தப்பிலி கப்

கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள் நீங்கள் எப்போதாவது பிரவேசித்ததுண்டா? இல்லையென்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், அந்தப் பூலோக சொர்க்கத்துக்குள் நானும் நுழைந்தது கிடையாது. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்த மைதானத்திற்குள் நீங்கள் பிரவேசித்திருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லை.

ஆனால் குதிரைப் பந்தயம் நடக்கும் சனி அல்லது புதன் கிழமைகளில் நீங்கள் கிண்டி ஸ்டேஷன் வழியாக மாலை நேரத்தில் ரெயில் பிரயாணம் செய்ய நேர்ந்தால் சிறிது தலையை நீட்டி வெளியில் பார்க்குமாறு சொல்வேன். அதனால் நீங்கள் அடையும் பலன் என்னவென்றால், சென்னை நகரில் சுமாராக எத்தனை மோட்டார் வண்டிகள் இருக்கின்றனவென்று ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். புள்ளி விவரங்களில் நீங்கள் பற்று உடையவர்களாயின் பின்வரும் கணக்குகள் போட்டு அறியலாம்.

(1) சென்னையில் உள்ள மோட்டார் வண்டிகள் எவ்வளவு?

(2) சராசரி ஒவ்வொன்றின் விலைகள் என்ன இருக்கும்?

(3) மொத்தம் விலை என்ன?

(4) ஒவ்வொன்றிற்கும் சராசரி பெட்ரோல் செலவு எவ்வளவு இருக்கும்?

(5) மொத்தப் பெட்ரோல் செலவு என்ன?

(6) கெட்டுப் போகும் கருவிகளைப் புதுப்பிக்கும் செலவு என்ன?

(7) கிராமாந்தரங்களின் ஏழைக் குடியானவர்களிடமிருந்து நகர வாசிகள் பெறும் பணத்தில் மோட்டார் மூலமாக மட்டும் எவ்வளவு ரூபாய் வருஷந்தோறும் அயல்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்? அல்லது நீங்கள் சமூக நிலைமையைப் பற்றிய ஆராய்ச்சியில் சிரத்தை உடையவர்களானால் அங்கு நிற்கும் மோட்டார் வண்டிகளின் இலக்கங்களையெல்லாம் குறித்துக் கொண்டு பின்வரும் விவரங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம்;

கிண்டி குதிரைப் பந்தயத்திற்குப் போகும் சென்னைப் பெரிய மனிதர்களில்,

(1) சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எத்தனை பேர்? (2) அட்வொகேட்டுகள் எத்தனை பேர்? (3) நியாயாதிபதிகள் எவ்வளவு பேர்? (4) பத்திராதிபதிகள் எத்தனை பேர்? (5) சட்டசபை அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்? (6) பாங்கி முதலாளிகள் எத்தனை பேர்? (7) வியாபாரிகள் எத்தனை பேர்? (8) கலாசாலை ஆசிரியர்கள் எவ்வளவு பேர்?

பந்தயம் முடிந்து ஜனங்கள் மைதானத்திலிருந்து வெளியே வரும்பொழுது சற்றே கவனித்துப் பார்த்தீர்களானால், நீங்கள் சிறிதும் எதிர்பாராத மனிதர்கள் பலர் அங்கிருந்து வெளிப்புறப்படுவதைக் காண்பீர்கள். மூன்றாம் வகுப்பில் உங்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர், உங்கள் தகப்பனாரின் சிரார்த்தத்தில் நிமந்திரணத்துக்கு வந்த சாஸ்திரிகள், அன்றைய தினம் சாயங்காலம், திருவொற்றியூரில் தேர் பார்க்கப் போவதாக விடுமுறை பெற்றுச் சென்ற உங்கள் வீடு கூட்டும் வேலைக்காரி முதலியோரைப் பார்த்துத் திடுக்கிடுகிறீர்கள்.

உங்கள் விஷயம் எப்படி ஆனாலும் சரி, டி.கே. ராஜகோபாலன் இப்பொழுது மேற்படி மைதானத்துக்குக் குள்ளிருந்து வெளிவருவதை அவனுடைய தாயார் பார்த்தாளாயின் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவாளென்பதில் சந்தேகமில்லை. ராஜகோபாலன் திருவல்லிக்கேணியில் வசிப்பவன். அவனுக்குத் தபாலாபீஸில் ரூபாய் நாற்பது சம்பளம். தாயாரைத் தவிர மனைவியும் தங்கையும் வீட்டிலிருந்தார்கள். ஜீவனத்துக்கு நாற்பது ரூபாய் போதவில்லை. ஆதலால் அவன் 'நாவல்' எழுதிப் புத்தகப் பிரசுரக் கம்பெனிகளுக்குக் கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தான். அன்று இருபதாம் தேதி. சம்பளம் வர இன்னும் பத்து நாளாகும். மறு நாள் சமையல் பண்ணுவதற்கு வீட்டில் அரிசி, சாமான் ஒன்றும் இல்லையென்று அவன் தாயார் சொன்னாள். இரண்டு மாத வாடகை பாக்கி என்று வீட்டுக்காரன் பிடுங்கி எடுத்தான்.

