங்கே பணம் செலவழிப்பதில் என்ன நன்மை? இப்போது நாங்கள் சேர்ந்து இருப்பதற்கும் வசதியிருக்கிறதல்லவா?" எனச் சம்பங்கியம்மாள் கூறினாள். நான் எங்கு ஏதாவது அநுசிதமாய்ப் பேசி அருணாசலத்தின் மனத்தை மாற்றி, அவர்களுடைய குடும்ப வாழ்க்கைக்குச் சனியனாய் விடப் போகிறேனோ என்று அந்த அம்மாள் பயந்ததாகத் தோன்றியது. ஆனால் அந்தப் பயம் அநாவசியமேயாகும். ஏனெனில், அருணாசலம் தன்னுடைய நிலைமையில் முற்றும் திருப்தியுள்ளவனாயிருந்தான். அவனுடைய மனத்தை மாற்றுவதற்கு யாராலும் முடியாது.
"ஆனால் ஒரு தகராறு இருக்கிறது, அப்பா! அதை நீதான் பஞ்சாயத்துச் செய்து தீர்த்து வைத்துவிட்டுப் போகவேண்டும்" என்றான்.
"முடியுமானால் செய்கிறேன். அது என்ன?" என்று கேட்டேன்.
"நான் வேலை ஒப்புக்கொண்டு ஒரு வருஷம் ஆகிறது. அவ்வப்போது சம்பளம் உயர்த்த வேண்டுமென்று அப்போது பேச்சு. இந்த வருஷம் பள்ளிக்கூடத்தில் இவளுக்குச் சம்பளம் உயர்த்தாதபடியால் எனக்கும் சம்பளம் உயர்வு கிடையாது என்கிறாள். இது நியாயமா? இவளுடைய சம்பளத்துக்கும் என்னுடைய சம்பளத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்றான்.
"ஆமாம், ஸார்! உலகமெல்லாம் 100க்கு 10 சம்பளம் குறைத்திருக்கிறார்கள். இவருக்கு எப்படி ஸார் உயர்த்த முடியும்?" என்றாள் சம்பங்கி.
நான் யோசித்தேன். என்னுடைய அநுதாபமெல்லாம் அருணாசலத்தின் பக்கந்தான் இருந்தது. ஆனால் அவன் பக்கம் பேசுவதில் ஓர் அபாயம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய வீட்டில் என் மனைவி குடும்ப வேலை பார்ப்பதற்கு இந்த மாதிரி சம்பளம் கேட்கத் தொடங்கினால் நான் தாராளமாய் இருக்க முடியுமா? நீங்கள்தான் இருக்க முடியுமா? ஆகவே இப்போது அருணாசலம் பக்கம் பேசினால் ஆண் குலம் முழுவதற்கும் ஒரு பிரதிகூலத்தைச் செய்தவர்களாவோம் என்று தோன்றியது. தீர ஆலோசித்துப் பின்வருமாறு தீர்ப்புக் கூறினேன்.
"அம்மாளுடைய சம்பளத்துக்கும் உன் சம்பளத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதைக் காரணமாய்க் காட்டி உனக்குச் சம்பள உயர்வு இல்லையென்று சொல்வது தவறுதான். ஆனால் நீயும் காரணமின்றிச் சம்பள உயர்வு கேட்கக் கூடாது. உன் உத்தியோகத்துக்கு வருஷா வருஷம் சம்பள உயர்வு சரியன்று. ஒரு குழந்தை அதிகமானால் ஓர் ஐந்து ரூபாய் சம்பளம் அதிகமென்று ஏற்படுத்திக் கொள்வது நியாயமாயிருக்கும்."
இந்தத் தீர்ப்பு சம்பங்கி அம்மாளுக்கு மிகவும் திருப்தியளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏனெனில், அவள் எங்கள் இருவரையும் உட்கார வைத்துச் சாப்பாடு பரிமாறினாள். அருணாசலத்தின் வேலையில் உதவி செய்யத் தனக்கு அன்று இஷ்டம் என்று தெரிவித்தாள்.
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வாசற்படியைத் தாண்டும் போது, 'இந்த ஏற்பாட்டின் கீழ் அந்தத் தம்பதிகள் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்த முடியுமா? அவர்களிடையில் அன்பு இருக்குமா?' என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது. அப்போது என்னையறியாமல் நான் விட்டுப் பிரிந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன்.
வெட்கங் கெட்டவர்கள்! நான் அப்பால் போகிற வரையில் தாமதிக்கக் கூடாதா?