"அம்மா! போன மாதம் எழுதிக் கொடுத்த நாவலுக்காக மூர் மார்க்கெட் கோவிந்தசாமி நாயுடு இன்று முப்பது ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று காலை பத்து மணிக்கு ராஜகோபாலன் வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் இப்பொழுது குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெளிவருவதென்றால்? அதிலும், அவனுடைய தோற்றமோ மகாகோரமாக இருந்தது. முகத்திலே பிரேதக் களை; மேலெல்லாம் ஒரே புழுதியும் வியர்வையும். காலையில் அழகாக வகிடு பிளந்து படிய வாரிவிட்டிருந்த தலைமயிர் இப்பொழுது செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டிருந்தது. அந்தத் தலைமயிர் காற்றினால் கலைக்கப்பட்டதோடல்லாமல் அவனுடைய கைகளினாலும் வெகு வேதனையை, அடைந்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

அவனுடைய இந்தக் கோர ஸ்வரூபத்தைப் பார்க்க நமக்கே சகிக்கவில்லையென்றால், அவனுடைய தாயாராவது மனைவியாவது பார்க்கும் பட்சத்தில் மூர்ச்சை அடைந்து விடுவார்களென்று கூறுவது மிகையாகுமா?

ராஜகோபாலன் வெளியே வந்ததும் அங்கே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொண்டிருந்த பஸ்களை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தான். பின்னர் அவ்வரிசையின் முதலில் ஜனங்கள் ஏறிக் கொண்டிருந்த பஸ்ஸை நோக்கி அதிவேகமாக விரைந்து சென்றான். அந்த பஸ்ஸுக்கு ஒருவர் தான் பாக்கியிருந்தது. "ஏறுங்கோ, சார் ஸ்டார்ட்!" என்றான் கண்டக்டர். ஆனால் ராஜகோபலன் ஏறவில்லை. வண்டியின் முன் பக்கத்தில் இரண்டு தடித்த மார்வாரி சேட்டுகளுக்கு மத்தியில் உட்கார்ந்து திணறிக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து, "அடே சீனு ஒரு சமாசாரம் இறங்கு கீழே!" என்றான். நல்ல வேலை என்று எண்ணிக் கொண்டு கீழிறங்கினான் சீனு.

"என்ன சமாசாரம்?" என்றான்.

"ஒன்றுமில்லை...."

"ஒன்றுமில்லையா? பின் எதற்காக என்னை இறக்கினாய்?"

"அடே அப்பா! கோபித்துக் கொள்ளாதே! இங்கே வா சொல்கிறேன்" என்று ராஜு சீனுவைச் சிறிது ஒதுக்குப் புறமாய் அழைத்துக் கொண்டு போய், "சட்டைப் பையைப் பார். எவ்வளவு சில்லறை இருக்கிறது?" என்று கேட்டான்.

சீனு எண்ணிப் பார்த்தான். ஐந்தரை அணா இருந்தது. "நல்ல வேளை! நீ வந்து இருக்கிறாய். இல்லாவிட்டால் அவமானம்" என்றான். பஸ்ஸுக்கு எட்டணா கூலி. "இரண்டு பேருக்கும் ரெயிலுக்காவது இருக்கிறதே" என்றான் ராஜகோபாலன். இருவரும் கை கோர்த்துக் கொண்டு போய் டிக்கெட் வாங்கி ரெயில் ஏறினார்கள்.

ரெயில் நகர ஆரம்பித்தது. சீனுவின் எதிரில் துக்கமாய் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மனைவி அல்லது குழந்தை செத்துப் போனால் கூட அவ்வளவு துக்கப்படுவார்களா என்பது சந்தேகம். ரெயில் ஓடத் தொடங்கியதும் அவர் அருகிலிருந்த முதலியார் பக்கம் திரும்பினார். "நாலு நாளாய்ப் 'பவானி பிரஸாத்' தான் ஜயிக்க்கப் போகிறது என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியில் உன் பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவராய்ப் போனேன். என் புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்" என்று வெறுப்புடன் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் தமது காலிலிருந்த செருப்பைக் கழற்றினார். பக்கத்திலிருந்தவர்கள் அவர் எங்கே புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ளப் போகிறாரோ என்று பயந்து விட்டனர். அப்படி ஒன்றும் அவர் செய்யவில்லை. பகலெல்லாம் நின்று கால் வலித்தது போலும்! காலைத் தூக்கிச் சப்பணங் கூட்டி உட்கார்ந்தார். "எவனாவது கண் தெரிந்து 'டாபா'மேல் பணங் கட்டுவானா?" என்றார் ஒருவர். "அந்த ரேஸில் அது தான் கெலிக்கப் போகிறது என்று ஸ்பெஷல் தந்தி போச்சே!" என்றார் முதலியார். "உன் தந்தியைக் கொண்டு உடைப்பில் போடு. குதிரையா அது? கழுதை! கடைசியில் அல்லவா வந்தது!" என்றார் நாயுடு. "ஆமாம் ஐயா, எல்லாவற்றிற்கும் கடைசியாக அது எப்படித்தான் வந்ததோ தெரியாது. எனக்கு வந்த கோபத்தில் அதன் மேல் கல்லை விட்டு எறிந்தேன்" என்றார் ஒரு சாயபு.

"தந்திப்படி குதிரை வந்தால் அப்பொழுது மட்டும் என்ன செய்வாய்?" என்றார் முதலியார்.

"ஆமாம்! உன் குதிரைத்தான் வந்ததே, தெரியாதா, வாலை உயரக் கிளப்பிக்கொண்டு!" என்று சொல்லி நாயுடு கையைத் தூக்கினார். குதிரை வாலை அப்படித் தூக்கிக் கொண்டு போனதென்று காண்பிப்பதாக அவர் எண்ணம்.

"யாராவது தந்தியைப் பார்த்து நூற்றுக் கணக்காக பணத்தைத் தொலைப்பார்களா? கொஞ்சமாவது குதிரைகள் விஷயம் தெரியாமல் பணத்தைக் கட்டலாமா?" என்று இடம் இல்லாமல் ரெயில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டிருந்த ஓர் ஐயங்கார் குறுக்கிட்டார்.

"ஒரு குதிரை எவ்வளவு தூரம் ஓடும்? அதன் வேகம் என்ன? அதற்கு வெயிட் எவ்வளவு? அதன் மேல் எந்த ஜாக்கி ஏறுகிறான்?" என்று இந்த விஷயமெல்லாம் கவனிக்காமல் பணம் கட்டவே கூடாது என்று சொல்லிக் கொண்டே ஐயங்கார், நாயுடுவுக்கும் முதலியாருக்கும் இடையே உட்காரப் போனார். நாயுடு இடம் விட்டார். "ஆமாம், நீர் தான் கணக்குப் போட்டுப் பணம் கட்டுகிறீரே? இது வரையில் எத்தனை மாடி வீடு கட்டியிருக்கிறீர்? போன வாரம் 'சிவாஜி வரவே வராது, அன்வர் பாஷாதான் கெலிக்கப் போகிறது' என்று சொன்னீரே! அந்தப் பாஷா எல்லாக் குதிரையையும், துரத்தியடித்துக் கொண்டு வந்தது ஞாபகமில்லையாக்கும்!"

"விஷயம் தெரியாமல் பேசாதேயும். அது மட்டும் சரியாக ஓடினால் அதை அடிக்கிற குதிரை ஏது? அன்றைக்கு ஒரே 'பேவரிட்' (Favourite) ஆகப் போய் விட்டது. ஜாக்கி 'புல்' பண்ணி விட்டான். அதற்கு யார் மேல் முட்டிக் கொள்கிறது?"

"குதிரை தின்னுகிறதற்குப் 'புல்' பண்ணினானாக்கும்! 'போமையா போம்' சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுகிறீரே!" என்று முதலியார் பரிகசித்தார்.

"ஒரு சமயம் இப்படி ஒரு சமயம் அப்படித்தான் இருக்கும். கணக்குப் பார்க்க வேண்டியதுதான். குதிரை 'ட்ரையா' 'ட்ரை' இல்லையா என்றும் பார்க்க வேண்டியதுதான்" என்று அதுவரையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த ஓர் ஐயர் சொன்னார்.

இவர்கள் பேசுவதைக் காதில் வாங்காதது போல் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், "பாருங்கள், நானும் இருபது வருஷமாய் ரேசுக்குப் போய் வருகிறேன். நான் பணங்கட்டியதைப் போல் ஒருவரும் கட்டியிருக்க மாட்டார்கள். இழவை விட்டுத் தொலைக்கலாமென்றாலோ முடியவில்லை. லாபம் வருகிறதோ இல்லையோ நம் பணம் போகிறது நிச்சயம். நூற்றுக்கு எட்டு வீதம் கிளப்புக்காரன் எடுத்துக் கொண்டு விடுகிறான். போதாததற்கு உள்ளே வர டிக்கெட், ரெயில் செலவு, கவலை, கால விரயம் எல்லாம்" என்று பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

ராஜகோபாலனுக்குப் பக்கத்தில் பெரிய மனிதர் போன்றிருந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

"இவர்கள் என்னமோ சொல்லுகிறார்கள்? குதிரைப் பந்தயம் என்றால், நாலாயிரம், ஐயாயிரம் ஒரு வரவு செலவாகவே எண்ணக்கூடாது. அதை ஒரு ஸ்போர்ட்ஸாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று போனால் இன்னொன்றில் வைத்துத் தாக்க வேண்டும். ஒரு குதிரையில் ஆயிரம் கட்டிப் போனால் இன்னொன்றில் இரண்டாயிரம் கட்டுகிறது. அதுவும் போனால் நாலாயிரம் கட்டுகிறது. குதிரை வராமலா போய்விடும்? அப்படி இருபதாயிரம் முப்பதாயிரம் கட்டுவதற்குக்கூடப் பயப்படக் கூடாது" என்றார் அவர்.

இந்தச் சமயத்தில் இரண்டு மூன்று பேர், "அடடா! எக்மோர் ஸ்டேஷன் தாண்டிவிட்டதே" என்று தவித்தனர். அவர்கள் எழும்பூரில் இறங்க வேண்டியது. பேச்சு மும்முரத்தில் மறந்து போனார்கள். நாசமாய்ப் போகிற 'எலெக்ட்ரிக்' வண்டிகள் ஒரு நிமிஷத்திற்கு மேல் நிற்பதில்லை.

ராஜுவும் சீனுவும் ஒரு மூலையில் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். வாய் திறக்கக்கூட இல்லை; மற்றவர்களுக்கெல்லாம், "ஏதோ அடுத்த சனிக்கிழமை அதிர்ஷ்டம் திரும்பாதா? பார்க்கலாம்" என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இவர்களுக்கோ எல்லா நம்பிக்கையும் போய்விட்டது.

மற்றொரு பக்கத்தில் பட்டுச் சட்டையும் தங்கச் சங்கிலியும் வைர மோதிரமும் அணிந்து உட்கார்ந்திருந்த ஒருவர், தம் அருகிலிருந்த சிநேகிதருக்கு ராஜுவைச் சுட்டிக் காட்டினார். "அதோ அந்த இரண்டு ஆசாமிகளையும் பார்த்தீர்களா, சார்? முகத்திலே ஈயாடவில்லை, பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் தான் தூக்குப் போட்டுக் கொண்டும், விஷத்தைத் தின்றும் சாவது! இவர்கள் எல்லாம் ஏன் ஸார் வருகிறார்கள்?" என்றார்.

"ஆமாம்; ஒன்று நம்மைப் போல் நூறு, ஆயிரம் லட்சியமில்லாமலாவது இருக்கவேண்டும்; அல்லது சரியாய்க் கணக்குப் பார்த்து நிதானமாய் ஆடவேண்டும். இரண்டுங் கெட்டான் பேர்வழிகள் எல்லாம் வரக் கூடாது" என்றார் அவர் நண்பர்.

வண்டி பார்க் ஸ்டேஷனில் வந்து நின்றது. "என்னுடைய அறைக்கு வருகிறாயா?" என்று சீனு கேட்டான்.

"ஆமாம் வருகிறேன். இன்றிரவு அம்மாவின் முகத்தில் விழிக்க என்னால் முடியாது" என்றான் ராஜு.

இருவரும் இறங்கிச் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீனுவின் அறைக்குச் சென்றார்கள்.

நெருப்புப் பெட்டியைத் தேடி எடுத்து விளக்கேற்றி வைத்துவிட்டு, "உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?" என்று சீனு கேட்டான்.

"ஏன்?"

"இன்றிரவு நான் தனியாயிருந்தால் ஏதாவது விபத்து நேருவது நிச்சயம். தூக்குப் போட்டுக் கொள்வேன்."

"நீ கூடவா அப்படி? அவ்வளவு நஷ்டம் ஆகி விட்டதா?"

"உனக்கு ஞாபகமிருக்குமே? பாகவதர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து நான் சண்டை போட்டுக் கொண்டு விலகிய போது என்னிடம் 20,000 ரூபாய் பணம் இருந்தது. எல்லாம் போய்விட்டது. நாளைக்குக் காப்பி சாப்பிடப் பணம் கிடையாது."

"உனக்கென்ன அப்பா! என்ன போனால் தான் என்ன? பெண்டாட்டி பிள்ளையா, தாய் தகப்பனாரா, ஒருவரும் இல்லை. உன் ஒருவனுக்கு எப்படியும் சம்பாதித்துக் கொள்வாய். நீ கொடுத்து வைத்தவன்."

"ரொம்பக் கொடுத்த வைத்தவன் நான். இருக்கட்டும், உன் சங்கதி என்ன? தாயார் முகத்தில் விழிக்க முடியாதென்று சொன்னாயே; ஏன்?"

"ஆமாம், வீட்டு வாடகை இரண்டுமாதம் பாக்கி. நாளைக்கு அரிசி இல்லை. 250 ரூபாய் கடன் இருக்கிறது; கடன்காரன் 'பிராது செய்வேன்' என்கிறான்."

"ஊரிலே நிலம் இருந்ததே?"

"அதெல்லாம் முன்னமே கடன்காரன் கொண்டு போய்விட்டான்."

"அடப்பாவி! அப்படியானால் என்ன செய்யப் போகிறாய்?"

"பெண்டாட்டி கழுத்தில் சங்கிலிதான் பாக்கியிருக்கிறது. அதைக்கேட்டு வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றுகிறது."

இப்படிச் சொல்லும்பொழுது ராஜுவின் கண்களில் நீர் ததும்பிற்று. சற்று நேரம் விம்மி விம்மி அழுதான். சீனு அவனைத் தன் தோளில் சார்த்திக் கொண்டு சமாதானப்படுத்தினான். இருவரும் பால்ய நண்பர்கள்.

சீனு சட்டென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். ராஜுவின் தோளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான். "இதோ பார், ராஜு ஒரு யுக்தி! முதல் தரமான யோசனை. நிமிர்ந்து உட்கார்ந்து கேள்" என்றான்.

"இனிமேல் என்ன யோசனை செய்து என்ன காரியம் நடக்கப் போகிறது?" என்றான் ராஜு.

"சீச்சீ! இவ்வளவுதானா? எழுந்திரு, சொல்லுகிறேன். எவனொருவன் தனக்கு வரும் விபத்துக்களையும் லாபகரம் ஆக்கிக் கொள்கிறானோ அவனல்லவா மனிதன்?"

"சரி; சரி! உன்னுடைய நாடகப் பேச்சில் ஆரம்பித்து விட்டாயாக்கும். என்ன தான் அந்த அற்புத யோசனை? சொல்" என்று கேட்டுக் கொண்டே ராஜு எழுந்து உட்கார்ந்தான்.

"இதோ பார்! நீயோ ஆசிரியன். நான் பெயர் பெற்ற நடிகன். நாம் இருவரும் சேர்ந்து வெற்றி பெறாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? இத்தனை நாளும் நீ சிரமப்பட்டு நாவல் எழுதிப் பிறரிடம் கொடுத்துப் பாரத்துக்கு (16 பக்கத்திற்கு) 4 ரூபாயும், 5 ரூபாயும் பெற்று வந்திருக்கிறாய்; போதும் இந்தத் தொழில். இப்பொழுது ஒரு நாடகம் எழுது. குதிரைப் பந்தயத்தைப்பற்றி எழுது. உன்னுடைய அநுபவத்தையே முக்கிய சம்பவமாய்க் கொண்டு கொஞ்சம் காது மூக்கு வைத்து எழுதினால் போதும். நான் 'ஸ்திரீ பார்ட்' போட்டுக் கொள்கிறேன். நாடக உலகத்தை நான் விட்டு மூன்று வருஷந்தான் ஆயிற்று. இப்போதும் என் பெயரைக் கேட்டே நாடகத்துக்கு வரக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீ கதாநாயகனாக நடிக்கலாம். அதற்கு உன்னைத் தயார் செய்து விடுகிறேன். உனக்குச் சொந்த அநுபவம் இருக்கிறபடியால் உன் அளவு சோகரசத்துடன் யாரும் நடிக்க முடியாது. பாக்கி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ நாடகம் மட்டும் எழுது" என்றான்.

"யோசனை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நாடகம் நடத்துவது அவ்வளவு சுலபமா? முதலில் தயார் செய்வதற்கெல்லாம் பணம் வேண்டாமா?"

"உனக்கேன் இந்தக் கவலை? எனக்கு வந்த மெடல்களை மட்டும் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். அவைகளை விற்றாவது நான் வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன். அதிகம் வேண்டாம்; அடுத்தடுத்து மூன்றே நாடகம் போடுவோம். அதற்குமேல் போட்டால் புளித்துப் போய்விடும். நாடகத்துக்கு ரூ.1000 வீதம் குறைந்தது ரூ.3000 மீதமாகும். தலைக்குப் பாதியாக எடுத்துக் கொள்வோம்."

"எனக்கு இன்னொன்று கூடத் தோன்றுகிறது. புத்தகத்தையும் முதலியேயே அச்சுப் போட்டுவிட்டால், நாடகக் கொட்டகையிலேயே விற்கலாம். மூன்று நாளுக்குள் முதல் பதிப்பு விற்றுவிடும், அதில் குறைந்தது 500 ரூபாயாவது வரும்" என்றான் ராஜு.

"அதற்கென்ன! அப்படியே செய்யலாம். புத்தக லாபம் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள். அதற்குப் பிறகு மற்ற நாடகக் கம்பெனியாரும் அந்த நாடகத்தை நடந்த அநுமதி கேட்பார்கள். அவர்களிடம் நாடகத்துக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் வாங்கலாம்."

"சரி, சீனு! இது மட்டும் நிறைவேறினால் நான் பிழைப்பேன்; என் குடும்பத்தையே காப்பாற்றியவனாவாய். இன்றிரவே நாடகம் எழுதி ஆரம்பிக்கிறேன். காப்பி சாப்பிட்டுவிட்டு வருவோம், வா."

எனவே, இரவு ஒன்பது மணிக்கு இருவரும் போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். ராஜு காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.

"நாடகத்துக்கு என்ன பெயர் கொடுக்கிறாய்?"

"தப்பிலி கப்"

"பேஷ்! நல்ல பெயர். சத்தியமே ஜயம். எழுது" என்றான் சீனு.

உலகத்து மக்களை இட்டார் என்றும், இடாதார் என்றும் பிரித்து, "சாதியிரண்டொழிய வேறில்லை" என்றாள் ஔவை. அந்தக் கிழவிக்குப் பின்னால் இன்னும் அநேகர் ஜனங்களை இரு பிரிவாக்க முயன்றிருக்கின்றனர். வெள்ளைக்காரர் - கறுப்பு மனிதர், முதலாளிகள் - தொழிலாளிகள், கடன் கொடுப்பவர் - கடன் வாங்குபவர், பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற பிரிவுகளைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் சென்னை நகர மாந்தரைப் பொறுத்த வரையில் இந்தப் பிரிவுகளையெல்லாம் விட, "குதிரைப் பந்தயத்திற்குப் போகிறவர் - போகாதவர்" என்ற பிரிவினை அதிகப் பொருத்தமாயிருக்கும். சீனு இந்த நிலைமையை அறிந்தவன். ஜனங்களின் மனோபாவத்தை அவன் நன்கு கண்டிருந்தான். ஆதலின், அவனுடைய யுக்தி ஆச்சரியகரமான பலனை அளித்தது.

ராயல் தியேட்டரில் "தப்பிலி கப்" நாடகம் போடப்பட்ட அன்று அந்தப் பெரிய கொட்டகை முழுவதும் ஏறக்குறைய நிறைந்திருந்தது. குதிரைப் பந்தயத்துக்குப் போவோர் இயல்பாக அந்த நாடகத்தின் பெயரினாலேயே கவரப்பட்டு வந்து சேர்ந்தனர்.

குதிரைப் பந்தயத்திற்குப் போகாதவர்களோ தங்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் குதிரைப் பந்தயத்திற்குப் போய்க் கெட்டுப் போவதைத் தடுப்பதற்கு இந்த நாடகம் பயன் படலாமென்ற நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, கொட்டகை நிரம்பிற்று.

நாடகத்தின் கதை என்னமோ சாமானியமானது தான். கதாநாயகன் சென்னையில் ஓர் அட்வொகேட். தொழில் ஆரம்பித்து இரண்டு வருஷந்தான் ஆயிற்று. "பிராக்டிஸ்" அதிகமில்லை. அவனுடைய மாமனார் (கதாநாயகியின் தந்தை) ஓர் எம்.எல்.சி. பெரிய இடங்களுக்கு அதிகம் வேண்டியவர். ஜில்லா முன்சீப் வேலைக்குக் கூடிய சீக்கிரம் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.

முதல் காட்சியில் கதாநாயகி "இந்த வருஷம் கோடைக்கு ஊட்டிக்குப் போகலாமா?" என்று கேட்கிறாள். தன் அருமை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், பாங்கிக் கணக்கில் மூன்று கலமும் பூஜ்யமாயிருப்பதை எண்ணிக் கதாநாயகன் கலங்குகிறான். ஆயினும், அதை அவளிடம் சொல்லாமல் ஊட்டிக்குப் போகாததற்கு வேறு ஏதோ பொய்க் காரணம் கற்பித்துக் கூறுகிறான்.

இவ்வாறு நாடகமானது ஆரம்பத்திலேயே தொடங்கி ஜனங்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறது.

ஊட்டிக்குப் போகவேண்டும் என்னும் தன் மனைவியின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என்று கதாநாயகன் அல்லும் பகலும் அதே கவலையாக இருக்கையில், அவனுடைய நண்பன் ஒருவன் குதிரைப் பந்தயத்தைப் பற்றி அவனுக்குச் சொல்கிறான். அதில் பத்தாயிரம், லட்சம் என்று பணம் சம்பாதித்தவர்களைப் பற்றி அவன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கதாநாயகனுக்குப் பந்தயப் பைத்தியம் பலமாகப் பிடித்து விடுகிறது. அது முதல் அவன் குதிரைப் பந்தயத்திற்குப் போக ஆரம்பிக்கிறான். ஆனால் மனைவியிடம் இதை மறைத்து விடுகிறான். திடீரென்று ஒரு நாள் "நாளை நாம் ஊட்டிக்குப் போகிறோம்" என்று சொல்லித் திடுக்கிடச் செய்ய வேண்டும் என்று மனோ ராஜ்யம் செய்கிறான்.

மேலும் மேலும் நஷ்டமாகி வருகிறது. அவ்வளவுக்குப் பந்தயத்தில் மோகமும் வளர்ந்து விடுகிறது. கடன் வாங்குகிறான். இவ்விடத்தில் மார்வாரி வட்டிக் கடையின் காட்சி நடத்தப்படுகிறது. ஏழைக் கூலிப் பெண்கள் செம்பு முதலிய பாத்திரங்களை அடகு வைத்துவிட்டுக் கால் ரூபாய் கடன் வாங்கி அடுத்த அரை வாரத்தில் அரை ரூபாய் கொடுத்துப் பாத்திரத்தை மீட்டுக் கொண்டு போனார்கள். இவ்விதமாகவே வியாபாரிகள், சொற்பச் சம்பளக் குமாஸ்தாக்கள், பெண்களைப் பெற்ற தகப்பன்மார், தாசி வீடு செல்லும் மைனர்கள் முதலியோர் வந்து கடன் வாங்கும் காட்சி ஹாஸ்யரசத்துடன் நடத்திக் காட்டப் பெற்றது. சபையோர் சிரித்து வயிறு புண்ணாகப் பெற்றனர். மார்வாடிக் கடையில் நம் கதாநாயகனும் கடன் வாங்குகிறான்.

ஒரு நாள் குதிரைப் பந்தய மைதானத்தில் கதாநாயகனுக்கு அவனுடைய சிநேகிதன் ஒரு தாசியை அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு ஒரு தினம் அவளுடைய வீட்டுக்குப் போகலாம் என்று சிநேகிதன் அழைக்கிறான். கதாநாயகனுக்குச் சிறிதும், இஷ்டமில்லை. ஆனால் பத்மாபாய்க்கு ஜாக்கிகள், ட்ரெயினர்கள் அநேகம் பேரைத் தெரியும் என்றும், அவள் "டிப்ஸ்" கொடுத்தால் தவறுவது கிடையாதென்றும் சிநேகிதன் சொன்னபோது, கதாநாயகன் வேண்டா வெறுப்பாய் அவள் வீட்டுக்குச் செல்கிறான். இதுவும் ஒரு ஹாஸ்யக் காட்சி. தாசி விட்டுக்குப் புதிதாக வருவோரைப் பற்றியும், அவர்கள் அங்கே என்ன பேசுவது என்று தெரியாமல் விழிப்பதைப் பற்றியும், அவர்களைத் தாசிகள் ஏமாற்றிப் பணம் பறிப்பதைப் பற்றியும் மிக்க ஹாஸ்ய ரசத்துடன் நடித்துக் காண்பித்தார்கள்.

ஆனால் அடுத்தாற்போல், கதாநாயகன் பச்சாதாபப் படும் காட்சியானது சிரிப்பை எல்லாம் மறக்கும்படி செய்து விட்டது. குதிரைப் பந்தயத்துக்குப் போவதைத் தன் அருமை மனைவியிடம் மறைத்து வைப்பது போதாதென்று, தாசி வீடு சென்ற துரோகமும் சேர்ந்து விட்டதே என்று அவன் உருகுகிறான். அந்தச் சமயம், "படமுடியாதினித் துயரம்" என்று அவன் பாடியபோது சபையோரெல்லாம் கலகலவென்று கண்ணீர் வடித்தார்கள்.

கடன் மூண்டு விட்டது. நான்கு பக்கமும் கடன் காரர்கள் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தார்கள். கதாநாயகன் செய்வதென்னவென்று தெரியாமல் திணறுகிறான். இந்த நிலைமையில் நாளை சனிக்கிழமை "தப்பிலி கப்" என்னும் பந்தயத்தில் ஜயிக்கப் போகிற குதிரைக்கு அவனுக்கு "டிப்" கிடைத்தது. அந்தக் குதிரையை இரண்டு நாளாகப் பல பேர் வாங்க முயற்சி செய்வதாகவும் அவனுக்கு நிச்சயமாகத் தகவல் தெரிந்தது. நாளை மட்டும் அதில் 2,000 ரூபாய் கட்டினால் கட்டாயம் 20,000 ரூபாய் கிடைக்கும். கவலையெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால், 2,000 ரூபாய்க்கு எங்கே போவது? இந்தச் சமயத்தில் அவனுடைய கட்சிக்காரன் ஒருவன் வந்து, கோர்ட்டில் கட்டுவதற்காக ரூ 2,000 கொடுக்கிறான். தான் படும் கஷ்டத்தைப் பார்த்துக் கடவுளேதான் இந்த ரூபாயை அனுப்பி இருக்கிறார் என்று கதாநாயகன் தீர்மானிக்கிறான்.

மறுநாள், சனிக்கிழமை. கிண்டிக்குப் போய்த் "தப்பிலி கப்" பந்தயத்தில் குறிப்பிட்ட குதிரையின் மேல் ரூபாய் 2,000மும் கட்டுகிறான். அவனுடைய குதிரை புறப்படும்பொழுது முதலில் புறப்படுகிறது. வரும்பொழுது கடைசியில் வருகின்றது. இடையில், ஜாக்கி அதைப் 'புல்' பண்ணிவிட்டான் என்பது கதாநாயகனின் கொள்கை.

இனிமேல் எவ்விதக் கவலையும் கிடையாது. செய்யத் தக்கது ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருந்தது. கதாநாயகன் தனியாகத் தனது அறையில் உட்கார்ந்து தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் ஆதியோடந்தமாக எல்லா விவரங்களையும் கூறுகிறான். கட்சிக்காரன் பணத்தை நாளைத் திங்கட்கிழமை கோர்ட்டில் கட்டாவிட்டால், துர்விநியோகம் செய்ததாய் ஏற்படும் என்றும், அட்வொகேட் தொழிலிருந்து தள்ளப்பட்டு அழியாத அவமானத்துக்கும் உள்ளாக வேண்டுமென்றும், அவளுடைய நகைகளை விற்றுக் கொடுப்பது ஒன்றுதான் வழி என்றும், அதைவிடத் தான் தூக்கு போட்டுக் கொண்டு இறப்பதே மேல் என்று தீர்மானித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறான். அவளிடம் தான் கொண்ட அழியாத அன்பைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதி, அவளுக்கும் குழந்தைக்கும் தனது லட்சோப லட்சம் முத்தங்களை அளித்துக் கடிதத்தை முடிக்கிறான்.

கதாநாயகி ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் குழந்தையுடன் ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போகிறாள். அவள் போன பிறகு கதாநாயகன் மேற்படி கடிதத்தை அவளுடைய அறையிலிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டுத் தூக்குப் போட்டுக் கொள்வதற்காகத் தன் அறைக்கு வருகிறான். மேலே உத்திரத்தில் சுருக்குப் போட்டுக் கயிறு கட்டிவிட்டுக் கடவுளை நோக்கித் தோத்திரம் செய்கிறான். ஞாபக மறதியால் வீட்டுக் கதவு எதையும் தாழ்ப்பாளிட மறந்து விடுகிறான். இதற்குள் சிநேகிதி வீட்டுக்குச் சென்ற கதாநாயகி தன் மனம் ஏதோ பரபரப்பு அடைந்திருப்பதைக் காண்கிறாள். உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறதென்று சொல்லிவிட்டு உடனே வீடு திரும்புகிறாள். வீட்டுக்கு வந்து மேஜை மீதிருந்த கடிதத்தைப் பார்க்கிறாள். உடனே பதைபதைத்து ஓடுகிறாள். கதாநாயகன் சுருக்கை மாட்டிக் கொள்ளும் சமயத்தில், அவனைப் போய்க் கட்டிக் கொண்டு கோவென்று கதறுகிறாள்.

அந்தச் சமயத்தில் பாதிப் பாட்டும் பாதிப் பேச்சுமாகக் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் நடந்த சம்பாஷணையின் போது சபையில் கண்ணீர் விட்டுக் கதறாதவர்கள் யாரும் இல்லையென்று சொல்லலாம். "உங்களை விட எனக்கு இந்த நகை பெரிதா?" என்று சொல்லிக் கதாநாயகி ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுக்கிறாள். ஒவ்வொரு நகைக்கும் அவள் ஒரு பாட்டும், பதிலுக்குக் கதாநாயகன் ஒரு பாட்டும் பாடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் சபையில் முக்கியமாகப் பெண்மணிகள் பகுதியில் உண்டான அல்லோலகல்லோலத்தைச் சொல்ல சாத்தியம் இல்லை. விம்மி விம்மி அழுதபடியால் தொண்டை காய்ந்துபோய், சோடா வாங்கிக் குடித்துத் தாகசாந்தி செய்து கொண்டு, மறுபடியும் அவர்கள் அழலானார்கள். கதாநாயகி தன் வைரக் கம்மலைக் கழற்றிக் கொடுத்த போது ஒரு பெண்மணி உருக்க மிகுதியால் மூர்ச்சை அடைந்தே விழுந்து விட்டாள் என்றால், வேறு சொல்லவும் வேண்டுமோ?

எல்லா நகைகளையும் கழற்றி வைத்துவிட்டுக் கதாநாயகி, "இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இருவரும் கூலி வேலை செய்து பிழைப்போம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒரு வரங் கொடுங்கள்" என்று கேட்கிறாள். "என் உயிரைக் கேட்டாலும் தருகிறேன்!" என்கிறான் கதாநாயகன். "இனிமேல் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ்செய்யுங்கள்" என்கிறாள். "ஆண்டவன் ஆணை! உன் மேல் ஆணை! நம் அருமைக் குழந்தையின் மேல் ஆணை! நான் இனிக் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை" என்று கதாநாயகன் சபதஞ் செய்கிறான். அச்சமயம் சபையில் வீற்றிருந்தவர்களில் அநேகரும் இவ்வாறே தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.

நாடகம் சந்தோஷமாக முடிகின்றது. கதாநாயகன் நகைகளை விற்பதற்காகக் கிளம்பும் தறுவாயில் ஒரு தந்தியும் ஒரு கடிதமும் வருகின்றன. தந்தியில் அவனுக்கு ஜில்லா முன்சீப் உத்தியோகமான செய்தி இருக்கிறது. கடிதத்தில் கதாநாயகியின் பாட்டி இறந்து போனதாகவும் அவள் தனது உயிலில் கதாநாயகிக்கு ரூ.30,000 எழுதி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மங்களம் பாடித் திரை விழுந்து நாடகம் முடிவுறுகிறது.

எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றியுடன் நாடகம் நடந்தேறிய தென்பதில் சந்தேகமில்லை. பின்னும் இரண்டு இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. முன்னை விட அதிக ஜனங்கள் கூடினார்கள். அதிகக் கண்ணீர் வடிக்கப்பட்டது. அதிகம் பேர் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ் செய்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் பிடிவாதமான வேண்டுகோளின் பேரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை 'மாடினி' நாடகம் நடத்தினார்கள். அதுவும் சிறப்பாக நடந்தேறியது.

திங்கட்கிழமை ராஜுவும் சீனுவும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். எல்லாச் செலவுகளும் போய் 5,000 ரூபாய் மீதம் இருந்தது. தலைக்கு ரூபாய் 2,500 என்று பிரித்துக் கொண்டார்கள். போட்ட திட்டத்தில் ஒன்றே ஒன்று தான் தவறிற்று. புத்தகம் அச்சிட்டார்கள் அல்லவா? நாலு நாளும் நாடகக் கொட்டகையில் விற்றதில் 3 புத்தகங்களே விற்பனையாயின. பாக்கி முழுவதும் மிஞ்சி விட்டது. ஆயினும் இதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

நாளடைவில் விற்றுவிடலாம். அல்லது பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்கு அனுப்பிச் செலவு பண்ணி விடலாம் என்று தீர்மானித்தார்கள்.

"இன்னும் 13 நாள் உனக்கு லீவு இருக்கிறதே? என்ன செய்யப் போகிறாய்?" என்று சீனு கேட்டான்.

"ஊருக்குப் போய் ரொம்ப நாளாயிற்று. எல்லாரையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்றிருக்கிறேன்" என்றான் ராஜு.

"சரி போய் வா! வெகு நாளாக எனக்குக் கொடைக்கானலுக்குப் போகவேண்டுமென்ற ஆசை. அங்கே போகிறேன்" என்றான் சீனு.

அடுத்த சனிக்கிழமை உதகமண்டலத்தில் குதிரைப் பந்தய மைதானத்தில் இரண்டு மனிதர்கள் தற்செயலாகச் சந்தித்தார்கள். அவ்விடத்தில் 'இவ்வாறு ஒருவரை ஒருவர் சந்திப்போம்' என்று அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லையாதலால், பிரமித்துப் போய் ஐந்து நிமிஷம் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.

"நீ ஊருக்குப் போகவில்லை" என்றான் சீனு.

"நீ கொடைக்கானலுக்குப் போகவில்லை?" என்றான் ராஜு.

அப்பொழுது அந்த மைதானத்தில் 'தப்பிலி கப்' பந்தயத்திற்காகக் குதிரைகள் அதிவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன.